Home Article சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

Comments Off on சாதி தீண்டாமையின் மூலவரலாறு – 2

மனித பிறப்பெடுத்த தொண்மங்கள்

உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் படைப்புகளைப் பற்றிய தொண்மக் பல கதைகள் உள்ளன. அவை சாதி பற்றின புரிதலை உண்டாக்க அவசியமானவை.

எனவே சாதியின் தோற்றத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ளும் முன் மனிதக்குலப் படைப்பை பற்றினத் தொண்மங்களைத் தெரிந்துக்கொண்டால் இப்பிரச்சினையை சுலுவாக புரிந்துக்கொள்ள முடியும். ஏனெனில் கடவுள் மனிதனை படைக்கும்போது சாதி போன்ற ஒருவித அமைப்பினை படைத்திருக்கிறாரா? அச்சான்றுகளை கடவுளிடம் கேட்டால் கிடைக்குமா என்று அங்கலாய்ப்பதைவிட உலகின் சில பழங்குடிகளின் தொண்மக் கதைகளில் அதற்கான சான்றுகளைத் தேடமுடியும். அந்தச் சான்றுகளோடு இந்து சமூகத்தின் சாதி அல்லது மனிதப் படைப்பின் கதைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும் எனவே. உலகின் மிக முக்கியமான மதங்கள் மற்றும் பழங்குடிகளின் படைப்புக் கொள்கைகளைப் பார்ப்போம்.

கிறித்துவ படைப்புக் கொள்கைப் படி ஆதியிலே தேவன் உலகத்தைப் படைத்து அதில் வானம், நிலம், கடல் நிலா உள்ளிட்ட இயற்கை பொருட்களைப் படைத்து இறுதியாக பூமி வெறுமையாக இருப்பதைக் கண்டு பூமியில் மண்ணெடுத்து அதில் முதல் மனிதனை தன் சாயலாகப் படைத்தார். அந்த படைப்பின் நாசியில் ஊதி உயிர் தந்தார். உயிர்பெற்ற அந்த மனிதனுக்கு ஆதாம் என்று பெயரிட்டார். பின்பு அவனது விலாயில் ஒரு எலும்பை உருவி அதில் ஒரு பெண்ணைப் படைத்து அதற்கு ஏவாள் என்று பெயரிட்டார். அவர்கள் பல்கிப் பெருகி பூமியை நிறைத்தார்கள் என்று பைபிளின் ஆதியாமகம் விவரிக்கின்றது. கடவுள் படைத்த ஒரு தம்பதிக்குப் பிறந்தவர்கள் பிற்பாடு தமக்குள் கலந்து சந்ததிகளைத் தோற்றுவித்தார்கள்.

இது கிறித்தவ படைப்புக் கொள்கை மட்டுமல்ல, அடிப்படையில் இதுவே யூத மதத்தின் படைப்புக் கொள்கை. யெகோவா என்ற யூத கடவுள் படைத்த ஆதாம் ஏவாள் என்ற இணையிலிருந்து பிற்பாடு பன¢னிரெண்டு சாதியாக பிரிந்தார்கள், அதில் விலக்கப்பட்ட சாதியாக சமாரியர்கள் இருந்தார்கள் என்பதை விவிலியம் பதிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த யூத வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட கிறித்துவம் அதை தனக்குள் உள்வாங்க சில மாற்றங்களைச் ஏற்றுக்கொண்டது. அதன்படி; கடவுள் அதற்குப் பிறகு இரண்டாவது மனிதனாக ஆதாம், அதன் தொடர்ச்சியாக 72வது வாரிசாக ஏசு கிறித்து என்று அந்தப் பரம்பரையை அவர்கள் வடிவமைத்துக்கொண்டார்கள் என்பது வேறுகதை. ஆனால் இதில் குறித்து பார்க்க வேண்டிய அம்சம் கிறித்துவம் யூதமதப் படைப்புக் கொள்கையை அப்படியே ஏற்றுக் கொண்டது என்பதுதான்.

அதேபோல இசுலாமும் அந்தப் படைப்புக் கொள்கையை சிறு மாற்றங்களுடன் ஏற்றுக் கொண்டது. ஆதாமையும் அவ்வாவையும் படைத்த அல்லா அவர்கள் மூலமாகஆபில், காபில் மற்றும் இரட்டைச் சகோதரிகளைப் படைத்து மக்கள் தொகையைப் பெருகப் பன்னினார் என்கிறக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறது. யூத சமுகத்தைப் போலவே பல சாதிப் பிரிவுகள் அராபியர்களுக்கு இடையில் அன்று உருவாகி இருந்தன.

எனினும் இந்த மூன்று மதங்களின் படைப்புப் கொள்கைகளும் அசலானவை அல்ல என்பதை தற்போது வரலாற்று ஆய்வார்கள் உறுதி செய்துள்ளார்கள். யூப்ரடிஸ் டைக்ரிஸ் ஆறுகளுக்கிடையே இருந்த நிலப்பரப்பில் நிலவியது மெசபடோமியன் நாகரிகம். அந்த நாகரீகத்தின் பழங்குடிகளிடையே நிலவியத் தொண்மக் கதையைத்தான் இந்த மேற்கண்ட மதங்களை உள்வாங்கிக் கொண்டன என்றும், மெசபடோமியன் நாகரிகம் அழிந்தபோது இவைகள் மறக்கப்பட்டன என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். தற்போது ஈராக்கின் பாக்தாத் நகர்தான் அக்காலத்தின் மெசபடோமிய நாகரீகத்தின் மையம். மெசபடோமியர்கள் தாங்கள் வாழ்ந்தக் காலத்தில் தமக்குள் அசரியா, சுமேரியா, ஊரின் சிகூர்க், பாபிலோனியா, சாலடியா, மெசபடோமியா என பல தொகுதிகளாகவும் மேலும் பற்பல பிரிவுகளாகவே இருந்திருக்கிறார்கள். இந்தப் பிரிவுகளில் பல நான்குவிதமான படைப்புக் கொள்கைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்றின்படி:

மெசபடோமியர்களின் மூலக்கடவுள் நம்மு என்கிற பெண் தெய்வம். இதனது படைப்பில் அன் என்கிற ஆண் தெய்வமும், கி என்கிற பெண் தெய்வமும் தோன்றுகின்றன. இவற்றில் கி என்லில் என்ற தெய்வத்துடன் இணைந்து இன்கி என்ற தெய்வத்தின் உதவியுடன் காய்கறிகள், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை படைப்புகளை மேற்கொள்கிறார்கள். பிறகு இன்கி தெய்வம் மாமி என்கிற தெய்வத்தின் முன் களி மண்ணை வைக்கிறது. மாமி அதை 14 துண்டுகளாக்கி அதில் ஆறு ஆண்களையும் ஆறு பெண்களையும் படைக்கிறது. இது அந்த தெய்வங்கள் ஏழு தலைமுறைகளாகின்றன. இதில் ஏழாவது தலைமுறையிலிருந்து தற்போதைய மனித இனம் படைக்கப்பட்டதாக மெசபடோமியர்களின் படைப்புக் கதை கூறுகிறது.

சுமேரிய படைப்புக் கதைபடி : மலைகளிலும்,காடுகளிலும், கடலிலும், பயங்கர ராட்சஸ மனித விலங்குகள் வாழ்ந்தன. அவை மலையில் வாழ்ந்த வீரர்களுடன் பகைமை கொண்டிருந்தால் அவர்களின் மன்னன் இயா மனிதர்களின் விரோதிகளான இவ்விலங்குக் கூட்டத்தின் மீது படையெடுத்துச் சென்று அவற்றின் தலைவனான அப்ஸவையும் அவன் மகளான மும்முவையும் கொன்றுவிடுகிறான். இருந்தாலும் ஆதிகடவுளான தியாமத் என்னும் ‘உலகமாதா’ இன்னும் உயிரோடு இருந்தாள். தனது உறவினர்களைக் கொன்ற இயா மற்றும் வீரர்களை அவள் பழிவாங்கத் துடித்தாள். எனவே இயா தியாமத்தோடு போரிடத் தயாரானான். சாதாரண ஆயுதங்களால் அவளைக் கொல்ல முடியாது ஏனெனில் அத்தெய்வத்தின் உயிர் அவளது கல்லீரலில் இருந்தது எனவே அவளை அழிக்க இயா, தன் மகன் மொரோடாக்கை அனுப்பி அவளைக் கொல்கிறான். அவள் மரணித்தப் பின்புதான் உலகம் படைக்கப்பட்டது.

இதிலிருந்து அதிகம் வேறுபடாமல் பாபிலோனின் படைப்புக் கதை உள்ளது, அதன்படி: இப்பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் கடல் மட்டுமே இருந்தது. வானத்திற்கும், கீழே இருக்கும் பூமிக்கும் பெயர்களிடப்படவில்லை. அவற்றின் தந்தை அப்ஸ, தாய் தியாமத். அப்போது கடலில் ஓர் அசைவு உண்டாகி பல தெய்வங்கள் அதிலிருந்து வெளிவந்தன. லக்மூ என்ற ஆண் தெய்வமும், லச்சாமு என்ற பெண் தெய்வமும் தோன்றினார்கள். அப்படி தோன்றிய பல தெய்வங்களில் இயா என்பவன் எல்லாத் தெய்வங்களை விடவும் அறிவுவும் வலிமையும் உடையவனாக இருந்தான். இவனுடைய மகன் மொரோடாக் என்ற தெய்வம்.

அப்ஸமும் தியாமத்வும் இருளான கடலில் குழப்பத்தினுள் வாழ்ந்துக்கொண்டிருந்த போது. அவர்களின் வழித்தோன்றகள் பிரபஞ்சத்தைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள். அதைப் பார்த்த கவலையடைந்த தியாமத் புயலைத் தோற்றுவித்தாள். அப்ஸ தாங்கள் உருவாக்கிய தமது வாரிசுகளான தெய்வங்களை அழிக்க முயற்சி செய்கிறார். இதனை அறிந்த இயா தனது மகன் மொரோடாகை ஏவி அப்ஸவையும் அவன் மகன் மும்முவையும் அழித்துவிடுகிறான்.

இதனால் கோபம் கொண்ட தியாமத் பழிவாங்கப் புறப்படுகிறாள். ஆயினும் இயாவின் மகன் மொரோடாக் வீரத்துடன் எதிர்த்து தியாமத்தை வீழ்த்துகிறான். அவளது உடலை இரண்டாக வெட்டி ஒருபகுதியை பூமியாகவும் மற்றொரு பகுதியை வானமாகவும் படைத்தான். சூரியன், சந்திரன், கோள்கள் போன்றவை படைத்தான். பின்பு மனிதர்களையும் படைத்தான் என்பது பாபிலோனிய படைப்புக்கதை.

மெசபடோமியாவிற்கு அருகில் உருவான எகிப்து நாகரீகத்தின் படைப்புக் கொள்கைப்படி. ரீ என்கிற கடவுள் தன்னைத் தானே புணர்ந்து ஒரு புனித மகனையும் புனித மகளையும் படைத்தார். அவர்கள் இரண்டு இனங்களின் தெய்வங்களாக ஆனார்கள். பின்புதான் ரீ மனிதனைப் படைத்தார்.

பால்டிக் பழங்குடிகளின் படைப்புக் கதைப்படி. உருகும் பனிபாறையின் துளியிலிருந்து ஒய்மிர் என்ற பெரிய மனிதன் உருவாகி, பின் அவனது புஜத்திலிருந்து அவனைப் போலவே ஆணும் பெண்ணும் உருவானார்கள்.
மத்திய ஆசியாவில் இந்த கதைகள் என்றால் மேற்கு ஆசியாவின் கதைகள் எளிமையானவை. சீனா, ஜப்பான் போன்ற மங்ககோலிய இனங்களின் கதைகள் பழங்குடிகளின் அரசியலை பின்னணியாகக் கொண்டவை, மங்கோலியர்களின் படைப்புக் கடவுள் தனது மகன் உவானை பூமிக்கு அனுப்பி ஓர் அரசை உருவாக்குகிறார். பின்பு மூவாயிரம் பேரைப் படைத்து, அதன்பிறகு மனிதர்களைப் படைத்தார் என்று சொல்கிறது.

ஜப்பான் படைப்புக் கதைப்படி ஜெல்லி மீன் போன்ற ஒரு வடிவத்தில் முதலில் எட்டுத் தலைமுறை கொண்ட சகோதர சகோதரிகள் என்ற தெய்வங்கள் உருவானார்கள். அவர்களிலிருந்து உலகமும், உயிரனங்களும், பேரரசும், பிறகு மக்களும் படைக்கப்பட்டார்கள்.

இவை ஒருபுறம் இருந்தாலும் ஐரோப்பிய ஆய்வாளர்களைப் பெரிதும் கவர்ந்தது கிரேக்கத் தொண்மக் கதைகள்தான். கிரேக்க படைப்புக் கதைகள் நான்கு உள்ளன. அவற்றுள் முக்கியமானது டைட்டன்களோடு தொடங்குவது. ஆதியில் தோன்றிய பன்னிரண்டு டைட்டன்களே ஆதி தெய்வங்கள். அதாவது ஜீயே மற்றும் யுரேனஸ் ஆகிய தெய்வங்கள் இணைந்த ஆறு ஆண் தெய்வங்களையும் ஆறு பெண் தெய்வங்களையும் உருவாக்கினர். இந்த பன்னிரண்டு தெய்வங்களுக்கும் தனித்தனிப் பெயர்களும், பணிகளும் உண்டு. இதில் முத்த தெய்வம் ஓஷியானஸ், இவன் தனது கடைசி தங்கையான திதைசை மணந்து 3000 குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் கடல் அலைகளாகவும் இருக்க, கடலின் மேற்குமுடிவில் தீதைஸ் வாழ்க்கிறாள்.. இப்படி ஏராளமான கிளைக்கதைகளுடன் கிரேக்க தொண்மக் கதைகள் போகின்றன.
அதேபோல அதிகம் கவனத்தினை ஈர்த்தது மாயன்களின் மனிதப் படைப்புக் கதைகள். மாயன்களின் நாகரீகம் பரந்து விரிந்தது. அதில் ஏராளமான குழுக்களும் அவற்றிற்கு அரசுகளும் இருந்தன. அவை ஒவ்வொன்றையும் விவரிப்பது பெரிய புத்தகத்தை எழுத வைத்துவிடும் என்பதால் இரண்டு சான்றுகளை மட்டும் பார்ப்போம். அதில் ஒன்று பழமையானது. செலன் எனும் குழுவின் தொண்மக் கதைபடி; படைப்பின் கடவுள் முதலில் தாவரங்களையும் விலங்குகளையும் படைக்கிறார். அவற்றிற்கு பெயர்களையும் வைக்கிறார். பின்பு அவைகளை சுவனத்திலேயே விட்டுவிட்டு பன்னிரண்டு பவுர்ணமிகள் கழித்து திரும்பி வருகிறார். அப்போது சில மிருகங்கள் கடவுள் தங்களுக்கு வைத்த பெயர் சரியாக இல்லை என்றும் அதை மாற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன. இதனால் கடவுளுக்கு கோபம் வந்து நான் போட்ட சட்டதிட்டங்களையே நீங்கள் மீறப் பார்க்கிறீர்களே. இனி உங்களை கட்டுப்படுத்த வேறு ஒரு படைப்பை உருவாக்குவேன் என்று சொல்லி மனிதனையும் அவனது சகோதரர்களையும் படைக்கிறார். இவர்களிலிருந்து சந்ததிகள் பெருகுகின்றன.

மற்றொரு படைப்புக் கதை மாயன்களின் ஒரு பிரிவான அமெரிக்க செவ்விந்திகர்களின் கதை. அது மிக பிற்காலத்தில் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கருத்து. அதன்படி: கடவுள் மனிதனைப் படைக்க விரும்பினார்.அதற்காக தரமான மாவு எடுத்து பிசைந்து, மூன்று மனித போம்மைகளைச் செய்தார். அந்த மூன்றையும் ஒரு பானையில் போட்டு வேகவைத்தார். சிறிது நேரத்திலேயே அவருக்கு ஆர்வம் அதிகமாகி ஒரு பொம்மையை வெளியே எடுக்க அது வெந்தும் வேகாமல் வெளுத்திருந்தது. அதற்கு உயிர் உண்டாக்கினார், அதுதான் வெள்ளைக்காரர்கள். சலிப்புற்ற கடவுள் கொஞ்சம் காத்திருந்து பதமாக வெந்திருந்த இரண்டாம் பொம்மையை எடுத்தார். அது நல்ல நிறத்துடன் அழகாக இருந்தது. அதற்கு உயிர் கொடுத்து பார்த்தார். அதன் அழகில் அவர் மயங்கிய கடவுள் அதையே பார்த்துக் கொண்டிருந்ததால் நேரம் போனதே அவருக்குத் தெரியவில்லை. பிறகு அவர் சுதாரித்துக்கொண்டு கடைசியாக இருந்த பொம்மையினை எடுத்தார், அது கருகி தீய்ந்துப் போயிருந்தது. இருந்தும் அதற்கும் அவர் உயிர் கொடுத்தார். அதுதான் கருப்பர்கள். அந்த அழகான படைப்பாய் இருந்ததே அதுதான் செவ்விந்தியர்கள. இப்படி நிற வேற்றுமைக்கதையோடு படைப்பு முடிகிறது.

இவைத் தவிர உலகம் முழுதும் உள்ள மக்களிடம் ஏராளமான மனித படைப்பு தொண்மங்கள் உள்ளன. இந்தியாவில் உலகத்தின் பிற மக்களோடு ஒப்பிடும் அளவிற்கு ஏராளமான படைப்புத் தொண்மக் கதைகள் உள்ளன. இருந்தும், இந்து மதத்தில் இருப்பவை மட்டுமே பொதுவாக ஆய்வாளர்களின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்தின் தோடர்களிடையே நிலவும் தொண்மத்திற்கும் செலன் மாயன்களின் படைப்புத் தொண்மத்திற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அதே நேரத்தில் தமிழர்களுக்கென்று பொதுவான படைப்புக் கதையே இல்லை என்று சொன்னால் ஆச்சரியாமாக இருக்கும். அப்படியென்றால் அவர்களின் படைப்பு கதைதான் என்ன..?

இருந்தாலும் அவற்றை பின்னொரு தருணத்தில் விரிவாக ஆராய்வோம். எனினும் இதுவரை பார்த்த படைப்புக் கதைளுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு என்று தோன்றலாம். அதற்கு காரணங்கள் வலுவான காரணங்கள் உண்டு. அந்த காரணங்களை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று மானுடவியல் ஆய்வு தொடர்பானது. இரண்டாவது தர்க்கம் தொடர்பானது.

முதலில் மானுடவியல் தொடர்பை பார்ப்போம்.

இதுவரை பார்த்தக் கதைகளில் மெசபடோமியன்களின் படைப்புக் கதையில் மட்டுமே முதல் படைப்புத் தெய்வம் பெண்ணாக இருக்கிறது.
அதே பெண் தெய்வத்தை பாபிலோனின் மற்றும் சுமேரியன் கதையில் கொன்றுவிட்டபிறகு ஆண் தெய்வம் மனிதர்களைப் படைக்கிறது.
மற்றக் கதைகளில் ஆண்தான் ஆதி படைப்புக் கடவுளாக இருக்கிறார். அவர்தான் எல்லாவற்றையும் படைக்கிறார்.. ஏன்..?

மனிதர்களை படைக்கும் கடவுள் பூமியில் உள்ள மண்ணிலிருந்தே படைக்கிறார். சில இடங்களில் மாவு, சில இடங்களில் நீர்.. ஏன் இப்படி நடந்தது..?

அவர் படைக்கும் போது ஒரு முறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அதன்படி முதலில் ஆண், பிறகு பெண், இவர்களுக்கு ஆண் பெண் பிள்ளைகள். அதாவது சகோதர சகோதரிகள். இவர்களுக்குள்ளே முதலில் கலப்பு நடந்து அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கின்றன. அதாவது குடும்பத்திற்குள், ரத்த உறவுக்குள் திருமணங்கள் நடந்து அதன் மூலமாக சந்ததிப் பெருகுகிறது.

இந்த கேள்விகளும் குறிப்புகள் மிக அவசியமானவை. ஏனெனில் இந்த கதைகள் உருவான காலத்தில் மக்கள் என்னவிதமான சமுக அமைப்பில் இருந்தார்களோ அதை அடிப்படையாக வைத்தே அவர்கள் தமது படைப்புக் கதைகளை உருவாக்கினார்கள். படைப்பிற்கான காரணங்களை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாதபோது அதை கடவுள்தான் படைத்திருக்க வேண்டும் என்று சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தமது நம்பிக்கைகளை அவர்கள் உறுதிப் படுத்திக்கொண்டார்கள். அதற்குத்தான் பல சடங்குகளை உருவாக்கினார்கள். என்பது தனித்தனிக் கதைகள்.

ஆயினும் இதில நான் முக்கியமாக பார்ப்பது. இந்த படைப்புக் கதைகள் ஒரு விசயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன்படி படைப்பின் அடிப்படை ஒரு குடும்பம், சகோதர சகோதரிகளுக்கிடையே திருமணம், அதைத் தொடரும் சமுக அமைப்பு. இந்த சமுக அமைப்பிற்குப் பெயர்தான் அகமண முறை என்பது.

இனி இரண்டாவது அம்சமான தர்க்கத்தைப் பார்ப்போம்:

உலகம் முழுதும் உள்ளவர்கள், உலகத்தை கடவுள் படைத்தார், அவரே உயிரினங்களையும், மனிதர்களையும் படைத்தார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அப்படி நம்பும்போது தற்போது நிலவும் வேறுபாடுகளையும் கடவுள்தான் படைத்தார் என்பதை நிறுவி தம்மை சமாதானம் செய்துக்கொள்ள முயல்கிறார்கள். அப்படித்தான் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.
சாதியை உறுதியாக நம்பும் யாரைப் பார்த்தும் நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள்.

நீங்கள் நம்பும் சாதி உண்மையாக இருந்தால் அதைப் படைத்தது யார்..?
மனிதன் படைக்கப்பட்டபோது அது இருந்ததா..?

படைப்புக் கதை என்று ஏதாவது ஆதாரம் உங்களிடம் உள்ளதா..? என்று கேட்டுப் பாருங்கள். அவர் திணறுவதை உங்களால் பார்க்க முடியும். ஏன் அப்படி. அதற்கு காரணம் இருக்கிறது. சாதியை நம்பும் யாரும் தன்னுடைய மதத்தைப் போலவே நம்புகிறார். அதனால் சாதியானது இந்துக் கடவுளின் படைப்பு என்பது ஒவ்வொரு சாதி இந்துவின் நம்பிக்கை. எனவே சாதியை மறுப்பது ஒரு வகையில் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதால் தன்னுடைய நம்பிக்கையை எந்தவிதத்திலும் அவர் கேள்விக் கேட்டுக்கொள்வது இல்லை. கடவுள் உலகத்தைப் படைத்து சாதியைப் படைத்திருந்தால் உலகம் முழுதும் சாதி என்கிற அமைப்பு நிலவ வேண்டும். ஆனால் ஏன் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் இந்துக்களின் நம்பிக்கைப்படி மனிதன் எப்படி உருவாக்கப்பட்டான். அதற்கு ஒரே கதைதான் இருக்க முடியாமா..? அந்த கதைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள்…!

எனினும் உலகம் முழுதும் இந்த கதைகள் உருவான காலத்தில் இந்த நம்பிக்கைளை கேள்விக்கேட்டு மனிதன் இப்படியா படைக்கப்பட்டிருப்பான். இவனுக்குள் இருந்த பிரிவினைகளை அந்தக் கடவுளா படைத்திருப்பார் என்று கேள்விக் கேட்டு, மனிதனின் படைப்பைப் பற்றி அறிவியில் அடிப்படையில் சிந்தித்த பெரும் அறிஞர்களின் ஆய்வுக்கள் அதே காலகட்டத்தில் நடந்திருந்தன. அவர்கள் மனித படைப்பிற்கு எவ்வாறு காரணம் கண்டார்கள் என்பதை இனி பார்போம்.

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …