Home Article விஸ்வரூபம் விகாரமாகக் கூடாது

விஸ்வரூபம் விகாரமாகக் கூடாது

Comments Off on விஸ்வரூபம் விகாரமாகக் கூடாது

kamal 2

நடிகர் கமல்ஹாசன் தற்போது நடக்கும் பரபரப்பான பிரச்சினையின் மையப்புள்ளியாகிவிட்டார். 90 கோடி ரூபாய் செலவில் அவர் எடுத்த விஸ்வரூபம் என்றத் திரைப்படம் பிரச்சினைக்கு மூலவேர். இந்த திரைப்படத்தை அவர் எடுத்தப் பிறகு அதன் மீதான விமர்ச்சனங்கள் வருவதற்கு பதில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எனினும் படத்தில் குரானையும் சில இடங்களில் இசலாமியர்களை மோசமாக சித்தரித்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் சொன்னதின்பேரில் இசுலாமியர்களிடையே கோபம் எழத் தொடங்கியிருந்தது. இந்நிலையில்தான் படத்தை எதிர்க்க வேண்டும் என்று தேசிய லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நான் கலந்துக் கொண்டேன். அதுவும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட இசுலாமியர் அல்லாத ஒரே நபர் நான்தான்.
போராத்திற்குப் பிறகு, பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியும் அளித்தேன். அதில் இசுலாமியர்களின் மனத்தை புண்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும். குரானை அவமதிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் மற்றும் தணிக்கைக்குழுவில் இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று எழுச்சித் தலைவரின் வழிகாட்டுதல் பேரில் கூறியிருந்தேன். போராட்டம் நடந்தபோது சிலத் தோழர்கள் கமலின் கொடும்பாவியை கொளுத்தினார்கள் அதனால் அந்த இடம் பரபரப்பாக காணப்பட்டது. நடக்கும் காட்சிகளையெல்லாம் கமலின் வீட்டிலிருந்து யாரோ ஒரு நபர் கேமராவில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அதை நான் தோழர்களிடம் சுட்டிக் காட்டினேன்.

kamal 1

அதற்குப் பிறகு நடந்தவைகளை நாடு அறியும். விஸ்வரூபம் நிசமாகவே விஸ்வரூபம் எடுத்தது ஒரு பெரிய பிரச்சினையாக.. கமல்ஹாசன் நாட்டைவிட்டு போகப் போவதாக அறிவிக்கும் வரை.

தமிழ்த் திரையுலகம் இசுலாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதை ஒரு பார்முலாவாகவே வைத்திருப்பதை எவ்வளவு கண்டித்தும் ஏன் அவர்கள் தம்மைத் திருத்திக் கொள்ள மறுக்கிறார்கள். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் கதையமைப்பு எவ்வளவு தூரம் இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது. அதேபோல தலித்துகளை இழிவு படுத்தும் காட்சிகளையும் அவர்களது சாதியைச் சொல்லிப் பேசும் வசனங்களும் எவ்வளவுப் படங்களில் பார்க்க முடிகிறது. ஆயினும் இவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ள தமிழ்த் திரைத்துறை தயாராக இல்லை.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் தாங்கள் போட்ட முதலீட்டை இலாபமாக மாற்றுவதற்கு ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் கையறு நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதை இனியாவது திரைத்துறையினர் கைவிடவேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

அதேபோல் இசுலாமியர்களும் படைபுலகின் தன்மைகளைப் புரிந்துக்கொள்ள முன்வரவேண்டும். இன்னும் அவர்கள் நவீன உலகிற்கு ஏற்றபடி தம்மைத் தகவமைத்துக்கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இளையத் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு அங்கே தலைவர்கள் யாரும் வளரவில்லை என்பதை இது அப்பட்டமாக காட்டுகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியாவது இசுலாமிய இயக்கங்கள் தமது நிலையை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும், இல்லையெனில் பொது சமுகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டுப் போவதை தவிர்க்க முடியாது. பொது சமுகத்தில் தனிமைப்பட்டுப் போனால் அரசியல் அதிகாரம் என்பது கானல்நீராகிவிடும் என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எனினும் ஒரு கமல்ஹாசன் ஒரு முதலீட்டாராக ஆதரிக்க வேண்டியது நமது கடமையல்ல.  ஆனால் அவரை ஒரு படைப்பாளனாக ஆதரிக்கவேண்டியது நமது கடமை.

கௌதம சன்னா , 31.1.2013

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …