Home Buddhism மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

Comments Off on மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

16507038_1031666010310186_1354276499_nஎதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை 9.30 மணி. குறித்த நேரத்தில் கருத்தரங்கம் தொடங்கியபோது காலை 10 மணி. நம் நேரம் காலை 5.30 மணி.

இரண்டு இரவுகள் உறங்காத நிலையில் முதல் கருத்துரையாளராக பேச அழைக்கப்பட்டேன். தலைப்பு தமிழ் பௌத்தம் – அதன் தோற்றம், தாக்கம் குறித்த விரிவுரை.

பௌத்தத்தில் தமிழ் பௌத்தம் ஆங்கில பௌத்தம் ஏதாவது இருக்கிறதா என்று நான் பல முறை கேள்விக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது என்பதை கருத்தரங்கில் முதல் கருத்தாக முன்வைத்து அதன் தோற்றத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமான குறிப்பிட்டேன். அவரின் பிறப்பு, ரோகிணி ஆற்றுப் பிரச்சனையினால் வீட்டைவிட்டு வெளியேறுதல். கல்விமான்களைத் தேடி பரிவ்ராஜகராக அலைந்து அனைத்துத் தத்துவங்களையும் பயின்றது. ஞானம் அடைந்தது, பிறகு தமது போதனையை நாடு முழுக்க கொண்டு போனது, அவரின் இறுதி ஆகியவற்றை விளக்கிவிட்டு, அவரின் போதனைகளை அவர் கண்டடைந்த விதத்தையும் அதற்கு அவர் கையாண்ட அறிதல் முறையினையும் விளக்கிப் பேசினேன்.

பிறகு புத்தரின் தத்துவங்களையும், அதில் தமிழ் பௌத்தத்தின் அடிப்படைகள் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினேன். பிறகு பௌத்தம் போய் சேர்ந்த நாடுகளில் எல்லாம் ஏராளமான பிரிவுகள் உருவாகியிருக்கின்றன. எனவே தமிழகத்தில் தமிழ் பௌத்தம் என்பது உருவானது தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அதுதான் பௌத்தத்தின் சிறப்பு. பௌத்தத்தில் எத்தனைப் பிரிவுகள் உருவானாலும் அதன் அடிப்படைகள் இன்னும் மாறாமல் அப்படியே நிலைத்திருக்கின்றன என்பது பௌத்தத்தின் தனித்தன்மை.

16426269_1908170686092986_8502751717671188496_nபிறகு தமிழ் பண்பாட்டை கட்டமைத்த பௌத்தத்தின் அடையாளங்களை பட்டியலிட்டேன். பிறப்பு தொடங்கி திருமணம், இறப்புவரை தமிழர்களின் வாழ்வியலில் பௌத்தம் எப்படி சடங்குகளாகவும் வழக்காறுகளாகவும் உறைந்திருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தேன். மேலும் அவை எப்படி பிற்காலத்தில் இந்து பண்பாட்டு எச்சங்களாக மருவின என்பதையும் விளக்கி அதற்கான சான்றுகளைக் குறிப்பிட்டுப் பேசினேன்.

உரையினைக் கேட்ட பார்வையாளர்கள் நடுவில் கடும் அமைதி நிலவியது. எனக்கு மலேசிய சூழல் புதிது என்பதால் அந்த அமைதியினை ஒரு வரவேற்பாகவே எடுத்துக் கொண்டு உரையினைத் தொடர்ந்தேன். கேள்வி ஏதும் எழவில்லை. அமைதி நிலவியது.

எனக்குப் பிற்பாடு முனைவர்.சுபாஷிணி அவர்கள் நாட்டார் தெய்வங்களைப் பற்றி உரையாற்றினார். பிற்பாடு உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது கடுமையான சலசலப்பு உருவாகியிருந்தது. என்னுடைய உரையின் மீதுதான் அந்த சலசலப்பு. பலர் கடுமையாக என்னை விமர்ச்னம் செய்துக் கொண்டிருந்தார்கள் என்றும், சிலர் தாக்கும் மனநிலையில் உள்ளதாக ஒரு நண்பர் ஒருவர் என்னிடம் வந்து சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக ்இருந்தது. ஏனென்றால் அனைவரும் தீவிர இந்து மனநிலையில் இருப்பதால், அவர்களின் நம்பிக்கைகளை நீங்கள் கேள்விக்குறியாக்கிவிட்டீர்கள், அதனால் அவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று அந்த நண்பர் என்னிடம் சொன்னார்.

அப்போது, நான் அவர்களின் கோபத்திற்கு நான் இலக்காகியிருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சிதான். அதனால் தாக்கப்பட்டால் அதுவும் எனக்கு மகிழ்ச்சியே என்று சொல்லிக்கொண்டு, யார் அப்படி கோபமாக இருக்கிறார்கள் அவர்களைப் பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டே அந்த கோபக்காரர்கள் நடுவில் போய் நின்றேன். எல்லோரும் அமைதியாக என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் கோபத்தினை என்னால் உணர முடிந்தது.

16473188_1908170759426312_15497265325550532_nபிறகு, உணவு மேசைக்குப் போய் வரிசையில் நின்றேன். யாரும் என்னிடம் பேசவில்லை. அப்போது முனைவர் சுபாஷிணியும், பேராசிரியர்கண்ணனும் என் அருகில் நின்றுக் கொண்டிருக்கும்போது, புகழ்பெற்ற மலேசிய தமிழ் எழுத்தாளர் பெண்மணி ஒருவர் எங்கள் அருகில் வந்து நின்று..

முனைவர் சுபாஷிணி அவர்களைப் பார்த்து.. நீங்கள் செய்த பெரிய தப்பு இந்த ஆளை பேச அழைத்தது. எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் வருகிறேன் என்று.. சாப்பிடாமல் விருட்டென்று போய்விட்டார்.

சாப்பிட உட்கார்ந்தோம். தான் ஒரு போலிஸ்காரர் என்று தம்மை அறிமுகம் செய்துக்கொண்ட ஒருவர் வந்தார். அவர், இந்த மனிதர் பேசிய பேச்சிற்கு உள்ளேதான் போயிருக்க வேண்டும். உங்களுக்கு தெரிவந்தவராக இருப்பதால் நான் அமைதியாக போய்விடுகிறேன்.. என்று சொல்லி அவரும் போய்விட்டார்.

இதையெல்லாம் அமைதியான மனநிலையிலேயே பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் சிரிப்பும் வந்து ்போனது. நாங்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.

எல்லோரும் அரங்கிற்குப் போனபிறகு நான் தனியாக நின்றுக் கொண்டிருந்தேன். அப்போது என் அருகில் வந்து ஒருவர்.

சார் உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா..?

கேளுங்க சார்..

நீங்க சொல்றதெல்லாம் கேட்டேன். சரி அகத்தியர் சிவன்கூட இல்லைன்னு நினைக்கிறீங்களா..?

எனக்கு புரியல சார் தெளிவா கேளுங்க..

இல்ல சார்.. அகத்தியர் இப்போ சிவன்கூட இருக்காரா இல்லையா..?

ஓ.. அதுவா.. அது புராணக் கதைதானே சார்.. அதை உண்மைன்னு சொல்லனுமா நான்..

அப்போ இல்லேங்குறிங்களா..?

சார் அது பெரிய சப்ஜக்ட் அப்புறம் அதை விரிவா பேசுவோம்.. நன்றி..

என்று சொல்லிவிட்டு அரங்கிற்குள் போய்விட்டேன்.

என் மனதிற்குள் எண்ணங்கள் அலையடித்துக் கொண்ருந்தன. என்னை எதிர்கொள்ளும் மலேயத் தமிழர்களின் மனநிலை இதுதானா என்கிற எண்ணம் மேலோங்கியது. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பார்களா என்ன.. அதற்குள் கேள்வி நேரம் தொடங்கியது.

சுமார் ஒன்றரை மணி நேரம் கேள்வி நேரம். போனது. கோபத்தில் இருந்தவர்கள் கொந்தளித்தார்கள். பேராசிரியர் கண்ணன். டென்மார்க் அரசியலாளர் திரு. தரும குலசிங்கம், ஆய்வாளர் ஒரிசா பாலு ஆகியோர் கேள்வி மேல் கேள்வி கேட்டு சூடாக்கினார்கள். ஒட்டுமொத்தக் கருத்தரங்கில் தமிழ் பௌத்தமே பிரதான இடத்தைப் பிடித்துக்கொண்டதுடன் அதிக நேரத்தையும் எடுத்துக் கொண்டது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயம்தான்.

16425778_1908170506093004_276756366230050727_nஆயினும் மலேசிய தமிழர்களிடையே இருக்கும் பலவீனத்திற்கும், பலத்திற்கும் இந்துமதமும், சாதியமும் உருவாக்கியிருக்கும் தாக்கத்தை எண்ணி வியந்துப் போனேன். கடல் கடந்த நாட்டில் தமது சாதியின் மன ஊக்கத்தை விடாமல் எப்படி பாதுக்காத்துக் கொள்கிறார்கள், அதற்கு இந்து மத மூடநம்பிக்கைகள் எப்படி கைக்கொடுக்கின்ற என்பதை பின்னர் விரிவாக பார்க்கலாம்..

– தொடரும்

 

Load More Related Articles
Load More By admin
Load More In Buddhism
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …