Home Article குறத்தியாறு – ஜிப்ஸிகளின் கதைப்பாடல்

குறத்தியாறு – ஜிப்ஸிகளின் கதைப்பாடல்

Comments Off on குறத்தியாறு – ஜிப்ஸிகளின் கதைப்பாடல்

கோணங்கியின் மதிப்பாய்வு
———————————————–

ddfsdsdகுறத்தியாறு நாவலில் வரும் அத்தியாயங்கள் சில சுழன்றுகொண்டிருக்கும் ஏழு நிறங்கொண்ட குறிவட்டை நோக்கி பாயும் அம்புகளுக்கு குணத்தொனி செய்து ரெட் ஸ்பாட்டில் அடிக்கக்கூடிய சரங்கள் 1.பஞ்சசுரம் 2.மாவறிப்பாலை 3.பிடிசாபம் 4.உகுநீரோடை 5.எல்லிசோதி 6.நரகவாடை 7.கெடுஊழ்குறிகள். குறத்தியாறை வில்லாக ஏந்தி ஒவ்வொரு கன்னியும் நாண் திறம் அதிர்ந்த கானகத்தில் அதே ஆற்று நீர் பெருக்கு நோக்கி தலைகீழாக பாய்கிறார்கள் அம்புகளாய்.

2. 1.தேர்மடு,2.வெட்டியான் மடு,3.பேட்டைமடு 4.ஏற்றமடு 5.திரிகல்மடு என இந்த நாவலை ஐந்து சர்க்கங்களாக மூலப்பனுவலை பிரிக்கலாம்.ஒவ்வொரு மடுவையும் மாற்றியடுக்கி நாவலுக்குள் வேறொரு நாவலைத் தொடங்கலாம்.ஆனால் இந்த ஐந்து மடுக்களில் நீர்ப்பூச்சிகள் முழுவட்டமாய் பல உள்வட்டங்களில் 35 அத்தியாங்களில் நீந்திக்கொண்டிருக்கின்றன.வா,வா எனக்கூப்பிடும் நீர்ப்பூச்சிகள் நீந்தி நீராட நீராட மடுவுக்குள் இழுத்து மூழ்கடித்துவிடும்.ஆனால் ஐந்து மடுவினுள்ளும் குழந்தைமையோடு நீந்திக்கொண்டிருக்கிறார்கள் சப்த கன்னிகள்.

கதையும் மரணமும்,நாவலின் உள்ளரங்கமாக வெட்டியான் மடுவில் எலும்புகளில் சித்திரம் போட்ட கேணியடிப்பெண்களும் மறைந்திருக்கிறார்கள்.நரிவால் பூப்பூத்த கம்மம்புல்லும் முத்துமணிச்சோளமும் மனிதனை விரட்டிவிட்ட கதாபாத்திரங்கள்.இந்த சிறகுகளை இழந்த நாகரிக மனிதர்கள் தானியங்களை விரட்டியவர்கள் என்பதால் நவீன மனிதர்களுக்கு இந்த நாவலில் இடமில்லை.ஆனால் இலைமறைப் பழுத்த ஒளிமஞ்சல் பழங்களை விழுங்கி கொட்டைகளைப் பேண்ட காக்கைகளை விரட்டி மரமேறியப் பொடியர்கள் கிளைகளோடு இலையாக ஆடுகிறார்கள்.

மரமாக தன்னை மாற்றிக்கொண்டாலன்றி கிளிகளைப் பிடிக்க முடியாதென்பதே இந்த நாவலின் அடுத்த ஆறு அத்தியாயங்களின் விதி

3. வாழ்வுபரப்பில் கீழ்க்கண்ட ஆறு அத்தியாயங்கள் 1.அனலாறு 2.நதியாட்டம் 3. எல்லைக்கட்டு 4.ரஸவாதி 5.மாய முடிச்சு 6. அந்தி, என வெள்ளத்தனைய மலர் நீட்டல் போல கொடிசுற்றிக் கொண்ட பாலிய வனத்தில் மாடு மேய்க்கும் சிறுவர்கள் நீஞ்சி விளையாடும் ஆற்றோட்ட ஒலிகளுடன் திறந்த வெளியில் எழுதிப்பார்க்கப்பட்டு சமகால ரூம் ரைட்டர்களை விட்டு வெளியேறி மரங்களுக்கிடையே வெள்ளியாய் நெளிந்த ஆறும் தொலைவே கரையோரம் சப்தமிடும் பறவைக்கூட்டத்தின் கால் பதிவுகளும் எழுத்தாகிவிடும், மணலில் உதிர்ந்த சிறு இறகுகள் கூட எழுதாமல் விட்டிருக்கும் கதைகளை யாரும் கேட்க்காமல் எடுத்து விடாதீர்கள்.எச்சத்துடன் வெளிக்கிட்ட விதைகள் ஆறும் முளைக்கக் காத்திருப்பவை.

4. முப்பத்தி நான்காவது அத்தியாயம் ‘பேர் கண்ட பயணி’யில் ஆறே கதை போடுதல், கதைவெளி மங்கையர் வருகை, சப்த கன்னியர் பூமியைக்கண்டு தரிசித்தல், ஆளுயர சுரக்குடுவையோடு பித்தன் வருகிறான். பித்தன் சுரக்குடுக்கையை குலுக்கி குலுக்கி கதை போடுகிறான். நாவலின் இறுதி அத்தியாயத்தில் நாவல் துவங்குகிறது. தேவதைக்கதையின் அரிச்சல் உணர்வினால் வாசனைகளின் மாயத்தோற்றம் கொண்ட ஜிப்ஸிகளான குறத்திகள் நாகரீக மனிதனுக்கு அந்நியமானவர்கள் தான். நகரங்கள் அறிந்திராத ஜிப்ஸிகளின் சலனங்கள் இந்த குறத்தியாறில் பூத்திருக்கும் அத்தனை வகையான பூவின் மணமும் வீட்டுக்குள் எழுதுபவர்கள் அறிய முடியாதவை.

திறந்த வெளியில் எத்தனை பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? பலூன் விற்பவன் பாடுகிறான்.பாம்பாட்டி போகிறான். நினைத்தால் மரமாகி விடும் பைத்தியங்கள் நிகழ்காலத்தின் இருப்பாக வளைந்திருக்கிறார்கள் அநாதைகளின் நிழல்களோடு. காடு மேடு பனி வெயில் மழையில் ஜிப்ஸிகள் வருகிறார்கள். சாட்டையடிக்காரர்களின் குருதியால் குழந்தைகளின் அடிவயிறு நனைகிறது. அலையும் குறவர்கள் கழைக்கூத்தாடிகள் கயிற்றில் நடப்பவர்களின் எந்த கணத்திலும் மரணம் காத்திருக்கிறது. Life on the wire, death is waiting. ஈயம் பூசித்திரியும் குழுவர் கூட்டம் யாருடைய லட்சியங்களுக்கும் முலாம் பூசுவதில்லை. கயித்துப்போன பாதுகாப்பான குடும்ப வாழ்வின் நெளிந்து சலித்த பாத்திரங்களை விந்தையால் புதிதாக்கி உங்களுக்கே திருப்பிக்கொடுத்து கூலி வாங்கியதும் ஓடி மறைவார்கள். நிகழ்காலத்தில் நிழல் மீசையும் ஒட்டுத்தாடியும் வைத்திருக்கும் பகல் வேஷக்காரர்கள் வருவார்கள். நீ தெருமுனையில் இருந்து எழுதினால் கோடியிலிருந்து வந்து கொண்டிருக்கிறான் சவுரிமுடிக்காரன். சவுரிமூடீகள் கட்றது……சவுரிமூடீகள் கட்றது…… வீடு வீடாய் பகல் வேடக்காரர்கள் பாட்டுப்பாடி வருவார்கள். நவ நவ வேடமிட்டு அரிதாரம் நாறுகிறது. பூம் பூம் மாட்டுக்காரன் குறத்தியாறு வழியே வந்து கொண்டிருக்கிறான். சொன்னதையெல்லாம் கேட்டு மாடி வீட்டு அம்மாவுக்கு ஒரு சலாம் போடும் பசுவுடன் நினைத்தால் மரமாகிவிடும் பைத்தியத்தின் நிழலுக்கு வருகிறான்.

அலைகுடிகள், மிதவைக்குடிகள், நாடோடிகள், பைத்தியங்கள் தெருவிலிருந்து எழுதாமை புஸ்தகத்தை எழுதுகிறார்கள். குறத்தியாறு வாசனைகளின் அதீத எழுச்சியால் தன் பூர்வீக கூத்துப்பாடல்களில் ஓங்கி ஒலிக்கும் அடவு கட்டிய மெட்டுகளில் தாளப்பிரமான பாம்புப்பாதைகளில் நகர்கிறது. இவர் நாதத்தின் கரு நாகர்களின் நிலத்தில் தூங்குகிறது. நாகலா மலை சாயல்களில் பழங்குடி நாகர்கள் எழுந்து வருவார்கள் என்று பேய்களும் பூத கணங்களும் சொல்லிற்று. நடுச்சாம மையிரவில் வெட்டியான் மடுவில் கரைத்துத் திரும்பிய பச்சைத்தாத்தனின் சலங்கை கட்டிய கூத்துக்கால்கள் சுடுசாம்பலைத் தொட்டு அனல் வாக்கிடுகிறது. அந்த ராசமகள் எல்லியை சேவுகன் வந்து
எல்லியை வாயைக்கட்டித் தூக்கிப்போகிறான் அந்தப்புரம் தாண்டி நடை தாண்டி ஆனை தங்கும் கொட்டில் தாண்டி காராம்பசு தொழுவம் தாண்டி நாயுருவில் இருக்கும் எல்லியை அவள் திமிர திமிர சாக்கில் நுழைத்துக் கட்டி சாணி கொட்டும் பள்ளத்தில் வீசீனானே அண்ணலே. திமிர வலுவின்றி கத்த வாயின்றி உள் ஓலமிட்டு அழுதாள் அண்ணலே. விடியும் முன் வடமீன் அருந்ததி காணும் நேரமான நேரத்தில் எல்லி பெண்ணுறு மாறத் தொடங்கும் நேரம் தொடங்கும் முன்னே ஆனைச்சாணம், குதிரைச்சாணம், பசுஞ்சாணம்,காளைச்சாணம்,கன்றுச்சாணம் என தொழுவச்சாணமெல்லாம் கூட்டிப்பெருக்கிய சேவுகர்கள்,மாவுத்தர்கள், தொழுக்காவலர்கள் எல்லா சாணத்தாலும் மூடினார்கள் எல்லியை. சாணி பாரம் தாங்காத எல்லி மூர்ச்சையானாள். வடமீன் தோன்ற பெண்ணாக மாறும் முன்னே சாணமலை அழுத்த மாய்ந்து போனாள். சுரக்குடுக்கை வீசி வீசி கதை சொல்லி வருகிறாள் குறத்தி. எல்லி விட்ட உயிர் ஒளியால் சாணமலை மாயத்தணலானது. உலர்ந்த குவியலை துளைத்து வெளியேறியது உயிர்.

எல்லியன் ஆவி ஏழு பிள்ளைகளையும் தொட்டுத்தழுவுகிறது. எழுவருக்குள் ஊடாடிக் கலந்திருந்தாள் எல்லி. அந்த நாவலில் குறத்தியாறில் சொருகியிருக்கும் இயற்கையின் வேறொரு ஜீவியாக எல்லி நாக இனத்தின் மாயச்சலனங்களில் நாவலை ஈர்த்துக்கொள்கிறாள். ஏழு கன்னிகளும் எல்லியின் மகவாகி சுரக்குடுக்கை குலுங்கும் ஒலிகளுக்குள் பிரமைக்கும் கனவுக்கும் இடையில் நாகலாமலை இயற்கையிலுள்ள வேறு வேறு சப்தகன்னிமார் பெண் ருதுவாக குறத்தியாறில் நடமாடுவதாக இருக்கிறது. வாசகன் குறத்தியாறின் வாசனைகளால் பீடிக்கப்படுகிறான். குறத்தியிடமிருந்து விலகிச்செல்ல முடியவில்லை.

குறத்தியாறின் அசலான வடிவத்தை குறத்தியாறு எனும் பெயரில் காண்கிறேன். அதில் வாசகப்பனுவல்களுக்கான நுழைவாயில்கள் ஏராளமிருக்கின்றன. காணாமல் போன ஜிப்ஸிகள் குறத்தியாரிலிருந்து எழுந்து வருகிறார்கள். இந்த ஆறிலிருந்தே ஜிப்ஸிகளின் நாவலொன்று புனைவு வெளியாலே உருவாக்கப்படுகிறது. நமக்குப் பரிச்சயமற்ற ஜிப்ஸிகளின் வாழ்வு யதார்த்த இயக்கத்திற்கு எதிரானது தான். எழுத்தாளனின் புனைவைத்தாண்டி விடும் அவர்களின் ஞாபகப்பரப்பு. அரூப இணைப்புகள் கொண்ட ஜிப்ஸிகளின் இசைக்கோர்வை இங்கே சில அத்தியாயங்களில் லயமடைந்திருக்கிறது. இந்த நாவலுக்குள் ஜிப்ஸிகள் மணலின் நரம்புகளாக கிளைத்திருக்கிறார்கள். தனி உலகமாக இசையும் கூத்துமரபும் புனைவாய் ஒளிர்வு கொள்கிறது. ஜிப்ஸியின் இயல்பைத் தருகிறது குறத்தியாறு. எப்போதுமே ஊருக்கும் தெருவுக்கும் வெளியே தான் இருக்கிறார்கள். நவீனப்புனைகதையின் மொழிப்பரப்பிற்க்குள் கதாபாத்திரங்களை அன்றி ஜிப்ஸிகளும் தாவரங்களும் அவர்கள் கொண்டு வந்த புனுகுப்பூனையும் தேவாங்கும் நாடோடி நிலப்பரப்பும் விண்மீன்களை அள்ளிக்கொண்டு வரும் நாடோடிப்பாதையாக ஜிப்ஸிகளின் பாடல் மிக மெல்லிய குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. காஜாமார்க் பீடி நுனியில் காற்றுக்குள்ளே இருட்டில் பொற்கோடு போட்டு எழுதிச்செல்கிறது தாத்தனின் கங்கு. எழுதாமை புஸ்தகத்தில் காணாமல் போன ஜிப்ஸிகள் வருவார்கள்.

சின்னத்தாத்தனின் கூத்துப்பாடல்கள் ஆற்று வழி நெடுக இழைகிறது. குறத்தி நதிக்கான புதிய புராணம் எங்கிருந்து வரும்? அது ஜிப்ஸிகளின் நடை ஒழுங்கில் இசை நயமும் கவி நயமும் சன்னாவின் கூத்து மரபிலிருந்தும் தானே வந்து பொருந்திக் கொள்கிறது. குறத்தியாறில் காது வைத்துக் கேட்டால் தொலைந்து போன ஜிப்ஸிகள் வருவார்களா? என மாட்டுக்கார பிள்ளைகள் கேட்கிறார்கள். அட்டுப்பிடித்த ஜிப்ஸிகள் தான் மாட்டுக்கார சிறுவர்கள். ஓலைக்கொட்டான்களுடன் குறத்தியாற்று கரை நெடுக அதிர்ஷ்ட துவாரங்களில் பூபாள ராகத்தில் ஊதி ஊதிக் கூப்பிடுகிறார்கள். மண் குழிகளின் அப்பாவித்தன்மையோடு ஈசல் படை மொதுமொதுவென ஜிப்ஸிகள் கூப்பிடும் ராகத்திற்கு வந்து விடும். ஒரு பொழுது வாழ்ந்தாலும் அழகுகாட்டிச் செத்துப்போகும் ஈசல்கள் தான் ஜிப்ஸிகள். புஷ்கினின் ஒரு கவிதையில் ஜிப்ஸிகளால் கடவுள் விசாரிக்கப்படுகிறார்.

மனித அகத்தில் எங்கோ ஒளிந்து கொள்ள பயப்படும் கவிஞன் இமைப்பொழுது உயிர்வாழும் உயிர்களிடமே அடைக்கலமாகிறான்.குறத்தியாறு எழுதியவரும் மனிதர்களை விட்டு எந்தெந்த பூச்சிகளிடம் அடைக்கலமாகியிருக்கிறார் என்பது ஒரு அத்தியாயம் முழுக்க ஓவியர் சந்ரு வரைந்த பூச்சிகளின் சாட்சியாக அவரும் மனிதர்களை விட்டு ஜீவகோடி மிகச்சிறு பூச்சிகளின் ரெக்கைக்குள் ஒளிந்திருக்கிறார். சங்கப்பாடல்கள் அனைத்துமே கடுஞ்சுரத்தில் பரட்கற்கள் புலவர்கள் கால் பட்டு தெறித்த கூழாங்கற்களில் மொழியை உருட்டி எழுதப்பட்டவை தான். சங்கக்கவிக்கு அறை ஒன்றும் கிடையாது. சன்னாவின் குறத்தியாறின் இயற்கையோடு பயணமாகி அங்கிருந்து வரையப்பட்ட சந்ருவின் கோடுகளின் ஓசையை எறும்புகளும் உணர்ந்த மெலிவான ஓளியை இந்த ஓவியங்கள் வாசகனுக்கு கடத்தி விடுகின்றன. ஆற்றில் குரவை மீன் நீந்தி வரும் கோடுகள் திருவேடகத்தில் சமணர் விட்ட ஏடுகள் திரும்பி வந்தது போல் இந்த நீரில் வரைந்த சித்திரங்கள் கரையவுமில்லை. அவர் அணுஅணுவாக உதறிய கோடுகள் வந்து ஒடுங்குகிற புள்ளி வண்டுகளின் வரிவண்டு சுற்றி வரும் லயமாக இழைவன. சித்தெறெம்பும் தேனெறும்பும் வரிசை வரிசையாய் ஊர்ந்திருக்க கலைந்தோடும் எறும்புகள் சொன்ன கதைகளை ஆற்றில் குறத்தி மூழ்கடித்த குளவி நீந்தி வரும் நாளில் கடியெறும்பு சொல்லி விடும் அக்கதைகளை. செத்த வண்டுகளை கட்டெறும்புகள் இழுத்துப்போன பாதையில் இந்தக் குழந்தைமையை நாவல் பரப்பில் வைத்த இந்த சன்னாவின் எழுதாமை புஸ்தகத்தில் பூச்சி நூலை வரைந்திருக்கும் முல்லைநிலப்பாடலு சிவந்திருந்த ஓவியங்கள் சந்ரு எழுதிய வேறொரு நாவல். செவ்வெறும்பு சொன்ன கதை, குடையெறும்பு அலைந்த கோடு. கதைப்பொந்தில் கீறல் விட்டு சாரை சாரையாய் உடல் கடுத்த கட்டெறும்புக் கூட்டத்தையும் கண்டேன் அங்கு. செத்த வண்டுகளை நீரற்ற வெளியில் இழுத்துப்போன மொன்னேட்டுப்பாதையில் சனமும் கலங்கினார்கள். மற்றவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளாத உறவும் பேச்சும் கள்ளிச்செடிகளில் முல்லையில் சிவந்திருந்த வண்டுக்குணங்கல் ஓசை சில அத்தியாயங்களில் லயப்படுவதற்கு ஆற்று வெளியில் அமர்ந்து எழுதப்பட்ட நாவலும்/அறையில் எழுதப்பட்ட நாவலும் வேறு வேறு தான்.

நெஞ்சுலர்ந்த செடியைக்கண்டு வள்ளலாரின் ரசநாளங்களில் எல்லாத் திணைகளிலும் பஞ்சம் புகுந்த வருஷங்களில் மரண நவை தீர்க்கும் கூழ்சாலையில் விழல் வேய்ந்த மண்கட்டிடச் சாலையை அமைத்ததும் பஞ்சத்தில் ஒரு கவளம் அமுதை எளியோர்க்கு உருட்டியதில் கவிதையும் திரண்டதில்லையா? வழங்கிய பிடிசோறும் கவிதை. வள்ளலார் கவிதையாக இருப்பதும் மணிமேகலையில் இருந்து தான். ஏனெனில் குறத்தியாறில் வசம்பு வாடக்கண்டேன். அங்கொரு குறத்தி வாடிய பயிரை தோளில் சாய்த்து குலவை கட்டி அரற்றி அழுவதையும் கண்டேன். வண்டு சொன்ன பஞ்சத்தின் கதை உள்ளான்கள் பாய்ந்து வேட்டையாடும் சிறுகதைகள். கதைக்குள் கதைகளாகி பிறவா சிசுக்களென கருவோடு நின்று விட்ட எத்தனையோ துகள்களையும் கண்டேன் இந்த நாவலில். ஆற்றோடு போன குறத்தியும் இளம்பிள்ளையும் திரும்பி வரும் நாளில் கருவாக நின்று விட்ட சிறுகதைகளும் சன்னாவிடமிருந்து பிறந்து வருமென்றே நம்புகிறேன். எருக்கமும் ஊமத்தையும் சடைத்திருக்க அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசம் வீசும் வசம்பு வாடிக்காய்கிறது. நுனாவும் ஒடையும் வளர்ந்திருந்த தூரக்கரை மேட்டில் பச்சைபசேல் என்று படர்ந்திருந்த நீலப்பூ விஷ்ணுக்கிரந்தி, செம்பழக்கோவை, முழக்கத்தான் கொடிகளும் பச்சை குறைய வாடியிருக்கின்றன நாவலில்.

4. எல்வின் கண்ட பழங்குடிகள் நூலிலிருந்தோ, எட்கர் தர்ஷனின் தென்னிந்தியக்குலங்களும் குடிகளும் பாகங்களிலிருந்தோ பக்தவச்சல பாரதி ஆய்வேடுகளிலிருந்தோ குறத்தியாறு அரசாங்க ஆவணங்களைத் திறந்து நாவல் வரைபடம் போடவில்லை. ஆழிசூழ் உலகு, கொற்கை, சோளகர் தொட்டி போன்ற இனவரைவியல் நாவலாக சன்னா எங்கேனும் எழுதிப்பார்த்திக்கிறாரா நான் எல்லாப்பக்கங்களையும் திருப்பிக் கொண்டிருக்கிறேன். குறத்திகளின் கதைப்பாடலாக விரியும் ஆற்றுப்படுகை நாகரீகங்களைச்சுற்றி சிற்றி நாகலா மலை வரை விறகொடித்தவாறு பாடித்திரிகிறார்கள் ஜிப்ஸிக்களின் பாடலை.

5. “இயற்கையைப் போல் ஏழையாக இருக்கிறேன் நான்” – ஓசிப் மெண்டெல்ஸ்டாம்.

மரியூலா
என் பெயர் புஷ்கின்.
என் பிரேதசம் மோல்தாவியா.
ரஷ்யாவின் தென்பகுதி மரியூலா மரங்கள் உடையது.
எங்கள் மரியூலா மரத்தில்
சின்னக்கிளைகளிலே அதன் கொம்புகளுக்கு ஜிப்ஸிகளின் பெயருண்டு.
வேறானது கனிகளின் தித்திப்பு.
தோல்வியடைந்த ஆசிரியர் வெற்றியடைந்த
மாணவன் புஷ்கினுக்குத் தரும் பரிசு. வஸீலி ஜீக்கோஸ்கி
குர்ஷீப் ஓவியத்தில் புஸ்கின் வீடும் க்ரீமியாவின் நிலத்தோற்றம்
பாக்ஸீ சராய் அரண்மனையின் கண்ணீர் ஊற்று கவிதை
ஸோக்கலோ வரந்த சாய்நீர் சித்திரத்தில் அவன்
தேய்ந்தழிந்த மையலையும் உதிர்த்தவள் மரியா
எலிஸவேத்தா கவிதைகளுக்குள் அழுகிறான் புஸ்கின்
சிநேகிதி வேராவும் தேற்ற முடியா மை மோகம்
மிகாயலவ்ஸ்கோயா தோட்டத்தில் பதுங்கி கேவினான்
பனி ஓநாய் ஓசிப் நடமாடுவதில் பழுக்கும் பருவம் மரியூலா
பனிக்கரடி மரங்களை முட்டி உதிர்க்கிறது கனிகளை
நாம் புஸ்கினின் பெஸராப்பியாவில் சுற்றித்திரிவோம்
மரியூலா மதுவை கொஞ்சமாகக் குடி
ஜிப்ஸிகள் வண்டிகளில் பாட்டுகள் பாடி
மரியூலா பண்களில் மயங்கித் திரிந்தது கரடி
மரியூலா பூ பறந்து வீழ்கிறது
எழுவாய் சென்பீரா
கரடிகள் மரங்களைக் குலுக்குகின்றன
ஜிப்ஸிகளின் கிழிந்த கூடாரங்களில் பனிக்கரடி தூங்குகிறது
நிறம் மங்கி நைந்த கம்பளம் போர்த்தி
முன்பனிக்காலையில் ஜிப்ஸிகள் வருவார்கள்.
நாம் எழுதிய ஒவ்வொரு நூலுமே காணாமல்
போய் அலையட்டும் ஜிப்ஸிகளாய்,,,,,

சரித்திரத்தை பிறழ் படுத்தி கதையுறுதல்.குடிப்பெயர்ச்சியில் நிகழ்ந்திருக்கக்கூடிய பச்சை குத்தும் நாடோடியாக சந்ரு குறத்தி நாவலுக்குள் அதன் நிலா சரீரமெங்கும் பச்சை குத்தியிருக்கிறார். குறத்தி முத்தம் பட்ட நரிக்கொம்பும் தாயத்தும் குறத்தியாறு. மனித உரு வளர்ச்சியில் பச்சை குத்தினால் அதுவாகும் உருமாற்றம். இந்த நாவலில் வேறொரு நாவலும் சித்திரமாகத் திறக்கிறது. முதலில் வியர்க்கும் இந்த நாவலின் சில அத்தியாயங்களில் சருமத்தில் கையால் வரைந்து கொள்வது சந்ருவின் அழிப்பாங்கதைகள். சித்திரத்தில் வந்தவர்கள் கதைசொல்லிகளாகத் திரிகிறார்கள். கைமேல் விருச்சிகத்தை பச்சை குத்திக்கொண்டு தேள் கடுப்பண்ண நாட்படு தேறழை சுரக்குடுக்கையில் கோர்த்து வரும் குறவர்கள்.முன்னைக்குறத்திகளில் அழுக்குத்துணிகளால் பாழடைந்த கந்தல்களால் தரித்திரம் பிடித்த நாடோடித் துப்பட்டிகளை சுருணைகளாகச்சுற்றி சுற்றி குறத்தியம்மனின் துணிச்சிலையை சிருஷ்டிக்கிறார்கள் குடி போட்ட நிலத்தில். தேக வாசனை மிக்க மான் குறவர் கை மேல் குச்சி வைத்து வாக்குச்சொன்னால் பலித்து விடும். அவள் உவர் மண் அடிக்கும் பழைய சேலைகளை தான் படைத்த ஓலைக்கொட்டானுக்கு மாற்றாக வாங்கிப்போன நாட்களும் நிழலாடுகின்றன கண்களில். குறம் பாடி வந்தவர்களை துரத்தி வரும் நாயின் ஊளை புனைவை பின்தோடருகிறது. இருட்டுப்பிசினும் தொல்லூசிகளும் குறத்தியாறின் கதைப்பனுவல்கள் தான். நாடோடிகள் உலக வாசனைகளை சித்திரம் குத்தினார்கள் பெண்களுக்கு. நாவல் எழுதுவதற்கு மானுடவியல் ஆய்வாளர்கள் தேவையில்லை. கறுப்பு அங்கியணிந்து வைவாவில் வாங்கப்போகும் முனைவர் பட்டத்திற்கு பின்னால் மானியவிலை பனுவல்கள் அடியில் குறத்தியாறு ஓடவில்லை.

முன்பொருகாலத்திலிருந்து ஜிப்சிகள் பேசிக்கொள்ளும் மொழிக்குள் பட்சி ஜாலங்களும் சேர்ந்து உரையாடுகின்றன அவர்களோடு. அவர்கள் விட்டுச்சென்ற அத்துவான காட்டுத்தெருவுக்குள் தெருக்களாக வரும் போட்டிப்பாடல்கள். பொஹிமீய நாடோடிகளின் பிளிமிங்கோ ஆடல், வசவுப்பாடல்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது உலக விளிம்புகளில். குருவிக்காரனின் துப்பாக்கிச்சடங்கு. வேறு வேறு தேச எல்லைகளில் ஆடுகளைத் தோளில் போட்டு பிள்ளைகளைத் தொட்டிலிட்டு தாலாட்டுகிறது வரியுடல் மந்திகள். ஒவ்வொரு நொடியையும் உணர்வுகளால் பற்றிக்கொள்கிறார்கள் ஓயாமல் சண்டையிடுகிறார்கள். அவர்கள் இருப்பிடத்தை வேரோடு பறித்துச்சென்ற பின் பறவைகள் அவ்விடத்தை சுழன்று சுற்றி பறந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்களின் துயரமாய் பற்றிக்கொண்டு விடுகிறது குறத்தியாறு. போன பின் அரு உருவாய் சலன்மடைகிறாள் குறத்தி.

இரவில் பதிந்த நீராடும் கன்னிமாரின் குரல்கள். சதாகுறத்தியாறின் ஓட்டத்தில் பேச்சுவாக்கில் குளிர்ந்த காற்றாய் கூனிமேடு முட்டி எதிரொலிக்கிறது. அந்த ஊர்க்காரர்கள் ஆற்றைக்கடந்து பட்டணம் நோக்கி ஏய்கிறார்கள். தலைநகர் கருணாட்சரத்தில் கால்பட்டதும் தூணாகிவிடும் அவலம். குறத்தியாறு மணல் நெடுக நத்தைகளும் சாம்பல் சிப்பிகளும் ஊமச்சிகளும் லட்சம் மீன்முட்களாய் குத்திக்கிழிந்த சோகக்காற்று வீசுகிறது. உடைபடும் சங்கு வரிகளும் தீரவில்லை.ஆறே எழுதிக்கொண்டு முணுமுணுக்கிறது. ஓடுடலிகளின் மெல்லிய ஆன்மா இந்த மன்னவேடு அகத்தில் புகுந்து தான் தோன்றி கதைகளாக மாறிவிடுகிறது நாவல்.

வானம் வரை கூச்சலிடும் குறத்தியின் கைப்பிள்ளை. கிளிப்பிள்ளையின் குரல் கைப்பிள்ளாய்,கிளிப்பிள்ளாய் குரல் விட்டு விட்டுக் கேட்கிறது. அந்தக்குறத்தி ஆற்றுடன் இணைந்து விடுவாள். இந்த ஆற்றுக்கு அடியில் ஒரு புள்ளி நிலவென தெரிந்தது அவள் இருப்பு. பாலாறு வற்றி மணல் அலைகளில் அசைந்து கொண்டிருக்கிறது கானல் நீர். கொதி மணலில் கால் வைக்கிறாள் குறத்தி. சற்று நேரம் மூச்சு வாங்கினாள். களைப்பாக இருக்கிறது. ஈன்ற சிசு மார்பில் வற்றிய காம்புகளின் கருத்த ஈர்க்கை சவைத்துக்கரைகிறது தொல்பசியை.

தொல்பசியின் குரல் கேட்டு வெயில் புகையாய் உருள்கிறது பேய்த்தேர். வெயில் புகைக்குள் போனவர்கள் உடல் நெளிந்து வரைந்து கரைகிறது. வரையுருவம் கூட கானல்நீரில் கசிந்து மழுங்கி அழிகிறது வெயிலின் வாதையில். வானத்தின் உச்சியிலிருந்து அகலமான ஒரு சொட்டு நீர் விழுந்து வாடிய ஒரு குருவி குடிக்கக்கூட இந்த ஆறு பலன் தரவில்லை. ஆயிரம் மடுக்களும் பாழ் வற்றாகி புலம்புகிறாள் குறத்தி. ஒரு சிரங்கைக்கூட அது தன் மடியில் வைத்திருக்கவில்லை. பெருநகரம் தன் கோர வேர்களால் மணலை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. தாள் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் மஞ்சள் மூக்கு லாரிகளில் சாவுவேகத்தில், ஜன்னி வேகத்தில் மானுடத்தை விட்டு விலங்குகளை விட்டு மீன்களை விட்டு வெளியேறிச்செல்கிறது மணல்.

மனிதர்களை வரைந்து ஆடைகளுக்கு நிறம் பூசியது போதும். ஜிப்ஸிப்பெண்களின் வாசனைகளை குறத்தியாறில் வரைந்து நூற்றாண்டுகளைத் திருப்புகிறார். மூன்று அத்தியாயங்களில் பேசாத மீன்களின் கோடுகளை வரைந்திருக்கிறார். ஈச்சிறகதிரும் ரோகிகளின் புண் மீது புதிய அழகியலாய் பிறக்கிறது நிகழ்கால நாவல்.

கூத்தில் வருவது போல எல்லாக் கதாபாத்திரங்களும் விதைகளாக குலுங்கி வருகிறார்கள். ஒரு விதையில் எல்லி நாயாக மறைந்து வதாள். ஆளுயுர சுரக்குடுக்கைக்குள்ளிருந்து நாகா அரசன் கசிந்து வந்தான். ஏழு விதைகள் கால்களில் குலுங்க சப்த கன்னியர் வட்டமாக தீவளையம் சுற்றி வந்தார்கள். அந்த ஆளுயுர சுரக்குடுக்கையில் மொன்னேட்டுச் சேரியே ஒளிந்திருந்தது. குறத்தி கொண்டு வந்த ஆளுயுர சுரக்குடுக்கையில் கொற்றலையாறு பாய்கிறது. இந்த நாவலே சுரக்குடுக்கைக்குள் ஒளிந்திருக்கிறது. சப்த கன்னிமார்களும் சுரையூர் திறந்து வருகிறார்கள்.

சிறுவர்கள் ஒளிந்திருந்தார்கள். ஊரும் குடிகளும் கதைகளில் உறையும் உயிராயினர்.குறத்தியோடு வாழும் தலைமுறைகள் ஆனார்கள்.

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …