Home Interview மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Comments Off on மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..
rajam-and-sannaராஜம்: அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும்  கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.   நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?

கௌதம சன்னா: அன்புள்ள ராஜம் அம்மையாருக்கு வணக்கம்.  உங்களது கேள்விகளுக்கு என்னால் முடிந்த அளவில் விடையளிக்க முனைகிறேன்.  தலித் என்கிற வார்த்தை 1940களிலேயே மராட்டியத்தில் புழக்கத்திலிருந்த வார்த்தை. தலித் சமிதி என்கிற இயக்கம் அன்றைக்கு இருந்தது. ஆனால் அது எவ்வளவு வீச்சாகச் செயல்பட்டது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை. சில வேளை அம்பேத்கரின் இயக்கத்தைக்கூட அது எதிர்த்துச் செயல்பட்டது. ஆயினும் 1972ம் ஆண்டு தலித் என்கிற சொல் திரும்ப வரலாற்றில் தோன்றியது. அமெரிக்காவில் கருஞ்சிறுத்தைகள் இயக்கம் (Black Panthers) ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியும், அது நிறவெறியை எதிர்த்து தீவிரமாக போராடியது, அந்த இயக்கத்தின் தாக்கத்தினால் மகாராட்டிரத்தில் 1972ஆம் ஆண்டு  தோன்றியது “தலித் பாந்த்தர்ஸ்” (தலித் சிறுத்தைகள்) இயக்கம்  அதை முன்னெடுத்தவர்கள் மராட்டியத்தில் இடது சாரி மற்றும் அம்பேத்கரின் சிந்தனைகளால் உந்தப்பட்ட அறிவுஜீவிகள், பேராசிரியர்கள் மற்றும் போராட்ட குணமுள்ள இயக்கவாதிகள். இவர்கள் பெரும்பாலும் பட்டியல் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவர்களில்  இடதுசாரி சிந்தனைக் கொண்ட பார்ப்பனர்கள் மற்றும் இடைச்சாதியினர் சிலர் இருந்தனர். தலித் என்கிற சொல்லுக்கு அவர்கள் கொடுத்த பொருள்… “மண்ணின் மைந்தர்கள்”; மண்ணில் தோன்றியவர்கள், வீழ்த்தப்பட்டவர்கள் என்கிற பொருளில் அதைக் கையாண்டனர். இந்த இயக்கம் தீவிரமாக வளர்ந்து ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் இயக்கமாக மாறியது. பெண்கள் அதன் பின் திரண்டனர். அந்த இயக்கத்தின் தீவிரத்தினால் “தலித்” என்கிற சொல் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்குப் பரவியது. தொடக்கத்தில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சொல்லாக இருந்த தலித் எனும் அரசியல் சொல்லாட்சி, நாளடைவில் குறிப்பிட்ட சாதிக்கான சொல்லாக குறுக்கப்பட்டது. அதன் பின் நீண்ட வரலாற்றுக் கீழறுப்புகள் இருக்கின்றன.
ராஜம்: இந்த மகா அற்புதப்பிறவி மனுவும் ஒருநாள் செத்திருக்கவேண்டும், இல்லையா? இல்லை, ஓர் ‘அமானுஷ்யப்’ பிறவியாக, தான்தோன்றியாக உலவும் வரம் பெற்று உலவுகிறாரா
கௌதம சன்னா: இங்கே குறிப்பிடும் குறிப்புகள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்குமாயின் மற்றவர்களுக்கு உதவும் என நினைக்கிறேன். எனவே தவறாக எண்ண வேண்டாம்.–  மனு ஸ்மிருதி குறித்து என்னுடைய பதில்களை படித்த சிலரிடத்தில் ஒருவித மூட நம்பிக்கை இருப்பதைப் பார்க்கிறேன். சமஸ்கிருத இலக்கியங்கள் அத்தனையும் பார்ப்பனர்களின் படைப்பு போல நம்புகிறார்கள் என்பதுதான் அது, அதனால் மதி திருகி மோதுகிறார்கள்.

–  இந்தோ ஆர்ய இலக்கியங்கள் எனப்படும் வேதம், ஸ்மிருதி உள்ளிட்ட அடிப்படை இலக்கியங்களில் பார்ப்பனர்களின் பங்களிப்பு இல்லை. உபநிடதங்களில் மட்டுமே அவர்களின் பங்களிப்பு தொடங்குகிறது. அதாவது பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதத் தொடங்கியதை கொண்டு இந்த மூட நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள்.

–  பண்டைய இந்தியச் சமூகத்தில் நாகர்கள் மற்றும் ஆரியர்கள் என இரு பெரும் பண்பாட்டுச் சமூக பிரிவுகள் இருந்தன. ஆரியர்களில் ரிக் வேத ஆரியர்கள், அதர்வண வேத ஆரியர்கள் (பசுவைப் போற்றுபவர்கள்) என இருபிரிவுகள். இவர்கள் எப்போதும் மோதிக்கொண்டிருந்தார்கள்.

– இந்த ஆரியர்களில் முதலில்  மூன்று வர்ண அமைப்புகள் இருந்தன அதன்படி பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர். பிற்காலத்தில் சத்திரியர்களிலிருந்து நான்காம் வர்ணமான சூத்திரர் தோன்றினர். இவர்களை வர்ணாஸ் என்று அழைத்தனர் அதாவது வர்ணாஸ்ரமம். இவற்றிற்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணாஸ். இந்த அவர்ணர்களும் வர்ண அமைப்பில் திரிந்த அல்லது கலப்பு வர்ணத்தவர்களால் உருவானவர்கள். இந்த அமைப்பைப் பற்றின குறிப்பு ரிக் வேதம் புருஷ சுக்தத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. ஆனால் அந்தப் புருஷ சுக்தம் இடைச்செருகல் எனப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

–  எனவே வர்ணத் தோற்றம்  மனு விளக்கியதையே அனைவரும் பேசத் தொடங்கினர். மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்சியை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாகச் சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.

– ஏன் மனு கண்டிக்கப்படுகிறார். தமது தொகுப்பில் அவர் இந்தோ ஆர்ய சமூகத்தின் பிராமணர்களுக்குச் சமூகத்தின் உச்ச நிலையை உறுதிப்படுத்த ஏராளமான விதிகளை அதில் சேர்த்தார். அதே நேரத்தில் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் ஏராளமான தடைகளை விதித்தார். இதுதான் அடிப்படைக் காரணம். இதற்குக் காரணம் இருக்கிறது. மனு ஒரு வைசியர் அதாவது வியாபாரி வர்ணத்தவர். வியாபார வர்க்கம் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமாகவே இருக்கிறதல்லவா அதுதான் அங்கேயும் நிகழ்ந்தது. ரிக் வேதத்தில் பெண்களுக்கு இருந்த பல உரிமைகளையும் மனு குழிதோண்டிப் புதைத்தார்.

– தீண்டாமை  பற்றி சில பேசும்போது மனுதான் அதை உருவாக்கினார் என்று பேசுகிறார்கள், அது தவறு – தீண்டாமை பற்றி மனுவின் கருத்து என்று ஏதுமில்லை. அவர் தீட்டை  மட்டுமே பேசுகிறார். ஏனென்றால் அவர் காலத்தில் தீண்டாமை என்கிற கருத்தாக்கமே உருவாகவில்லை.

– சிலர்  சண்டாளர்களும் தலித்துகளும் ஒன்று என்று நினைக்கிறார்கள், அது முற்றிலும் தவறு.  சண்டாளர்களுக்கும் தலித்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படியானால் சண்டாளர்கள் யார்..?

‘இது  மனு தரும் விளக்கம்.. சூத்திர தந்தைக்கும் பிராமணத் தாய்க்கும் பிறந்தவன் சண்டாளனாகிறான். இந்த கலப்பு மணம் வர்ண அமைப்பினை சிதைத்துவிட்டதால் இவர்களுக்குப் பிறந்த மகன்/மகளுக்குத் தனித்த ஏற்பாடு அவசியமாகிறது. அதை அனுமதித்தால் அது வழக்கமாகி வர்ண அமைப்பு முற்றிலும் சிதைந்து போகும் எனவேதான், சண்டாளர்களை வர்ண அமைப்பிலிருந்து தள்ளி வைப்பதுடன் அவர்களைக் கீழான நிலையில் வைப்பதை மனு விரும்பினார். எனவே சண்டாளர்கள் சுடுகாட்டின் ஓரம் வசிக்க வேண்டும். உடைந்த பானையில் உண்ண வேண்டும். நாயால் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியைச் சாப்பிடலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்தார்.

– மனு குறிப்பிடும் பிராமணருக்கும் தற்கால பிராமணருக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியும் என்று நம்புவது எப்படியோ, அப்படியே, சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் உள்ள தொடர்பு இருக்கும் என நம்புவதும் ஓர் அறியாமை.

ராஜம்: அந்த மனுவின் உடல் செத்தபின் … இடுகாட்டுக்கோ சுடுகாட்டுக்கோ அதை எடுத்துச்சென்று அந்தப் பிணத்தைக் கையாண்டவர் எந்தச் “சாதி”யினர் என்று தெரியவருகிறதா? அந்தப் பரமபுருஷனின் எந்தப் பகுதியிலிருந்து கிளைத்த ‘குலம்/சாதி’ மனுவின் செத்த உடலைப் புதைத்தது/எரித்தது என்று தெரியவருகிறதா?

கௌதம சன்னா: மனு செத்துப்போனவர்தான். அவர் இறந்திருந்தால் அவரது பிணத்தை சண்டாளர்தான் எரித்திருக்க வேண்டும் என்பது உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் சண்டாளர்கள் பிணத்தை எரிக்க வேண்டும் என்பது மனுவின் விருப்பமாக இருந்தாலும், எல்ல நேர்வுகளிலும் அப்படி நடக்கவில்லை. பல சண்டாளர்கள் மிகச்சிறந்த மேதைகளாக, குறுநில மன்னர்களாக இருந்திருக்கின்றனர். சண்டாளர் பெண்கள் பேரழகிகளாக இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்களை மணம் புரிந்து கொள்ள மன்னர்களும் விரும்பினார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. சண்டாளர்கள் ஆர்ய பண்பாட்டினைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் விளங்கும்.

– மனுவின் பிணத்தை எரித்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்தோ ஆர்ய சமூகம் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அது நாகர்களின் பழக்கம்.

எனவே.. மேற்கண்ட விளக்கங்கள் சிறு ஒளிக்கீற்றை வழங்கும் என நம்புகிறேன். இந்த மனுவுக்கும் மனு நீதி சோழனின் மனுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்ளும் சிலர் இந்தோ ஆர்ய பண்பாட்டைப் பார்த்து சூடு போட்டுக் கொள்வது ஒரு நகைச்சுவை.

ராஜம்:  மனுவின் பிணத்தை யார் எரித்திருந்தாலும் அவர்களுக்கு அந்த “தீட்டு” இருந்திருக்கவேண்டும்! அதை நினைத்துப்பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினர்மேல் மட்டும் அந்தத் தீட்டை ஒட்டுவது நேரியதன்று. ஆனாலும் அந்த மனுசர் சண்டாளர்களுக்கு இவ்வளவு கொடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கவேண்டாம். தான் செய்ய அருவருக்கும் ஒரு செயலைச் செய்தவர்களுக்கு நன்றிசொல்லாமல் கீழ்நிலைப்படுத்தி வைத்த அவலத்தை என்னவென்று நோவது?  மருத்துவப் படிப்பில் புகுந்த எல்லாருமே பிணத்தைத் தீண்டாமலா படிப்பை முடித்திருப்பார்கள்? அவர்களுக்குத் “தீட்டு” இல்லையாம்! ஆனால், இயற்கையின் அவலத்தால் மாதவிலக்குப் பெறும் பெண்களுக்குத் தீட்டாம்! காஞ்சிப் பெரியவர் பெண்கள் கல்லூரிக்குள் நுழையவே தயங்கி, மாட்டையும் கன்றையும் முதலில் போகவைத்து அந்த இடங்களைத் “தூய்மையாக்கி” அங்கே நடந்தாராம். சிருங்கேரி மடத்து ஆச்சாரியார் எங்கள் கொள்ளுப்பாட்டியின் வீட்டிற்கு வந்தபோது (விதவையான) என் பெரியபாட்டியை ஆச்சாரியார் கண்களில் படாமல் மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்! இத்தனைக்கும் … மாளிகை மாதிரி இருந்த அந்தப் பெரிய வீட்டில் “பாதபூஜை”க்காகச் செலவழித்த பணத்தில் அந்தப் பாட்டியின் பங்கும் இருந்தது! கைம்பெண்ணைப் பார்த்தாலே “தீட்டு” ஒட்டிக்கொண்டுவிடுமோ?
கொடுமை.

கௌதம சன்னா: மேலும் மனுவின் மீது ஏன் கடும் வெறுப்பு உருவானது என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. அவர் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவர்ணர்களுக்கும் விதித்த கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் கொடுமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதைப் பிராமணர்களுக்கான அனுகூலமாக அதை மேற்கொண்டார் என்பதில்தான் வெறுப்பு உருவாகிறது. ஆனால் அந்த அனுகூலங்களை அனுபவித்தவர்கள் மனுவை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக இந்தோ ஆர்ய பண்பாட்டு பெண்களுக்கு அவர் இழைத்த மூன்று கொடுமைகளைப் பார்க்கலாம்.

  1. பெண்களுக்குப் பூணூல் உரிமையை மறுத்து அவர்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பைத் தடுத்தது.
  2. குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது.
  3. விதவைகள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று அதற்கு மத அங்கீகாரம் கொடுத்தது.

இந்த மூன்றும் பெண்களுக்கு எதிராக மனு மேற்கொண்ட பண்பாட்டு போர் என்றே பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் அனுபவித்த பல கொடுமைகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன என்றால் மிகையல்ல.

மேலும், மனுவின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நினைத்தால்கூட மனுவை இக்காலத்தில் முழுமையாகப் பின்பற்ற முடியாது.

மாட்டுக்கறியைப் பிராமணர்கள் எப்படிச் சாப்பிட வேண்டும், அதன் வகைகள் எத்தனை, குறிப்பாகப் பசு மாட்டுக்கறியைப் பிராமணர்கள் தானம் பெற்று அதை எப்படி தமது குழுவிற்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். சடங்குகளில், யாகங்களில் கொழுத்த பசுவினைக் கொன்று அதை எப்படி யாகம் வளர்ப்பவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏராளமாகச் சலுகைகளை பிராமணர்களுக்கு அளித்தார். மனுவைப் போற்றும் அவரது பக்தர்கள் இதைப் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

பெண்கள், நாகர்கள் மிலேச்சர்கள், அவர்ணர்கள், தஸ்யூக்கள் ஆகியோர் மீது மனு காட்டிய வெறுப்பு.. எல்லாம் வரலாறாக இருக்கிறது. சுய சாதிப் பற்றோ, பிறசாதி வெறுப்போ ஆய்வுக்கு உதவாது என்பதை மக்கள் உணர்வார்கள் என நினைக்கிறேன்.  மற்றபடி மனுவின் அறிவாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கொள்கைகளை வெறுக்கிறேன்.

கௌதம சன்னா

http://mymintamil.blogspot.in/2016/11/A-Review-on-Manu-Laws-by-Gowthama-Sanna.html

Load More Related Articles
Load More By admin
Load More In Interview
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …