- கௌதம சன்னா
இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், மத்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை தாங்காமல் ரோகித் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்கிற செய்தி இன்றைக்கு நாடறிந்த செய்தியாகவும், மாணவர்களின் போராட்டத்திற்கான மையக்கருவாகவும் மாறியுள்ளது.
ரோகித் மேற்கண்ட நெருக்கடிக்கு பயந்து அல்லது அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டிருந்தால் அது அத்தனை தீவிரமாக எதிர் கொள்ளப்பட்டிருக்குமா என்பது ஐயமே. ஆனால் அவரின் மரணம் இவ்வளவு தீவிரத்தை உருவாக்கியுள்ளதே ஏன்..? அதன் காரணம் ஒரு எளிமையான மனநிலையில் இருந்து வருகிறது. தீவிரமான போராட்ட குணம் உள்ள ரோகித்திற்கு தற்போது இந்தியாவில் வீழ்ந்துக்கொண்டிருக்கும் கூட்டு மனசாட்சியின் மீதும், சிதையும் தார்மீக நெறிகளின் மீதும் அவநம்பிக்கை உருவாகியிருக்கிறது. சிதைந்துக்கொண்டிருக்கும் அந்த தார்மீக அம்சங்களின் பிரதிநிதிகளாகத்தான் அதிகார வர்க்கத்தினரையும் அதன் நடவடிக்கைகளையும் அவர் பார்க்கிறார். இதற்கு தனிப்பட்ட நபர்களை காரணம் காட்டினால் அதன் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும், அது அயர்ச்சி தருவதுடன் பெரும் வெற்றிடத்தையும் உருவாக்கிவிடும். இந்த வெற்றிடம் எவ்வளவோ அறிவாளிகளை ஞானிகளை பலி கொண்ட வெற்றிடம் அறச்சீற்றமும், தார்மீக வேட்கையும் கொண்ட ரோகித்தினால் அந்த வெற்றிடத்தில் தாக்குபிடிக்க முடியாமல் போனது என்பது சமூகத்தின் தோல்வி..
ரோகித்தின் மரண சாசனம் தெளிவானது, ஐயத்திற்கு அப்பாற்பட்டது. அதில் மரண பயத்தினை துளியும் நாம் காண முடியாது. தனது மரணத்தை சாட்சியாக வைத்து சமூகத்தின் தார்மீக வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, அதே சமூக கூட்டு மனத்தின் ஒரு பக்கத்தை தட்டி எழுப்பியுள்ளார். அதனால்தான் மாணவர்களால் அந்த போராட்டத்திலிருந்து பின்வாங்க முடியவில்லை, அதுமட்டுமின்றி இந்தியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து, தலைவர்களை பல்கலைகழகத்தை நோக்கி வரவைத்ததும் அதுதான். இப்போது அரசு என்ன செய்திருக்க வேண்டும். தார்மீக நெறிபடி நடக்கும் அரசாக இருந்தால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால் தற்போது அதிகார வர்க்கம் அப்படி சிந்திக்கவில்லை. ரோகித்தின் மரணத்திற்கு பதிலாக நடவடிக்கையை எடுத்திருந்தால் தன்னுடைய தார்மீக நெறியின் வீழ்ச்சியை தானே ஒத்துக்கொண்டதாக ஆகும். எனவே மாற்றுவழியை சிந்திக்கும் கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு தோதாக கையிலெடுக்கப்பட்ட துருப்பு சீட்டுதான் ரோகித்தின் அறக்கோபத்தினை திசைத்திருப்ப உதவும் சாதி.
ரோகித் தலித்தா அல்லது தலித்தல்லாதவரா என்பது இங்கே பிரச்சினையாகத் தொடங்கவில்லை. ஒரு அம்பேத்கரிய போராளியாக ரோகித் தமது போராட்டத்தை முன்னெடுக்கும்போது அவர் தலித்தாகத்தான் இருக்க வேண்டும் என்கிற முன்முடிவில் ஏற்கெனவே எல்லோரும் இருக்கிறார்கள். இதில் தலித்துகள் உள்பட என்று சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. அதனால்தான் அவர் தலித்தாகவே பார்க்கப்படுகிறார். தலித்தல்லதார் அம்பேத்கரியாவாதியாக இருக்க மாட்டார் என்கிற முன்முடிவு எப்படியோ இங்கு வேறூன்றி நிலைத்திருக்கிறது. அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில் இது எதை சுட்டிக்காட்டுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், ரோகித் தலித் இல்லை..? அதனால் என்ன. அதை முன்வைப்பதற்கு இப்போது தேவை ஏன் வந்தது என்கிற கேள்வி வரும்போது அதில் தெளிவாகத் தெரிவது நமது சாதி அரசியலின் ஆன்மா.
தனது தார்மீக கோபத்தை, அறச்சீற்றத்தை முன்வைத்து இந்த சமூகத்தை தனது மரணத்தின் மூலம் கேள்விக்கு உட்படுத்திய ரோகித்திற்கு நேர்மையே இல்லை, அவர் தன் சாதியை மறைத்து, தன்னை தலித்தாக முன் நிறுத்தியிருக்கிறார். அவருடைய சீற்றம் அறச்சீற்றம் அல்ல, அது உணர்ச்சிவசப்பட்ட ஒரு மாணவனின் மோசமான செயல். இதைத்தான் இப்போது நிருபிக்க வேண்டும். அதை நிறுவிவிட்டடால் கூட்டு மனசாட்சியின் போலித்தனங்களையும், அது நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் சூழலையும் மாற்றிவிட முடியும். அதனால்தான் அரசு உடனடியாக தனது சகல பரிவாரங்களையும் இறக்கிவிட்டது.
காவல்துறையினர் ரோகித்தின் மூதாதையர் வாழ்ந்த கிராமங்களைக்கூட விடாமல் தேடிப்பிடித்து, அவரின் சாதி மூலத்தைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். வரலாற்றில் யாருக்கும் இப்படி நடத்திருக்காது என்று நினைக்க முடியாது. அம்பேத்கரை முதலில் அப்படித்தான் முத்திரைக் குத்தினார்கள், அவர் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர் என்று காந்திகூட உறுதியாக நம்பினார். அம்பேத்கர் என்கிற பெயரே ஒரு பார்ப்பனரின் பெயர்தான் என்று வரலாற்றினைத் திரித்தார்கள். யாரெல்லாம் இந்த சாதி அமைப்பின் கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கிறார்களோ அவர்களின் அறசீற்றத்தை வீழ்த்துகிற வேலையைத்தான் முன்னெடுக்க பிறப்பு ஒரு அடிப்படை அம்சமாக இருக்கிறது. இவ்வாறு, அம்பேத்கருக்குப் பிறகு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் கடந்து இருபது ஆண்டுகளில் ரோகித்தான் இதபோன்ற ஒரு தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.
ரோகித்தின் மூதாதையரின் கிராமங்களை கண்டுபிடித்த காவல்துறையினர் ரோகித்தின் அப்பா கல்உடைக்கும் சாதி, அவரது அம்மா தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற மாபெரும் உண்மையை கண்டுபிடித்து, ரோகித் தலித் இல்லை என்று அறிவித்துள்ளனர். இதோடு விடவில்லை, தனக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையினை ரோகித் குடிப்பழக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளார், சிகரெட் பிடிக்கிறார் என பட்டியலை நீட்டிக்கொண்டிருகிறார்கள். அதற்காக அவர் மதுபோத்தல் மற்றும் ஒரு சிகரெட் பெட்டியோடு இருக்கும் படத்தினை எப்படியோ தேடிப்பிடித்து வெளியிட்டனர். எனவே அவரது எதிராளிகள் நிறுவ விரும்பியது அவர் சாதியை மாற்றிச் சொன்ன தனிமனித ஒழுக்கமும் நேர்மையும் அற்ற ஒரு சாராசரி மாணவர். இந்த செயல் ஒரு குறியீடாக மாறியப்பின் ரோகித்தின் ஆதரவாளர்கள் விடவில்லை, அவர் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதும், பூனைக்கு பாலூற்றுவதும் போன்ற புகைப்படங்களுடன் அவரது போராட்டப் படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு ஒரு குறியீட்டுப் போரை தெளிவாக முறைப்படுத்தினார்கள். மாணவர்கள் இந்த செயல் ஓர் ஆச்சர்யமான பதிலடி. இப்படி செய்த மாணவர்கள் எல்லாம் தலித்தாக மட்டுமே இருப்பார்கள் என்று நாம் புலனாய்வு செய்துக்கொண்டிருக்க முடியாது, அது அதிகார வர்க்கத்தின் வேலை. ஆனால் கணிசமான அளவில் இளைய சமூகத்தின் மனசான்று எவ்வளவு சீற்றத்தோடு இருக்கிறது என்பதற்கு இவை நல்ல சான்றுகள்.
ரோகித் மேல் தொடுக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதில் தரும் விதமாக அவரது தந்தை ரோகித் தலித் இல்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கிறார். உடனே இது பெரிய ஊடக செய்தியாகிறது. போராட்டங்கள் தீவிரமகின்றன. அரசு நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று. சரி, ரோகித் தலித் இல்லை என்றானப்பின் போராட்டங்கள் ஓய்ந்துவிடுமா.. அவருக்கு இழைப்பட்ட அநீதி நியாயமாகிவிடுமா..? பெரும் அரசு இயந்திரமே களத்தில் இறங்கி அவரது உயிரைப் பறித்ததே அதெல்லாம் சரி என்றாகிவிடுமா..? தவறு செய்தவர்கள் இன்னும் அதே அந்தஸ்த்தில் இருக்கிறார்களே அது புனிதமாகிவிடுமா..? அல்லது எழுப்பட்டிருக்கும் சாதியின் கூட்டு மனசாட்சிக்கு எதிரான கலகக்குரல் நின்றுவிடுமா..? இவை எதுவும் நடக்காது.. உண்மையில் ஆந்திரக் காவல்துறைக்கு துப்புத்துலக்குவதில் அவ்வளவு திறனில்லை என்றுத் தெரிகிறது. ரோகித்தின் பெற்றோரில் அவரது அம்மா தலித் என்று கண்டுபிடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது.
ஒருவரின் பிறப்பில் அவரது சாதியை கண்டுபிடிக்க அவருடைய பெற்றோர்தான் மூல காரணம்.. இது எல்லா நேரத்திலும் உண்மையாக இருக்க முடியுமா…? ஆணாதிக்க சமூகத்தில் தந்தையின் தகுதியை வைத்தே பிள்ளைகளின் சாதித்தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. உண்மையில் இது ஒரு பலவீனமான அடித்தளத்தில் நிறுவப்பட்டுள்ள நடைமுறை. சாதி உருவான காலத்திற்கு முன்பிருந்தே பெண்களே குழந்தையின் தகுதியை தீர்மானித்தார்கள். அதுதான் தெளிவானது. குழந்தையின் பிறப்பில் தந்தையின் பங்கு சமமானதுதான் என்றாலும் அதை தெளிவாய் உறுதிப்படுத்த முடியாத இயற்கை அமைப்பே இதற்குக் காரணம். பண்டைய காலத்தில் பெண்களே சாதியைத் தீர்மானித்திருந்தார்கள் என்பதற்கு அவர்களுக்கு இருந்த பூணூல் உரிமையே சான்று. பெண்கள் அணிந்த பூணூல் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ தமது சமூகத் தகுதியை கைமாற்றிக் கொடுக்க உதவியது. ஆனால் ஆணாதிக்க சமூகமாக மாறத் தொடங்கியப் பிறகு பெண்களிடமிருந்து பூணூல் பறிக்கப்பட்டு அது ஆண்களுக்கு மட்டுமே உரியது என்று மாற்றப்பட்டது. எனவே சாதியாக இறுகிய சமூகத்தில் பூணூல் வழியாக சாதியை தமது சந்ததிக்கு கைமாற்றும் நடைமுறை வந்ததை அம்பேத்கர் தனது ஆய்வின் மூலம் நிறுவியிருக்கிறார். பூணூல் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்கிற நடைமுறை அப்போது இல்லை. அது அனைத்து வர்ணத்தவருக்கும் உரிய ஒன்றுதான் என்றும் நிறுவியிருக்கிறார்.
சொல்லப்போனால், வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு எந்த சாதியையும் நிர்ணயிக்க முடியாது. அனுலோம பிரதிலோம விதிப்படி புதிய சாதியாகத்தான் பிறந்த குழந்தை இருக்கும். அதனால்தான் ஆயிரக்கணக்கான சாதிகள் உருவாயின. எனவே சாதியின் பெருக்கத்தை தடுத்து நிறுத்தவது சாத்தியிமில்லாத சூழலில் அதை தற்காலிகமாகவேனும் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் பெற்றோரின் ஏதாவது ஒரு சாதியை குழந்தைக்கு அளிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் நவீன காலத்தில்தான் உருவானது. பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் திரளில் ஆண்கள் இன்னும் பலவீனமாகவே போனார்கள். எனவே ஒருவனின் பிறப்பு அடையாளத்தை எளிதில் கண்டுபிடிக்க தாய் மட்டுமே ஒரே அடிப்படை. ஆண் தனது ஆதிக்கத்தை, இருப்பை நிலைநாட்ட வேண்டுமெனில் பெண் தனது தனது தகுதியை விட்டுத் தரவேண்டியுள்ளது. அப்படி விட்டுத்தந்ததுதான் சாதியை தீர்மானிக்கும் உரிமை. உண்மையில் இன்றைக்கு எல்லோரும் தனது பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கும் சாதி பெண்கள் போட்ட பிச்சை என்று சொன்னால் அது எந்தவிதத்திலும் தவறாகாது. அவர்கள் மாற்றிச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை ஆண்களால் கற்பனைக்கூட செய்ய முடியாது.
இது ரோகித்திற்கும் பொருந்தும். அவரது அம்மா தனது சாதியை தனது மகனுக்கு வழங்கியது ஒரு வரலாற்றின் தொடர்ச்சிதான். இதில் காவல்துறை போய் புலனாய்வு செய்யும் அளவிற்கு அவர்களுக்கு சமூக அறிவு ஏதும் கிடையாது. இதில் யோசிக்க வேண்டியது பெண்கள்தான். தான் பெற்ற குழந்தைக்கு என்ன தனது சாதியையோ அல்லது சாதியற்ற நிலையையோ தரமுடியாத அளவிற்கு இருக்கிற நிலை எவ்வளவு கேடானது என்று பெண்கள் உணர்ந்தால் பல பிரச்சினைகள் தீரும்.
இப்போது ரோகித்திற்கு வருவோம். ரோகித் தலித் என்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தனது அம்மாவின் சாதியை வரித்தக்கொண்டார் அதற்கு தடையேதும் இல்லை. அப்படியே அவர் தனது தந்தையின் சாதியை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி இன்னும் உயிரோடு இருக்கிறது, அதற்குத்தான் இன்னும் விடையில்லை.. அதனால்தான் அவரது அம்மா கேட்கிறார்.. நிர்பயாவிற்கு போராடிய யாரும் நிர்பயாவின் சாதி என்னவென்று கேட்கவில்லை. ஆனால் ரோகித்திற்கு மட்டும் ஏன் கேட்கிறார்கள்…
இது ரோகித்திற்கான கேள்வியல்ல,, இந்த சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி என ஒன்று இருக்கிறதே அதை நோக்கி வைத்தக் கேள்வி… விடை கிடைக்குமா…?
– கௌதம சன்னா
(தினமணி பிரசுரிக்க மறுத்த கட்டுரை)