Home படைப்புகள் அயோத்திதாசர் சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

Comments Off on சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

Young_Ambedkarந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் விடாமல் தொடரும்.

நம் காலத்திற்குப் பிறகு வரும் எத்தனையோ காலங்களுக்குப் பிறகு நாம் வாழும் இந்த பூமி அடையப் போகும் அழிவிற்கு இப்போது மாற்று ஏற்பாடுகளை சிந்திக்கத் தொடங்கிவிட்டது உலகின் மனித இனம். சூரியன் அணைந்து அதிலுள்ள நெருப்பாற்றல் அத்தனையும் தீர்ந்துபோய், ஒரு மாபெரும் சிவப்பு நெருப்புக்கங்கு கோளமாக தன்னைத் தானே பெரிதாக்கிக் கொள்ளும் காலத்திற்கு சுமார் நானூறு கோடி ஆண்டுகள் பிடிக்கலாம், அப்போது பெரிதாகும் சூரியக் கோளம் நாம் வாழும் இந்த பூமியை சாம்பலாக்கி விழுங்கிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர். அப்படியானால் மனிதக்குலம் என்ன ஆகும் என்கிற பதற்றம் உங்களை தொற்றிக் கொள்வது புரிகிறது. நிச்சயம் மனிதக்குலம் தழைக்கும்.

உலகம் அழியத் தொடங்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கோடிக்கணக்கான ஆண்டுகளாக வாழ்வளித்த இந்த பூமிப் பந்தை விட்டு மனிதர்கள் தப்பிவிடு வார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதாவது ஓரிடத்தில் மனிதர்கள் வாழத் தகுந்த ஒரு கோளத் தினைக் கண்டுபிடித்து குடியேறி விடுவார்கள். அதற்கான தொழில் நுட்பத்தை அவர்கள் விரைவில் அடைந்தும் விடுவார்கள். புதிதாக குடியேறிய கோளத்திலிருந்து பூமியை அவர்கள் நன்றி யோடு பார்ப்பார்களா…?

தூரத்தில் ஒரு சிறு ஒளிப் புள்ளியாய் தெரியப் போகும் இப்புவியை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களால் யோசிக்க முடியுமானால் உங்களுக்கு உலகத்தின் மீது ஒரு பாசம் பிறப்பதை உணர முடியும். ஆனால் அன்றைய மனித குலம் தப்பிப் போகும்போது அவர்கள் தம்முடன் எதைக் கொண்டு போவார்கள்.

பைபிளில் வரும் ஒரு கதையில், நீரினால் உலகம் அழியப் போகிறது என்று கடவுள் நோவாவுக்குச் சொல்கிறார். பின்பு கடவுளின் கட்டளையின்படி உலகம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். எனவே நோவா ஒரு கப்பலை கட்டி, அதில் உலகத்தின் அனைத்து உயிரினங்களையும் இணைகளாக கொண்டு போய் சேர்த்து காப்பாற்றிய கதை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் உயிரினங்களோடு அவருக்குத் தெரிந்த யூதர்களை மட்டும் தனது பேழையில் கொண்டுப் போனாரென்றால் பிற மக்களெல்லாம் என்ன ஆகியிருப்பார்கள்..? இந்த கேள்வி அநாவசிய மாகப் படலாம், ஆனால் எதிர்காலத்தில் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அப்படி மனிதர்கள் தப்பிப் போகும்போது அந்த விண்கலத்தில் தமிழர்கள் இருப்பார்களா…? அப்படி இருந்தால் அவர்களின் சாதி அப்போது இருக்குமா…? தலித்துகள் இருப்பார்களா..? பார்ப்பனர்கள் இருப்பார்களா..,? என்று கேள்வி களை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.

downloadஇப்படி உலகம் எப்படியோ வளர்ந்து.. எதை யெதையோ யோசித்துக்கொண்டிக்கும் நிலையில் தமிழர்கள் எதை யோசித்துக் கொண்டிருக் கிறார்கள்.. என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்…? ஆனால் நிச்சயம் உங்களால் கற்பனை செய்ய முடியாது…? அது சற்று கடினமான வேலையாகத் தெரியும்…? ஏனென்றால் உங்கள் கற்பனையை நமது சமகாலத் தமிழர்கள் திருடிவிட்டார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டால், கூளிங்கிளாஸ் போட்டால் என்ன என்கிற மிக அவசியமான கேள்விகளால் நொந்துப் போயிருப் பீர்கள்; அல்லது நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வற்கான நாளினை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பீர்கள்; அல்லது நடிகைகளின் கிசுகிசுக்களை சலிக்காமல் பகிர்ந்துக் கொண்டிருப் பீர்கள்; அல்லது கிரிக்கெட்டில் இந்தியா எப்படி தோற்றுப் போனது என்பதைப் பற்றியும் அது எப்படி வென்றிருக்கலாம் என்பதைப் பற்றியும், ஆத்திரம் தீரும் வரையில் போகும் இடமெல்லாம் ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பீர்கள்; அல்லது தொலைக்காட்சிப் பெட்டியில் எந்த சேனலைப் பார்க்கலம் என்று ஓயாமல் தொலைச் சுட்டுக் கருவியை அழுத்திக் கொண்டிருப்பீர்கள்; அப்படி எதுவும் இல்லையென்றால் நம்மைவிட இந்த உலகத்தில் எவன் உயர்ந்தவனாய் இருக்கிறான்.. யாரும் இருக்க முடியாதே..! நாங்கள் தான் நெருப்பில் பிறந்தோமே! அல்லது வானத்திலிருந்து தேவராய் குதித்தோமே! என்று பலவாறாய் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

இதுதான் இன்றையத் தமிழகம். கல்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடியான தமிழன் அந்தக் காலத்தினை விட்டு முன்னேறி விட்டானா.. முன்னேறி இருந்தால் நீங்கள் பேருந்தில் பயணிக்கும்போது அல்லது விமானத்தில் பயணிக்கும்போது உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவன் உங்களை பற்றி இவன் எந்த சாதிக்காரனாக இருப்பான் என்று யோசிக்காமல் இருப்பானா..? அல்லது இவனைத் தொட்டால் எதாவது தீட்டு ஒட்டிக்கொள்ளுமா என்று நினைப்பானா..? அல்லது டாஸ்மாக் கடையில் போதை யேற்றிக்கொண்டு முதுக்குப் பின்னால் ஒளித்து வைத்திருக்கும் துருபிடித்தக் கத்தியை வைத்து இன்றைக்கு எவன் தலையை அறுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப் பானா..? இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

தேசிய குற்றவியல் புள்ளியல் துறை வெளியிட்ட ஒரு புள்ளி விவரப்படி; இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 5 தலித் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள். இது வாரக்கணக்கு என்றால்; நாள் கணக்குபடி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 27 வன்கொடுமைகள் நடக்கின்றன. 3 தலித் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள். சுருக்கிச் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கும் தலித்துகளுக்கு எதிரான குற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி…?

Caste1-aaநீங்கள் தமிழகத்திற்குள் அல்லது இந்தியாவின் எந்த மூலைக்கு வேண்டுமானால் போய் பாருங்கள்; வலைப் பின்னல் போல கிராமங்களைப் பார்க்க முடியும், ஒவ்வொரு கிராமமும் இரண்டாகப் பிரிந்து இருப்பதை உங்களால் பார்க்க முடியும், அது கிராமம் என்றும் சேரி என்றும் பிரிந்து இருப்பதை பார்க்கலாம். இவை எப்படி உருவாயின..?

சேரிக்குள் எப்படி தலித்துகள் மட்டும் அடைக்கப்பட்டார்கள், ஊருக்குள் எப்படி சாதி இந்துக்கள் வந்தார்கள்..? மலைகளில் எப்படி பழங்குடி மக்கள் குடியேறினார்கள்..? ஊருக்குள் இருப்பவன் சேரிக்காரனை தொட மறுக்கிறானே ஏன்..? அவன் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் தலையை எடுக்கிறானே ஏன்..? அல்லது தற்கொலை செய்துக் கொள்கிறானே ஏன்..? நான் உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்லிக் கொள்கிறானே ஏன்..? நீங்களெல்லாம் தாழ்ந்த சாதிக்காரன் என்று ஒரு கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறானே ஏன்…?

திருடுவதற்கு என்று ஒரு கூட்டமும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டமும் இருக்கிறதே ஏன்..? எதுவும் கிடைக்காமல் வயிற்றில் ஈரத் துணியோடு நிலத்தில் இறங்கி உழைத்துக் கொண்டிருக்கிறதே ஒரு கூட்டம் அதற்கு மட்டும் அப்படி ஒரு சாபம் ஏன்..? இதற்கெல்லாம் எது காரணம்…? இவனை சேரியில் அடக்கினால் அடங்கி போவான் என்று ஒரு கூட்டம் நினைத்தால், அப்படியல்ல நானும் ஒரு கூட்டத்தை என்னை விட கீழான மற்றொரு சேரியில் அடக்கி வைப்பேன் என்று நடந்துக் கொள்கிறதே ஒரு கூட்டம்.. எப்படி..?

துணி வெளுக்க ஒரு கூட்டம். முடித்திருத்த ஒரு கூட்டம், செறுப்புத் தைக்க ஒரு கூட்டம், மலசலங் களை வாரியெடுக்க ஒரு கூட்டம், கடவுளோடு பேச ஒரு கூட்டம், கடவுளை எம் மீதே இறக்கி ஆடுவேன் என்று ஒரு கூட்டம், பணத்தை சேமிக்க ஒரு கூட்டம், செலவழிக்க ஒரு கூட்டம், இல்லை நாங்கள் ஆட்சி மட்டும்தான் செய்வோம் எங்களுக்கு வேறு வேலை தெரியாது என்று சொல்லிக்கொள்ள ஒரு கூட்டம், கூட்டிக் கொடுக்க ஒரு கூட்டம், கூடிக் குலவ ஒரு கூட்டம். எதையும் மாற்ற விடமாட்டோம் எல்லாம் சனாதனத்தின் தொடர்ச்சி என்று சொல்லிக் கொண்டு திரியும் ஒரு கூட்டம்.. ஏன் இப்படி..?

எதிர்த்து பேசி விட்டாலே வாயில் மலத்தினை திணிக்கவும், மூத்திரத்தை பெய்யவும் மனம் வருகிறதே ஏன். அதை செய்யக்கூடிய ஒரு மனிதத் தன்மையற்ற மனநிலையை தந்தது எது? ஏன் இப்படி எல்லாம் நடந்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் அப்படித்தான் நடந்து கொள்வோம்; நீங்கள் அடங்கித்தான் போக வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன்? அவர்களுக்கு அந்த உயர்ந்த தகுதியைக் கொடுத்தது எது.. யார்..?

அழகு சென்னையின் நாள்தோறும் குவியும் குப்பைகளை அள்ள மட்டும் ஒரு கூட்டம், மனிதக் கழிவுகள் அடைத்துக்கொண்டால் மலக்குழியில் இறங்கி அடைப்பை நீக்குவதற்கு ஒரு கூட்டம். அதை பார்த்துக்கொண்டு மூக்கில் துண்டை வைத்து பொத்திக் கொண்டுபோகும் ஒரு கூட்டம். இப்படி எல்லாக் கூட்டத்தின் செயல்களுக்கும் நியாயத்தினை கற்பிப்பது எது. அவர்கள் குற்ற உணர்வின்றி செயல்படுதற்கான ஆற்றலை எங்கிருந்து பெறு கிறார்கள். அதற்கான மூலம் எது..?

நகர் புற குடிசைப் பகுதிகளில், சாலையோரங் களில், கூவத்தின் நாற்றம் மிகுந்த சந்தடிகளில், கேட்பாரற்று ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்படும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களே அதுதான் அவர்களது விதியா? அதை மாற்றும் வல்லமை அரசக்கு இருந்தும் எந்த விதமான அக்கறையும் இல்லாமல் புறக்கணிக்கிறதே ஏன்..? அவர்கள் ஸ்லம் மக்கள், குப்பத்து மக்கள், சேரி மக்கள் என்று உதாசீனப்படுகிறார்களே ஏன்..?
நாகரிகம் பெருத்த பெரு சிறு நகரங்களில் கார்களில், துள்ளுந்துகளில் போகும் படித்தவர்கள் கூட ஒருவரை ஒருவர் முந்திச் சென்று போக்குவரத்து விதிகளையெல்லாம் அடித்து நொறுக்கி தனது சுயநலத்தை நிலை நிறுத்துகிறார்களே ஏன்..? வரிசையில் போக மனமில்லாமல் ஒருவர் மீது ஏறிப் போகும் மனநிலையை கொடுத்தது எது..?

நம் கண்ணெதிரிலேயே பார்க்கும் எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணமாக.. கொலை, கொள்ளை, தீ வைப்பு, திருட்டு, கற்பழிப்பு, அடிதடி, கூட்டுக் கொள்ளை, கூட்டு வன்புணர்வு, அவமானம், அசிங்கம், வறட்டு கௌரவம், முறையற்ற உறவுகள் என எல்லா வகையான தீமைகளும் எந்தவிதமான கூச்சமும் இன்றி நடந்துகொண்டிருக்கிறதே.. அச்சப்படும் மக்களும் அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல் யார் மீதாவது பழியைப் போட்டு விட்டு, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று அமைதியாக இருக்கிறார்களே அதற்கு மூலம் என்ன..?

உறவுக்குள் மட்டும் திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் எப்போது வந்தது. அதற்கும் இதுவரை பேசி வந்த தீமைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா..? கோடிக்கணக்கான தெய்வங்கள், ஆயிரக் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான ஞாநிகள், முனிவர்கள், அருளுரையாளர்கள், தெருவிற்குத் தெரு கோயில்கள் என எல்லாம் இருந்தும் எதற்காக இவர்கள் இப்படி அடித்துக்கொண்டு சாகிறார்கள், கடவுள்கள் தடுத்தாலும் தமது பெருமையை கடவுளுக்கும் ஏற்றி அவரை தமது கைப்பாவையாக மாற்றிக் கொள்கிறார்களே ஏன்..?

இந்திய சமுகத்தில் சரிபாதியாய் இருக்க வேண்டியப் பெண்கள் 1000 ஆண்களுக்கு வெறும் 908 பேர் மட்டுமே இருக்கிறார்களே ஏன்..? தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 995 பேர் மட்டும் இருக்கிறார்கள் என்றால் கோளாறு எங்கிருக்கிறது..? பெண்கள் மட்டும் ஏன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டும்..? யார் இதைத் தீர்மானித்தது, அல்லது எது தீர்மானித்தது..? பிறந்த குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தை தீர்மானித்தது எது..? பெண் குழந்தை பிறந்தால் அதைக் கொல்லும் கொடுந்துணிவை அளித்தது எது..?

download (1)இப்படி எல்லாத் தீமைகளுக்கும் மூலமாக இருப்பது எது..? என்கிற கேள்விக்கு பல பதில்களை நம்மால் பெற முடியும்.. ஆனால் நமது சமூகத்தில் பல பதில்களைத் தேடி அலைய வேண்டியதில்லை. அதற்கெல்லாம் ஒரே பதில் தான். அதுதான் சாதி.. சாதிதான்.. சாதியேதான்…!

இந்த சாதி என்று சொல்கிறார்களே அது எப்படி இருக்கும், அதற்கான உருவம், மணம், குணம் என்ன..? யார் அதை படைத்தது.. அதற்கும் தீண்டாமைக்கும் உள்ளத் தொடர்ப்பு என்ன.. தீண்டாமை எப்படி உருவானது அல்லது யார் உருவாக்கியது.. இன்னும் ஏன் இவைகள் அழியாமல் இருக்கின்றன. யாராவது உலகத்தின் மேலிருந்து அவற்றைப் பாதுகாக்கிறார் களா..? அவற்றை செயல்படுத்துகிறார்களா…? இவற் றிற்கான விடைகளைத் தெரிந்துகொண்டால் பிரச்சினைகளின் வேர்களைக் கண்டுபிடிக்கலாம் அல்லவா?

படிக்காதப் பாமர மக்களிடம் புரையோடியிருந்த சாதி இப்போது கற்றுத் தெளிந்த மக்களையும் முட்டாளாக்கி கொடூரமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. எங்கும் சாதியின் வன்முறை வெறியாட்டம் தலை விரித்தாடுகிறது. அது தனக்கான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எல்லா இயற்கை அறத்தையும் அது குழித் தோண்டி புதைத்துக் கொண்டுள்ளது. அதன் கோரத்தைப் பற்றி புரிந்துக் கொள்ளாதவர்களால் அதைப் பற்றி கருத்துச் சொல்ல முடிவதில்லை. ஏனென்றால் அப்படி கருத்துச் சொல்லப் போய் தன் சாதியைப் பற்றி பேச நேரிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பின்வாங்கிப் போகிறார்கள். எல்லாப் பக்கங்களிலிருந்தும் சாதி மக்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு இருக்குமா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே ஒரு மாபெரும் பிரச்சினையின் மூலத்தை அறிந்துக் கொள்ளாமல் இனி எதையும்.. சனநாயகத்தை, முதலாளித்துவத்தை, உண்மையான மதத்தன்¬மையை, மனிதத் தன்மை உள்ளிட்ட எதைப் பற்றியும் நாம் பேச முடியாத நிலைக்கு வந்துள்ளோம்.

எனவே, சாதியைப் பற்றி புரிந்துகொள்ள அதன் மூலம், வளச்சி இயக்கம் மற்றும் அதன் எதிர்காலம் ஆகியவற்றை குறித்த பரந்த அறிவை நாம் பெற வேண்டும். அதற்கு இன்றைக்கு உருவாகியுள்ள புதிய கண்ணோட்டத்துடன், அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள சாத்தியங்களுடன் அவற்றின் மூலத்தை பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குத் தான் இந்த தொடர்.

புரட்சியாளர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த இந்த அற்புதமான காலத்தில் இந்த துறையின் ஆதி மூலவராக நான் அவரையே பார்க்கிறேன். சாதியின் அத்தனை நுட்பங்களையும் அவர் ஆராய்ந்திருக்கிறார். அதன் இருளான பக்கங்களின் மீது பெரும் ஒளியினை பாய்ச்சி அதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என்று வழிகாட்டி இருக்கிறார். அவரின் அறிவியல் பார்வையின் ஒளியில் சாதியின் மூலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும், ஆற்றல்களையும், அதை அழிக்கும் வழிகளையும் இனி பார்க்கப் போகிறோம்.

ஆர்வமுள்ளவர்கள் அவரின் ஒளியை தொடர்ந்து வரலாம். உங்களை அறிவின் ஒளி பொருந்தியவர்களாக மாற்றிக்கொள்ளலாம். யாராவது நான் இந்த சாதிக்காரன் என்று தோளை தூக்கும்போது அவர்களை பரிதாபமாக பார்க்கலாம்.. அவர்களின் அறியாமையை நினைத்து கோபத்துடன் சிரிக்கலாம்.. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து அவர்கள் தலைகுனியலாம்.. நீங்கள் தயாராக இருந்தால்… வரலாற்றின் இருண்ட பக்கங்களை தேடி செல்லும் நெடும்பயணத்தில் ஒளியோடு பயணிக்க வாருங்கள்…!

அடிப்படை யிலிருந்து தொடங்குவோம்..!

– அடுத்த இதழில்…
(இத்தொடரில் சந்தேகங்கள் எழுமாயின் அவற்றை எமக்கு எழுதுங்கள்.)

Load More Related Articles
Load More By admin
Load More In அயோத்திதாசர்
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …