Home Politics Events மக்களவைத் தேர்தல் 2019 – விசிக தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தல் 2019 – விசிக தேர்தல் அறிக்கை

Comments Off on மக்களவைத் தேர்தல் 2019 – விசிக தேர்தல் அறிக்கை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தேர்தல் அறிக்கை 2019

தேர்தல் அறிக்கை அட்டை

தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இத்தேர்தலில் பங்கேற்கிறது.

ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை?

இந்தியத் துணைக்கண்டத்தில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் தவிர பெரிய கட்சிகளுக்கு இணையான கட்சிகளாகவும், அதேநேரத்தில் அதிகாரத்தின் தலைமைப் பீடங்களில் அமர்ந்து மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்பினைப் பெறாத; நேர்மையாகவும் கடுமையாகவும் போராடிக் காண்டிருக்கும் கட்சிகள் பல இருக்கின்றன. அப்படிப் போராடிக் கொண்டிருக்கும்; தமிழகத்தின் பெரிய வளரும் கட்சிகளுள் முதன்மையானதாகத் திகழ்வது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். கடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மனித மாண்பினை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முதல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் இறங்கிப் போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வீரச் சிறுத்தைகள் களப்பலியாகியுள்ளனர். சாதி மற்றும் மதவெறியர்களின் கொடூர வன்முறையினால் கொலையுண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறைப்பட்டு மீண்டுள்ளனர். பலர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டுள்ளனர். ஆயினும் மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் பின்வாங்கியதில்லை.

“கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!” என்னும் தாரக மந்திரத்தை முன்னிறுத்தி கார்ல் மார்க்ஸ், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய வழியில் தொடர்ந்து சமரசமின்றி நடைபோட்டு வருகிறது விடுதலைச் சிறுத்தைகள். அதிகாரத்தை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கி, ஜனநாயகத்தினை சமூகத்தின் வேர்க்கால்கள்தோறும் சேர்க்க வேண்டியது முதன்மைப் பணியாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதைப் பெருமையோடு சுட்டிக்காட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

ஆயினும் எங்களின் கொள்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து அதன் அடிப்படையில் செயல்பாடுகளை நாங்கள் வகுத்துக் கொண்டு செயல்பட்டாலும், அவற்றினை அரசு அதிகாரத்தின் மூலம் செயல்படுத்தினால் அனைத்து மக்களின் நலனையும் வென்றெடுக்க முடியும். அதற்காக மக்களின் நம்பிக்கையினை முழுமையாகப் பெறுவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறோம்.

அதிகாரத்தில் உள்ள பெரிய கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதன் அடிப்படையில் மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினார்களா என்றால் அது கேள்விக் குறிதான். அந்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேள்வி கேட்பதற்கான ஏற்பாடுகள் சரியான முறையில் இல்லை. எனவே, மக்களின் குரலாக அந்தக் கேள்விகளை விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறோம்; அதற்காகப் போராடுகிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கையும் அந்த அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றிய கட்சியாக இன்று இல்லை. எனினும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து பணியாற்றுகிறோம். அந்த வகையில் மக்களின் குரலை, தேவைகளை தேர்தல் அறிக்கையாக முன்வைக்கிறோம். இவற்றைச் செயல்படுத்தும் வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்போது இன்னும் விரிவான திட்டங்களோடும், செயல் முறைகளோடும் மக்களின் முன்வைப் போம். அதில் மக்கள் திருத்தங்களையோ சேர்ப்புகளையோ முன்வைத்தால் அவற்றினையும் சேர்த்து முழுமையாக மக்களின் அரசாக, எளிய மக்களின் அரசாகச் செயல்பட முனைவோம். அந்த வாய்ப்புக் கிடைக்காதவரையில் அவற்றை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் விதமாக செயல்படுவோம். அதில் எந்தவிதமான சமரசமும் இன்றி மக்களின் குரலாக ஒலிப்போம்.

ஏனெனில், சாதி மத வேறுபாடற்ற சமூகத்தினை நாங்கள் கனவு காண்கிறோம்.

1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.

2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.

3. மகளிர் விடுதலையை வென்று மாண்பினைக் காப்போம்.

4. தேசிய இன உரிமைகளை மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.

5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமை மீட்போம்

எனச் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் அரசியல் அதிகாரத்தில் அமருகின்றபோது இவற்றை முழுமையாகச் செயல்படுத்துவோம். அதற்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. ரவிக்குமார் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

மேற்கண்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியினருக்கு தமிழக மக்கள் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்

சென்னை                                                 முனைவர் தொல்.திருமாவளவன்

01.04.2019                                                                            B.Sc., M.A., B.L., Ph.D.

தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

———————— தேர்தல் அறிக்கை – 2019———————–

மக்களவைத் தேர்தல் 2019க்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு அமைகிறது:

இந்தியக் கூட்டரசின் நிறைவேற்றப்பட வேண்டியவை

ஜனநாயகத்திற்கு எதிரான சனாதன பாசிச சக்திகளை அகற்றுவோம்

இந்தியா விடுதலை பெற்ற இந்த எழுபது ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், அச்சுறுத்தல் தரும் விதமாக மதவாத பாசிச சக்திகள் தமது பணிகளை முன்னெடுத்து இருக்கின்றன. மத்திய அரசின் அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாசிச பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளைச் சிதைக்கும் விதமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் சாதியம், அடிமைத்தனம், ஒடுக்குமுறை ஆகியவற்றை தமது கொள்கையாக வைத்துக் கொண்டு தலித்துகள், மதச் சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடிகள் ஆகியோரின் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. அதற்கு இடம் கொடாத வகையில் பாசிச சக்திகளை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். எதிர்காலத்தில் இவற்றைத் தலையெடுக்க விடாமல் களைவதற்கான வலிமையான குரலை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழுப்பும்.

அரசுத் துறைகளில் நிறைந்திருக்கும் சனாதனப் பயங்கரவாதிகளை அகற்ற

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பணியிடங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இந்துத்துவ திணிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்து வருகிறது. இந்த அநீதியினால் தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை பாதுகாக்கின்ற வகையில் இந்துத்துவ சக்திகளின் நிர்வாக வன்மத்தைக் களைவதற்குத் தேவையான முயற்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்

இந்தியக் கூட்டரசு தமது வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றத்தினை நிகழ்த்த வேண்டிய காலமிது. காஷ்மீர் பிரச்சினையினை மையப்படுத்தியே இந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. இதனால் தேவையற்ற ராணுவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடி இருக்கின்றன. பாகிஸ்தானிடம் ஒரு வகையிலும், சீனாவிடம் ஒரு வகையிலும் வெளியுறவுக் கொள்கை தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே, காஷ்மீர் பிரச்சினையில் அம்மக்களின் கோரிக்கையினை கருணையோடு பரிசீலித்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் நடந்துகொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் சுமூகம் ஏற்பட்டால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவும். தேவையற்ற போர் பதற்றம் ஒழியும். எனவே காஷ்மீர் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படக்கூடாது என இந்திய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இலங்கையுடனான வெளியுறக் கொள்கையில் தமிழகத்தின் நலன்

இந்தியக் கூட்டரசின் வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் போது எல்லைப்புற மாநிலங்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ளது தமிழகம். இந்திய கூட்டரசு இலங்கையோடு மேற்கொள்ளும் எந்தவிதமான அரசியல் உடன்பாடுகள் குறித்து தமிழக அரசிடம் விளக்க வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை அமைக்கப்பட வேண்டும். வெறும் ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளினால் இந்திய இலங்கை உறவு மேம்பட்டுவிடாது. மாறாக, தமிழகத்தின் நலன் இதில் பேணப்பட்டால் மட்டுமே அந்த வெளியுறக் கொள்கைக்கும் நடவடிக்கைகளுக்கும் பொருள் கிடைக்கும். எனவே, இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசினை வலியுறுத்தும்.

கச்சத்தீவு மீட்பு

ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழகத்தின் மீனவத் தமிழர்கள் 500க்கு மேற்பட்டோரைக் கொன்றுள்ளதுடன், தொடர்ந்து அவர்களைத் தாக்கியும், சிறைப்பிடித்தும், படகு மற்றும் வலைகளை நாசம் செய்தும் வருகின்றது. இதனால், கடலில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. இந்த மோசமான நிலைக்கு கச்சத்தீவினை இந்திய அரசு இலங்கை அரசிற்குத் தாரை வார்த்ததும் ஒரு காரணம். எனவே, இந்தியா துச்சமாக மதிக்கும் இலங்கையிடமிருந்து கச்சத்தீவினை மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். இதற்காக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாடுபடும்.

ஊழல் ஒழிப்பு மற்றும் லோக்பால்

ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. மத்திய அரசில் உருவாக்க வேண்டிய லோக்பால் அமைப்பினைத் தேர்தலுக்கான கண்துடைப்பாக அவசரகதியில் நியமித்து மக்களை மோடி அரசு ஏமாற்றியுள்ளது. எனவே, இந்த லோக்பால் அமைப்பின் மீது எமது அமைப்பிற்கு நம்பிக்கை இல்லை. அதனால் மத்திய மற்றும் மாநிலங்களில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்குவதுடன் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்கின்ற வகையிலும் புகார் அளிக்கின்ற மக்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்ற வகையிலும் அமைய, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தேர்தல் சீர்திருத்தம்

மின்னணு வாக்கு எந்திர முறைக்கு பதில் தாள் வாக்குப் பதிவு

தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிய வேண்டும் என்றும், பழையபடி வாக்குத் தாள் முறைக்கு மாறவேண்டும். மின்னணு வாக்கு இயந்திர வாக்களிப்பு முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும்

தற்போது நிலவும் ஒற்றை வாக்களிப்பு முறையினால் முறையான மக்கள் மறுநிகரித்துவம் கிடைக்காமலும், தேர்தல் முறையில் கடும் ஊழலும் நிலவ வாய்ப்பாயிருக் கின்றது. இதனால் குறைவான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்ற எளிய கட்சிகள் எவையும் பெற முடியவில்லை. எனவே, தற்போதைய தேர்தல் முறையை மாற்றி, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கட்சியும் தமது வாக்கு விகிதத்திற்கு ஏற்ப தமக்கான பிரதிநிதிகளை நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்டமேலவைகளில் பெறுவதற்கு வாய்ப்பு உருவாகும். எனவே, வரும் காலங்களில் PROPORTIONAL ELECTORAL SYSTEM முறைகளை அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

தேவையற்ற தேர்தல்கால கட்டுபாடுகளைத் தளர்த்த வேண்டும்

தேர்தல் காலங்களில் பண நடமாட்டங்கள் கட்டுப் படுத்தப்படுவதால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப் படுகிறார்கள். இதனால், பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு கண்டடைய வேண்டும் என்றும், வியாபாரிகளுக்கான பாதுகாப்பை இதுபோன்ற காலங்களில் உறுதி செய்கின்ற வகையில் உரிய பாதுகாப்புகளை வழங்க அரசு முன்வர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தேசிய இனங்களின் பாதுகாப்பு

இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் அனைத்து மொழிகள் நலன் பாதுகாப்பு

மத்திய அரசு கல்வி தொடர்பான திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி மொழிப் பெயரையே சூட்டி மறைமுகமாக இந்தித் திணிப்பைச் செய்து வருகிறது. இதனால் அத்திட்டத்தின் நோக்கங்கள் தமிழக மக்களுக்குப் புரியாமல் போவதால் அதற்கான பலன் மக்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, கல்வி தொடர்பான அனைத்துத் திட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் அதன் நேரடி தமிழ் மொழி பெயர்ப்பிலும் மற்றும் அந்தந்த மாநில மொழி பெயர்ப்பிலும் இருக்க வேண்டும். இதன் மூலம் இந்தித் திணிப்பு தடுக்கப்படுவதுடன் மாநில மொழிகளின் உரிமையும் காக்கப்படும். எனவே, இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

இந்திய மொழிகள் நல அமைச்சகம்

மத்திய அரசு இந்திய மொழிகள் நல அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவிலுள்ள 19,569 மொழிகளும் பாதுகாக்கப்பட்டு அம்மொழிகளின் அனைத்து விதமான இயற்கை உரிமைகளும் இயல்பாக பராமரிக்கபப்டுவதற்கான வாய்ப்புகளை இந்த அமைச்சகம் உருவாக்க வேண்டும். மேலும் அம்மொழிகள் தமக்கான வளர்ச்சியை, வளத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவைப்படும் நிதி உதவிகளையும் அரசு உதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்களை இந்த அமைச்சகம் வழங்க வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

துணைக் கண்டத்தில் உள்ள தேசிய இனங்களின் இணக்கம்

இந்தியாவிலுள்ள தேசிய இனங்கள் தமக்கான உரிமைகளைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. ஒற்றை ஆட்சி என்கின்ற கோரிக்கையை பா.ஜ.க உள்ளிட்ட பாசிச கட்சிகள் முன்னெடுக்கின்ற காரணத்தினால் இந்திய அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக் குறியாகியுள்ளது. இதனால் வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற கோட்பாடு நிறைவேறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. எனவே, இந்தியாவிலுள்ள அனைத்துத் தேசிய இனங்களும் தமது மொழி, பண்பாடு, பொருளாதார நலன்கள் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கின்றன. இந்த நலன் பாதுகாக்கப்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும்.

தேசிய இனங்களின் கவுன்சில்

இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் “தேசிய இனங்களின் கவுன்சில்” என்கின்ற ஆயத்தை உருவாக்கி அனைத்து இனங்களும் சுமுகமாக தமது திறன்களையும், நல்லிணக்க உணர்வுகளையும், இலக்கிய வளங்களையும் பகிர்ந்து கொள்வதற்கும், பொருளாதார நலன்களை இடையீடு இன்றி பரிமாறிக் கொள்வதற்கும் இந்தக் கவுன்சில் உதவும். எனவே மேற்கண்ட கவுன்சிலை உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தும்.

பொருளாதாரம்

வறுமைக் கோட்டின் உச்ச வரம்பினை உயர்த்துதல்

வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் குறித்த வரையறையை மத்திய அரசு மாற்றி அறிவித்து உள்ளது. அதன்படி கிராமப்புறங்களில் 32 ரூபாயும், நகர்ப்புறங்களில் 47 ரூபாயும் ஒரு நாளைக்குச் சம்பாதித்தால் அவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்கின்ற வரையறை நீக்கப்பட வேண்டும். மேலும் அதற்குப் பதிலாக, கிராமப்புறங்களில் 200 ரூபாயும் நகர்ப்புறங்களில் 220 ரூபாயும் ஒரு நாளைக்கு சம்பாதிக்கும் தனிநபர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவராகக் கருதப்பட வேண்டும். அப்படி மாற்றி அமைக்கப்படும் பட்சத்தில் அரசின் உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

200 நாள் வேலை நாட்களை உறுதி செய்தல்

நூறு நாள் வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியை பாஜகவின் மோடி அரசு குறைத்துள்ளது. இதனால் கிராமப்புற ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்துவதுடன், அடிப்படைக் கூலியை 250 ரூபாயாக உயர்த்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

விவசாயம் மற்றும் நிலச் சீர்திருத்தம்

விவசாய நிலச் சீர்திருத்தத்தைத் தேசியக் கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன்படி உபரி நிலங்களைக் கூலி வேலை செய்கின்ற விவசாயக் கூலிகளுக்கும், நிலமற்ற விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு வழிவகை செய்வதோடு, அவர்களுக்கான உழவுக் கருவிகள் மற்றும் இடுபொருள்களை வழங்குவதற்கான நிதி உதவியைக் கூட்டுறவு வங்கிகளின் மூலம் நிபந்தனை இல்லாமல் வழங்குவதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

விவசாய பயிற்சி

விவசாய பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் கிராமப்புற மாணவ மாணவியருக்கு ஒருங்கிணைந்த விவசாய பயிற்சியினை அவர்கள் வசிக்கும் பகுதியில் நேரடியாக அளிக்கவும், அப்படி பயிற்சிப் பெற்றவர்கள் உரிய நிலத்தையும் அதற்குரிய தொழில் மூலதனத்தினையும் பெற விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

விவசாயத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் அனைவருக்கும் 60 வயதிற்குப் பிறகு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக இரண்டாயிரம் ரூபாய் இருக்க வேண்டும். அதற்கான தேசியத் தொகுப்பு நிதியை உருவாக்கி விவசாயி ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி

தலித் மற்றும் பழங்குடி இளையோர் தொழில் முனைவோராக மாற வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தேவையான நிதியினை மூலதனமாகப் பெருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள தாட்கோ மற்றும் மத்திய அரசியல் முத்ரா திட்டத்தின் மூலம் பெறுவதற்கு ஏதுவாக மைய மற்றும் மாநில அரசுகளில் தலித்கள் மற்றும் பழங்குடிகளுக்கான நிதியினை பெறுவதற்கு வகை செய்யும் வகையில் தனி வங்கி ஒன்றினை இந்த நிதிகளை வைத்து அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

பணத்தாள் மதிப்பிழப்பினை ஈடு செய்ய வேண்டும்

பணத்தாள் மதிப்பிழப்பினால் உயிர் இழந்த குடும்பங்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கவும், பணத்தாள் மதிப்பிழப்பினால் நலிந்த சிறு, குறு விவசாயிகள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தைத் தொடங்கவும் தேவையான சிறப்பு நிதியை போர்க்கால அடிப்படையில் வழங்குவதற்கு மத்திய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

ஜி.எஸ்.டி ஒழிப்பு

ஜி.எஸ்.டி எனும் வரிவிதிப்புத் திட்டத்தினால் அனைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். முறைப்படுத்தப்படாத, திட்டமிடப் படாத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல! தான்தோன்றித்தனமாகவும் அடாவடியாகவும் மோடியின் பாசிச அரசு இந்த ஜி.எஸ்.டி திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இதே காலகட்டத்தில் மலேசியாவில் ஜி.எஸ்.டி என்கின்ற வரி அமைப்பு முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு சாதாரண வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டதினால் பொருட்களின் விலையானது ஒரே நாளில் பாதியாகக் குறைந்து, அதேநேரத்தில் அரசுக்கான வருமானமும் முறையான அளவில் போய் சேர்ந்துள்ளது என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே, மத்திய அரசு ஜி.எஸ்.டி என்கின்ற வரித் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும். சாதாரண எளிய வரிவிதிப்பு முறையை அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.

வருமான வரித்துறை தேவையில்லை

மத்திய அரசு வரிவிதிப்புத் திட்டங்களில் பெரும்பாலும் மக்களை அச்சுறுத்தும் அலைக்கழிக்கும் துறை வருமான வரித்துறை ஆகும். இந்த வருமான வரித் துறையினால் அரசுக்கு வருகின்ற வருமானம் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே. இந்த 6 சதவிகித வருமானம் பெரும்பாலும் வருமானவரித் துறை அலுவலகப் பணிக்காகவும் சம்பளத்திற்காகவும் செலவிடப்படுகிறது. எனவே, இந்த வரிவிதிப்பு அமைப்பினால் பெரும் பொருளாதாரப் பயன் ஏதும் நிலவவில்லை. மாறாக தனிநபர் ஊழல்களுக்கு மட்டுமே அது வழி வகுத்துள்ளது. அதனால், வருமானவரித் துறையில் பெரும் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகின்ற அதே நேரத்தில், வருமான வரித்துறையை முழுமையாக ரத்து செய்வது நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்தரும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.

விவசாயக் கடன் ரத்து

விவசாயிகள் இந்திய உணவு உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக திகழ்கின்றார்கள். அவர்கள் தமது வாழ்வாதாரத்தோடு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அதுமட்டுமின்றி மனித உணவு சங்கிலியும் மிக முக்கியமான அடிப்படை தன்மையாகவும் அவர்கள் விளங்குவதால் இவர்களின் செயல்பாட்டிலே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் மக்களின் நலனும் தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் தமது உற்பத்தி தொழிலின் பொருட்டு கடன்காரர்களாக தொடர்ந்து இருப்பது மிகப்பெரிய அவலமாகும். இந்த அவலத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்வதும் விவசாய தொழிலைவிட்டு வெளியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடருமானால் எதிர்காலத்தில் விவசாயத் தொழில் நசுங்குவதோடு உணவு, உற்பத்தியில் மிகப்பெரிய பின்னடைவு அளிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, விவசாயிகளை பாதுகாக்கவேண்டியது அரசின் கடமையாகும். விவசாயிகளை பாதுகாப்பதும், உணவு உற்பத்தியை பாதுகாப்பதும் ஒன்றே. எனவே, விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும். இதை நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குரல்கொடுக்கும்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என்கின்ற முறை அமல்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயப் பெருங்குடி மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அடையாளப்படுத்தவும், அவர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் வசூலிக்கப்படும் முறைகள் முறையாகக் கண்காணிக்கப்படவும், அவர்கள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயக் கூலிகளுக்குத் தேவைப்படும் அடிப்படைக் கூலி வரம்பினை உயர்த்த அவற்றை முறையாக அவர்கள் சேமிக்கவும், தனது சந்ததிகளுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெறவும் இந்த பட்ஜெட் வழிவகை செய்யும். மேலும் விவசாயப் பொருட்கள் சந்தைக்கு வருகின்ற போது இடைத்தரகர்கள் கொள்ளையடிக்கின்ற முறையை ஒழிக்க புதிய சந்தைத் திட்டத்தினை இந்தத் தனி பட்ஜெட் என்கின்ற முறையின் மூலம் அமல்படுத்த முடியும். எனவே இதை உடனடியாக அமல்படுத்த நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.

பெட்ரோலியப் பொருள்களின் விலைக் கட்டுப்பாட்டை மீண்டும் அரசு ஏற்க வேண்டும்

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோலிய விலை நிர்ணயத்தை தனியாரிடம் ஒப்படைத்த காரணத்தினால் தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. மேலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டு, அது நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகின்ற முறையினால் பயனேதும் விளையவில்லை. இதனால் பயனாளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெட்ரோலிய விலை நிர்ணயத்தை மீண்டும் பழையபடி அரசே மேற்கொள்ளவும், மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் முறையை முற்றிலுமாக நிறுத்தி, பழைய முறைப்படி மானிய விலையில் சிலிண்டரை வழங்கும் முறைக்கு மாற மத்திய அரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

ராணுவத்திற்கான நிதியினைக் குறைத்து கல்விக்கு அதிகரிக்க வேண்டும்

ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி அளவு படிப் படியாகக் குறைக்கப்பட வேண்டும். அனைத்து நாட்டு மக்களும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புகின்ற இக்கால கட்டத்தில், ராணுவத்தை, ராணுவச் செலவினங்களை அதிகரிப்பது, தேவையற்ற விதத்தில் ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகின்ற மிகு நிதியினால் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டே வருகின்றன. ராணுவத் திற்குப் பயன்படுத்துகின்ற நிதி நாட்டின் வளர்ச்சிக்கு சுமையாகவும் மக்களின் வளர்ச்சிக்குப் பாதகமாகவும் அமைகின்றது. எனவே, அண்டை நாடுகளுடன் சமாதானப் போக்கை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். போரின் மூலம் சமாதானத்தை உருவாக்க முடியாது. அண்டை நாடுகளில் உள்ள ஏழை மக்கள் போரினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, அவர்களின் நலனில் இந்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும். அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை போர்களினால் பறிபோவதை இந்திய அரசு தடுக்க வேண்டுமானால் போர்ச் சூழல் உருவாவதை எந்தவிதத்திலும் அனுமதிக்கக்கூடாது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும். சமாதானத்தை முன்னிறுத்தும் புத்தரின் கொள்கைகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறுகின்ற வகையில் போர் குறைப்பு மற்றும் போர் செலவினக் குறைப்புத் திட்டத்தினை இந்திய அரசு முன்மொழிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

கார்ப்பரேட் மற்றும் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும்

மோடி அரசினால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் அரசின் நிதி நிறுவனங்களை ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடித்து வங்கிகளை திவாலாக்கி வருகின்றன. இதனால் மக்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள் தொடர்ந்துக் குறைந்து வருவதுடன், இடஒதுக்கீட்டிற்கான வாய்ப்புகள் வேறுவகையில் மறுக்கப்படுகின்றன. எனவே, கார்ப்பரேட் நிறுவனமயமாக்கலைத் தடுக்கவும், தனியார் மயத்தைக் கைவிடவும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட அரசு நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும்

மோடி அரசு பதவியேற்ற காலத்திலிருந்து அரசின் நிறுவனங்களை தொடர்ந்து நாசம் செய்து வருகிறது. இதனால் அந்த நிறுவனங்கள் அம்பானி மற்றும் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் நலிவடைந்து வருகின்றன. அண்மையில் பி.எஸ்.என்.எல் அரசு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு அரசிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதே நேரத்தில் மோடியின் கார்ப்பரேட் எடுபிடி வேலையினால் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்து மக்களைச் சுரண்டிக் கொண்டுள்ளன. இந்தியாவை முழுமையாக சில முதலாளிகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் மோடியிசத்தினை அகற்றி அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மோட்டார் வாகனச் சட்ட வரித் திருத்தம் மற்றும் சுங்கக் கட்டண வசூலிப்பு நிறுத்தம்

மத்திய அரசு அறிவித்துள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் புதிய வண்டிகளுக்கான சாலை மற்றும் காப்பீட்டு வரியை ஐந்து ஆண்டுகளுக்குச் சேர்த்து கட்ட வேண்டும் என்கின்ற முறை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன், சாலை வரிகளை ஏற்கனவே வாகனங்களுக்கு வாங்குகின்ற காரணத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிக் கட்டண வசூலிப்பு அமைப்புகளை உடனடியாகக் கலைக்கவும், அந்த அமைப்பின் மூலமாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்தி யவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தும்.

சாலையோரக் கடைகளை முறைப்படுத்தி வணிகத்தைப் பெருக்க வேண்டும்

சாலையோரக் கடைகள் அனைத்தையும் முறைப்படுத்தி, அவர்களுக்கு முறையான அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களது சிறிய கடைகளைச் சுகாதாரமான முறையில் மேம்படுத்தி கவர்ச்சிகரமான சிறுகடை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படும் வழிகாட்டுதல்களையும் நிதியையும் வழங்குவதற்கு மத்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டும். சாலையோரக் கடைகளை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என மாநில அரசுகளுக்கு வழி காட்டவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இடஒதுக்கீடு

நீதித்துறையில் இடஒதுக்கீடு

மக்களுக்கு நீதி வழங்குகின்ற நம்பிக்கைக்குரிய நீதித் துறையில் நலிந்த பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், மதச்சிறுபான்மை யினர் மற்றும் பிற்பட்ட சாதியினர் புறக்கணிப்படுகின்றனர். இவர்கள் தமக்குரிய பிரதிநிதித் துவத்தினைப் பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டவடிவினைக் கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு

தலித், பழங்குடிகள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் அரசுத் தொழிலில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய சட்டத்தை இயற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இடஒதுக்கீடு வெள்ளை அறிக்கை

இந்திய விடுதலை பெற்ற நாள் முதல் இன்றுவரை இந்திய அளவிலும் மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடஒதுக்கீடு குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் மூலம் எந்தெந்த சமூகத்தினர் எவ்வளவு சதவிகிதம் அதிகாரத்தினை அடைந்துள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும். அதற்கு முதன்மையானது வெள்ளை அறிக்கையாகும். அதை மத்திய அரசு மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வாதாடும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு

இக்காலத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் தம்மைப் பின்தங்கியவர்களாக கருதிக் கொள்ளும் பிற்பட்ட மற்றும் முற்பட்ட சமூகத்தினர் தமக்கான இடஒதுக்கீட்டைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ள மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் தமக்கான எண்ணிக்கையினை இச்சாதிகள் தொடர்ந்து உயர்த்திக் காட்டி கோரிக்கை வலு சேர்க்க முனைகின்றன. இதனால் பிற சாதியினரும் தமது மக்கள் தொகை எண்ணிக்கையினை உயர்த்திக்காட்ட வேண்டிய கட்டாய மனநிலைக்குத் தள்ளப்படுகின்றன.

இது பெரும் குழப்பத்தினைச் சமூகத்தில் உண்டாக்கு வதுடன் வன்முறைக்கான பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இவர்களின் கோரிக்கையினை முழுமையாக ஆய்வு செய்யும் பொருட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பினை வரும் 2021 மக்கள் தொகை கணக் கெடுப்பில் சேர்த்து எடுக்க வேண்டும் என்பதை நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ரத்து

சமூக நீதியினை குழிதோண்டிக் புதைக்கின்ற வகையில் பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டைனை மோடி அரசு கொண்டு வந்துள்ளது, இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே, அதை முழுமையாக ரத்து செய்வதுடன் பிற சமூகத்தினருக்கு இருக்கும் இடஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

அடிப்படைத் தேவைகள்

அனைவருக்கும் வீடு – அடிப்படை உரிமை

குடிமகனின் குடியுரிமை எப்படி அடிப்படை உரிமையாக இருக்கின்றதோ அதே போல ‘அனைத்து மக்களுக்கும் வீடு’ என்பது அடிப்படைக் குடியிருப்பு உரிமையாக வரையறுக்கப்பட வேண்டும். இதனால் அனைவருக்கும் வீடு என்கின்ற இலக்கினை அடைவதற்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலமாக வழிவகைகளை மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்

கிராமப்புறங்களில் தோட்டத்திற்கான சிறு நிலப்பரப்புடன் வீடு

கிராமப்புறங்களில் 800 சதுர அடியாக இருக்க வேண்டும் என்றும், வீட்டைச் சுற்றிச் சிறிய அளவிலான நிலப்பரப்பும் ஒதுக்கித் தர மத்திய அரசு தேவையான நிதியை மாநில அரசுகளுக்கு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

நகர்ப்புறங்களில் குடிசைவாழ் மக்கள் அனைவருக்கும் வீடு

நகர்ப்புறங்களில் வசிக்கின்ற குடிசைவாழ் மக்கள் அவர்கள் வசிக்கின்ற இடத்தை விட்டு அப்புறப்படுத்தாமல் அதே இடத்தில் அவர்களுக்கு 600 அல்லது 750 சதுர அடிகளுக்குக் குறையாத வீடுகளை கட்டித் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. அதற்குத் தேவைப்படும் நிதியை நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மனித மாண்பு பாதுகாக்க

மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றுவதைத் தடை செய்தல்

மனிதக் கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் கொடூரத்தை முழுமையாக 2023 ஆண்டிற்குள் அகற்ற வேண்டும். அதற்கான அனைத்து நிதியையும் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு வழங்கவும், மாநில அரசுகளைத் தீவிரமாகக் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் அவலம், அதைச் செயல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் சாதிய மனநோயாளி களுக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

துப்புரவுப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு மாற்றுதல் – துப்புறவுப் பணிகள் அனைத்தும் எந்திரமயமாக்கல்

நகர்ப்புறங்களில் துப்புரவுப் பணியாளர்கள் சாலைகளைப் பெருக்கவும், கழிவுநீர் கால்வாய்களில் இறங்கவும் தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலும் தலித்துக்கள் மற்றும் பெண்களைப் பயன்படுத்தப்படுகின்றனர். இது அரசு மேற்கொள்ளும் தொடர் வன்முறையாகவும் கொடுமையாகவும் இருக்கின்றது. இதற்குப் பொறுப்பேற்று அனைத்து அரசுகளும், மேற்கண்ட பணிகளில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு கௌரவமான வருமானத்தை வழங்கக் கூடிய மாற்றுப் பணிகளை வழங்குவதுடன், அப்பணிகளில் பிற நாடுகளில் அமலாக்கத்தில் வந்துவிட்ட முழுமையான இயந்திரப் பணியாக்கத்தைக் கொண்டுவர மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

இடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பணிகளிலிருந்து தலித்துகளை விடுவித்தல்

இடுகாடுகளில் பிணம் எரித்தல் மற்றும் பிணம் புதைத்தல் ஆகிய பணிகளில் முழுமையாக தலித்துகளைப் பயன்படுத்துகின்ற நிலை தொடர்கின்றது. இது ஒருவகை யில் சாதிய வன்கொடுமையைப் பாதுகாக்கின்ற முயற்சி ஆகும். இந்த இடுகாட்டு மேலாண்மையில் அனைத்துச் சமூகத்தினரும் பங்கேற்கின்ற வகையில், அவரவர் சார்ந்த பிணங்களை அவர்களே சுட்டுக் கொள்ளும் வகை யிலும், புதைத்துக் கொள்ளும் வகையிலும் தேவையான உபகரணம் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், இந்தப் பணிகளில் இருந்து முழுமையாக தலித்துகள் விலக்கப்பட்டு, வேறு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத் தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

தமிழக நலன்

மாநில சுயாட்சி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கி யுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் தலையீடு இன்றி முழுமையாக அமல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக ஏற்கனவே மாநில சுயாட்சி உரிமை மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தி ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கி உள்ளது என்பதை இந்தத் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டு கிறோம்.

மாநிலங்களின் சுயாட்சியை மத்திய அரசின் எந்த விதமான தலையீடுமின்றி நடத்திக் கொள்வதற்கு உரிமை இருக்கிறது. இது குறித்து எமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டின் தீர்மானங்களில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். எனவே, மாநிலங்கள் தமது நலனை விட்டுக் கொடுக்காமல், அதேநேரத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொள்கின்ற வகையிலும் இருக்க மாநில சுயாட்சி உரிமையைக் காப்பாற்ற நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

தமிழை ஆட்சி மொழியாக்குவோம்

நடுவன் அரசின் தமிழகத் தொடர்பிற்கும், தமிழகத்தில் உள்ள நடுவன் அரசின் அனைத்து அலுவலகங்களிலும், உயர்நீதி மன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழை அலுவல் மற்றும் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

தமிழகத்திற்குத் தனிக்கொடி உரிமை

தமிழக அரசு தனது இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தனக்கென தனிக் கொடியினைக் கோட்டையில் ஏற்றுவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுகின்ற வகையில் அங்கே தனது குரலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஓங்கி ஒலிக்கும்.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றம்

மாநில அரசின் கல்வி உரிமைகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் விதமாக கல்வி தொடர்பான நடவடிக்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் பொதுப்பட்டியலிலிருந்து நீக்கி மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வழிவகை செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்.

மத்திய அரசின் தமிழகப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமனம்

மத்திய அரசுப் பணியிடங்களில்; குறிப்பாக தமிழகப் பணியிடங்களில் வடநாட்டவர்களைத் திணிக்கும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகத்தின் இளைஞர்கள் மத்திய அரசின் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் உரிமையும் பறிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசுகளின் பணியிடங்களில் தமிழகத்தைத் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்க அல்லது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேசியச் சொத்தாக அறிவித்தல்

தமிழ் இலக்கியச் செல்வங்களைத் தேசியச் சொத்தாக அறிவிக்க வேண்டும். அதன் செம்மொழித் தகுதியை உறுதி செய்யும் விதத்தில் அயல்நாடுகளில் தமிழ் செம்மொழி ஆய்வு இருக்கைகளை உருவாக்கத் தேவையான நிதியினை மத்திய அரசு வழங்குவதற்கு எமது கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

பாஜக அரசின் உள்நாட்டுத் தாக்குதல்களைத் தடுப்போம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, டெல்டா பகுதிகளையும் சீர்குலைக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டங்கள், தேனி பகுதிகளைச் சீர்குலைக்கும் நியூட்ரினோ, கூடங் குளத்தில் அணுமின் உலை விரிவாக்கத் திட்டங்கள், சேலம் எட்டுவழிச் சாலை உள்ளிட்ட இயற்கை அழிப்புத் திட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும். இத்திட்டங்களினால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில் அதற்காகப் போராடுகின்ற மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல்களை இப்போது இருக்கின்ற மாநில அரசின் மூலமாக மத்திய மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மேற்கண்ட திட்டங்களை உடனடியாக நிறுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

காவிரி மற்றும் தமிழக நதிகள் நீர் பிரச்சினை

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்குச் சேரவேண்டிய உரிய பங்கினைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இப்பிரச்சனையில் நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும். அதே நேரத்தில் மாநிலங்களுக்கு இடையே வாழ்கின்ற நதிகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்குவதற்கும் அவற்றை தனி அமைச்சகம் மற்றும் ஆணையத்தின் கீழ் கண்காணிப்பிற்கு உட்படுத்தி அந்தந்த மாநிலங்களுக்கு உரிய நீர் பங்கினைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மேகதாது அணை கட்டுமானம் தடுக்கப்பட வேண்டும்

காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தொடர்ந்து எழுப்பி வரும் சிறு அணைக்கட்டுகளை உடனடியாகத் திறக்கவும், கேரளாவில் வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீரை தமிழகத்திற்குத் திருப்பவும் தேவைப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்

மாநிலத்திற்குள் நீர்வள மேலாண்மை

மாநிலங்களுக்கு உள்ளேயே ஓடுகின்ற நதிகளையும் பல ஆண்டுகளாக இருக்கின்ற ஏரிகளையும் குளங்களையும் இன்ன பிற நீர்நிலைகளையும் முறையாகப் பராமரித்து பாதுகாக்க உரிய விரிவான திட்டங்களை வகுப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நிதியை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒதுக்க மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தமிழக வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு

கீழடி மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வுப் பணிகளை மத்தியில் உள்ள மோடி அரசு தடுத்து நிறுத்தி வைத்துள்ளதுடன், தமிழகத்தின் வரலாற்றுச் செல்வங்களை மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, தமிழகத்தின் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க தமிழக அரசு மேற் கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் அங்கீகரிக்க மைய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

மைசூரில் சிறைவைக்கப்பட்ட தமிழகத் தொல்லியல் ஆதாரங்களை மீட்போம்

1907ஆம் ஆண்டு முதல் 1966ஆம் ஆண்டுவரை ஊட்டியில் இந்திய கல்வெட்டியல் அலுவலகம் இயங்கியது. பிறகு அது கர்நாடகத்தின் மைசூருக்கு மாற்றப்பட்டது. ஊட்டியில் அந்த அமைப்பு இயங்கியபோது சேகரிக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுக்களில் தமிழ் மொழியில் அமைந்த சுமார் 60,000 தொன்மையான கல்வெட்டுப் படிகள், ஓலைச் சுவடிகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் தற்போது மைசூர் தொல்லியல் ஆய்வு மையத்தில் யாருக்கும் தெரியவிடாமல் சிறை வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச்சில மட்டுமே படித்து வெளியிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை மீட்க தமிழக அறிஞர்கள் சிலர் முயன்றும் கர்நாடக அரசும் மைய அரசும் தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றன. அவை மீட்கப்படுமானால் தமிழகத்தின் வரலாற்றின் விடுபட்ட பல பகுதிகளையும் புகழினையும் மீட்க முடியும். எனவே மைசூரில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் தொல்லியல் மற்றும் பிற வரலாற்றுத் தரவு களை மீட்டு தமிழகத்திற்குக் கொண்டு வர விடுதலைச் சிறுத்தைகள் மைய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவும் நாடாளுமன்றத்தில் இது குறித்து கவனம் ஈர்க்கவும் பணியாற்றும்.

கீழடி மற்றும் தமிழக வரலாற்றுச் சின்னங்கள் மீட்பு மற்றும் பாதுகாப்பு

தமிழகத்தின் புராதன மரபுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தரவுகள் கீழடி மற்றுமின்றி தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கின்றன. அவை முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமலும், தொல்லியல் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமலும் இருப்பதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தடையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவை பற்றிய முடிவுகளை வெளியிடவும் அவற்றைத் தொகுத்து இந்திய வரலாற்றோடு இணைக்கவும், அவற்றை அயல் நாடுகளில் உள்ள ஆய்வுப் புலங்களில் சரியாக பிரதிபலிக்கவும் தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்காக தனி கவனத்தினை விடுதலை சிறுத்தைகள் முன்மொழியும். மேலும் அதற்கான நிதியையும் மத்திய அரசின் தலையீடு முழுமையாக இல்லாத நிலையை உருவாக்கவும், தேவைப்படும் நிதி ஆதாரத்தினைப் பெறவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு மறுசுழற்சிப் பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கும் அதன் பயன்பாட்டை வலியுறுத்துவதற்கும் தேவையான திட்டங்களைத் தயாரிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதுடன் – ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வணிகம் செய்துவந்த சிறு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் நலிவிற்கு ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்குச் சிறப்பு நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முயற்சிக்கும்.

வேலிகாத்தான் ஒழிப்பும் பனை நடவும்

வேலிகாத்தான் மற்றும் யூகலிப்டஸ் மரங்களை அடியோடு அழித்து நிலத்தின் வளத்தினையும், சுற்றுச் சூழல் கேடுகளையும் நீக்கவும், சூழலியலைப் பாதுகாக்கவும் மைய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

வேலிகாத்தான் மரங்களினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை வறண்ட மாவட்டங்களாக அறிவிக்கவும் அவற்றின் நீர் வளம் மீட்டெடுக்க தேவையான திட்டங்களை வகுக்க மைய அரசினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தும்.

நிலத்தின் நீர் வளத்தினைப் பாதுகாக்கும் பனை வளர்ப்புத் திட்டத்தினை தேசிய மரம் வளர்ப்புத் திட்டமாகவும் அறிவிப்பதுடன், பனைப் பொருள்களின் துணைத் தயாரிப்புப் பொருள்களை ஊக்கப்படுத்தும்விதமாக தகுந்த திட்டங்களை வகுக்க நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்பட்டோர் நலன்

எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீடு பாதுகாப்பு

பண்டிதர் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்கள் போராட்டத்தினால் பெறப்பட்ட இடஒதுக்கீடு தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அரசுப் பணியிடங்களில் அம்மக்களின் இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை என பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மேற்கண்ட மக்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

தனித்தொகுதிகளில் பினாமிகளை நிறுத்தத் தடையும், அவற்றை தலித் மற்றும் பழங்குடிகள் முழுமையாகப் பயன்படுத்த சிறப்புக் கவனம்

1935ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், 1950ம் ஆண்டு விடுதலை பெற்ற இந்திய அரசின் அரசமைப்புச் சட்டத்திலும் உறுதி செய்யப்பட்ட தலித் மற்றும் பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகள் முழுமையாக அம்மக்களுக்குப் பயன்படவில்லை. காரணம் அத்தொகுதி களில் அனைத்துக் கட்சியினரும் தமது பினாமிகளை நிறுத்தி தலித் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர். இதுவரை இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அம்மக்களின் குரலை நாடாளு மன்றத்திலோ அல்லது சட்ட மன்றங்களிலோ பிரதிபலித்ததாகத் தெரியவில்லை. அத்தொகுதிகள் அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தை அவர்கள் நிறை வேற்றாமல் தமது கட்சிகளின் கொறடாக்களுக்கு கட்டுப்பட்டு கடைசிவரை அமைதியாக இருந்து வெளியேறி விடுகிறார்கள்.

இதனால், அரசமைப்பின் நோக்கம் முற்றிலும் திசை திருப்பப்பட்டுள்ளது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகின்றது. அரசமைப்புச் சட்டம் தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கியுள்ள இந்தத் தனித்தொகுதி உரிமைகள் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர அவை இதுவரை ஆற்றியுள்ள பணிகளைச் சீராய்வுச் செய்ய வேண்டும். மேலும் அத்தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து தெளிவான மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கித் தரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும். இத்தொகுதிகளில் பினாமிகளை ஒழிக்க சிறப்பு ஏற்பாட்டினை வகுக்க நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.

தனி அமைச்சகங்கள் அமைக்க வேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குத்’ தனித் தனி அமைச்சககங்கள் உருவாக்க வேண்டும் என ஏற்கனவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளது. எனினும் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, மேற்கண்ட பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குத் தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்க விடுதலைச் சிறுத்தைகள் நாடாளுமன்றத்தில் கோரும்.

பட்டியல் சாதிகள் சட்டம் 1937

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் தமது எஸ்.சி மற்றும் எஸ்.டி எனும் தகுதியினைப் பெற அவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் குடியரசுத் தலைவர் ஆணை 1950ஐ முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். அந்த ஆணை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கொண்டுவந்த இடஒதுக்கீடுக் கொள்கையினை குழிதோண்டிப் புதைப்பதாகவும் இருக்கிறது. இதனால், தலித் மற்றும் பழங்குடியினருக்குத் தேவையற்ற விதத்தில், இந்துக்கள் என்கிற திணிப்பும், அவர்கள் விரும்பாமலே அவர்களை வன்முறையாகக் கட்டிப்போடும் அவலமும் தொடர்ந்து நடக்கிறது. பட்டியல் சாதிகள் சட்டம் 1937ன்படியான பழைய முறையினை மீண்டும் கொண்டு வர வேண்டும். அப்படி வரும்போது இந்து, கிறித்துவம், இசுலாம் ஆகிய மதங்களைத் தழுவிய தலித் மற்றும் பழங்குடியினர் தமக்கான எஸ்.சி மற்றும் எஸ்.டி தகுதியினை முழுமையாகப் பெறுவார்கள். எனவே மேற்கண்ட ஆணையை நீக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.

சிறப்பு உட்கூறுத் திட்ட நடைமுறை

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு தலித் மக்களுக்கு நிறை வேற்றப்பட்டு வந்த சிறப்பு உட்கூறுத் திட்டத்தினை நிறுத்தி தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு பெரும் துரோகத்தினை செய்துள்ளது. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக தலித் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, எமது கூட்டணியின் தலைமையில் அமையும் அரசில் அமைக்கப் படும் தனி அமைச்சகத்தின் கீழ் சிறப்பு உட்கூறுத் திட்டத்தினைச் செயல்படுத்தவும், மொத்த வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்மக்களுக்கான விழுக்காட்டின் படி நிதியை ஒதுக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

தலித் கிறித்துவர்களை அட்டவணைச் சாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும்

தலித் கிறித்துவர் நலன்

தலித் கிறித்துவர்கள் அனைத்துத் தளங்களிலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் அவர் களுக்கான இடஒதுக்கீடு உரிமையையும் இழந்துள்ளனர். எனவே இவர்கள் தமது மத உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேநேரத்தில் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பு களில் தமக்கான இடத்தினைப் பெறுவதற்கு அட்ட வணைச் சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடாகும். எனவே, தலித் கிறித்துவர்கள் தமது உரிமையினை நிலை நாட்டவும், குடியரசுத் தலைவர் ஆணை 1950 நீக்க நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் தரும்.

மலைவாழ் பழங்குடியினர் நலன்

மலை மற்றும் காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதாமல், அவர்களைக் ‘காடு பாதுகாவலர்கள்’ என அங்கீகரிக்க வேண்டும். காடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றும் சட்ட நடைமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், அவர்கள் தங்குமிடங்களில் அவர்கள் பொருளாதார நலத்தை மேம்படுத்திக் கொள்கின்ற வகையில் 20 ஏக்கர் நிலத்தினை ஒவ்வொரு பழங்குடி மக்களின் குடும்பத்திற்கும் வழங்கிட வேண்டும். அதன் மூலம் அவர்கள் தமது விவசாய உற்பத்திப் பொருட்களைச் சந்தையிட்டுக் கொண்டு தமது வாழ்வை மேம்படுத்திக் கொள்வார்கள். இது குறித்து நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மலைவாழ் பழங்குடியினருக்கு நிலப்பட்டா

அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காடுகளில் வாழும் பழங்குடிகளிடம் பட்டா இல்லை என்கிற மோசமான குற்றச்சாட்டின் பேரில் அவர்களை வெளியேற்ற ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பட்டா தரவேண்டியது அரசின் பொறுப்பு. அதை மாநில மற்றும் மத்திய அரசுகள் வேடிக்கை பார்த்துள்ளன. எனவே இந்தியா முழுமைக்கும் பரவிக் கிடக்கின்ற மலைவாழ் பழங்குடியினருக்கு உடனடியாக பட்டா உள்ளிட்ட நில உரிமைகளை வழங்குவதுடன் அவற்றைப் பராமரிக்க குறைந்தபட்ச நிதி உதவியினை யும் மத்திய அரசு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

பிற்படுத்தப்பட்டோர் நலன்

பிற்படுத்தப்பட்டோரின் நலனைப் பாதுகாக்கின்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர்களுக்கான அரசின் பங்களிப்பு ஆகியவற்றை முழுமையாக வழங்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்தி நிறைவேற்றவும், தனியார்த் துறையில் அவர்களுக்கு இடஒதுக்கீட்டினை வழங்கவும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

பெண்கள் நலன்

பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் 50% வாய்ப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு என்ற மசோதா திருத்தப்பட்டு, 50% ஆக உயர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் போல் மீண்டும் நடக்காமலிருக்க

பொள்ளாச்சிப் பகுதியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கொலை செய்யப்படலாம் என அச்சம் நிலவுகின்றன. இது பொள்ளாச்சிக்கு மட்டுமான சம்பவமாக விடுதலைச் சிறுத்தைகள் பார்க்கவில்லை. சாதியத் தினவு கொண்ட ஆணாதிக்க சமூகத்தின் செயல்பாடுகளுள் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உணர்கிறது. எனவே இச்சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமலிருக்க இச்சம்பவத் தில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது இடத்தில் கடுமையாக தண்டனைகளை வழங்க வேண்டும். அது பிறருக்குப் பாடமாக அமைவதுடன். அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இதுபோன்று பிற இடங்களில் நடக்காமலிருக்க தனிச் சட்டம் இயற்றவும் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இதன் வாயிலாக தண்டனைகள் விரைவாக அளிக்க வகை செய்ய நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கும்.

பெண்களுக்கு ஆயுத உரிமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, வடநாடுகளில் சாதி இந்துக்கள் மேற்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. எனவே, பெண்கள் தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் ஆயுதங்களை வைத்துக் கொள்வதைச் சட்டபூர்வமாக்க மத்திய அரசு முன் வரவேண்டும். அவர்கள் மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டால் அதற்கு தகுந்த சட்ட பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான திருத்தங்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்வதுடன், பெண்கள் தமது பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளக் கூடிய ஆயுதங்களை அரசு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தும்.

மீனவப் பழங்குடிகளின் நலன்

மீனவ மக்கள் தங்களை கடல்சார் பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைக்கும்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம்

மீனவ மக்களுக்குத் தனி அமைச்சகத்தை நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பல ஆண்டுகளாகக் கோரி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளார். இது முழுமையாக நிறைவேற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவ துடன் அந்த அமைச்சகத்துக்குத் தென்மாநிலக் கடலோரப் பகுதியின் மீனவப் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மதச் சிறுபான்மையினர் நலன்

பாரதிய சனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் இசுலாமிய மற்றும் கிறித்துவ மத சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பினையும் மோடி அரசு வழங்கவில்லை. எனவே, மேற்கண்ட பிரிவினரின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தக் கூடிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் கொடுக்கும்.

மதச் சிறுபான்மையினர் தனி அமைச்சகம்

மத்திய அரசில் உள்ள அமைச்சுகளில் ஒவ்வொரு மதச் சிறுபான்மையினருக்கும் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கான திட்டங்கள் வெளிப்படையாக அமைவதற்கும், அது முறையாக கண்காணிக்கப்படவும் வாய்ப்புகள் உருவாகும். எனவே, இதற்கான முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும்.

மூன்றாம் பாலின நலன்

இந்திய முழுமைக்கும் பால் திரிபிற்கு உள்ளான மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையர் மற்றும் திருநம்பியர் உள்ளிட்ட அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களின் மீது மதத்தின் பெயராலும் ஆணாதிக்கத்தின் பெயராலும் தொடுக்கப்படும் வன்கொடுமைகளைக் களையவதற்கு தகுந்த சட்டத்தினை மைய அரசு சட்டமியற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குரல் தரும். மேலும், அவர்களின் பொருளாதார நலனைப் பேணுவதற்கு ஏதுவாக மத்திய அரசில் தனி ஆணையம் அல்லது வாரியம் உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின்மூலம் அவர்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவைப்படும் வங்கிக் கடனையும், தொழிலிட வசதிகளையும் உருவாக்கித் தரவேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மூன்றாம் பாலினத்தவருக்கு அரசியல் பிரதிநிதித்துவம்

பால் திரிபிற்குள்ளான மூன்றாம் பாலினத்தவர்களின் குரல் எங்கும் ஒலிக்கமாலிருப்பதற்குக் காரணம் அவர்களின் எண்ணிக்கையானது மிகக் குறைந்த அளவில் இருப்பதுதான். இவர்களின் குரல் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமானால் அவர்களின் தேவைகளை மக்களும் அரசும் புரிந்துக் கொள்ள முடியும். எனவே இவர்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கின்ற வகையில் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நியமன சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர் எனும் முறையை கொண்டு வர விடுதலைச் சிறுத்தைகள் நடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகள் அனைத்து துறைகளில் தமது திறமையை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தும் அவர்களின் உடல் ஊனப் பிரச்சினையைனால் தகுந்த அங்கீகாரம் இன்றி கடும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே மாற்றுத் திறனாளிகள் அனைத்து துறைகளிலும் தமது திறனை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடு முறையினை கொண்டு வர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்கவும், வணிகத் தினை விரிவுப் படுத்திக் கொள்ளவும் அரசு முழு மான்யத்தினை வழங்க வேண்டும். பெரும் தொழில் தொடங்க முனைந்தால் அதற்கு நிபந்தனையற்ற வங்கிக் கடன்கள அதில் 50 சதவிகிதம் மான்யமாக வழங்க வேண்டும்.

அரசியல் பிரதிநிதித்துவம்

மாற்றுத் திறனாளிகளின் குரல் நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்ற, சட்ட மேலவைகளில் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலிக்கும் பட்சத்தில் அவர்களின் உரிமையினை அவர்கள் தற்காத்துக் கொள்ள முடியும். எனவே மாற்றுத் திறனாளிகளுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவைகளில் நியமன உறுப்பினர் முறையின் மூலம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

கல்வி உரிமைகள் மற்றும் முன்மொழிவுகள்

கல்விக்கடன் ரத்து

மாணவர்கள் நாட்டின் எதிர்கால தூண்களாகவும் மனித வளத்தினை மேம்படுத்தி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகத் திகழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து வயது மாணவர்களும் தங்களுக்கான கல்வியை இலவசமாகப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே. ஏனென்றால், ஒரு மக்கள் நல அரசாங்கம் மாணவர்களுக்கு அனைத்து நிலைகளிலும், அதாவது, தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக அளிக்கவேண்டியது மக்கள் நல அரசின் கடமையாகும். அந்தக் கடமையிலிருந்து மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிய காரணத்தினால் மாணவர்கள் தமக்கான கல்விச் செலவை அவர்களது பொற்றோர்கள் மூலமோ அல்லது அவர்களே ஈடுசெய்து கொள்வதற்கான மிக மோசமான அவலச்சூழல் நிலவுகின்றது. மாணவர்கள் தங்களது படிப்பிற்கு கடன்வாங்கி படிப்பது என்பது இயற்கையான மனித உரிமைக்கு எதிரானதாகும். மக்கள் நல அரசு இந்த கடமையிலிருந்து அரசுகள் வழுதிய காரணத்தினால் இந்த அவலம் இருந்தது. எனவே, மாணவர்கள் இனிமேல் கடனின்றி படிப்பதற்கும் ஏற்கெனவே வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கும் அரசுகள் முன்வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி குரல்கொடுக்கும்.

நீட் தேர்வு ரத்து

தமிழகத்தில் நீட் தேர்வின் மூலமாகத் திறமையான அனைத்து சமூக மாணவ மாணவியரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குழுமூர் அனிதா உட்பட பல மாணவர்கள் நீட் எனும் மத்திய அரசின் எதேச்சதிகாரத் திட்டத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீட் தேர்வு முறையைக் கடுமையாக எதிர்க்கிறது. அதனால் நுழைவுத் தேர்வு என்கின்ற முறை அனைத்துத் தளங்களிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய பாடுபடும்.

அடிப்படைக் கல்விக்கான வயது வரம்பு 21ஆக அதிகரிக்க

சாதி மத வேறுபாடின்றி இலவசக் கல்வியை மாநில அரசின் மூலம் அனைவருக்கும் வழங்கவும், இலவசக் கல்வியை உறுதியாக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21ஏ பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கல்விக்கான வயது வரம்பு 14 என்பதை நீக்கிவிட்டு அதை 21 வயதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. அந்த இலக்கை எட்ட நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

பட்டப்படிப்பு வரை கட்டாயக் கல்வி

தொடக்கக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை கல்வியைக் கட்டாயமாக்கக் கூடிய வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும். இதனால் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் உயர் கல்வியை இலவசமாகப் பெறுவதற்கான உரிமையையும் வாய்ப்பையும் பெற முடியும் என்பதால் நாடாளுமன்றத்தில் இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழுத்தம் கொடுக்கும்.

எதிர்மறை மதிப்பெண் முறை நீக்கம்

மைய அரசு நடத்தும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் எனும் குடிமைப் பணித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவியர் பெரும் பாலும் கிராமப்புற பகுதிகளைச் சார்ந்தவர்க இருக்கின்றனர். வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உழைத்து முன்னேறும் கனவுடன் படிக்கும் அவர்களின் கனவினை சிதைக்கும் விதமாக மதிபெண் அளிக்கும் முறை இருக்கிறது. இதில் பின்பற்றப்படும் எதிர்மறை மதிப்பெண் முறை (ழிமீரீணீtவீஸ்மீ விணீக்ஷீளீவீஸீரீ ஷிஹ்stமீனீ) முற்றிலும் நீக்கப்பட்டு பழைய முறையே கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் ஏழை மாணவ மாணவியரி நலன் பாதுகாக்கப்படும் எனவே இது குறித்து நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

ஆசிரியர் நியமனம் அதிகரிப்பு

கல்வி உரிமைச் சட்டம் 2005-ல் உருவாக்கப்பட்டு, 4.8.2009 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1.4.2010-ல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் துணைக்கண்டம் முழுவதும், 10 இலட்சம் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவை. அப்போதுதான் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற இலக்கை எட்ட முடியும். ஆனால், இதுவரை முந்தைய அரசும் இன்றைய அரசும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பதை இம்மாநாடு பதிவு செய்கிறது. மேலும், இச்சட்டத்தை அமல்படுத்த அடுத்த ஐந்தாண்டுகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி தேவை என்று வல்லுநர்கள் தீர்மானித்த நிலையில் 2014-ல் இத்திட்டத்திற்கு மோடி அரசு அலுவலகப் பணிக்காக வெறும் 2000 கோடி மட்டுமே ஒதுக்கிய அதே நேரத்தில், ராணுவத்திற்கு மட்டும் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கியது.

இது ஏற்கெனவே ஒதுக்கப்பட்டதைவிட 12.5 சதவீதம் அதிகமாக இருந்ததுடன் தொடர்ந்து ராணுவத்திற்கு நிதியை அதிகரித்ததே தவிர மக்களின் கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்காமல் ஆயுத வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. நாட்டின் பாதுகாப்பிற்கு ராணுவச் செலவீனங்கள் முக்கியமென்றாலும் கல்வியினால் மக்கள் பெறும் பாதுகாப்பே நிரந்தரமானதாகும். எனவே தேசிய மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதத்தைக் கல்விக்குச் செலவிட வேண்டும் என தேசியக் கட்சிகள் கோரி வருவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றாலும், அது போதுமானதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வ துடன், அந்த 6 சதவிகிதம் 10 சதவிகிதமாக உயர்த்த நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்

பயிற்று மொழி விவகாரத்தில் நடுவண் அரசு தலையிடக்கூடாது என்று இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து மொழிகளும் வளம்பெறும் விதத்தில் “இந்திய மொழிகள் வளர்ச்சி ஆணையம்” உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மக்கள் விரும்பினால் இந்தி, சமஸ்கிருதம், உருது, அரபு, ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட எந்த மொழியையும் கற்றுக்கொள்ள நடுவண் அரசு ஆவன செய்ய வேண்டும். எந்நிலையிலும், எவ்வழியிலும் கட்டாயம் என்பது இருக்கக்கூடாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இந்தியா முழுமைக்கும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாட்டம்

நடுவண் அரசின் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதைப்போல, செம்மொழித் தகுதிபெற்ற தமிழுக்கும் இந்தியா முழுமைக்கும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாட வகை செய்ய வேண்டும் என் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்

கல்வி நிறுவனங்களில் எஸ்.சி / எஸ்.டி கண்காணிப்புக் குழு

நடுவண் பல்கலைக்கழக ஆணையக்குழுவின் ஆணைப் படி அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் SC/ST CELL உருவாக்கப்பட வேண்டும், ஆனால் பல்கலைக்கழக ஆணையத்தின் ஆணையை தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அரசு கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவில்லை, எனவே அவற்றில் SC/ST CELL உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அப்படி உருவாக்கத் தவறும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

கல்வி வங்கிக் கடன் எளிமையாக்கம்

மாணவ மாணவியர் அனைவருக்கும் உயர் கல்விவரை இலவசக் கல்வி என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை எனினும் அது நிறைவேறும் வரை மாணவ மாணவிருக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு அரசு வழி வகை செய்துள்ளது. ஆனால், அதற்கு வங்கிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதுடன், தேவையற்ற நிபந்தனைகளையும் விதித்து மாணவ மாணவியரை அலைக்கழிக்கின்றன, எனவே கல்விக்கடன் எளிமையாக்கப் படுவதுடன், அலைக்கழிக்கும் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டத்தினை இயற்றவும் அதைக் கண்காணிக்க மாநிலந்தோறும் தகுந்த அமைப்பை உருவாக்கி மாணவர்கள் பயன்பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத் திருநாளாக அறிவிக்க (INTELLECTUALS DAY)

தமிழகத்தில் காமராசர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதை முன்மாதிரியாகக் கொண்டு, உலகின் ஆறு அறிவாளிகளில் ஒருவராகக் கருதப்பட்டுவரும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தையுமான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த ஏப்ரல் 14ஆம் நாளை ‘அறிவுத் திருநாளாக’ (INTELLECTUALS DAY) அறிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்

மாணவ மாணவியரின் இடை நிற்றலைத் தடுத்தல்

கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001-02ல், தொடக்க நிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது. 2013-14ல், 0.95 சதவீதமாகவும், நடுநிலை வகுப்புகளில், 2001-02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013-14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் ஒன்றாம் வகுப்புகளில் சேரும் 100 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே 9-ஆம் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுகின்றனர் என “கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம்” தனது ஆய்வில் உறுதிப் படுத்தியுள்ளது. எனவே, இடையில் கல்வியை கைவிடும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளில் குடிசை வாழ் மக்களிடமும் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த மோசமான சமூக சூழலை ஒழிக்கத் தேவை தேவைப்படும் நிதியினை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வித் தொலைக்காட்சி

2014, ஆகஸ்டு 17 அன்று சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய கல்வி உரிமை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில், கிராமப்புற மாணவ மாணவியர் வீட்டில் உள்ள நேரத்தினை கல்விக்காகப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. எனவே, அவர்கள் கட்டணத் தனி வகுப்புகள் பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர். எனவே, மாநில அரசின் சார்பில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி தொடங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி தற்போது தமிழக அரசு கல்விக்கான தொலைக்காட்சியினைத் தொடங்கி இருப்பதாக அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறோம். அதே நேரத்தில் அது நிறைவேற மத்திய அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதியினை மத்திய அரசு வழங்கவும், முழுமையாக நிறைவேற்றவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்

கல்வித்துறையை தனி அமைச்சகத்தின்கீழ் கொண்டு வருதல்

மத்திய அரசின் கல்வித்துறையானது மனித வள மேம்பாட்டுத் துறையின் கண்காணிப்பின் கீழ் இருப்பதால் அதனுடைய முக்கியத்துவம் வெளிவராமலேயே போகிறது. எனவே கல்வித்துறைக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக்கு மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மாநில கல்வித் திட்டங்களில் இந்த அமைச்சகம் தலையிட முடியாத அளவிற்கான வரையறைகள் நிறுவப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.

உயராய்வு கல்வி நிறுவனங்களில் மீண்டும் இடஒதுக்கீடு

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர் ஆய்வுக் கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு ரத்து எனும் அநீதியை உடனடியாக நீக்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்.

அயல்நாடுகளில் கல்வி கற்க உதவி

மருத்துவம் மற்றும் பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழில் திறன் கல்விப்புலங்களில் தலித் மட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் அவர்கள் மேற்படிப்புக்கு அயல்நாடுகளுக்குச் சென்று படிப்பதற்கான வசதிகள் இன்றி இருக்கின்றார்கள். எனவே, மேற்கண்ட சமூகத்தினர் தொழில்திறன் கல்விப்புலங்களில் தமது ஆளுமையை நிலைநாட்டுவதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும்.

கல்விப் பாடத் திட்டங்களில் முழுமையாக மத நீக்கம்

கல்விப் பாடத் திட்டங்களில் முழுமையாக மதம் நீக்கம் செய்யப்பட வேண்டும். பண்பாடு என்கின்ற பெயரில் எந்த மதத்தின் கருத்துக்களும் பாடத் திட்டத்தில் இணைக்கப்படுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிரான நிலைப்பாட்டுடன் இருக்கின்றது. மாணவ மாணவியருக்குப் போதிக்கப்படுகின்ற பாடங்கள் பாதிப்பு இல்லாமல் முழுக்கவும் அறிவியல் அடிப்படையிலும் சனநாயக உணர்வை மேம்படுத்தும் விதமாகவும், இயற் கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாகவும் அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, கல்வி அமைப்பு முழுமையான அறிவை வளர்ப்பதற்கும் வேலைவாய்ப்பு களை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் அதை நிலைப்படுத்து வதற்கும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

ஈழத் தமிழர்கள் நலன்

புலம் பெயர்ந்த தமிழர்களின் நலன்

உலகம் முழுவதும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தாய் நாட்டோடு தொடர்பு கொள்ளவும் தமது உறவுகளோடு இடையூறுகள் இன்றி தமது உறவை மேம்படுத்தவும், தாய் நாட்டோடு பொரு ளாதார நடவடிக்கைகளை எந்தவிதமான தடங்கலும் இன்றித் தொடரவும் வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகள் எளிதாக இல்லாத காரணத்தினால் பெரும் தொய்வும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பாதுகாப்பில் குறைபாடுகளும் நிலவிக்கொண்டிருக்கிறன. இதைக் களையும் விதத்தில் தமிழகத்தில் தனி அமைப்பை உருவாக்கி புலம்பெயர்ந்த தமிழர்களின் நலன் காக்கவும், அந்த அமைப்பிற்குச் சர்வதேச அங்கீகாரத்தை வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

எழுவர் விடுதலை மற்றும் அப்பாவி சிறைக் கைதிகள் விடுதலை

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் மன்னித்துவிட்டதாக ராஜீவ் காந்தி அவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். மேலும் அண்மையில் சென்னைக்கு வந்த ராகுல் காந்தி அவர்களும் மேற்கண்ட நபர்களை தாங்கள் ஏற்கனவே மன்னித்துவிட்டதாகவும், அவர்கள் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை என்றும் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களை விடுவிக்க மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அரசியல் காரணங்களுக்காக முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு ஆயுள் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும். அவர்களின் விடுதலைக்குப் பின்னர் அவர்களுக்குத் தேவையான மறுவாழ்விற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசை வலியுறுத்தும்.

சிறைகளில் உள்ள சிறைக் கைதிகள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளாகவே இருக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகள் கிடைப்பது இல்லை. மேலும் பெரும்பாலோர் விசாரணைக் கைதிகளாகவே தமது ஆயுட்காலத்தை முடிக்கின்ற அவலம் தொடர்கின்றது. எனவே, ஒரு வருடத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் விசாரணைக் கைதிகள் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விடுவிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு வெளியிடவும் அமல்படுத்தவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

ஈழத்தமிழர்களின் நலன்

ஈழத் தமிழர்கள் தமக்கென ஒரு தனித்தாயகமான தமிழீழ நாட்டினை அமைத்துக் கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தர இந்திய அரசு உதவ வேண்டும் என நாடாளு மன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கெனவே குரல் கொடுத்துள்ளோம். அதை மீண்டும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

ஈழத்தமிழர் பொது வாக்கெடுப்பு

ஈழத்தமிழர் தமது உரிமைகள் காத்துக் கொள்ளும் பொருட்டு தொடர்ந்துப் போராடி வருகின்றனர். அவர்களின் அரசியல் கோரிக்கை என்னவென்பதை இந்திய உள்ளிட்ட அனைத்துலக நாடுகளும் புரிந்துக் கொள்ளவும், அவர்களுக்கு தார்மீக ஆதரவினை வழங்கும் ஒரு பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களிடையே நடத்தப்பட வேண்டும். அதில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் வாக்களிக்கும் விதத்தில் அந்த பொது வாக்கெடுப்பு அமைய வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவருக்குமான நலனைப் பாதுகாக்கும் வகையில் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவருக்கும் 10 ஆண்டுகளைக் கடந்து விட்டிருந்தால் அவர்களுக்கு இயல்பாகவே இந்திய குடியுரிமையை வழங்கி, அவர்கள் பொதுச் சமூகத்தினரோடு இணைந்து வாழ வழிவகை செய்யவும், அவர்களுக்குத் தேவையான வீடு, கல்வி, வருமான வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கித் தரவும் மத்திய அரசு முன்வர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

இனப்படுகொலை செய்த ராசபக்சேவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட போர்க்குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரிக்கவும், லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரணமான ராஜபக்சே உள்ளிட்ட இனப் படுகொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் உலக அளவில் இந்திய அரசு முன்வர வேண்டும். அதற்கான அழுத்தத்தினை நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்படுத்தும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கை அரசிடம் இழப்பீடு கோர வேண்டும்

இந்தியா தன் அண்டை நாடுகளோடு சுமூகமான உறவை மேம்படுத்த வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டோடு, இலங்கை அரசு தமிழகத்தில் தமிழர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றும், ஆயிரக்கணக்கானோரைச் சிறைபடுத்தி வருகின்ற இலங்கை அரசின் அத்துமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவருக்கும் இலங்கை அரசிடமிருந்து உரிய இழப்பீடைப் பெற்றுத்தர மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

ஊடகத்தினர் பாதுகாப்பும் நலனும்

பா.ஜ.க அரசு பதவியேற்ற நாள் முதல் ஜனநாயகத்தின் குரலாக விளங்கும் ஊடகத்தினர் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி யுள்ளர். கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளனர். முன்னணிச் சிந்தனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். எனவே, கருத்துரிமையினைப் பாதுக்காக்கும் விதத்தில் மைய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தும்.

மேலும் ஊடகத்தில் பணியாற்றும் ஊடகத்தினருக்கு வருவாய் உயர்வு மற்றும் பணியிடப் பாதுகாப்பினை உறுதி செய்ய பல ஆணையங்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான Justice Majithia Wage Recommendation for Journalist and Non – Journalist Employees குழுவின் பரிந்துரைகளின் மையத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, ஊடகத்தினரின் நலனைப் பாதுகாப்பதுடன், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இதுகுறித்து ஆய்வு செய்து, அவர்களின் நலனையும் பாதுகாப்பினையும் உறுதி செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.

இணையதளப் பாதுகாப்பு

இணைய சமநிலைக் குறித்து இந்தியாவில் பேசப்படுகிறது. இணையத்தின் வசதிகள் அனைத்து மக்களும் பெருகின்ற வகையில் அரசு தொலைத் தொடர்புத் துறையினை வலுப் படுத்த வேண்டும். அதில் மக்களுக்கு குறைந்த செலவில் இணையத்தைப் பயன்படுத்தும் வகையிலும், தனியார்களின் கொள்ளை லாப வேட்டையினை தடுத்த நிறுத்தவும் வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

இணைய சமநிலைப் பாதுகாப்பும் பாலியியல் தளங்களுக்குத் தடையும்

இணையங்களில் அதிகமாக இளைய சமூகத்தினர் புழங்கி வருகின்றனர். பல நேர்வுகளில் குழந்தைகளும் இணையத்தின் பாதிப்பில் இருக்கினறனர். இந்த நிலையில் பாலியல் தளங்கள் எளிதாக கிடைக்கின்ற போக்கு அதிகரித்துள்ளது. இதனால் இளைய சமூதாயம் தனது கவனத்தினை திசைத் திருப்பிக் கொள்ள ஏதுவாகிறது. இது பலவிதமான பாலியல் நெறுக்கடிகளை இயையோர் மீது உருவாக்கி அவர்கள் சீர்குலைய வாய்ப்பளிக்கிறது. எனவே இணையத்தில் பாலியல் தளங்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தும்.

அறிக்கை தயாரிப்பு

கௌதம சன்னா

Load More Related Articles
Load More By admin
Load More In Events
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …