Home Article கட்சி – அறிமுகக் குறிப்புகள்

கட்சி – அறிமுகக் குறிப்புகள்

Comments Off on கட்சி – அறிமுகக் குறிப்புகள்

 கட்சி

 – அறிமுகக் குறிப்புகள் –

  

 

கௌதம சன்னா


 

 

1

அறிமுகம்

விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள்  கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு செய்த காலத்தில் ஒரு வலுவான அமைப்பாக இயங்கிக்கொண்டு, பின்பு தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டது ஒரு அமைப்பு எனும் நிலையிலேதான், கட்சியாக தம்மை விடுதலைச்சிறுத்தைகள் மாற்றி அமைத்துக்கொள்ள அவகாசம் கூட இல்லாமல் தேர்தலில் நுழைந்திருந்தது. எனினும், கட்சி எனும் முழுமையான வடிவத்தை நோக்கி உறுதியான அடிகளை வைத்தது. இந்த பயணத்தின் இடைப்பட்ட காலங்கள் போராட்டம் மிகுந்த  காலங்கள், உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின்  விடுதலைக்குப்  போராடிய எல்லா அமைப்புகளும், கட்சிகளும் அனுபவித்தக் கடுமையான காலங்கள், இந்த இடைக்காலத்தை வலுவாகவும், உறுதியாகவும கடத்தாத இயக்கங்கள் மக்களின் நினைவிலிருந்து மறைந்து போகக்கூடிய அபாயம் நிறைந்த காலக்கட்டம். தமிழகத்தில் பல கட்சிகளுக்கு இது நேர்ந்துள்ளது. ‘இந்திய  மக்கள் முன்னணி’என்ற செல்வாக்கு மிகுந்த ஒரு கட்சிக்கு நேர்ந்த கதி இதற்கு சிறந்த உதாரணம். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தனது தலைமையின் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் அக்கால கட்டத்தைக் கடந்து கட்சி எனும் வடிவத்தை அடைந்துவிட்டது.

எனினும், கட்சி எனும்  ஒரு மாபெரும் அமைப்பின் உள்ளே ஏற்பட்டிருக்கும் பண்பு ரீதியான மாறுதல்கள், வடிவ ரீதியான  மாறுதல்கள் எல்லாம் எந்த அடிப்படையைக் கொண்டு  நாம் புரிந்துக்கொள்வது. ஏனெனில், ஏற்கெனவே, இங்கு இருக்கும் திராவிடக் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகள், இந்துமதக் கட்சிகள், சாதிக்கட்சிகள், இடது சிந்தனையோட்ட கட்சிகள் எல்லாம் மக்கள் மண்டைகளில் திரித்து திணிந்த மோசமான விளக்கங்களை மீறி  உண்மையானதைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இது மிகுந்த சவாலானப் பணி. எனவே, இச்சிறு வெளியீடு அடிப்படையான அம்சங்களைப் பற்றி தத்துவார்த்த பின்புலத்தோடு சிறு சிறு அறிமுகங்களை உங்கள் முன்வைக்கிறது.

2

விடுதலைக்கான அறைக்கூவல்

துவரை தலித் கட்சியாக அறியப்பட்டுவந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பின்பற்றி ஓர் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. ஆனால், புரட்சியாளர் அம்பேத்கரைப் பின்பற்றும் ஒரு கட்சி தலித்தல்லாதோரைக் கட்சியில் இணைத்துள்ளதின் மூலம் புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தியலை மீறியுள்ளதா? அம்பேத்கர் ஒரு மாபெரும் தலித் தலைவர்தானே அவரை மீறியுள்ளதா என்பன போன்ற ஐயங்கள் எழுவது இயல்பு. இதற்கு நாம் பதில் சொல்வதைவிட அம்பேத்கரின் பதிலே உண்மையைத் தெளிவாக்கும்.

1948ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் நாள்  லக்னோ-வில் நடந்த ஷெட்யூல் வகுப்பு கூட்டமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் அம்பேத்கர் தெரிவித்த கருத்து முக்கியானதாகும். அவர் கூறியது,

‘தனிமையில் இருப்பதால் பிற்பட்ட வகுப்பினர் இன்னலுக்கு உள்ளாகின்றனர். அவர்கள் ஒரு ஐக்கிய  முன்னணி அமைத்து  உயர் வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க வேண்டும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதால் வெகு  மக்களுக்கு அரசியல் அதிகாரம் வந்துள்ளது. ஒன்றரைக் கோடி தாழத்தப்பட்டோருக்கு, ஒரு கோடி பின்தங்கிய வகுப்பாரும் பொது இலக்குக்கு எதிராக  ஒன்றாக சேர்ந்தால், தமது உறுப்பினர்களை சட்ட சபையில்  பாதி உறுப்பினர்களாக்கி அரசியல் அதிகாரத்தைப் பறிக்கலாம் என்று நான் கருதுகிறேன்”

அம்பேத்கரின் கருத்து லக்னோவில் வாழ்ந்த  மக்களுக்கு மட்டுமான தேர்தல் பிரச்சார செய்தியல்ல. மாறாக, ஓர் விடுதலைக்கான  அரசியல் சிந்தனையாகும். அதனால்தான், ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளத்தில் சேர்ந்து அரசியல் பணியாற்ற பிற்பட்ட வகுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார். இதை அம்பேத்கர் தொடர்ந்து பேசி வருவதோடு நிற்கவில்லை. தம்முடைய ஷெட்யூல் இன கூட்டமைப்பின் “ஷெட்யூல்ட் வகுப்பினரின் விடுதலை வரைவு அறிக்கை”என்று  தலைப்பிட்ட தமது கட்சியின் அறிக்கையின் 52வது குறிப்பில் உறுதிசெய்தார். அதில்,

“52…. பிற்பட்ட வகுப்பினர்கள் மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினர் ஆகியவர்களுடன் இணைந்து செயல்பட ஷெட்யூல்ட் வகுப்பினர் சம்மேளனம் விரும்புகிறது”.

எனவே, தற்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு  வலுவான தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது என்பதைப் புரிந்துக் கொள்ள  முடியும். கட்சியில் தலித்தல்லாதோர் மதச் சிறுபான்மையினர், பெண்கள், அரவாணிகள் ஆகியோருக்கு  அழைப்பு விடுக்பப்பட்டு, அவர்களும் இதில் இணைந்துள்ளது. காலம் கருதி விளைந்த பயனே, 1948ம் ஆண்டு ஏப்ரலில் அம்பேத்கர் விடுத்த  அறை கூவல்  2008 மே மாதத்தில் நிறைவேறியுள்ளது. தமிழகத்தில் இதில் மீதியுள்ளப் பணி அரசியல் அதிகார மையங்களைக் கைப்பற்றி, ஆட்சியமைப்பது தான்.  அதிகாரத்தை நோக்கி ஒரு அமைப்பாக முன்னேறும் நிலையில் ஒரு கட்சியாக  இப்போது முன்னணியில் நிற்கிறது.  மேலும்,  அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் தான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கட்சி என்பது என்ன?

3

கட்சி

விருப்பதின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து அமைப்பாக  இயங்குதே கட்சி” – என்று லெனின் கட்சி என்பதற்கு பொருள் தருகிறார். இதை எப்படி  விளங்கிக் கொள்வது. இதில் விருப்பம் என்பது எதைக் குறிப்பது. அது ஒரு பொது நோக்கத்தைக் குறிக்கிறது. பொது  நோக்கத்தை தமது  விருப்பமாகக் கொண்டவர்கள் தமது பொது  நோக்கத்தை அடைய  ஒன்றாக இயங்குகிறார்கள். ஆனால், இதை  ‘இயக்கம்’  என்று  புரிந்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், இயக்கம்  எற்பதற்கும் கட்சி என்பதற்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. அவை:

1.இயக்கத்திற்கு அரசியல் அதிகாரத்தை அடையும் நோக்கம் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல. ஆனால், கட்சியானது அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

2.இயக்கத்தின்  எல்லை விரிவடையாது மாறாக  மாறுதல்  அடையலாம் அல்லது ஒரு கட்சியாகத் தன்னை உருமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கட்சியின்  எல்லைப் பரந்தது. அதன் செயல் எல்லைக்குள் அமைப்புகளையும், இயக்கங்களையும் உள்ளிழுத்துக் கொண்டோ. அரவணைத்துக் கொண்டோ செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

எனவே, இவ்வளவு பலம் வாய்ந்த  கட்சி  எனும் நிறுவனத்தைப் பற்றி அம்பேத்கரின் வரையறுப்பு கூடுதல் துல்லியத்தைத் தருகிறது. அவர், “கட்சி என்பது மக்களாட்சியின் இன்றியமையாத துணையுறுப்பு” என்று வரையறுத்தார். மேலும், கட்சியின்  இயக்கத்தைக் குறித்து கூறும்போது,

“குறிப்பிட்ட கொள்கையின் பின்பலமாக பொதுக் கருத்தை ஒருமுகப்படுத்தல் அல்லது  கட்டியமைத்தல் கட்சியின் முக்கிய பணியாகிறது. கொள்கையளவில்  பொதுக்கருத்தை வெளிப்படுத்தி நிறைவேற்றும் முகவர்கள் அரசியல் கட்சிகள். ஆனால், நடைமுறையில்  கட்சிகள் பொதுக் கருத்தைப் படைத்து, ஊக்கப்படுத்தி, உருவாக்கி கட்டுப்படுத்துகின்றன. உண்மையில் இதுவே கட்சியின் தலையாயக் கடமையாக உள்ளது. இதன் பொருட்டு இரண்டு பணிகள் புரிய வேண்டும். முதலாவதாக, மக்களோடு தொடர்புக் கொள்ளவேண்டும், மக்களிடம்  செல்லும்போது தமது விற்பனைச் சரக்குகளை கொண்டுப் போக வேண்டும்”

அதாவது, கொள்கைகள், மூலக் கோட்பாடுகள், கருத்துக்கள், வேட்பாளர்கள் ஆகியன. இரண்டாவது, தன் சரக்குகளை ஆதரிக்குமாறு  பொது மக்களிடையே பிரச்சாரம் வேண்டு வேண்டும்; அவர்களைத் தூண்ட வேண்டும்; அறிவுறுத்த வேண்டும்;  திரு.பிரைஸ் கூறியவற்றிலிருந்து மேற்கோள் காட்டினால், வாக்காளர்கள முடிவு செய்ய வேண்டியப் பிரச்சினைகள், தங்கள் கட்சித்  தலைவர்கள், எதிர் கட்சியினர்  செய்யும் அக்கிரமங்கள் ஆகியவைப் பற்றி  எடுத்துரைக்க  வேண்டும். திட்டவட்டமாகச் செயல்பட இவையே அடிப்படை அம்சங்களாகும்.  இவ்வாறு ஒருமித்துத் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத கட்சி, தன்னை ஓர் அரசியல் கட்சி எனக் கூறிக்கொள்ளத் தகுதியற்றது”

இதிலிருந்து கட்சி என்பதின் முக்கியத்துவமும், அதன்  பணிகளின் முக்கியத்துவமும் விளங்குகிறது. நாம்  தற்போது காணும் கட்சிகள் இப்படியா இருக்கிறது? நாம்  காணும் கட்சிகள் மக்களின் நலன் என்பதைத் தவிர்த்துவிட்டு தன்னுடைய நலனே மக்களின் நலனாக கொண்டு செயல்படுகின்றன.  அதனால்தான்  மக்கள் மாற்றுகளைத தேடி அலைகிறார்கள். கட்சி என்பதின் பொருளை மக்களிடம் கொண்டு செல்வது உண்மையான கட்சியின் பணி. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மக்களின் விடுதலையை முன்னிறுத்தும் கட்சிக்கு இதுவே அடிப்படை, இதை இன்னொரு பரிமாணத்தில் பார்த்தால் லெனின் அவர்களின் இன்னொரு வரையறுப்பு பயன்தரும் அது.

“கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற, வளர்ச்சியடைந்த பிரிவாகும். இது அவ்வர்க்கத்தின் முன்னணிப் படையாகும்”

எனவே, இத்தகுதி வாய்ந்த  கட்சியின் வரலாற்றுப் பாத்திரம் என்ன? இது  குறித்து மாவோவின் கருத்துக்கள் ஒளியூட்டுகின்றன. அவர் கூறுகிறார்,

“சமுதாய வளர்ச்சியின் இன்றைய யுகத்தில், சரியான முறையில் உலகத்தை  அறிந்துக்கொள்கிற  பொறுப்பையும், அதை மாற்றுகின்ற  பொறுப்பையும் வரலாறு பாட்டாளி வர்க்கத்தின் தோள்களிலும், அதன் கட்சியின் தோள்களிலும் சுமத்தியுள்ளது”.

ஒளிமிகுந்த இந்தக் கருத்துகளை இப்போது  விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு பொருத்திப் பார்த்தால், கட்சியில் பாட்டாளிகள் தலித்துகள், தலித்தல்லாதார், சிறுபன்மையினர், பெண்கள் என விடுதலைக்கு விழையும் திரளான ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னணி பிரிவாக  கட்சி இருக்கிறது என்பது புரியும்.

ஒரு கட்சியின் தன்மை, அதன் வராhற்றுப் பாத்திரம், அது எதை பிரதிபலிக்கிறது, பணிகள் என்ன, நோக்கம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ‘கட்சி’எனும் பொருளில் பார்த்தோம். ஒரு நிறுவனம் என்ற பொருளில் கட்சி என்றால் என்ன என்பதை இனிப் பார்ப்போம்.

4

கட்சியின் அடிப்படைகள்

ட்சியின் அடிப்படைகளைக் குறித்து அம்பேத்கர் தெளிவாக வரையறுத்து இருக்கிறார் அவரின் வாசகப்படியே;

   “கட்சி இராணுவத்தைப்  போன்றதாகும். அதற்கு,

1.ஒரு தலைவர் இருக்க வேண்டும். அவர் சேனாதிபதி போன்றவர்.

2.ஒரு அமைப்பு பின் வருவனவற்றைக் கொண்டிருக்கும்;

(அ) அங்கத்தினர்கள் (ஆ) ஓர் ஆதாரத் திட்டம்

(இ) ஒழுங்கு கட்டுப்பாடு.

3.அதற்கு கொள்கையும், கோட்பாடுகளும் இருக்க வேண்டும்.

4.அதற்கு வேலைத் திட்டங்களும் அல்லது செயல்பாட்டுக்கான திட்டங்களும் இருக்க வேண்டும்.

5. அதற்கு நீண்ட காலத்திட்டமும், நடைமுறை உத்திகளும்  தேவை. அதாவது, எதை எப்பொழுது செய்ய வேண்டுமென்றும், தனது லட்சியத்தை எவ்வாறு அடையது என்பதற்கும் திட்டமிட வேண்டும். எளிய சொற்களில் கூறுவதெனில் அது சில குறிக்கோளுடன் கூடிய  வாக்காளர்களின் ஓர் கழகமாகும்.

(1)ஒரு கட்சி ஸ்தாபனத்தை அமைப்பதையும் வளர்ப்பதையும் ஊக்குவிப்பது, அதன் வாயிலாக கட்சியைப் பேணி வளர்ப்பதாகும்.

(2)பத்திரிக்கைகள் வாயிலாகவும்,  சொற்பொழிவுகள், உரைகள், பிரிசுரங்கள் மூலமும் கட்சிக் கோட்பாடுகளைப் பரப்புவது

(3)சட்டமன்ற, நாடாளுமன்றங்களில்  பிரதிநிதித்துவப்படுத்துவது.

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின்  முன்னணிப்படை என்று லெனின் வரையறுத்ததைப் போலத்தான் அம்பேத்கரும் கட்சியை  இராணுவம் போன்றது என்று வரையறுக்கிறார். அதனாலேயே அதனுடைய பணி போராட்டம் என்பதை மறைமுகமாகக் குறிக்கிறது. எனினும், கட்சியின் அடிப்படைகளை இன்னும் விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும், எளிமைக் கருதி அவைகளை வரிசையாகப் பார்ப்போம்.

தலைமை / தலைவர்:

கட்சிக்குத் தலைமை தாங்குவது தலைவர்தான். நம்மிடையே  தத்துவத் தலைமையென்றும், தனிநபர் தலைமையென்றும் குழப்பங்களும், குழப்படிகளும் நிலவுகின்றன. தலைவருக்கும் தத்துவத் தலைமைக்கும் உறுதியான வேறுபாடுகள்  இருக்கின்றன. எப்படியெனில் தத்துவத் தலைமையென்பது கோட்பாட்டின்  அடிப்படையில் அமைவது. தனிநபர் தலைமையென்பது கட்சி சார்ந்தது. இதை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கலாம்.

முதலாளித்துவத்தை ஒழித்துகட்டத் தலைமைத் தாங்குவது பாட்டாளி வர்க்கம். சமூகத்தில் விவசாயிகள், உதிரித் தொழிலாளர்கள், அடிமைகள், பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள், கலைஞர்கள் என பலத்தட்டு வர்க்கத்தினர் இருந்தாலும்  முதலாளித்துவத்தை, முதலாளி வர்க்கத்தை பாட்டாளிவர்க்கம் தவிர பிற வர்க்கங்களால்  ஒழிக்க முடியாது. ஏனெனில், பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கியதே தொழிற் துறை முதலாளித்துவம். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தலைமை தாங்கும் பாத்திரம்தான் கோட்பாட்டு வழிபட்ட தலைமையாகும். எனவே, முதலாளித்துவத்தை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஒரு அமைப்பின் கீழ் திரளவேண்டும் என்பது அவசியம். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கட்சி இருக்கிறது என்று லெனின்  சொன்னதை இப்போது அம்பேத்கர் கூறியதோடு  பொருத்திப் பார்த்தால்  கட்சிக்கு தலைவர் எவ்வளவு அவசியம் என்பது புரிந்துவிடும். இதுதான்  தனிநபர் தலைமை அதாவது தலைவர்.

இதுதான் தலித் அரசியலுக்கும் பொருந்தும், தலித் மக்கள்தான் பார்ப்பனீயத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் தலித்தல்லாதார். பெண்கள் மதச் சிறுபான்மையினர், அரவாணிகள் ஆகியோர். தலித்துகள் மட்டுமே பார்ப்பனீயத்தை எதிர்த்ததாலேயே தீண்டத்தகாவதர்களாக ஒதுக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களே  அதை எதிர்க்க கோட்பாடு  ரீதியாக தலைமை வகிப்பவர்கள். அவர்களுடன் அணியமாக பின்சொன்னவர்கள்  இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னணிப்படையாக கட்சி இருக்கிறது. கட்சிக்கு தலைமைத் தாங்க தலைவர் இருக்கிறார்.

இதை விடுதலைச்சிறுத்தைகளுக்கு பொருத்தினால் வித்தியாசத்தை காண்பது இயலாததாகவே இருக்கும். இதுதான் தலைமை என்பதற்கு விளக்கம். இதில் தலைவர் என்பவர் யார்?

தலைவர் என்பவர் கட்சியின் கருத்தியல்,  கோட்பாடுகள், உத்திகள், நடைமுறைத் திட்டங்கள் ஆகியவற்றை வளர்த்தும், உருவாக்கியும் அதை கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், தோழர்கள், அமைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டுச்செல்ல வழிகாட்டுவதோடு  அதன் முன்னணியிலும் நிற்கிறார். ஒரு தலைவர் என்பவர் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கக்கூடிய ஆற்றலும், கொண்டவராக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார்.

மேலும், அவர் கூறும்போது தன் விருப்பு வெறுப்புகளில்  விடாப்பிடியாகவும், தான வாழும் காலத்தின் மீது  முத்திரைப் பதிக்கக்கூடியவனாகவும் இருக்க வேண்டும் என அவர் கருதினார். இதில் அவர் குறிப்பிடும் விருப்பு வெறுப்பென்பது தனிபட்ட விருப்பு வெறுப்பல்ல. அது சமூக கொடுமைகளுக்கு எதிரான, ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிரான, சாதி – தீண்டாமைக்கு எதிரான வெறுப்பும், சமத்துவத்தின் மீதான விருப்பமும் ஆகும்.

கதே என்னும் சிந்தனையாளர் தலைவனைப் பற்றிக் கூறியது இன்னும் நமக்கு நெருக்கமாக இருக்கிறது. அவர் கூறினார்.

“ஒரு பார்வையிலேயே மற்றவர்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அவர்களது திறன்களையும், இலட்சியங்களையும் நெறிப்படுத்த போதுமான ஆற்றலையோ அல்லது தந்திரத்தையோ கொண்டவன்தான் தலைவன்”

இந்த சித்திரங்கள் உங்கள் மனத்திரையில் ஒரு உருவத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

5

கருத்தியல்

ழக்கமாக நமது நாட்டிலுள்ள அரசியல்வாதிகள்  கொள்கை முழக்கங்களை முழங்குவதைக்  கேட்டிருப்போம். அவர்கள் கொள்கை, கொள்கை என்று முழங்குவதை எந்தப் பொருளில் புரிந்துக்கொள்வது  வெறும் முழக்கங்களால் கொள்கை என்பதைப் புரிந்துக்கொள்ள முடியுமா? இது ஒரு பிரச்சினையாகவே, குழப்பமாகவே இருந்து வருகிறது. சாத்தியப்படாத ஒன்றைக்கூட கொள்கையாக அறிவிக்க முடியும். கொள்கை என்பதற்கு அப்படியொரு வசதி இருக்கிறது. அதனால்தான், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. பிளக்கானவ் எனும் மார்க்சிய அறிஞர் வேடிக்கையாக சொன்ன சம்பவம் இங்கே நினைவுக்கு வருகிறது. ஐரோப்பாவில் ஒரு குழு சந்திர கிரணத்தை நிகழ்த்தப் போகிறோம் என்பதை தமது கொள்கையாக அறிவித்து அதற்கான முயற்சிகளில் இயங்கியதாம், அப்படி ஒரு வசதி கொள்கை எனும் சொல்லுக்கு உண்டு. நம் நாட்டில் அப்படி எதுவும் இல்லையென்றாலும் நீங்கள் கேட்கும் அந்த கொள்கை முழக்கங்கள் எல்லா கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதை பார்த்து  உங்களுக்கு  குழப்பம் வந்திருக்கலாம். அல்லது யார் சொல்வது உண்மை எனும் சந்தேகம் வந்திருக்கலாம். நண்பரைப் போலிருப்பர் பகைவர் எனும் முதுமொழி நினைவுக்கு  வந்திருக்கலாம். நம் நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகளின்  கோலமிது. அப்படியெனில் ‘கருத்தியல்’ என்பதை எப்படிப் புரிந்துக்கொள்வது. எல்லாம் மொழி பெயர்பில் வரும் குளறுபடிகள்,  யீhடைடிளடியீhல, ஐனநடிடடிபல, னுடிஉவசiநே, ஞசinஉiயீடநள,கூயஉயீiஉள, ஹiஅள என்ற வார்த்தைகளுக்கு மெய்யியல் அல்லது தத்துவம், கருத்தியல், கோட்பாடு, கொள்கைகள், உத்திகள், லட்சியங்கள் என பொருள் கொள்ளலாம். ஆனால், இவைகளின் பொருள்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக மாற்றித் திருப்பி பொருத்திக்கொள்வதுதான் குழப்பத்திற்கு வழிகோலுகிறது.

இதில் கருத்தியல்  (Ideology) என்பது வரலாற்று வழிபட்ட அறிவியலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதனால்தான் மார்க்சியர்கள் விஞ்ஞான கம்யூனிசம் (Scientific Communism) என்று மார்க்சியத்தை அழைக்கிறார்கள்.  அம்பேத்கரின் கருத்தியலுக்குக்கூட  வரலாற்றுப் பூர்வமான அறிவியல் அடிப்படை உண்டு. அதனால்தான், அதுவும் இன்றும் நமக்கு ஒளியூட்டுகிறது.

லட்சியம்

அதேபோல் ‘கருத்தியல்’ எனும் பதத்திற்கு மாற்றாக ‘லட்சியங்கள்’ என்ற பதமும் பல நேரங்களில் குறிக்கப்படுகிறது. லட்சியம் என்பது தனக்கான கருத்தியலை அடைவதற்கான உறுதிப்பாடு, நெறி பிறழாத நவடிக்கையின் மூலம் தன் கருத்தியலை  நடைமுறைக்கு  கொண்டு வருவதற்கான உறுதிப்பாடு.

கோட்பாடு

கருத்தியலை வளப்படுத்தி அதை நிறைவேற்றுவதற்கான கறாராக  வழிமுறைகளைக் கொண்டது கோட்பாடு. பல நேரங்களில் லட்சியமும் – கோட்பாடும்  சேர்த்துப் பார்த்து குழப்பிக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு லெனினிடமிருந்து சிறந்த விளக்கத்தினைப் பெறலாம் அவர் கூறுகிறார்.

“அடிப்படை கோட்பாடுகள் என்பவையும் லட்சியங்கள் என்பவையும் வெவ்வேறானவை. அராஜகவாதிகள் கூடத்தான் லட்சியங்களின் நம்மோடு உடன்பாடுக் கொண்டுவிடுவர், ஏனெனில், அவர்களும் வர்க்கப் பாகுபாடுகளை ஒழிக்க நிற்கிறார்கள்”….

கோட்பாடுகள் – அவை லட்சியம் அல்ல, வேலைத் திட்டம் அல்ல, செயல் தந்திரம் அல்ல, தத்துவமல்ல, செயல் தந்திரமும் தத்துவமும், கோட்பாடுகளல்ல, கோட்பாடுகளில் நமக்கும் அராஜகவாதிகளுக்கும் என்ன  வேறுபாடு? கம்யூனியத்தின் கோட்பாடுகள், பாட்டாளி வர்க்க  சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதும், மாற்றநிலைக் கட்டத்தில்  அரசு பலவந்தத்தைப் பயன்படுத்துவதும் அவசியம் என்கின்றன. இவை  கம்யூனியத்தின் கோட்பாடுகாளுமே அன்றி அதன் லட்சியமாகாது”.

ரத்தனச் சுருக்கமான லெலினின் வாசகம் கோட்பாடு என்ன என்பதை அரசியல் பொருளில் தெளிவுபடுத்துகிறது. எளிமையாகச் சொன்னால் லட்சியத்தை அடைவதை அறிவியலாக்கிய கருத்தியலுக்கு அறிவியல் பூர்வமான வழிமுறைகளே கோட்பாடுகள்.

உத்திகள்

உத்திகள் கோட்பாட்டினோடு நேரடியாகத் தொடர்புடையது. அதன்படி லட்சியத்தை எப்படி கருத்தியல் நெறிப்படுத்துகிறதோ, அதை போல கோடுபாடுகளுக்கு உதவியாக உத்திகள் இருக்கின்றன. கோட்பாடுகளை நடமுறைப்படுத்த  காலத்துக்கு ஏற்ப, சூழலுக்கு  ஏற்ப அதன் வெற்றிக்காக புதுப்புது முறைகளை சூழல் கருவிகளைக் கையாள்வதே உத்தி, உத்திகள் பலவாறாக மாறலாம் எந்த வடிவத்தையும்  எடுக்கலாம். ஆனால், இதக்குள்ள  ஒரே நிபந்தனை கோட்பாடுகளின் மூலத்தை மாற்றி விடக்கூடாது என்பதுதான்.

அமைப்பு (Structure)

ஓர் கட்சியின் தரமே அதன் கட்டுமானத்தைச் சார்ந்து நிற்கிறது. சித்திரத்திற்கு சுவர் போல. இது செயற்குழு, நிதிக்குழு, துணை நிலை அமைப்புகள், முழுநேர ஊழியர்கள், தொண்டர்கள், வெகு மக்கள்  என ஓர் அரசின் அமைப்பைப் போல இருக்கிறது. இயங்குகிறது. கட்சி அமைப்பின் நிர்வாக முறைகளே நாட்டை ஆள்வதற்குரிய  தன்னம்பிக்கையையும், ஆற்றலையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.  அமைப்பில் பலவீனமாக உள்ள கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாக உலகின் எந்த வரலாறும் பதிவு செய்யவில்லை. எனவே, அமைப்பு செம்மையாக  செயல்பட  அவசியமானவை;

1. அங்கத்தினர்கள்

2. ஆதாரத் திட்டம்

3. வலுவான துணைநிலை அமைப்புகள்

4. திட்டமிடுதல்

5.  வலுவான அடித்தளம்

6. செயல் பரவலாக்கம்

7. ஒழுங்கு, கட்டுப்பாடு

8. லட்சியத்தில் உறுதி

9. உட்கட்சி சனநாயகம்

10. கண்காணிப்பு

11. குழுநிலை வாதத்தை எதிர்த்தல்

12. மக்களிடம் உண்மை.

13. நேர்மை

இவை கட்சியின் கட்டுமானத்திற்கு  அல்லது அதன் அமைப்பிற்கு  இன்றியமையாதவை. தவிர்க்கமுடியாதவை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள செயற்குழுக்கள், துணைநிலை அமைப்புகள் குறித்த விளக்கத்தினை கட்சியின் அமைப்புச் சட்டத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

 செயல்திட்டம்

ஒவ்வொரு  கட்சிக்கும் அதன் செயல்திட்டமே அதன் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது. செயல்திட்டங்கள் பெரும்பாலும் அவற்றின் அமைப்பு அறிக்கையிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. இந்த  செயல்திட்டத்தில் கட்சி மேற்கொள்ளும் பணிகள்.  மக்களைத் திரட்டுவதற்கான திட்டங்கள், அரசை கைப்பற்றுவதற்கான வழிமுறைகள், மக்களின் நலனை விடுதலையை  அமைவதற்கான நடவடிக்கைத் திட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகள் என வரலாற்று அடிப்படையில் அமைந்திருக்கும்.

நம் நாட்டில் பெரும்பாலான கட்சிகள் செயல்திட்டத்தை முன்வைப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைப் பற்றி அக்கரையில்லாமல் வெறும் ஆட்சி அதிகாரத்தையும், பதவி வேட்டையையும் மட்டுமே கருத்தில் கொண்ட கட்சிகள் மக்களிடம் ஓயாமல் பொய்களைப் பரப்பி மக்களை திசைத்திருப்பி, தங்களின் செயல்திட்டத்தை மக்கள் முன் வைப்பதற்கு பதில்  பொய்யான வாக்குறுதிகளை  முன் வைக்கின்றன. இவற்றிலிருந்து முற்றிலும் எதிரானது செயல்திட்டம்.

செயல்திட்டம் இரண்டு வகையாக உள்ளது.

1. குறுகிய கால செயல்திட்டம்

2. நீண்டகால செயல்திட்டம்.

சுருக்கமாக இதன் அடிப்படைகளை பார்ப்போமெனில்,

1. குறுகிய காலச் செயல்திட்டம்:

கட்சியின் அவசரப் பணிகளுக்கும், அவ்வப்போது சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், உடனடியாக மக்களுக்கு பலன்கள்  கிடைப்பதற்கும், கட்சியை பலப்படுத்துவதற்கும், தன் லட்சியங்களில் உடனடியாக அடையக் கூடியவற்றை அடைவதற்கும் உள்ள செயல்திட்டமாகும். இதுவுமன்றி பெரும்பாலும் உத்திகளை கையாள்வதற்கும் குறுகியகால செயல்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

2. நீண்டகால செயல்திட்டம்:

முன்பு செயல்திட்டம் என்று குறிக்கப்பட்டதே இதற்குப் பொருந்தும். மக்களைத் திரட்டுதல், அதிகாரத்தைக் கைப்பற்றுதல், விடுதலையை  வென்றெடுக்க இடையறாது போராடுவதற்கான  செயல்திட்டமே நீண்டகால  செயல்திட்டமாக இருக்கும். ஒவ்வொரு  கட்சிக்கும் இது வேறுபடலாம். கோட்பாடுகளின் அடிப்படையிலேயே இது அமைந்திருக்கும்.

எனவே, செயல்திட்டம்தான் ஒரு கட்சி யார் என்பதையும், யாருக்கு  சாதகமானது என்பதையும் வெளிபடுத்தும் ஆவணமாகும்.

கட்சி அறிக்கை (Manifesto)

கட்சியின் கருத்தியல், கோட்பாடு, உத்திகள், (சமூகத்தை கட்சி எவ்வாறு வரையறுக்கிறது)  ஆட்சி முறையில் அது மேற்கொள்ளும் வடிவம், மக்களிடம் என்ன விதமான மாற்றத்தை கொண்டு வருவது, நடக்கும் கால கட்டத்தில் கட்சி வகிக்கும் பாத்திரம், அதன் அடிப்படையில் மக்களுக்கு  விடுக்கும் அறைகூவல் அடிப்டையான ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான ஒரு அரசியல்  ஆவணமே கட்சி அறிக்கை என்பதாகும். கட்சி அறிக்கைதான் கட்சியின் லட்சியத்தையே மக்களிடம் அறிமுகப்படுத்துவது  மட்டுமல்ல. அதன் அடிப்படையில்  மக்களைத் திரட்டுவதற்கு கட்சியினருக்கு  வழிகாட்டியாகவும் இருக்கிறது.

அறிவு ஜீவிகள்

“அறிவுச் செல்வம் இல்லையென்றால் அதிகாரம் இல்லை”

என்று அறிவின் அவசியத்தை  அம்பேத்கர் குறிப்பிட்டார். சமூகத்தில் எல்லோருமே  சமமான அறிவுத் திறனோடு இருப்பதில்லை. சூழலும், வாய்ப்பும், ஆர்வம் தனிநபர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளவோ – இழக்கவோ காரணிகளாக இருக்கின்றன. அறிவு ஜீவிகள் எல்லா சமூக போக்குகளுக்கும் அவசியமான  துணைவர்கள். அதேவேளை அறிவு ஜீவிகளாக  ஒருவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள பல்கலைக் கழகப் படிப்பு மட்டுமே அவசியமில்லை. நூல்களை பயில்வதில் ஆர்வமும், படித்ததைக் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடும் யாருமே அறிவு ஜீவிகள் நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்ள முடியும்.

அறிவு ஜீவிகளில் மூன்று வகையில் இருக்கிறார்கள். முதலாவது வகையினர் வெளிப்படையாகவே ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானவர்கள். இவர்களுக்கு தேவையானவற்றை அளித்து,  பயிற்றுவித்து தமக்குச் சாதாகமாக  ஆளும் வர்க்கம் பயன்படுத்திக்கொள்கிறது. விசுவாசமிக்க  இந்த அதிகாரவர்க்க அறிவுஜீவிகளை எதிர்கொள்வது  ஒரு மக்கள்  கட்சியின் தவிர்க்க முடியாத பணி.

இரண்டாவது, வகையைச் சேர்ந்தவர்கள் ஊசலாடும் நிலையில் இருப்பவர்கள். வாழ்க்கைத் தேவைகளுக்கும் தன் அறிவின் ஆற்றலுக்கும் கிடையில் தடுமாறுபவர்கள். ஆளும் வர்க்கத்தின் பக்கமா – ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பக்கமா என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளிப்பவர்கள். இவர்களின்  அறிவுத்திறன் தமக்கு தேவை எனும் நிலையிலிலேத்தான் ஆளும் வர்க்கம் தமக்கு சாதகமாக இவர்களை  வளைத்துக் கொள்கின்றன.

மூன்றாவது, வகையினர் நேரடியாக, எந்த ஊசலாட்டமும் இல்லாமல் மக்கள்  பக்கம் நின்று போராடுபவர்கள். இவர்களில் கட்சியைச் சார்ந்து இருப்பவர்கள் மிகவும் குறைவு. கட்சியானது தனது சிந்தனைச் சுதந்திரத்தை கட்டுப்படுத்திவிடும் எனக் கருத்துடையவர்கள் பல பேர்.  எனினும் இவர்களை  வென்றெடுத்து ஒரு மக்கள் கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். கட்சியில் உள்ள உறுப்பினர்களிலிருந்து  போதுமான அளவிற்கு எண்ணிக்கையில் அறிவு ஜீவிகள் நிலைக்கு உயரும்  நபர்கள் கிடைக்கும் வரையிலும் அவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் அறிவு ஜீவிகள் அவசியமானவர்கள்.

கட்சியின் வெளியீடுகள், பிரசுரங்கள், அறிக்கைகள், விளம்பரங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றை தயாரிக்க, மேற்கொள்ள மட்டுமே அறிவுஜீவிகள் பயன்படுவதில்லை. பல நிலைகளில் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் நெறியாள்வதற்கும் அவசியமானவர்கள்.

படை:

கட்சிக்கு ஒரு இராணுவப் படை அவசியமானது என்று லெனின் தொடங்கி மாவோ வரை வலியுறுத்தியுள்ளனர். இந்த படையணி என்பது  அவசியமானது என்றாலும் அதை அமைப்பதற்கான சாத்தியக்கூறினையும், சமூகத் தேவையை கணக்கில் கொண்டுதான் தீர்மானிக்க  வேண்டும். மக்களைப் பாதுகாக்க  அவர்களே  போலீஸ் அமைப்புகளை  உருவாக்கிக்கொள்வது அவசியம் என்று லெனின் வலியுறுத்தினார். ஆனால், வெளிப்படையாக, மக்களாட்சி கோட்பாட்டில் பங்கேற்று, தேர்தலை சந்திக்கும் கட்சிக்கு  படையணியை கட்டும் வாய்ப்புகள் குறைவு, எனவே  இதற்கான மாற்றுத்குறித்து அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்.

“போரில் ஈடுபடுவோர் மேற்கொள்ளும முடிவுகளைச் சாதிக்க வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று உலகம் ஒப்புக் கொள்ளும் வகையில் நியாயம் அமைதல் வேண்டும். அதாவது, உலக நிலைப் பேற்றிற்கான மற்ற லட்சியங்களைத் தியாகம் செய்ய வேண்டிய நிர்பந்தம் எழக்கூடாது. உண்மையில் வன்முறை எப்போதுமே தவிர்க்க முடியாதது. எதிர்ப்புத் தெரிவிக்க எதிர்ப்பின்மையே  சிறந்த ஆயுதம் என்கிற நிலையில்தான் சாத்வீகப் போராட்டம் மேற்கொள்ளப்படலாம். ஆனால், வலிமையை விவேகத்துடன் கட்டுப்படுத்தும் பொறுப்பு நம் அனைவரையும் சார்ந்தது. சுருங்கமாகச் சொல்வதென்றால் எதைச் சாதிக்கவும் பலாத்காரத்தைப் பயன்படுத்தலாம்;  என்றாலும் அதனை ஆக்கப் பூர்வமான ஆற்றலாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அழிவை நோக்கிய வன்முறையாக அல்ல”.

அம்பேத்கரின் ஒளிமிகுந்த இந்த கருத்து படை ஒன்றை அமைக்க சாத்தியமில்லா நிலைக்கும் அல்லது  படையணி ஒன்று இருந்தாலும் அதை முறைப்படுத்தி சிறந்த மாற்றாக பலாத்காரத்தை பரிந்துரைக்கிறது. இதை மக்களின் ஆற்றல் என்றே புரிந்துகெள்ள வேண்டும். மக்கள் திரளின் ஆற்றலை எதையும் நிர்பந்திக்க கூடிய பலாத்கார ஆற்றலாக மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது ஒரு கட்சிக்கு அவசியமானது.

மக்கள்:

மக்களின்றி ஒரு கட்சியில்லை, கட்சியின்  இலக்கே மக்கள்தான். மக்களே கட்சியின் அடிவேர்கள்,

“கட்சிக்கும் மக்கள் திரளினருக்கும் இடையே உள்ள உறவு என்பது கட்சித் தலைமைக்கும் அணிகளுக்கும் உள்ள உறவைப் போல”

 என்று ஜார்ஜ் தாம்சன் மார்க்ஸிய அறிஞர் கூறினார்.  மக்கள் திரள்  எவ்வளவு  அதிகமாக  கட்சியின் எல்லைக்குள் வருகிறார்களோ அந்த அளவிற்கு  கட்சிக்கும் மக்களுக்கும் நன்மை தரும் என்று லெனின்  சொன்னது  எவ்வளவு துல்லியமானது. அதனால்தான் மக்களிடம் செல்லுங்கள் என்று ஓயாமல் எல்லா தலைவர்களும் சொல்கிறார்கள். மக்கள் திரளின் அவசியம் குறித்து மாவோ கூறுவது நம் சூழலுக்கு நெருக்கமாக இருக்கிறது.

“பொதுவாதிகளான நாம் விதைகளைப் போன்றவர்கள். மக்கள் மண்ணை நிகர்த்தவர்கள் நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நாம் மக்களுடன் ஐக்கியமாகி, வேர்பிடித்து அவர்களிடையே மலரவேண்டும். எங்கெல்லாம் நமது தோழர்கள் செல்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் மக்கள் திரளினருடன் நல்லுறவுகளை உருவாக்க வேண்டும். அவர்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தமது இடையூறுகளைக் கடப்பற்கு உதவ வேண்டும். நாம் மக்கள் திரளினருடன் ஐக்கியப்படவேண்டும். எவ்வளவு அதிகமாக மக்கள் திரளினருடன்  நாம் ஐக்கியமாகிறோமோ, அவ்வளவுக்கு மிகவும் நல்லது. நாம் மக்கள் திரளினரை ஒன்றுதிரட்ட அனைத்து முயற்சிகளையும்  செய்ய வேண்டும்”

எனவே, மக்களுக்காகத்தான் கட்சி, மக்களின் நலனே கட்சியின் நலன். எனினும் மக்கள் திரளில் யாருடைய விடுதலை நாம் முதன்மைப்படுத்துகிறோமோ அவர்கள் முதல் எல்லையிலும் (விடுதலைச் சிறுத்தைகளுக்கு தலித்துகள், தலித்ததல்லாதவர், சிறுபான்மையினர், பெண்கள், அரவாணிகள் ஆகியோர்) மற்றப் பிரிவினர் அடுத்த எல்லையிலும் இருப்பார்கள்.

6

கட்சி அங்கத்தினர்

பொறுப்புகள்

ட்சியில் உள்ள எல்லோருமே முதலில் அவர்கள் உறுப்பினர்கள், பிறகுதான் அவர்கள் வகிக்கும் பதவிக்கு பணிக்கு ஏற்ப  பொறுப்பாளர்கள்.  உறுப்பினர்களுக்கு உள்ள கடமைகள் அனைத்து  அங்கத்தினருக்கும் பொதுவானவை. அதற்குப் பிறகுதான் பொறுப்புகளின் கடமைகள் வருகின்றன. சிறந்த உறுப்பினராக இருப்பவரே சிறந்த பொறுப்பாளராகவும் இருக்க முடியும், சிறந்த பொறுப்பாளராக மட்டுமே இருக்க நினைப்பவர் அதிகார மனோபாவம் கொண்டவராக கட்சிக்கு எதிராக  மாறிவிடவும் கூடும். எனவே, பொதுவான கடமை என்பது உறுப்பினர்களின்  முன்நிபந்தனை.

“கடமைகள் இல்லையேல் உரிமைகள் இல்லை, உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை” என்று மார்க்ஸ் அறிவித்தார்.

நாம் உரிமைகளுக்காகப் போராடும்போது கடமைகளை மறந்து போராட முடியாது. கடமைகள்  என்றால்  அதற்கு திட்டவட்டமான வரையறைகள் உண்டு. கட்சிகள் கடமை என்பது கட்சியின் செயல் திட்டங்களை மட்டும் நிறைவேற்ற செயல்புரிவது அல்ல. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் தலைவரைப் பார்க்க வரும் தோழர்களிடம் தலைவர் தொல்.திருமாவளவன்  அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “ஒரு ஒழுங்குக்குள் கட்டுப்பாட்டுக்குள் வாருங்கள்” என்பதை யாரும் கேட்டிருக்க முடியும். அந்த வார்த்தைகளின் அம்சங்கள் எவையெனில்,

1. மக்கள் மீது நம்பிக்கை

2. கருத்தியல் மீது நம்பிக்கை

3. தலைமை மீது நம்பிக்கை

4. கட்சியின் மீது நம்பிக்கை

5. தலைமையின், கட்சியின் திட்டங்களை செயல்படுத்த முனைதல்.

6. கட்சியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுதல்.

7. குழுவாதம், பிளவு வாதத்தை எதிர்த்தல்.

8. பதவி வேட்டைக்காரர்களை புறந்தள்ளுதல்

9. ஒழுக்கம் சிதையா வண்ணம்  கண்காணித்தல்

10. விடுதலைக்கு  நேர்மையாக இருத்தல், உழைத்தல்

மேலும், கட்சியின் ஐந்து முழக்கங்களான,

1. சாதி மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.

2. பெண்ணடிமை ஒழித்து நாட்டின் பெருமை காப்போம்.

3. வர்க்க முரண்பாட்டை ஒழித்து நாட்டின் வறுமையை துடைப்போம்.

4. தேசிய இனச்சிக்கலை உடைத்து தேசியத்தை வளர்ப்போம்.

5. வல்லரசின் ஆதிக்கத்தை வன்மையாக எதிர்ப்போம்

இந்த ஐந்து முழக்கங்கள் கட்சியின் கருத்தியல் அடிப்படையில் அமைந்தவை.  எனவே, இதில் குறித்துளள விளக்கங்களைக் கொண்டு, தம்மை வளப்படுத்திக் கொண்டு, நோக்கங்களை வென்றெடுக்கவும், அரசியலதிகாரத்தை கைப்பற்றவும் உள்ள கடமை ஒவ்வொரு உறுப்பினரையும் சார்ந்தது.

“ஒரு தலைவரின் கீழ், ஒரு கட்சியின் கீழ் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஒன்றுபடவேண்டும். சாதி வேறுபாடுகளை விலக்கி வைத்துவிட்டு சம்மேளனத்தின் கீழ் ஒன்றுபடுங்கள்”

 என்று புரட்சியாளர் அம்பேத்கர் 1948ம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் தாழ்த்தப்பட் – பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கான அறைகூவல் என்பதை மறக்கக்கூடாது. எனினும் அது இன்றைக்கும் பொருந்துகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை நிர்வாகிகளுக்கு சனவரி மாதம் 2010ல் செங்கல்பட்டில் அளிக்கப்பட்ட ‘தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை’யில் விநியோகிக்கப்பட்ட கையேடு.

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …