Home Dalit History எம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை

எம்.சி.ராஜா – மறக்கப்பட்ட மாபெரும் ஆளுமை

3

எம் சி ராசா அவர்கள் எழுதிய நூலுக்கு எழுதிய மதிப்புரை

எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது.

எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை முன்னெடுத்த தலைவர் என்று ஏற்றுக்கொள்வதற்கு பழையத் தலைமுறைக்கும், அதனை பின்தொடர மறுக்கும் இன்றைய தலைமுறைக்கும்கூடத் தயக்கம் இருக்கலாம். ஏனெனில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முன்னர் அரசியல் பணிகளைத் தொடங்கி, பின்னர் அவரோடு சமகாலத் தலைவராய் அறியப்பட்டதால் இந்த குழப்பமான வரலாற்று மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தீர்க்கும் விதமாக கிடைத்துள்ளச் சான்றுகளில் ஒன்றை இங்கே தருகிறேன்..

தலைவர் எம்.சி.ராஜா அவர்களைப் பற்றி Pioneer Allahabad  என்ற இதழ் 12.02.1930 அன்று பின்வருமாறு எழுதியது :

‘எம்.சி.ராஜா அவர்கள் தாழ்வு மனப்பான்மையின் எதிரி.. சமூதாயப் புரட்சிm-c-raja 2யாளர்.. அவர் தம் இனத்தைக் காப்பற்ற வந்த வீரர். தாழ்த்தப்பட்டோரின் தலைசிறந்த வழிக்காட்டி. அழுத்தப்பட்ட தம் மக்களுக்காக அயராது போராடியவர். தடுமாறும் சமுதாயத்தின் ஒப்பற்ற நண்பர். தாழ்த்தப்பட்ட மக்களை விழிப்புற வைத்த முதன்மையானத் தலைவர்’’

அலகாபாத்தில் வெளியிடப்பட்ட செய்திகள் மட்டுமல்ல இப்படி பலவிதமானச் செய்திகள் அக்கால இதழ்களில் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன. ஆய்வாளர்களின் பார்வைக்குக் காத்துக் கிடக்கின்றன.
1858ஆம் ஆண்டு நடந்த புரட்சியில் பங்கேற்ற மயிலை சின்னத்தம்பி அவர்கள், 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். இந்த முன்னோடித் தலைவரின் மகனாக பிறந்ததினால் தானோ என்னவோ ராஜா அவர்கள் தம் தந்தையை மிஞ்சினத் தலைவராக, அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்தார். தம் கடின உழைப்பால் நிலைத்தார்.

எனினும் கிடைத்தச் சான்றுகளை ஒருக்கிணைத்துப் பார்க்கும் போது தமது முப்பதாவது வயதிற்குள்ளாகவே தென்னகம் முழுதும் அறியப்பட்டத் தலைவராக ராஜா அவர்கள் விளங்கினார். 1916 முதல் அவரது அரசியல் முயற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருந்தன. ஏனெனில் மாபெரும் தலைவராக இருந்த அயோத்திதாசப் பண்டிதர் 1914ல் மறைந்துவிட்டிருந்தார். மற்றொரு மாபெரும் தலைவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்கள் இன்னும் தென்னாப்பிரிக்காவிலேயே இருந்தார். எனவே அந்த இடைவெளியை சமூக அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த ராஜா அவர்கள் நிரப்பினார் என்றால் அது மிகையாகாது.

ராஜா அவர்கள் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்த 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி ஒரு மனுவை அளித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். அதனால் தொடர்ந்து வந்த அனைத்து அரசியல் மாற்றங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் குரலை ஒலிக்கும் தலைவராக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். அதன்பலனாக 1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் தீண்டத்தகாத மக்களின் தலைவராக சட்டசபையில் அடியெடுத்து வைத்த முதல் தலைவர் ராஜா அவர்கள்தான், அதுவுமின்றி நீதிகட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முதல் அமைச்சரவையில் பங்கேற்ற தீண்டத்தகாத சமூகத்தின் முதல் தலைவரும் ராஜா அவர்கள்தான். இந்தப் பொறுப்புகளில் நின்று அவர் ஆற்றியச் சாதனைகளை பட்டியலிட்டால் அவர் எவ்வளவு தூரம் முன்னோடியாக இருந்திருக்கிறார் என்பது விளங்கும்.

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் அமைக்கப்பட்டதுடன் அதன் முதல் செயலாளராகவும் ராஜா அவர்கள் விளங்கினார். அதனால் நாடு முழவதும் பயணம் செய்து ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களை அரசியல் படுத்தி அவர்களை அமைப்பாக்கினார். அவரின் பணி பெருகியக் காரணத்தினால் 1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் தலைவர் மட்டுமல்ல 1934ல் தற்காலிக சபா நாயகராக இருந்தவரும் ராஜா அவர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தீண்டாமைத் தொடர்பான மசோதா ஒன்றினை 1933ல் கொண்டு வந்தார். ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனது என்பது அவரின் கால சாதி இறுக்கத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படி விரிவான தளத்தில் தமது பணிகளை முன்னெடுத்தக் காரணத்தினால் நாடு முழுதும் அறியப்பட்டத் தலைவராக அவர் விளங்கியது மட்டுமின்றி அவரது காலத்தில், பரந்த அடித்தளத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் இசுலாமியக் கட்சிகளுக்கு இணையாக தம்முடைய அரசியல் பயணத்தை அவர் கட்டமைத்திருந்தார்.
ஆனால், வரலாறு அப்படியே போகவில்லை. அவர் முரண்பட வேண்டியக் காலத்தையும் அவருக்கு அளித்தது. 1930 ஆண்டு தொடங்கிய வட்ட மேசை மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிட்டாமல் போனது. ராஜா அவர்களை விட இளையவரான டாக்டர்.அம்பேத்கருக்கும், மூத்தவரான ரெட்டமலை சீனிவாசம் அவர்களுக்கும் கிட்டியது. இது ராஜா அவர்களின் மனதில் பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதனால் அம்பேத்கர் அவர்களுடன் முரண்பட்டார். முரண்காட்சி என்னவென்றால் மாநாடு தொடங்கும் வரை தனிவாக்காளர் தொகுதி பற்றினக் கோரிக்கையை ராஜா அவர்கள் முன்வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அம்பேத்கர் அதில் உடன்பாடு கொள்ளமலிருந்தார். ஆனால் அரசியல் போக்கின் தீவிரத்தை உணர்ந்த அம்பேத்கர் தனிவாக்காளர் தொகுதி கோரிக்கையில் தேவைப்பட்ட மாறுதல்களை கொண்டுவந்து ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக மாற்றினார். ஆனால் அதுவரை இக்கோட்பாடுகளை வலியுறுத்தி வந்த ராஜா அவர்கள் தாம் ஆதரித்த கருத்தை மாற்றிக்கொண்டு, எதிர்க்கத் தொடங்கிவிட்டார். இதனால் தாழ்த்தப்பட்டோருக்கான அரசியல் களம் கடுமையாக சூடுபிடித்தது. மாபெரும் இரண்டுத் தலைவர்களின் மோதலாக அது உருவெடுத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பார்ப்பனீயச் சக்திகள் மோதலைக் கூர்மைப்படுத்தி, இருவருக்கும் இடையிலான இடைவெளியினைப் பெரிது படுத்தினார்கள். பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல அரசியல் களத்திற்கும் அன்றைக்கு நல்ல தீனியாக இருந்தது.

இரண்டாம் வட்ட மேசை மாநாடு முடிந்த பிறகு, இரட்டை வாக்குரிமை அம்பேத்கராலும் அவருக்குத் துணையாக இருந்த ரெட்டமலை சீனிவாசம் அவர்களாலும் பெறப்பட்டப் பிறகு, அதை ஒழிப்பதற்கு காந்தி மேற்கொண்ட முயற்சிகளால் நாடே வன்முறைச் சூழலில் சிக்கித் தவித்தது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் உருவானதுதான் பூனா ஒப்பந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். இரட்டை வாக்குரிமையை கைவிட அம்பேத்கர் மறுத்தக் காரணத்தினால் ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வை மட்டுமல்ல, ஐரோப்பாவின் பார்வையும் அவர் மீது விழுந்தது. அம்பேத்கர் எடுக்கப்போகும் முடிவுதான் இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் என்பதால் உலகம் அவரையே உற்று நோக்கியது. அம்பேத்கர் முடிவெடுத்தார். பூனா ஒப்பந்தம் உருவானது.

இந்நேரத்தில் எழுந்த கொந்தளிப்புகளில் கடும் மனஉளைச்சலில் ராஜா அவர்கள் இருந்தார். காங்கிரசாலும் பார்ப்பனீயச் சக்திகளாலும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவராய் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார். அவரது கோட்பாடுகளுக்கு எதிராக அவரே நின்ற கோலம்தான் அவரை மிகவும் தாக்கியிருக்க வேண்டும். அவரது அமைதி அவருக்கு வரலாற்றில் ஒரு மோசமான பாத்திரத்தை அளிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். தன்னுடைய சொந்த முயற்சியினால் அகில இந்தியாவிலும் இருக்கும் தீண்டத்தகாத மக்களுக்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் விரும்பியது நிறைவேறாமல் போனது அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும். விரைவிலேயே தம்மை அவர் மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த முரண்பாடு நிறைந்த அந்தக் காலத்தில் ராஜா அவர்கள் டாக்டர். அம்பேத்கருடன் முரண்பட்டக் காரணத்தினால் வரலாற்றிலிருந்தே புறக்கணிக்கப்படும் அளவிற்கு அவர் மறக்கடிக்கப்பட்டார். உண்மையில் இந்த மறக்கடிப்பும் இருட்டடிப்பும் அந்த மாபெரும் தலைவருக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுக் குற்றம்.

ஏனெனில், ராஜா அவர்கள் அம்பேத்கரோடு நீண்டகாலம் முரண்படவில்லை, விரைவிலேயே இருவரும் சந்தித்து, மனம்விட்ட பேசி தமது கருத்து வேற்றுமைகளைச் சரி செய்துக் கொண்டார்கள். அதன் பயனாக இருவரும் இணைந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்தனர். அந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போர் வந்து மிளிர்ந்தத் தலைவர்கள் எல்லோரையும் மங்கச் செய்து விட்டது. அதில் ராஜாவும் மங்கித்தான் போனாரென்றாலும், தன்னுடைய மறைவு வரை அம்பேத்கரோடு இணைந்து பணியாற்றினார் என்பதற்கு அம்பேத்கரின் எழுத்துக்களும் பேச்சுக்களுமே சாட்சி. 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் நாள் எம்.சி.ராஜா என்ற மாபெரும் விடுதலைத் தலைவர் மறைந்த பிறகு..தலித் வரலாற்றுக் களம் அவரை மறந்துவிடவில்லை. தொடர்ந்தது என்பதே உண்மை. ஆனால் அவரை நினைவுக் கூர்வது வீச்சாக நடைபெறவில்லை, மாறாக, அம்பேத்கரின் தத்துவத்தால் உத்வேகம் பெற்ற இயக்கங்களின் எழுச்சியினால் மங்கிப் போனது என்பதே உண்மை.

ராஜா அவர்களைப் பற்றின இந்த அறிமுகம் மிகச்சிறியது என்பதை நாம் குற்ற உணர்வோடு ஒத்துக் கொள்கிறேன். எனவே அவர் விரிவாக வெளிக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக வலியுறுத்துகிறேன். அவர் மேற்கொண்டப் பணிகளை விரிவாக மதிப்பிடக்கூடியத் தளம் இதுவல்ல என்றக் காரணத்தினால் இதாடு நிறுத்திக் கொண்டு, இந்த நூல் கையாளும் உள்ளடக்கத்தினைப் பற்றியும் அதன் வரலாற்று பாத்திரத்தைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ராஜா அவர்கள் களத்ததிலே இறங்கி மக்களை அணிதிரட்டிய தலைவரும் போராளியும் மட்டுமல்ல, அவர் சிறந்த கல்வியாளர். கற்றறிந்த அறிஞர், எழுத்தாளர், கவிஞர் என பன்முக ஆற்றல் பெற்றவர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லியன் மிஷன் பள்ளிக்கு கண்காணிப்பாளராக இருந்தார். பின்பு சென்னை கிறித்தவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் என்பதெல்லாம் அவர் சிறந்த கல்வியாளர் என்பதை காட்டும் சான்றுகளாகும்.

1997ல், தலித் சமூக அரசியல் வரலாற்றைப் பற்றி நான் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோது, அறிஞர் அன்பு பொன்னோவியம் அவர்களை அவரது இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அப்படியான ஒரு சந்திப்பில் அவர் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட செய்தியில் ‘எம்.சி.ராஜா பல பள்ளிக்கூடப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்’ என்று சொன்னார். ஆனால் அப்போது அந்த நூல்கள் பற்றி குறிப்பாக எதையும் அவர் சொல்லவில்லை. ஆனால், 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த அறவுரை எனும் மாத இதழில் அவற்றைப் பற்றினக் குறிப்பை பொன்னேவியம் அவர்கள் எழுதியிருக்கிறார்.

**‘ராஜா அவர்கள் பல பள்ளிப் புத்தகங்களின் ஆசிரியராவார். சமூதாயத்தையொட்டி அவர் எழுதிய ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற நூல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கோர் வழிக்காட்டியாக அமைந்தது என்றால் மிகையாகாது. நம்மை பீடித்தக் கெட்ட வேளையால் அவர் எழுதியக் கவிதைகள் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், அவர் ஒரு கவிதா உள்ளம் படைத்தவர் என்பதை அவரது வரலாற்றிலிருந்து அறிகிறோம்’’

பொன்னோவியம் அவர்களின் இந்தக் குறிப்பு ஒர் ஒளியை ராஜா அவர்களை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு வழங்கும். அந்த அடிப்படையில்தான் Kinder Garden Room என்ற தலைப்பிடப்பட்டு, எம்.சி.ராஜா அவர்களாலும் ஆர்.ரங்கநாயகி அம்மாள் அவர்களாலும் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த மழலையர் பள்ளிப் பாடநூலின் நம்பகத் தன்மையை உணர்ந்துக்கொள்ள முடிகிறது. எனவே, இனி, இந்த நூலின் கவிதைகளில் உள்ள சில அம்சங்களைப் பார்ப்போம்.

முதலில் இந்தக் கவிதைகளைப் படித்தவுடன் எனக்கு உருவான மனவெழுச்சியை என்னவென்று சொல்வது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி என் உள்ளத்தை ஆட்கொண்டது. ஏனெனில் இதிலுள்ள பல பாடல்கள் நான் சிறுவனாக இருந்தபோது நானும் என்னையொத்தவர்களாலும் பாடப்பட்ட பாடல்கள். எங்களுக்கு எப்படி அந்த பாடல்கள் கிடைத்தனவென்றால் எங்களுக்கு முன்பிருந்த தலைமுறை எங்களுக்குச் சொல்லித் தந்தவை. அப்படி வழிவழியாக வந்தப் பாடல்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை மாபெரும் தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் வழங்கியப் பாடல்கள் என்று நினைக்கும்போது உள்ளம் உவகைக் கொள்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால். மிக முக்கியமாக இரண்டுப் பாடல்கள் ஒரு குழந்தையாய் பேசத் தொடங்குவதற்கு முன்பே சொல்லித் தரப்பட்டப் பாடல்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பாக ‘கை வீசாம்மா கைவீசு’ (பாடல் .1), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ (பாடல் .6) ‘அகத்திக்கீரைப் புண்ணாக்கு’(பாடல் .19) அதிலே கொஞ்சம் நெய்வாறு’ ஆகியப் பாடல்கள். இந்த பாடல்கள் குழந்தைகளை எளிய பயிற்சிகளை செய்யத் தூண்டுபவை மட்டுமின்றி, மறக்க இயலாதப் பாடல்களும்கூட. இன்றும்கூட தாய்மார்களால் தம்முடைய குழந்தைகளுக்கு வழியவழியாய் கற்றுக் கொடுக்கப்பட்டுவரும் பாடல்களாக பரிணமித்துள்ளவை. அதற்கு காரணம் என்வென்றால் அப்பாடல்களில் உள்ள எளிமையும் இசைநயமும்தான்.

நூலில் உள்ள பாடல்கள் பல இன்றளவும் நகர்புறச் சேரிப்பகுதிகளிலும் கிராமங்களின் அனைத்துப் பிரிவு மக்களிடையேயும் புழக்கத்தில் இருக்கும் பாடல்கள். அதுவுமின்றி இன்றைய பாட நூல்களில் சிறிய பெரிய மாற்றங்களுடன் நிலைத்துவிட்டவையும் இருக்கின்றன. குறிப்பாக சிலவற்றைப் பட்டியலிடலாம்..

‘நிலா நிலா ஓடிவா ! (பாடல்.2),

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா ! (பாடல்.20) ஆகியப் படல்களை இன்றும் பாட நூல்களில் நாம் பார்க்க முடியும்.

சின்ன சின்ன கை (பாடல்.3),

உங்கம்மா என்னென்ன கேட்டாள் (பாடல்.8),

ஏழாங்காய் ஆட்டம் (பாடல்.10),

ஒரு புட்டம் திருப்புட்டம் (பாடல்.12),

பூ, பூ புளியாம்பூ (பாடல்.13)

நீ எங்கே போனாய் (பாடல்.14),

புல்லே புல்லே ஏன் மறைந்தாய் (பாடல்.22),

காக்கா காக்கா எங்கே போனாய் (பாடல்.23), சொட சொடாப் பழம் (பாடல்.28)’’ ஆகியப் பாடல்களை இன்றளவும் குழந்தைளிடம் கேட்க முடியும். அவர்கள் விளையாடும் இடத்திற்குப் போனால் கூட்டிசைப் பாடல்களாய் அவை பாடப்படுவதை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும்.

சில பாடல்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவை, ஒரு முறை படித்தால் உடனே மனதில் பதிய கூடிய அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவை. ஞாபகத்திறனை சோதித்து அறிய விரும்புகிறவர்களுக்கு அவற்றை பரிந்துரைக்க விரும்புகிறேன். குறிப்பாக.

‘பனை மரமே ! பனை மரமே! (பாடல்.26),

தம்பி ! என்ன செய்தாய் (பாடல்.27),

ஈ – ஓ கொழுத்தக் கன்றே ! என் பேரைச் சொல்லு ?(பாடல்.29)’’ இந்தப் பாடல்கள் மிகுந்த இசை நயம் வாய்த்தவை மட்டுமல்ல, தொட்டுத் தொடர வைக்கும் எளிமை நிறைந்தவை, அதனால் சட்டென மனதில் பதிந்துவிடுகின்றன. குழந்தைகள் சிலர் இந்த பாடல்களின் உள்ளடக்கத்தை மாற்றி, ஆனால் அதே ஓசை நயத்துடன் பாடுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இப்போதும்கூட..!

சில பாடல்கள் திரை இசைக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன, குறிப்பாக – ‘ஆராரோ ஆரிரரோ ! ஆராரோ ஆரிரரோ ! முத்தே பவழமே, முக்கனியே சர்க்கரையே! (பாடல்.21)’’ என்ற தாலாட்டு பாடல் இளையராஜா அவர்களின் இசையில் பாடலின் சில பல்லவிகள் பாடப்பட்டுள்ளன, அதுவுமின்றி

‘அரச மரத்துக் கிளி.. புன்னை மரத்துக் கிளி என்ற (பாடல்.24),’’பாடலும் திரை இசையில் பயன்படுத்தப்பட்ட பாடல்தான். எனவே எம்.சி.ராஜா அவர்களுக்கு இசையில் நல்ல பரிச்சம் இருந்திருக்க வேண்டும் என்றுத் தெரிகிறது. நூலின் இறுதியில் வரும் பல பாடல்கள் எப்படி பாடப்பட வேண்டும் என்பதற்கு உதவியாக தமிழிசை ராகங்களை உடன் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்படி இந்த நூலின் சிறப்பைப் பற்றி விரிவாக பேசுவதற்கு மனம் விரும்பினாலும், வாசகர்களை ஒரு குழந்தை அனுபவத்தோடு படியுங்கள். ஒரு மாபெரும் அரசியல் தலைவர் குழந்தைகளுக்கான நூலினைப் படைக்கும்போது எவ்வளவு கவனத்துடன் இருந்திருக்கிறார் என்பது புரியும். அவரது மேதமையும் விளங்கும். இந்த நூல் மிகச்சிறியதுதான், தலித் குழந்தைகளுக்கு மட்டும் என்ற குறுகிய நோக்கத்திலன்றி ஒட்டுமொத்த குழந்தைகளை நோக்கி எழுதப்பட்டது என்பதை கூடுதலாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இறுதியாக இந்த நூலின் சிறப்பைப் பற்றி சொல்வதெனில்.. குழந்தையின் கல்வி என்பது இயற்கையை புரிந்துக் கொள்ளவும், இயற்கையை நேசித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், தமது சுற்றத்தின் மீது அன்பு கொள்ளவுமான ஒரு பரந்த பார்வையை குழந்தைகளுக்கு கற்றுத் தரும் என்பதே இந்நூலின் சிறப்பு. எனவே பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லித் தரவும் ஏற்ற நூல். சிறிய நூலானாலும் கீர்த்தியில் குறைவற்ற இந்நூலிற்கு அணிந்துரை எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.

இந்நூலைக் கண்டுபிடித்து, அதை இன்றையத் தலைமுறைக்குக் கொண்டுவந்துச் சேர்க்க பெரும் முயற்சியெடுத்து உழைத்துள்ள பாலாஜி அவர்கள் பாராட்டுக்குரியவர். மேலும், தலித் வரலாற்று ஆய்வில் சிகரங்களைத் தொடவும், சாதிகளற்ற சமத்துவ சமூதாயம் படைக்க அவரது முயற்சிகள் துணை நிற்கும். எனவே பாலாஜி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

அன்புடன்
ஜா. கௌதம சன்னா
05.01.2013, சென்னை.

Load More Related Articles
Load More By admin
Load More In Dalit History

3 Comments

  1. Chelladurai Esakki

    February 27, 2013 at 5:06 pm

    சிறந்த மதிப்புரை.

  2. Selvin Jacob

    April 13, 2013 at 7:37 pm

    Very good information about Mr.M.C.Raja
    We are expecting more from you Sanna

  3. Sakya Mohan

    June 26, 2013 at 8:30 pm

    Sanna,
    After a long time I am reading your writing on one of our Great Leaders. This is an excellent piece to know a poet in our liberator Rao Bahadur M.C. Raja. I appreciate your involvement in revealing a rare history of our leader.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …