Home Politics Activities விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை

Comments Off on விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிக்கை

ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை?

தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தமிழகத்தின் நலத்திற்காகவும் ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கின்ற அடிப்படை முழக்கத்தை முன்வைத்துக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் களமாடி வரும் ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’ தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்தில் தனது அளப்பரிய பணிகளை நிறைவேற்றி வந்துள்ளது. அந்த முன்பணிகளின் அடிப்படையில் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்விதமாக இந்திய மக்களவைத் தேர்தல் 2019ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற சனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இத்தேர்தலில் பங்கேற்கிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. அவற்றில் ஆளும் கட்சிகள், எதிர் கட்சிகள் தவிரப் பெரிய கட்சிகளுக்கு இணையான கட்சிகளாகவும், அதேநேரத்தில் அதிகாரத்தின் தலைமைப் பீடங்களில் அமர்ந்து மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்பினைப் பெறாத; நேர்மையாகவும் கடுமையாகவும் போராடிக் கொண்டிருக்கும் கட்சிகள் பல இருக்கின்றன. அப்படிப் போராடிக் கொண்டிருக்கும்; தமிழகத்தின் வளரும் பெரிய கட்சிகளுள் முதன்மையானதாகத் திகழ்வது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாகும். கடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக மனித மாண்பினை மீட்கும் போராட்டத்தில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. மனித  உரிமைகள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் முதல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் இறங்கிப் போராடுகிறது. இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான வீரச் சிறுத்தைகள் களப்பலியாகியுள்ளனர். சாதி மற்றும் மதவெறியர்களின் கொடூர வன்முறையினால் கொலையுண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறைப்பட்டு மீண்டுள்ளனர். பலர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டுள்ளனர். ஆயினும் மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் பின்வாங்கியதில்லை.

கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! என்னும் தாரக மந்திரத்தை முன்னிறுத்தி கார்ல் மார்க்ஸ், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காட்டிய வழியில் தொடர்ந்து சமரசமின்றி நடைபோட்டு வருகிறது விடுதலைச் சிறுத்தைகள். அதிகாரத்தை அனைத்து மக்களுக்கும் பரவலாக்கி, ஜனநாயகத்தினை சமூகத்தின் வேர்க்கால்கள் தோறும் சேர்க்க வேண்டியது முதன்மைப் பணியாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதைப் பெருமையோடு சுட்டிக்காட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

ஆயினும் எங்களின் கொள்கைகளை மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து அதன் அடிப்படையில் எமது செயல்பாடுகளை நாங்கள் வகுத்துக் கொண்டு செயல்பட்டாலும், அவற்றினை அரசு அதிகாரத்தின் மூலம் செயல்படுத்தினால் அனைத்து மக்களின் நலனையும் வென்றெடுக்க முடியும். அதற்காக மக்களின் நம்பிக்கையினை முழுமையாகப் பெறுவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறோம்.

அதிகாரத்தில் உள்ள பெரிய கட்சிகள் தேர்தல் நேரத்தில் பல்வேறு விதமான வாக்குறுதிகளை அளிக்கின்றன. அதன் அடிப்படையில் மக்களும் வாக்களிக்கின்றனர். ஆனால், அவர்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினார்களா என்றால் அது கேள்விக் குறிதான். அந்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று மக்கள் கேள்வி கேட்பதற்கான ஏற்பாடுகள் சரியான முறையில் இல்லை. எனவே, மக்களின் குரலாக அந்தக் கேள்விகளை விடுதலையை சிறுத்தைகள் கேட்கிறோம்; அதற்காகப் போராடுகிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்தத் தேர்தல் அறிக்கையும் அந்த அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்றிய கட்சியாக இன்று இல்லை. எனினும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து பணியாற்றுகிறோம். அந்த வகையில் மக்களின் குரலை, தேவைகளைத் தேர்தல் அறிக்கையாக முன்வைக்கிறோம். இவற்றைச் செயல்படுத்தும் வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்போது இன்னும் விரிவான திட்டங்களோடும், செயல் முறைகளோடும் மக்களின் முன்வைப் போம். அதில் மக்கள் திருத்தங்களையோ சேர்ப்புகளையோ முன்வைத்தால் அவற்றினையும் சேர்த்து முழுமையாக மக்களின் அரசாக, எளிய மக்களின் அரசாகச் செயல்பட முனைவோம். அந்த வாய்ப்புக் கிடைக்காதவரையில் அவற்றை மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் விதமாகச் செயல்படுவோம். அதில் எந்தவிதமான சமரசமும் இன்றி மக்களின் குரலாக ஒலிப்போம்.

ஏனெனில், எங்கள் மீது எத்தனை அவதூறுகளையும் அபாண்டமான பழிகளையும் சிலர் சுமத்தினாலும் நாங்கள் சாதி மத வேறுபாடற்ற சமத்துவமிக்க சமூகத்தினை நாங்கள் கனவு காண்கிறோம்.

1. சாதி, மதம் ஒழித்து சமத்துவம் படைப்போம்.

2. வர்க்க அமைப்பை உடைத்து வறுமையைத் துடைப்போம்.

3. மகளிர் விடுதலையை வென்று மாண்பினைக் காப்போம்.

4. தேசிய இன உரிமைகளை மீட்டு, ஐக்கியக் குடியரசு அமைப்போம்.

5. வல்லரசிய ஆதிக்கம் ஒழித்து வாழ்வுரிமை மீட்போம்

என முழக்கங்களை முன்வைத்துச் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் அரசியல் அதிகாரத்தில் அமருகின்றபோது மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறேன். அதேநேரத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் நலனையும் மக்களின் பொதுத்தேவைகளையும் தீர ஆராய்ந்து அவற்றைக் களைய வேண்டும் என்பது எமது உள்ளக் கிடக்கை. அதை நிறைவேற்றுகின்ற வகையில் நமது சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான தனித் தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதில் பெருமைக் கொள்கிறேன். இந்தத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவேன். என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதுடன்.

இத்தொகுதியில் நல்லிணக்கம் நிலவவும், அமைதியும் வளமும் பெருகவும் மதச்சார்பற்ற சனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு பானை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவண்

                                                                   டாக்டர்.தொல்.திருமாவளவன்
B.Sc., M.A., B.L., Ph.D.
சிதம்பரம்  
01.04.2019

                                                                                         

மக்களவைத் தேர்தல் – 2019

சிதம்பரம் – நாடாளுமன்றத் தொகுதிக்கான

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை

வரலாற்றுச் சிறப்பும், உலகப் புகழும் மிக்க சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம்,  புவனகிரி, அரியலூர், குன்னம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகியத் தொகுதிகள் அடங்கிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, களத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட மக்களின் தேவைகளின் அடிப்படையில் எமது தேர்தல் அறிக்கையினை மக்களின் முன் வைப்பதோடு, இத்தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றப் பாடுபடுவோம் என உறுதி அளிக்கிறேன்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குறுதிகள்

பெட்ரோலிய மண்டலமாக்கலைத் தடுப்போம்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 22 பகுதிகள் பெட்ரோலிய மண்டலமாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டு அங்கு நில எடுப்பு வேலைகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு எதிரானது மட்டுமின்றி விவசாயத்தை அழிக்கக் கூடிய செயலாகும். எனவே சிதம்பரம் பகுதியையும் டெல்டா மாவட்டங்களைப் போல விவசாயத்தை அழிக்க கூடிய நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதைத் தடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

நிலக்கரி எடுப்பதற்கான விரிவாக்கப் பணிகள் வேண்டாம்

கம்மாபுரம் சேத்தியாத்தோப்பு மற்றும் புவனகிரி பகுதிகளில் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மூலமாக நிலக்கரி எடுப்பதற்கான விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கின்ற திட்டமாகும். இத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் விவசாயம் அழிந்து விடும் என்பதால் மேற்கண்ட திட்டம் தடுத்து நிறுத்தப்படும்.

புவனகிரியில் மலர் நறுமணப்பொருள்களுக்கான தொழிற்சாலை

புவனகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மலர் சாகுபடி பெருமளவில் நடைபெறுகின்றது. மேலும் இங்கு பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் மலர்களுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே விரைவில் அழியக்கூடிய மலர்களைக் கொண்டு நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கான தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கை. அது நிறைவேற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

வெள்ளாறு, கொள்ளிடம் மற்றும் கிளையாறுகளில் கடல் நீர் புகுவதை தடுக்க செயல்திட்டங்கள்.

வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆற்றுப்படுகைகள் மிகவும் தாழ்வான நிலைக்குச் சென்றுவிட்டன. இதனால் கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து உப்பு நீராக மாறிவிட்டது. இந்தப் பாதிப்பு சுமார் 40 கிலோ மீட்டர் வரை படர்ந்துள்ளது என்பது மிகவும் ஆபத்தான செய்தியாகும். இது தொடருமானால் சிதம்பரம் தொகுதி மட்டுமின்றி கடலூர் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே இதைத் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெள்ளாறு, கொள்ளிடம் மற்றும் கிளையாறுகளில் தடுப்பணைகள்

வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் அதன் கிளைகளில் ஓடும் உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது. இந்த வீணாகும் நீர் முறையாக சேமிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பப்படுமானால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், சிதம்பரம் நகரின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதல்  விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரும் கிடைக்கும். எனவே மேற்கண்ட நதிகளில் தடுப்பு அணைகள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நான்கு வழி சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குப் போதிய இழப்பீடு

நான்கு வழி சாலைக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குப் போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் நிலம் கொடுத்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் தமது நிலங்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பெரியப்பட்டு பகுதியில் சாயப்பட்டறை வேண்டாம்

பெரியப்பட்டு பகுதியில் சாயப்பட்டறை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே பிரியப்பட்டு சாயப்பட்டறை அமைவது முழுமையாக தடுக்கப்படும்.

மீனவர்கள் நலன்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கின்ற மீனவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்கள் தமது சூழலை மேம்படுத்திக்கொள்ள கூடிய வகையில் அடிப்படை வசதிகள் ஆய்வு செய்யப்பட்டு அவை அமைத்துக் கொடுக்கப்படும்.

இரட்டை மடிவலை மற்றும் சுருக்கு மடிவலை தடை

மீனவர்கள் பெரிய மீன் பிடி கப்பல்களின் கோர பிடியில் சிக்கி தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். பெரிய மீன் பிடி படகுகள் மற்றும் சிறு கப்பல்களில் பயன்படுத்தப்படும் இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் மீன் வளத்தை முற்றிலும் அளிக்கக் கூடியவை. மேலும் இந்த வலைகளினால் கடலோர மீனவர்களின் வாழ்வாதார மற்றும் வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகள் முற்றிலுமாக தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அண்ணமாலைப் பல்கலைக்கழக ஆசியர் மற்றும் பணியாளர் மறுநியமணம்

சிதம்பரம் நகரின் மாண்புகளில் ஒன்றாக விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசு கையகப்படுத்துதல் மூலம் சுமார் 6000 பேர் பணி இழந்துள்ளனர். பணி இழப்பின் மூலம் தமது வருமானத்தையும் அவர்கள் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு வறுமையில் உழன்று வருகிறார்கள்.  எனவே பாதிக்கப்பட்ட மேற்கண்ட பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் பணி நியமனம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயப் பெருங்குடிகளின் பிரச்சனைகள் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பரந்த நிலப்பரப்பும், பெரும் நீர்வளமும் கொண்ட சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் விவசாயப் பெருங்குடிகளின் பிரச்சனைகள் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளின் உற்பத்திச் செய்யும் பொருள்களுக்கான தகுந்த சந்தையினை உருவாக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் விவசாய விளைப் பொருள்களுக்கான தகுந்த விலைகளைப் பெறுவற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கரும்பு விவசாயத்திற்கான நியாய விலை

கரும்பு விவசாயம் பெருமளவில் நடக்கின்ற நம் தொகுதியில் கரும்பு விவசாயிகளிகள் விளைச்சலுக்குத் தகுந்த விலையைப் பெற்றுத் தரவும், நிலுவையிலுள்ள தொகைகளைப் பெற்றுத் தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயப் பொருள்களுக்கான சந்தைகள் மேம்பாடு

நகரங்களில் இயங்கிவரும் விவசாய விளைபொருள்களுக்கான நகரச் சந்தைகளை முறைப்படுத்தி அவற்றின் உள்கட்டமைப்புகளை தரம் உயர்த்தவும், புதிய இடங்களில் விவசாயச் சந்தைகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலன்

விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் அவர்களுக்குத் தேவையான நிரந்தர கூலித் தொகையினை உறுதிச் செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நகரங்களில் பணியாற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களின் நலன்களைப் பேணவும், அவர்களின் வருமானத்தினை உறுதி செய்யவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் அவர்களின் வருவாய் உயர்வு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மாணவ மாணவியருக்கான திட்டங்கள்

இலவச கம்யூட்டர் பயிற்சி மையங்கள்

ஏற்கெனவே நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது மாணவ மாணவியருக்கு நடமாடும் இலவச கம்யூட்டர் மையத்தினைத் திறந்து சேவையாற்றினேன். அதுபோல ஏழை மாணவ மாணவியருக்குக் கணிணி பயிற்சி மையங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குடிமைப்பணி மற்றும் அரசுப்பணி பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்

சிதம்பரம் தொகுதியில் உள்ள மாணவ மாணவியர் பயன்பெரும் வகையில் குடிமை மற்றும் அரசு பணிகளில் தேர்ச்சிப் பெறுவதற்காகச் சிறப்பு குடிமை பயிற்சி மையங்களை (Civil Service Training Institute) உருவாக்குவோம்.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் தரம் மேம்பாடு

கல்விக்கு முன்னுரிமைக் கொடுத்து அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் பயன் பெருகின்ற வகையில் அரசு பள்ளிகளின் தரம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு

சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள்,  கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் மிக்கதாவும், நவீன கருவிகள் பொருத்தி மருத்துமனைகள் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிதம்பரம் ஆடவல்லான் திருத்தல மேம்பாடு

ஆடவல்லான் அமைந்த சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பையும் கட்டடக்கலை மாண்பையும் மேம்படுத்த சிறப்பு செயல் திட்டங்களை வடிவமைப்பதுடன், கோயில் வழிபாட்டில் தமிழுக்கு உரிய பங்கைப் பெற்றுத்தரவும் செயல்திட்டங்கள் வகுப்பப்படும்.

கங்கைக்கொண்ட சோழபுரம்

ராசேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருங்கோயிலின் வரலாற்றுப் பெருமையை மீட்கும் வகையில் சிதம்பரம் தொகுதியில் கலைக்கருவூலமான அதை புணரமைத்து பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம்

வீரமாமுனிவர் அவர்களால் அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம் கிறித்துவர்கள் மட்டுமின்றி இந்துக்களின் புனிதத்தலமாகவும் விளங்குகிறது. அக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்துத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பிச்சாவரம் மேம்பாடு

சிதம்பரம் தொகுதியின் மிகச்சிறந்த இயற்கைக் சுற்றுலாத்தளமாக விளங்கும் அலையாத்திக் காடுகள் நிறைந்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தைச் சர்வதேசத் தரத்தில் உயர்த்துவதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்போம்.

வீராணம் ஏரி பாதுகாப்புடன் சுற்றுலா தளமாக மாற்றப்படும்

கடலூர் மாவட்டத்தின் பெருங்கொடையாக விளங்கும் வீரநாராயண ஏரி என அழைக்கப்பட்ட வீராணம் ஏரி தூர் வாரப்படவும், படகுப் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளோடுக் கூடிய சுற்றுத்தலமாக அதை மாற்றியமைக்கவும். சுமார் 30 கிலோ மீட்டர்கள் சுற்றளவுக் கொண்ட அதன் கரைமேடுகள் பலப்படுத்தவும், ஷட்டர்களை பராமத்துச் செய்யவும் தொடர்ந்த கண்காணிப்பும் சிறப்பு திட்டமும் தேவைப்படுகிறது. அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வீராணம் ஏரிகரையைப் பலப்படுத்த பனைவிதைகள் நடவு

வீராணம் ஏரிக்கரைகளைப் பாதுகாக்க கரைநெடுக பனை விதைகளை நடவு செய்யவும், கரைகளில் முளைத்துள்ள வேலிக்காத்தான் மரங்களை அகற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

1.சிதம்பரம் சட்டமன்றத்தொகுதி

சிதம்பரம் நகரத்தின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்

தமிழகத்தின் பெரும் ஏரியான வீராணம் ஏரி, கொள்ளிடம் ஆறு மற்றும் வெள்ளாறு ஆகியன இருந்தும் சிதம்பரம் மக்கள் கடுமையான குடிநீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்குக் காரணம் நீர் பகிர்மானம் குறித்த முறையான திட்டமிடல் இல்லாமையும், இன்றைய தமிழக அரசின் பாராமுகமும்தான் காரணம். எனவே தண்ணீர் இருந்தும் அது கிடைக்காமல் அவதிப்படும் சிதம்பரம் நகர மக்கள் குடிநீர் பற்றாக்குறையின்றி பெறுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும். அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம்

சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படாததால் கழிவுநீர் வெளியேற்றம் பிரச்சனையாக உள்ளது. இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகின்றனர். எனவே உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் மற்றும் புவனகிரி நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு கரைகளில் வெள்ளத்தடுப்பு திட்டங்கள்

கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு கரைகளில் அமைந்துள்ள பகுதிகளில் பெரு மழைக்காகலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் மக்களின் சொத்துக்கள் பாழாகின்றன. அதற்கு காரணம் முறையான வெள்ளத்தடுப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படாததே காரணம். எனவே மேற்கண்ட பிரச்சனைகளை முழுமையாக தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பாசன வடிகால் மற்றும் வாய்க்கால்கள்  தூர்வாரப்படும்

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்துவரும் பாசன வடிகால் மற்றும் வாய்க்கால்கள் காலமுறைப்படி  தூர்வாரப்படாமல் தூர்த்துப் போயிருக்கின்றன. இதனால் கடைமடைப் பகுதிகளுக்குச் சேர வேண்டிய நீர் வந்து சேறுவதில்லை. விவசாயிகளும் மக்களும் தொடர்ந்து இதனால் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட நீர் வழித்தடங்கள் தூர் வாரப்பட்டடு பாரமரிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை

கொள்ளிடம் ஆற்றில் பாயும் நீரையும் பிற காலங்களில் தேங்கும் ஊற்று நீரை சிதம்பரம் மற்றும் பிச்சாவரம் மக்கள் பயன்படுத்தும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி, அங்கு சேரும் தண்ணீரை திருப்பி கான்சாகிப் வாய்க்காலில் விடுதற்கும் அதன் மூலம்  சிதம்பரம் கீழ் பகுதி மக்களுக்கு விவசாயத்துக்கும் குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. குன்னம் சட்டமன்றத் தொகுதி

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதை விரைவுபடுத்துவோம்

தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குத் திருமாந்துறை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களின் பாராமுகத்தினால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகியுள்ளது. எனவே திருமாந்துறை சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உடனடியாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சோளம்,  பருத்தி,  கரும்பு, நெல் உள்ளிட்ட விளைபொருள்களுக்கான விலை நிர்ணயம்

குன்னம் சட்டமன்றப் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சோளம், பருத்தி, கரும்பு, நெல் உள்ளிட்ட விளைபொருள்கள் ஏராளமாக விளைகின்றன. ஆனால் அவற்றுக்கான கொள்முதல் விலையை விவசாயிகள் பெற முடியாத நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டுமானால் விவசாய உற்பத்திப் பொருள்களின் விலையும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நவீன அரிசி ஆலை

குன்னம் தொகுதியில் உள்ள திருமானூரில் அரிசி சாகுபடி அமோகமாக இருக்கிறது. ஆனால் அதை அரிசியாக குத்திப் பிரிப்பதற்கான  நவீன அரிசி ஆலை இல்லாத குறை இருக்கிறது. இந்தப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி

குன்னம் பகுதியில் போதுமான அளவில் மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறையும், இருக்கின்ற அரசின் மெத்தனமும் ஆகும். இப்பிரச்சனைத் தீர்க்கப்பட வேண்டுமானால் குன்னம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி பெண்கள் கல்வியினைப் பெறும் பொருட்டு பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரியினைக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிமென்ட் ஆலைகளினால் உருவாகும் நிலத்தடி நீர் பற்றாக்குறை

குன்னம் சுற்றுப் புறங்களில் நிலத்தடியில் சிமென்டுக்கான மூலப்பொருட்கள் பெருமளவில் இருக்கின்றன. இதனால் சிமெண்ட் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. ஆனால் அதன் பலன் மக்களை சென்றடையவில்லை. அதே நேரத்தில் இந்த சிமெண்ட் ஆலைகளின் சுண்ணாம்பு சுரங்கங்களினால் நிலத்தடி நீர் கடுமையாகக் கீழே சென்று கடும் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து, விவசாயத்திற்கும் மக்களின் குடிநீருக்கும் பாதிப்பு உண்டாகியுள்ளது. எனவே இப்பிரச்சனைகளைக் களைய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கைவிடப்பட்ட சுரங்கங்கப் பள்ளங்களில் நீர் நிரப்ப ஏற்பாடு

கைவிடப்பட்ட சுரங்கங்களில் கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரை அந்த சுரங்கப்பள்ளங்களில் நிரப்பி நிலத்திடி நீரை அதிகரிக்கவும், அதன் நீரை மக்கள் பயன்படுத்தவும் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்டும்.

தொல்லியல் படிம சுற்றுலாத்தலம்

 குன்னம் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகள் தொல்லியல் படிமங்களின் எச்சங்கள் மிகுதியாக உள்ள மண்டலமாகும். கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதன் காரணமாக இப்பகுதிகளில் உலகளவில் தொல்லுயிர் படிம எச்சங்களின் அடையாளங்கள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. கொளக்காநத்தம் அருகேயுள்ள சாத்தனூர் கல்மரம் சுற்றுலா தலத்தை தவிர்த்து பிற தொல்லுயிர் சுற்றுலாத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதன்மூலம் இப்பகுதிகளின் சுற்றுலா வருமானமும் அதன் மூலம் மக்களின் வருமானமும் உயரும் எனவே அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஏரிகள் தூர் வாரப்படும்

குன்னம் பகுதியில் ஏரிகள் அதிகமிருக்கின்றன. ஆனால் அவை முறையாக தூர் வாரப்படாததால் அவற்றின் நீர் கொள்ளவு குறைந்து விட்டன. அதோடு மட்டுமின்றி நிலக் கொள்ளையர்களினால் ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவினால் விவசாய வாழ்வாதாரம் நலிந்திருக்கிறது. எனவே இந்த ஏரிகளுக்கு உயிர்கொடுக்க வேண்டியது அவசர அவசியப் பணியாக இருக்கிறது. இதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.

3.அரியலூர்

கனிம வளங்களின் பலன் மக்களை அடைய வேண்டும்

அரியலூர் மாவட்டம் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏராளமான கனிம வளங்கள் நிறைந்திருந்தாலும் அதன் பலன் மக்களைப் போய் சேரவில்லை. குறிப்பாக சிமென்ட் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் உள்ள அரியலூரில் கனிம சுரங்கங்களின் பலன்கள் மக்களை போய் சேருவதற்கும், அதற்கான ராயல்டி தொகைகள் தொகுதி மக்களின் வளர்ச்சிக்குப் பயன்படத் தக்க வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

சிமென்ட் ஆலைகளின் சுற்றுச்சூழல் மாசு நீக்கப்படும்

அரியலூரில் உள்ள சிமெண்ட் ஆலைகளினால் கடுமையான மாசு அதிகரித்துள்ளது. மக்களின் சுகாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே ஆலைகளின் மாசுக்களினால் உருவாகும் சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து மக்களைப் பாதுக்காக்கத் தேவையான திட்டங்கள் உருவாக்கப்படும்.

அரசு சிமென்ட் ஆலை மேம்பாடு

அரியலூர் அரசு சிமென்ட் ஆலை மற்ற ஆலைகளைப் போல லாபகரமாகவோ அல்லது திறம்படவோ இயங்கவில்லை. ஆனால் அந்த ஆலைக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தனியார் சிமெண்ட் ஆலைகள் பல மடங்கு வளர்ந்துள்ளன. தனியார்களின் அழுத்தத்தினால் அந்த அரச சிமெண்ட் நிறுவனத்தினை வேண்டுமென்றே சீரழித்து வருகின்றனர். அதை மீட்டு மக்கள் நலனுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கவும், அதனுள் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

சிமென்ட் ஆலைகளால் பாதிக்கப்பட்ட சாலைகள் மேம்பாடு

இந்த தொகுதியில் உள்ள சிமென்ட்  ஆலைகளினால் சாலைப் போக்குவரத்தில் பெருமளவு கனரக வாகனங்கள் போவதும் வருவதுமாக இருக்கின்றன. இதனால் சாலைகள் மோசமாகச் சிதைந்து போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இல்லாமல் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், விபத்துக்கள் நடப்பதற்கு ஏதுவாகவும் மாறியுள்ளன. எனவே சிமெண்ட் ஆலைகள் பங்கேற்புடன் சாலைகள் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பாதாள சாக்கடைத் திட்டம்

அரியலூர் நகராட்சியின் மெத்தனப் போக்கினால் பாதாளச் சாக்கடைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மிகவும் மந்தமாக நடைபெறும் அந்தப் பணியினை விரைந்து முடிக்கவும், சாலைகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள், கழிப்பறைகள் ஆகியன மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வாரணவாசி திறந்தவெளி தொல்லுயிர் பூங்கா

புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா என்று அழைக்கப்படும் அரியலூரில்  டைனோசர்களின் முட்டைகளின் படிமங்கள் அதிகம் கிடைத்துள்ள நிலையில் அந்த தொல்லுயிர் படிமங்களை ப் பாதுகாக்கவும், அவற்றைக் கொண்டு தொல்லுயிர் படிம பூங்கா உருவாக்கவும், அதை சர்வதேசத் தரத்தில் சுற்றுலா மையமாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் வாரணவாசி அருகே திறந்தவெளி தொல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்

தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலமான கரைவெட்டி மேம்படுத்தி சுற்றுலா தளமாக மாற்றியமைக்கப்படும். அதன் மூலம் மக்களின் வருவாய் உயர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

புனிதத்தலங்கள் மேம்பாடு

கல்லங்குறிச்சி, கலியுக வரதராஜ பெருமாள் கோயில்,  பாடல் பெற்றத் தலமான திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில், ஆகியவற்றிற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். பக்தர்கள் பயன்பெறும் வகையில் தங்குமிட வசதிகள் மற்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஏரிகள் குளங்கள் தூர் வாரப்படும்

அரியலூரில் பல ஏரிகளும் குளங்களும் நிறைந்துள்ளன. ஆனால் அவை முறையாகப் பராமரிப்பின்றியும், நிலக் கொள்ளையர்களின் ஆக்கிரமிப்புகளிலும் சிக்கி நீராதார நிலைகள் சுருங்கி வருகின்றன. இதனால் அரியலூர் தொகுதியில் கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மேற்கண்ட நீர் நிலைகளை மீட்கவும், பெரும் நீர்நிலைகளுடன் இணைக்கவும் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கொள்ளிடம் தடுப்பணை

அரியலூர் தொகுதியின் திருமானூர் ஒன்றியம் டெல்டா பகுதியில் ஒன்றாக வருகிறது. விவசாய நிலங்களும் வளமான  சாகுபடியும் உள்ள இப்பகுதி நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகிறது. அந்த பிரச்சினைக்குத் தீர்வுக் காண வேண்டுமானால் புள்ளம்பாடி வாய்க்கால் திறப்பை முறைப்படுத்தியும், கொள்ளிடம் தடுப்பணைகள் கட்டவும் வேண்டும். இது இப்பகுதி மக்களின்  நீண்டகால  கோரிக்கையாக இருக்கிறது.  இப்பிரச்சினையின்  முக்கியத்துவத்தினைக் கருதி உடனடியாக இதற்கான தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

நவீன அரிசி ஆலை அமைக்கப்படும்

அரியலூர் தொகுதியில் தனியார் அரிசி ஆலைகள் இருக்கின்றன. அதே போல அரசு நவீன அரிசி ஆலைகளும் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் விவசாயிகள் தமது நெல்லுக்கான விலையினை உடனே பெற முடியும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகப்படுத்தவும் அல்லது விரிவாக்கம் செய்யவும் வேண்டும். அப்படி நடைபெறுமானால் விவசாயிகள் தமது உழைப்பிற்கும் முதலீட்டிற்கும் ஏற்ற விலையினைப் பெற முடியும். இதற்கான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்யப்படும்.

நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமணை

அரியலூர் தொகுதி சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக அறியப்பட்டுள்ளது. குறுகளான நெடுஞ்சாலைகளில் வேகமாக வரும் கனரக வண்டிகளில் சிக்கி காயம்பட்டு இறப்பவர்களும், அவசர சிகிச்சைக்காகத் தஞ்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறப்பவர்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறார்கள். இதனால் மக்கள் பயத்துடனே சாலைகளில் பயணிக்க  வேண்டியுள்ளது. எனவே சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதுடன், விபத்தில் சிக்கியவர்கள் உடனடி சிகிச்கைகள் மேற்கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையினை அரியலூரில் அரசின் சார்பில் அமைக்க அல்லது அரியலூர் அரசு மருத்துவ மனையினை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

திருச்சி – சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகள்

அரியலூர் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான திருச்சி – சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைகள் ஒற்றை வழிச் சாலைகளாகவே இருக்கின்றன. இதனால் இச்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதுடன், ஏராளமானோர் ஊனமாகியுள்ளனர். அது மட்டுமின்றி இச்சாலைகள் விரைவான போக்குவரத்திற்கு ஏதுவானவையாக இல்லை. எனவே இந்த இரண்டு நெடுஞ்சாலைகளும் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தி போக்குவரத்தினை எளிமையாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

4.ஜெயங்கொண்டம்

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு

ஜெயங்கொண்டம் பகுதி வளமான பகுதியாக விளங்கினாலும் அடிப்படை வசதிகள் அற்ற கிராமங்களை அதிகம் கொண்டிருக்கிறது. முந்திரி காடுகளுக்குள் தொடர்புகளின்றி இருக்கும் கிராமங்களைச் சாலைகளே இணைக்கின்றன. எனவே இப்பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொள்ளும்.

சாலைகளை மேம்படுத்தி பேருந்து போக்குவரத்தை அதிகரித்தல்

சாலை வசதிகள் மேம்படுத்தப்படுமானால் போக்குவரத்துகள் எளிமையாகும். அதன் மூலம் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு ஏதுவாகும். மேலும் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பேருந்து மற்றும் சிறு வாகன போக்குவரத்துகள் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலக்கரி சுரங்கத்திற்கு கையப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு

ஜெயங்கொண்டம் பகுதியில் நெய்வேலி நிறுவனத்தின் நிலக்கரி தேவைக்காக நிலம் கொடுத்தவர்கள் முறையாகவும் சட்டப்படியும் இழப்பீடு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனால் கடும் இன்னலுக்கு ஆளாகி பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் நிலம் இழந்தவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பாறை எரிவாயு திட்டத்தைத் தடுப்போம்

அரசு டெல்டா பகுதிகளை மீத்தேன் எரிவாயுவிற்குப் பலிகொடுத்துச் சிதைப்பதுபோல ஜெயங்கொண்டம் பகுதியில் பாறை எரிவாயு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. எனவே விவசாயிகளின் அச்சம் போக்குகிற வகையில் அத்திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ள விடுதலைச் சிறுத்தைகள் முயற்சிகளை முன்னெடுக்கும்.

கல்விக்கு முன்னுரிமை

ஜெயங்கொண்டம் பகுதி கல்வியில் மிகவும்  பின்தங்கியப் பகுதியாக இருக்கிறது. அரசுக் கல்வி நிறுவனங்கள் குறைவாக இருக்கின்றன. அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட முயற்சி செய்யப்படும்.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம்

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, ஊரக மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மேம்படுத்தவும் அவை நவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

உடையார்பாளையம் பேருந்து நிலையம் திறப்பு

உடையார்பாளையம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு  நீண்ட நாள்களாகியும் அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இன்றைய அரசுக்கு என்ன தயக்கம் என்றே தெரியவில்லை. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. எனவே உடையார் பாளையம் பேருந்து நிலையம் உடனடியாக திறக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

முந்திரி தொழிற்சாலை

தமிழகத்தின் முந்திரிக் கின்னம் ஜெயங்கொண்டம் என்று சொன்னால் அது மிகையில்லை. முந்திரி மற்றும் முந்திரிப் பழம் மிகுதியாக விளையும் இப்பகுதியில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை. மேலும் முந்திரியின் துணை உணவுப் பொருள்கள் உள்படப் பிற முந்திரி தயாரிப்புகளை மேற்கொள்வதற்கான முந்திரி தொடர்பான தொழிற்சாலை அமைக்கப்படுமானால் இப்பகுதி மிகவும் பொருளாதார வளம் பெறும். தொழிலாளர்கள் தேவைக்கு ஏற்ற ஊதியம் பெற முடியும். எனவே இப்பகுதியில் தனியார் பங்கேற்பின் மூலமாகவோ அல்லது அரசின் மூலமாகவோ முந்திரி தொழிற்சாலை உருவாக முயற்சிகளை  மேற்கொள்வோம்.

வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் மாளிகைமேடு அகழ்வாய்வு துரிதப்படுத்தல்

இராசேந்திர சோழன் அரசாட்சியின் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் சோழ அரசின் எச்சங்கள் மிகுதியாகக் கிடைத்து வருகின்றன. பல எச்சங்கள் கோயில்களில் சிதைந்த வண்ணம் கிடைக்கின்றன. இவற்றை சமூக விரோதிகள் அபகரித்து விற்பனை செய்து கொள்ளையடிக்கின்றனர். எனவே மேற்கண்ட வரலாற்றுச் சின்னங்கள் முறையாக  அகழ்வாய்வு செய்யவும், கிடைக்கின்ற சிற்பங்கள் மற்றும் படிமங்களைப் பாதுகாக்கவும் ஒரு பாதுகாப்பு மையத்தினை அமைக்கவும், சோழன் அரண்மனையின் அகழ்வாய்வுகளான மாளிகைமேடு  அகவாழ்வுகளை துரிதப்படுத்தவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.

குடிநீர் பற்றாக்குறையை போக்க சிறப்பு கவனம்

ஜெயங்கொண்டம் பகுதியில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால் இப்பகுதியில் அணைக்கட்டு, ஏரிகள் மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. ஆயினும் இவற்றில் போதிய நீர்வளம் இல்லை. அதற்குக் காரணம் இந்த நீர் நிலைகள் முறையாக இணைக்கப்படாததே ஆகும். எனவே இதற்கென தனிக் கவனம் செலுத்தப்பட்டு நீர் பற்றாக்குறை பிரச்சினைகள் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பொன்னேரி நீர் தேக்கம் தூர் வாருதல்

இராசேந்திர சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட பொன்னேரி இப்பகுதியின் பெரிய பரப்பளவில் அமைந்த ஏரியாகும். இந்த ஏரியின் குறுக்கே சிதம்பரத்திற்கான சாலை அமைக்கப்பட்டதினால் ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நீர்த் தேக்கத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டது. மேலும் ஏரியினை பல ஆண்டுகளாகத் தூர் வாரப்படாததால் ஏரியின் கொள்ளவும் ஆழமும் குறைந்துப் போய் வெறும் மைதானமாக காட்சியளிக்கிறது. இந்த ஏரி தூர் வாரப்பட்டு நீர் சேமிக்கப்படுமானால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதியும், குடிநீர் வசதியும் பெறும். எனவே இதற்கான திட்டத்தை உருவாக்கி செயல் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சுத்தமல்லி நீர்தேக்கம் சீரமைப்பு

சுத்தமல்லி நீர்த்தேக்கமும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதைத் தடுக்க பொன்னேரி ஏரிக்கும், சுத்தமல்லி நீர் தேக்கத்திற்கும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கால்வாய் வெட்டி நீரைக் கொண்டு வருவதின் மூலம் இந்தத் தட்டுப்பாட்டை நீக்க முடியும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

குளங்கள் தூர் வாரும் திட்டம்

ஜெயங்கொண்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் தாமரை மலர்களோடு விளங்கும் குளங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் இக்குளங்களில் உள்ள நீர் குடிப்பதற்கு ஏதுவான நிலையில் இருப்பதில்லை.  அதற்குக் காரணம் அவை முழுமையாகத் தூர் வாரப்படாததேயாகும். அவை தூர் வாரப்பட்டு நீர் சேமிக்கப்படுமானால் சுத்தமான குடிநீரும் அல்லது கிடைக்கின்ற நீரினை சுத்திகரித்துக் கொள்ளவும் முடியும். எனவே இந்தக் குளங்கள் தூர் வார உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

5.காட்டுமன்னார் கோயில்

விவசாயத்திற்கு முன்னிரிமை

காட்டுமன்னார் கோயில் அல்லது காட்டுமன்னார்குடி என்று அழைக்கப்படும் இத்தொகுதியில் விவசாயமே முதன்மையானத் தொழிலாக இருக்கிறது.  இங்குப்  பிரதான தொழில் விவசாயம் ஆகும்.  எனவே விவசாயப் பொருள்களுக்கான உரிய விலை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பிரம்பு தொழில் ஊக்குவிப்பு

இத்தொகுதியில் தொழில் வளர்ச்சிப் பெறவும் பிரம்பு மற்றும் பிற விவசாயப் பொருள்களினால் உருவாக்கப்படும். வீட்டு உபயோகப்  பொருள்களுக்கான சந்தைகள் விரிவுப் படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாயத் துணைப் பொருள்கள் தொழிற்சாலை அமைப்பு

விவசாயப் பொருள்களின் வருமானம் மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால் விவசாய விளைப் பொருள்களைக் கொண்டு அதன்  துணை பொருள்களைத் தயாரிக்க முனைந்தால் அதன் மூலம் வருமானம் பெருகும். எனவே இது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை உருவாக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குவோம்

இத்தொகுதிக்கு உகந்த வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரவும் அதன் மூலம் இப்பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்வோம்.

வீராணம் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை

இத்தொகுதிக்கு மட்டுமின்றி கடலூர் மற்றும் சென்னைக்கும் மிகவும் தேவையான குடிநீரினை வீராணம் ஏரி வழங்குகிறது. இந்த ஏரி தூர் வாரப்படும். இந்த ஏரியில் படகு உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி பெரும் சுற்றுலாத் தலமாக உருவாக்கத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள்

பருவ மழைகளின் போது கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தினால்  காட்டுமன்னார்கோயில் தொகுதி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கான  நிரந்தர தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும் வெள்ளத்தினால் வரும் தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து எதற்கும் பயனின்றி போகிறது. எனவே வெள்ளப் பெருக்கின் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கவும், கடலில் வீணாகக் கலக்கும் நீரைத் தேக்கவும் தடுப்பணைகள் மற்றும் கரைகளைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சாலைகள் தரம் உயர்த்தப்படும்

காட்டுமன்னார் கோயில் தொகுதிக்கு உள்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி உள் சாலைகளும் குறுகலாக இருக்கின்றன. இதனால் விபத்துகள் நடப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. மக்களின் பயணம் தாமதப்படுகிறது. எனவே சாலைகளை அகலப்படுத்தவும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

புனிதத்தலங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்பாடு

இத்தொகுதியின் மிக முக்கியமான புனிதத்தலங்களான வீரநாராயண பெருமாள் கோவில், அனந்தீஸ்வரர் கோயில், மேலகடம்பூர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு புனிதப் பயணிகளும் பக்தர்களும் பயன்பெறத்தக்க வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

6.புவனகிரி

வெள்ளாற்றில் புதிய பாலம்

வெள்ளாற்றினால் பலனடையும் பகுதியாக புவனகிரி இருந்தாலும் அந்த ஆற்றில் வெள்ளம் பாய்கின்ற போது அதிகம் பாதிக்கப்படுகின்ற பகுதியாக இருக்கின்றது.  அக்காலகட்டத்தில் வெள்ளாற்றில் உள்ள பழைய பாலம் பாதுகாப்பானதாக இல்லை. எனவே வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட வேண்டும். அதற்குத் தகுந்த முயற்சிகளை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மேற்கொள்ளப்படும்.

பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படும்

வெள்ளாற்றின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்திடவும், பாசன,  வடிகால் வாய்க்கால்களைத் தூர் வாரி கரைகளைப் பலப்படுத்தினால் புவனகிரி மக்கள் நிம்மதியடைவார்கள் என்பது நீண்டகால கோரிக்கை. எனவே அதற்கான நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வெள்ளாற்றுக் கரை பலப்படுத்தப்படும்

 வெள்ளாற்றின் உபரி நீரினை பயன்படுத்தவும், அருகில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளை நிரப்பவும், கடல் நீர் உள்ளே புகாதவாறு வெள்ளாற்றில் தடுப்புச் சுவரினைக் கட்டவும் தடுப்பணையினைக் கட்டி நீரினை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நறுமணப் பொருள்கள் மற்றும் திரவியங்கள் தொழிற்சாலையினை

புவனகிரி கடலூர் மாவட்டத்தின் மலர்களின் மண். இங்குப் பூக்களின் விளைச்சல் அமோகமான அளவில் உள்ளது. ஆனால் அவற்றை அதிக நாள்கள் பாதுகாக்க முடியாது. எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக மலர்களின் மூலம் தயாராகும் நறுமணப் பொருள்கள் மற்றும் திரவியங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலையினை அமைக்கத் தனியார் மூலமாகவே அல்லது அரசின் மூலமாகவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவை

எமது தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்ல..

மக்களின் மீதான அக்கறை

மக்களிடையே சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவை இருக்கலாம். அதை சுட்டிக் காட்டினால் இவற்றில் சேர்த்துக் கொண்டு அவற்றிற்கும் சேர்த்துத் தீர்வு காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வோம்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. மக்களின் தேவைகளைப் பட்டியலிடும் ஆவணம். இவற்றில் உள்ள வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற ஓயாது உழைப்போம்,  மக்களின் பங்கேற்போடு. தளராத முயற்சியோடு ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உங்களுடன் பணியாற்ற முன்வருகிறேன். என்னைப் பயன்படுத்தி நமது பிரச்சினைகளை இணைந்து தீர்ப்போம்.

வாக்களிப்பீர்

பானை

சின்னத்திற்கு

வேட்பாளர்

டாக்டர்.தொல்.திருமாவளவன்

பி.எஸ்.ஸி., எம்.ஏ., பி.எல்., பி.எச்.டி

அறிக்கை தயாரிப்பு

கௌதம சன்னா

உதவி : ம.சங்கத்தமிழன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Load More Related Articles
Load More By admin
Load More In Activities
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …