Home Article சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3
மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்...
1
லகம் எப்படி படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு விடை காண மனித சமூகம் 3000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விரிவாக பேசத் தொடங்கியிருந்தது. இந்த கேள்விதான் தத்துவ கேள்வியாக மாறி சமுகத்தை இரண்டுத் தரப்பாக பிரித்துவிட்டது. இதில் உலகத்தையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்பியவர்கள் கருத்து முதல்வாதிகளாக ஆனார்கள். இவர்கள்தான் மனித பிறப்பு பற்றின தொண்மக் கதைகள் உருவாகக் காரணமானார்கள், அதைத்தான் கடந்த இதழில் பார்த்தோம்.
ஆனால், இவர்களின் கருத்தை மறுத்து, கடவுள் உலகத்தை படைக்கவில்லை. உலகமும், பிரபஞ்சமும் படைக்கப்படாமல் எப்போதும் இருந்து வருகிறது. அதில் உள்ள பொருட்களின் மாறுபாடுகளினால் உலகின் உயிர்கள் உருவாகியிருக்கின்றன என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் பொருள் முதல்வாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த அறிஞர்களின் எண்ணிக்கை ஏடறிந்த வரலாற்றின் காலம்தொட்டு குறைவாகவே இருந்தது. கிடைத்துள்ள குறிப்புகளின்படி கிரேக்கம், அரேபியா, சீனா மற்றும் இந்தியாவிலும்தான் இக்கருத்தின் மூலவர்கள் இருந்தார்கள். எனினும் இந்த இரு தரப்பினருக்கும் மேற்கு நாடுகளில் தத்துவாதிகள் என்று பெயர். இந்தியாவில் ரிஷிகள், முனிவர்கள் மற்றும் குரு என்று அழைக்கப்பட்டனர்.

இந்தத் தத்துவாதிகள் தமது அறிவுத் திறத்தால் உலகின் மர்மங்களுக்கு விடைக்காண முயன்றார்கள். அதனால், ஏறக்குறைய கி.மு.2000 முதல் கிபி.18ம் நூற்றாண்டு வரை தத்துவவாதிகள் அனைத்திற்கும் விடையளிப்பவர்கள் என்று உலகம் நம்பியது. எனவே அவர்களிடமே எல்லா கருத்துக்களையும் எதிர்பார்த்தது. 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு தத்துவாதிகளின் இடத்தினை மதவாதிகள் கைப்பற்றிக்கொள்ள, துறைவாரியான அறிவியலுக்கு அறிவியலாளர்கள் வந்துவிட்டார்கள். அதனால்தான் காலம் பற்றின புதிர்களை விடுவித்த ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ என்ற முன்னணி அறிவியல் அறிஞர்  ‘‘தத்துவாதிகளின் காலம் முடிந்துவிட்டது’’ என்று அறிவித்தார்.
எனவே அறிதல் முறை என்பது முழுக்க அறிவியல் அடிப்படையில் மாறியப் பிறகும் மனிதன் படைப்புப் பற்றின ஆய்வுகள் காலம்தோரும் மாறி மாறி அறிவியல் புதிர்களாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும் சாதி பற்றின மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்கு இந்த வரலாற்றைத் தெரிந்துக்கொள்வது அவசியம். எனவே மானுடப் பிறப்பின் அறிவியல் வரலாற்று முடிவுகளின் சுருக்கத்தைப் பார்ப்போம்..
இன்றைய மேற்கத்திய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படைகளை வகுத்தது பண்டைய கிரேக்கம்தான். கிரேக்கத்தின் தத்துவ வளர்ச்சி மட்டும் இல்லையென்றால் இன்றைய ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியே இல்லை என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட கிரேக்கத்தின் தத்துவ சிந்தனை மில்டஸ் என்ற நகரத்தில் கி.மு.600ல் தோன்றியது. தீலஸ் என்பவர் தான் ‘எல்லா பொருள்களுக்கும் தண்ணீர்தான் அடிப்படை’ என்று தமது ஆய்வினை அறிவித்து கிரேக்கத் தத்துவ மரபைத் தொடங்கி வைத்தார். இவருக்கு பிறகு அனாக்சிமான்டர் என்பவர் ‘உலகம் அபெய்ரோன் என்பதிலிருந்து தோன்றியது. அதாவது திட்டவட்டமில்லாத மண், நெருப்பு, நீர் போன்ற பொருட்களின் மூலம், அதன் மாறுபட்டத் தன்மைகளால் பருபொருள்கள் (விணீttமீக்ஷீ) தோன்றின என்று பொருள் முதல்வாத அடிப்படையினை அமைத்தார். அதை கி.மு.430-370 ல் வாழ்ந்த டெமாக்ரடஸ் அதை வளர்த்துக் சென்று விரிவுபடுத்தினார். ஐரோப்பிய அறிவுலகத்திற்கு அணு கொள்கைகளை அளித்தவர் இவரே. உலகம் அணுக்களின் சேர்ப்பினால் உண்டாகி இயங்குகிறது என்றும் மனிதனின் உடம்பும் ஆன்மாவும் அணுக்களால் ஆனது, மனிதன் இறக்கும்போது இரண்டும் பிரிந்துவிடுகின்றன  என்றும் அவர் கூறினார்.
இந்த போக்கினை எதிர்த்து கருத்து முதல்வாத தத்துவாதிகள் வாதம் புரிந்தார்கள். சாக்ரடீஸ் மற்றும் அவரது மாணவர்கள் அதில் முன்னணியில் இருந்தனர். பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் அதில் உச்சத்தை தொட்டவர்கள். இதில் அரிஸ்டாட்டில் எழுதிய உயிரினங்களின் உறுப்புகள் என்ற நூல்தான் உயிரியல் துறையின் முன்னோடி. உயிரினங்கள் மற்றும் அதன் அங்களுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கின்றது. அவற்றை நிறைவேற்றவே அவை இயங்குகின்றன என்று அவர் அவதானித்தார். இவர் தமது ஆய்வில் மனிதனின் பரிணாமம் பற்றின கோட்பாடுகளுக்கு நெருக்கமாக வந்தாலும் அதை தமது கருத்தினாலே புறக்கணித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உயிரினமும் அதன் உயிரமைப்புகளும் வாழ்வதற்கான போராட்டதில் நிலைக்கவே இயங்குகின்றன என்று கூறிய எம்பிடாக்ளசின் கருத்துக்களை மறுத்தார். ஒருவேளை எம்பிடாக்ளசின் கருத்துக்களை அரிஸ்டாட்டில் ஏற்றுக்கொண்டிருந்தால் பரிணமா வளர்ச்சிக் கோட்பாட்டை முதலில் கண்டுபிடித்தவர் என்று ஆகியிருக்கலாம். ஆனால் அவர் தமது கடவுள் பற்றின கோட்பாட்டை கைவிட வேண்டியிருக்கும். எப்படியிருந்தாலும் அவர் இடையிலே நின்றார். கிரேக்கத் தத்துவ மரபு அத்தோடு வீழத்தொடங்கியது. மட்டுமின்றி, அந்த தத்துவவாதிகள் உருவாக்கிய கருத்துக்கள் அடுத்த 1700 ஆண்டுகள் அதிக மாற்றமின்றி ஐரோப்பாவை ஆதிக்கம் செலுத்தின. எனினும் அந்த தத்துவாதிகள் மனித பிறப்பின் மூல அம்சங்களைக்  கண்டுபிடித்தாலும் மனிதன் எப்படி உருவானான் என்பதைப் பற்றி அறிய முடியாமல் போனது.
இந்தியாவில் மேற்கண்ட விவாதங்களைத் தொடங்கி வைத்தவர் பிரகஸ்பதி. இவர் மூலமாகவே உலகாயவாதம் அல்லது சார்வாகம் என்ற கருத்தாக்கம் உருபெற்றது. மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் மற்றும் சடப்பொருள்களுக்கு மூலமாக இருப்பது நீர், காற்று, நெருப்பு மற்றும் நிலம் ஆகிய நான்கு பூதங்களே என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. அவர்கள் ஆகாயத்தை ஒரு பூதமாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதை உயிரியல் அடிப்படையில் முதன்முதலில் விளக்கியவர் உத்தாலகர் என்ற பௌதிகவாத அறிஞர். பௌதிக பொருட்களுக்கு உயிர் மற்றும் உணர்வு குறித்த தொடர்ப்பை விளக்கியவரும் இவர்தான். இவரைத் தொடர்ந்து இக்கருத்துக்களை வளப்படுத்தியவர்களில் சாங்கியத்தை தோற்றுவித்த கபிலர், புத்தர், மகாவீரர், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஆசீவகத்தை தோற்றுவித்த மற்கலி கோசர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இதில் புத்தர் மனிதனின் படைப்பு பற்றி துல்லியமாக பேசாவிட்டாலும், மனித படைப்பின் அடிப்படையை வகுத்திருக்கிறார். மறுபிறப்பைப் பற்றி பேசும்போது.. ஒரு விளக்கிலிருந்து ஒளி அடுத்த விளக்கிற்கு கடத்தப்படுவது போல பிறப்பானது கடத்தப்படுகிறது என்றும், படைப்பின் அடிப்படை கூறுகளான நான்கு பூதங்களும் தமது கட்டுக்களை இழக்கும்போது உடல் அல்லது பொருளின் தோற்றம் சிதைந்து அந்த நான்கு பூதங்களும் தத்தமது மூலகங்களுடன் இணைந்துக் கொள்கின்றன. மேலும், அவை மறுபடி இணைந்து புதிய பிறப்பிற்கு வழி கோளுகின்றன என்று புத்தர் உரைத்தார். இது பரிணாமக் கோட்பாடான இயற்கைத் தேற்விற்கு நெருக்கமாக அமைந்ததுதான்.
மிகச் சுருக்கமான இக்கருத்துக்களைப் போலவே சீனா, பாபிலோன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் பண்டை காலத்தில் உருவாகியிருந்தன. எனவே, மிக விரிந்து பரந்த அக்கருத்துக்களை விவாதிப்பதை இத்தோடு நிறுத்திக்கொண்டு, அடிப்படையான அம்சத்தை மட்டும் பார்ப்போம்.
எனவே.. உலகப்படைப்புப் பற்றின கேள்விகள் மட்டுமின்றி.. மனிதன் தோற்றத்தைப் பற்றி இரண்டு கேள்விகள் பிரதானமாய் இருந்தன. ஒன்று மனிதன் ஏன் படைக்கப்பட்டான்.. இரண்டு மனிதன் எப்படிப் படைக்கப்பட்டான். இதில் முதல் கேள்விக்கு கடவுளை நம்பியவர்கள் விடைகாண முயன்றார்கள், இரண்டாம் கேள்விக்கு பொருள்முதல்வாதிகள் விடைக்காண முயன்றார்கள். ஆனால் இருவருமே போதிய அளவில் விடைக்காண வில்லை, அதற்கான வசதிகளும் அவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் காரணம். அவையெல்லாம் பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மனிதன் சமூகமாக வாழ்வதன் நோக்கத்தை இரு தரப்பினருமே ஆராய்ந்து வந்துள்ளனர். இதனால் தத்துவம் பலதுறைகளாக வளர்ந்தது. தத்துவவாதிகள் உருவாக்கிய அத்தனை வாய்ப்புகளையும் மதவாதிகள் தமது நலத்திற்குள் கொண்டுவரும் போக்கும் தொடர்ந்து வந்தன. ஏறக்குறைய மத்திய காலம் வரையில் இந்த போராட்டம் தொடர்ந்தது.
எனவே மனித இனத்தின் தோற்றம், அதன் சமூக அமைப்பின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றின அறிவியல் அடிப்படையிலான் ஆய்வுக்கு மனித இனம் வந்து சேர்ந்தது ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சிக் காலத்திலேதான். அக்காலத்தில்தான் எல்லாவற்றையும் பற்றின கேள்விகள் உருவாயின. அவற்றின் மிக முக்கியமானது மானுடவியல் ஆய்வுகள். அந்த ஆய்வுத் துறைதான் மனிதன் தோற்றத்தைப் பற்றின புதிர்களை விடுவிக்க அடித்தளம் அமைத்தது. எனினும் அதற்கான அடிப்படைகளுக்கு பண்டைய கிரேக்கத் தத்துவவாதிகளே மூலமாக இருந்தார்கள் என்பதுதான் வரலாற்றின் விசித்திரம். அதே காலகட்டத்தில் நமது இந்தியா மதப் போராட்டங்களில் மூழ்கி சிந்தனையில் தேங்கிப் போயிருந்தது.
2
மானுடவியல் ஆய்வுகள் பற்றி பண்டைய கிரேக்கத்தில் ஹெராடோடஸ் அவர்களால் தொடங்கப்பட்டது போலவே, இந்தியாவில் வியாசர், வால்மீகி மற்றம் பல சங்க இலக்கிய புலவர்கள் சிலராலும்  தொடங்கப்பட்டிருக்கிறது. பிற சமூகங்களைப் பற்றின வர்ணனையாக அது அமைந்தது, ஆனால் அவை வளராமல் தேங்கிப் போயிவிட்டன. எனினும் மானுடவியல் ஒரு ஆய்வுத் துறையாக 17ம் நூற்றாண்டி டேனிஷ் மன்னர் மூன்றம் பிரடெரிக் அவர்களால் 1650 ஆம் ஆண்டு டென்மார்க்கில் தொடங்கப்பட்டது. அவர் நிறுவிய அருங்காட்சியகத்திற்குத் தேவையான படிமங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றின சான்றுகளை சேகரிப்பதிலிருந்து தொடங்கியது. பின் அது எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவி அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டன. அருங்காட்சியகத்திற்கு தேவையான படிமங்களைத் தேடி பணியாளர்களும், அறிஞர்களும் காடுகளுக்கும் பிற தூர தேசங்களுக்கும் போனார்கள், ஏராளமானவற்றைச் சேரித்தார்கள். அதிலிருந்து மானுடவியல் ஓர் அறிவியலாக பரிணமித்தது. .
இந்நிலையில் 18ம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மாபெரும் அறிவு எழுச்சித் தொடங்கியது. பிரான்சு புரட்சியின் பாதிப்புகள், ஜெர்மனியின் அறிவார்ந்த முயற்சிகள், இங்கிலாந்தின் முதலாளித்துவ எழுச்சி ஆகியன அந்த போக்குகளை உருவாக்க முக்கியக் காரணிகளாக இருந்தாலும், வாட்டிகனிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வந்த கத்தோலிக்க கிறித்துவமும் மூல காரணமாக விளங்கியது.
ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைகளால் உருவான மானிட இனம் பூலவுகு எங்கும் நிறைந்திருக்கிறது என்கிற கருத்து பன்னெடுங்காலமாக நிலை நிறுத்தப்பட்டிருந்தாலும், உலகில் எங்கு பார்த்தாலும் எராளமான இனங்களும், அவர்களுக்குள் உயர்வு தாழ்வுகளும் எப்படி உருவாயின என்பதற்கும், மக்கள் ஏன் சமூகமாக வாழத் துடிக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. இதைப்பற்றி பேசுவதை அன்றைய ரோமானியத் திருச்சபை அனுமதிக்கவில்லை. எனவே எங்கு பார்த்தாலும் அடக்குமுறைகள். அறிவுத் தளத்தில் கடும் கொந்தளிப்புகள் உருவாயின. இந்நிலையில் தான் மனிதன், விலங்குகள், தாவங்ரங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை படைப்புகள்  மற்றும் மனித இனங்களைப் பற்றின அறிவியல் அடிப்படையிலான மானுடவியல் ஆய்வுகள் முக்கியம் பெறத் தொடங்கின. இந்த ஆய்வுகளின் நோக்கம்:
– மனித இனம் எப்படி தோன்றியது..?
– எப்படி சமூகமாக ஆனது..?
– எவ்வாறு உலகம் முழுதும் பரவியது..?
– ஏன் இவ்வளவு இனங்களாக பெருகியது..?
– சில இனங்கள் தங்களை உயர்ந்த இனமாக கருதிக்கொள்ள, சில இனங்களை தாழ்ந்த இனமாக நசுக்கப்படுகிறதே ஏன்..?
என்பன போன்ற கேள்விகளுக்கு விடைக்காணத் துடித்தது.
இந்நிலையில் 1856ஆம் ஆண்டு ஜெர்மனில் உள்ள நியாண்டர்தால் என்கிற இடத்தின் பள்ளத்தாக்கில்  ஓரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுகளில்படி அந்த எலும்புக்கூட்டிற்கு உரிய மனிதன் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்த யூஜின் தூபுவா என்பரால் 1891ஆம் ஆண்டு, ஜாவா தீவின் பென்காவி ஆற்றின் கரையோரம் ஒரு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு பித்திக்காந்திரோப்பஸ் என்று பெயரிடப்பட்டது. அந்த மண்டையோட்டிற்கு உரிய மனித உயிரி 5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கணக்கிடப்பட்டது.
இந்த ஆய்வுகளெல்லாம் மதவாதிகள் மத்தியில் ஒரு கிலியை உண்டாக்கியது. ஏனெனில் அவர்களின் கருத்துப்படி கடவுள் மனிதனை படைத்து வெறும் 5 ஆயிரம் ஆண்டுகளே ஆகியிருந்தது. ஆனால் கடவுளின் படைப்பினை விட லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் தோன்றியிருக்கிறான் என்பதால்தான்.
மனிதன் பிறப்பு இப்படி இருந்தாலும் அவன் எப்படி பிறந்தான் என்பதற்கான விடையை முதன்முதலில் விடுவித்தவர் ழான் லெமார்க். ஜெர்மனியை சேர்ந்த லெமார்க் மனிதனை ஒத்த ஒரு  குரங்கைப் போன்ற உயிரியிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றான் என்று தமது கருதுகோளை வெளியிட்டார். எல்லோரும் ஆடிப்போய்விட்டார்கள். எனினும் அது விரிவாக விளக்கப்படாததால்  அதை அறிவியல் அடிப்படையில் நிறுவிய பெருமை டார்வின் அவர்களையே சாரும்.  சார்லஸ் டார்வின் தமது பீகிங் கப்பலில் உலகின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, பல மனித மாதிரிகளையும், மிருகம் மற்றும் தாவரங்களின் மாதிரிகளையும் சேகரித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். விளைவாக 1871ஆம் ஆண்டு தான் எழுதிய மனிதர்களின் முன்னோர்  ஆய்வு நூலை வெளியிட்டு அதில் மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றான் என்பதை நிருபித்தார்.
அதைத் தொடர்ந்து முதல் மனிதன் ஆப்பிரிக்காவின் ஜாவா என்னுமிடத்தில் பரிணாமம் அடைந்து, பிறகு உலகம் முழுதும் பரவினான் என்பதை முன்வைத்தனர் அறிவியலாளர்கள். அப்படி பரவும் போதுதான் கால, இட, தட்பவெப்ப மாறுபாடுகளுக்கு ஏற்ப மனித இனம் பல இனங்களாக பரிணமித்து உலகம் முழுதும் வியாபித்துள்ளனர் என்பதை உறுதிசெய்தனர். அதன்படி உலகம் முழுதும் வியாபித்த மனித இனம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது, அவை
1) நீக்ரோ -ஆஸ்திரேலிய வகை அல்லது ஆப்பிரிக்க-ஓஷானிய வகை அல்லது நிலநடுக்கோட்டு வகை.
2) ஐரோப்பிய வகை அல்லது ஐரோபிய -ஆகிய வகை,
3) மங்கோலிய வகை அல்லது ஆசிய -அமெரிக்க வகை. வகைகள்
races migration
இப்படி இருந்தாலும் இவை அத்தனையும் ஒரு மூதாதையரின் வழித்தோன்றல்கள் என்பதை அறிஞர்கள் நம்பினார்கள். மட்டுமின்றி, ரஷ்யாவில் 1800களில் வாழ்ந்த மிகயில் வசீலியெவிச் மனோசா என்பவர் தமது ஆய்வுகளில் மானுட இனத்தில் உயர்வு தாழ்வு என்கிற கோட்பாடு கற்பனை என்றும், அது ஆதிக்கவாதிகளால் கற்பிக்கப்பட்டது என்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவினார்
இந்த நிலையில் மனிதன் எப்படி ஒரு சமூகமாக மாறினான் என்பதற்கான கேள்விக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் என்பவர், அமெரிக்க பழங்குடிகளிடையே விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, மனித சமூகம் ஆதியில் ஒரு பொதுவுடைமை சமுகமாக இருந்தது என்றும், அப்போது அதற்குள் எந்த வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்பதையும் கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து முதல் சமூகம் தாய் தலைமை ஏற்ற சமூகமாக இருந்து, பின்னர் ஆண் தலைமையிலான சமூகமாக பரிணமித்தது என்றும், அதற்குப் பிறகு அடிமைச் சமூகம், உடைமைச் சமூகம், முதலாளித்துவ சமுகம் என சமூகங்கள் பரிணமித்தன என்று ஏங்கல்ஸ் நிறுவினார். ஆனால் அது ஏங்கல்ஸ் சொன்னதுபோல நடக்கவில்லை என்று 20ம் நூற்றாண்டு அறிஞர்களான சசூர், லெவிஸ்ட்ராஸ் போன்றோர் மறுத்து தமது ஆய்வுகளை முன்வைத்தனர். எனினும் இந்த வாதங்கள் தொடர்கின்றன.
நம் காலத்தில் மானுடவியல் ஆய்வுகள் விரிவான அளவில் பலதுறைகளைச் சேர்த்து ஆராயப்படுகின்றன. அவற்றை விவரிப்பது கடினம். ஆயினும் இந்த ஆய்வுகள் ஒன்றை தெளிவாக நிறுவியுள்ளன. மனித சமூகம் உருவானபோது அது சாதியாக உருவாகவில்லை என்றும், படைத்ததாகக் கருதப்படும் கடவுள்கூட இடையிலேதான் வந்தவர் என்பதை அறுதியாக கூறியுள்ளன. இது ஒருவகையான அறிவியல் என்றால், மற்றொரு அறிவியல்துறை மனிதனின் தோற்றத்தைப் பற்றி துல்லியப்படுத்த தற்போது பயன்படுகின்றது. அந்த துறையை உருவாக்கியர் கிரிகார் மெண்டல் என்கிற பாதிரியார். இவர் தொடங்கியது எப்படி தற்போது பிரமாண்டமாக வளர்ந்து நமது கேள்விகளுக்கு எவ்வாறு விடை தருகின்றன என்று பார்ப்போம்.
3
ஆஸ்த்திரிய மடாலய கத்தோலிக்க பாதிரியாரான கிரிகார் மெண்டல் என்கிற தாவரவியல் விஞ்ஞானி  பட்டாணி விதைகளில் மரபுக்கூறுகள் எவ்வாறு தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றது என்கிற ஆய்வை 1856 முதல் 1865வரை மேற்கொண்டார். ஏழு விதைகளைக் கொண்டு அவற்றின் பண்புக்கூறுகள் எவ்வாறு அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்து ணிஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீts ஷீஸீ றிறீணீஸீt பிஹ்தீக்ஷீவீபீவீக்ஷ்ணீtவீஷீஸீ என்ற நூல் மூலம் வெளியிட்டார். இதுதான் மரபியல் ஆய்வுகளுக்கான அடிப்படையாக அமைந்தது. அதற்குப் பிறகு அகஸ்ட் வெய்ஸ்மான் என்பவர் மெண்டலின் அடிப்படைகளை பின்பற்றி மனித மரபுக்கூறு கடத்தப்படும் விதத்தை கண்டறிந்தார். அவர்தான் குரோம்சோம்களின் செயல்பாட்டை முதன்முதலில் விளக்கியர். மாபெரும் இந்த இரு கண்டுபிடிப்புகள்தான் பிற்காலத்தில் கணிணியின் துணைகொண்டு மரபியல் கணிப்புகளில் துல்லியத்தை எட்டியது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேகமெடுத்த ஆய்வுகள் 2001ம் ஆண்டு முதன்முதல்  உச்சத்தினை எட்டத் தொடங்கி அங்கிருந்து வளர்ந்துக்கொண்டிருக்கிறது.
மனிதனின் உடலில் உள்ள ஏதாவது ஒரு பொருளை உதாரணத்திற்கு முடி, எச்சில் உள்ளிட்ட எதுவானாலும் அவற்றைக் கொண்டு மரபுக்கூறு பகுப்பாய்வின் (ஞிழிகி கிஸீணீறீஹ்sவீs)  மூலம் அந்த மனிதனின் மூதாதையரின் மூலத்தைக் கண்டுபிடிக்க முடியும். மனித மரபியல் தொகுப்பாக்கம் (நிமீஸீவீtவீநீ சிஷீபீவீயீவீநீணீtவீஷீஸீ) என்கிற மாபெரும் உலகலாவியத் திட்டம் அதை சாத்தியமாக்கியுள்ளது. இத்துறை விஞ்ஞானிகளின் ஆய்வுபடி மனித தோற்றத்தின் மூலம் மானுடவியல் ஆய்வாளர்கள் ஏற்கெனவே நிறுவியிருந்த அடிப்படைகள் பலவற்றை உறுதி செய்தது மட்டுமின்றி, பல முடிவுகளை மாற்றியமைத்தது. அதன்படி மனிதன் தோன்றிய ஆண்டு மேலும் முன்னேறியது.
70-60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் லெமூர் என்கிற குரங்கைப் போன்ற அமைப்புள்ள ஒரு உயிரினம்தான் மனிதனுக்கு முன்னோடி என்றும், அது படிநிலையெய்தி, டார்சியர், புத்துலகின் குரங்கு, பழையஉலகின் குரங்கு, கிப்பன், உராங்வுட்டான், கொரில்லா, சிம்பன்சி என  குரங்கினங்களாக படிமாற்றம் அடைந்து 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமினிஸ் என்கிற ஆதி மனித இனம் உருவானதாக மரபியல் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். மேலும் ஆப்பிரிகாவில் கண்டெடுக்கப்பட்ட மனித இனத்தின் முதாதையர்கள் எனக் கருதப்படும் ஹோமோஎரக்டஸ் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்தோன்றியது. இதிலிருந்துதான் 2லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தோன்றினான் என்பது மரபியல் ஆய்வின் முடிவு.
இவ்வாறு தோன்றிய ஆதிமனிதன் யார் என்பது ஒரு ஆர்வமூட்டக்கூடிய கேள்வி..?  இதைப்பற்றி விரிவாக ஆய்ந்து தொகுத்துள்ள விஞ்ஞானி டாக்டர்.பா.தயானந்தன் அவர்களின் கருத்துக்களை சுருக்கமாகப் பார்த்தால் புரிந்துக்கொள்ள முடியும்.
‘‘சுமார் 5000ம் தலைமுறைகளுக்கு முன்பு அதாவது 140ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு மனிதனின் ஒய் குரோம்சோம்களின் வாரிசுகள்தான் இன்று ஆண்களாக உலகம் முழுதும் உள்ளவர்கள். அதேபோல, உலகத்தில் உள்ள 700 கோடி பேருக்கும் ஒரே எக்ஸ் குரோம்சோம் கொண்ட  தாயின் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு ஆப்பிரிக்கன் ஏவாள் என்று பெயரிடப்பட்டது. இப்படி தோன்றியவர்களில் ஒரு குழு 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை வெளியேறியது. அப்படி வெளியேறிய குழுக்கள் 50ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலே அல்லது அரேபியாவிலோ கலந்தனர். இவர்களே உலகம் முழுதும் பரவினர். இந்தியாவையும் சேர்த்து என்பதை இங்கு அழுத்தமாக கூறவேண்டும். இக்கருத்துக்கள் இப்போது மரபியல் ஆய்வாளர்களால் உறுதிபட நிறுவப்பட்டடுள்ளது’’.
இப்படி பரவின ஆதி மக்களின் தோலின் நிறம் கருப்பு. உலகம் முழுதும் பரவும்போது, தட்பவெப்பத்திற்கு ஏற்ப அவர்களின் தோலின் நிறமும், உடல் அமைப்பும் மாற்றம் பெற்றன. அதுவுமின்றி உலகம் முழுதும் பரவிய மனிதர்கள் இடைவிடாமல் தமக்குள் கலந்து, கலந்து புதுவித இனங்களை உருவாக காரணமாக அமைந்தனர். இந்த வேறுபாடுகள் பண்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதும், உடல் அமைப்பில் மட்டும் என்பதுதான் மிக முக்கியமானது.
எனவே ரத்தக்கலப்பு முடிந்து தூய மனித இனம் ஒன்று இல்லை என்ற நிலை உருவானப் பிறகுதான், மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பண்பாட்டு மாறுபாடுகள் உருவாயின, அதற்கான வரலாறு மிகக்குறுகிய காலம் கொண்டது. அது வெறும் 3000 ஆண்டுகள்தான். இங்கு விவாதிக்கப்பட்டவை அத்தனையும் அந்த ஆய்வுகளின் முடிவுகளே. அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது மரபியல் அடிப்படையிலும், மானுடவியல் அடிப்படையிலும், ஆதி சிந்தனையாளர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலும் தொடக்கம் முதலே சாதி என்பது உருவாகவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
இந் நிலையில் சாதியின் மூலத்தை எப்படி நிர்மாணிப்பது…?
Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …