Home நிகழ்கால அரசியல் சுற்றுச்சூழல் மெட்ராஸ் – மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்… தீர்வு என்ன?

மெட்ராஸ் – மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்… தீர்வு என்ன?

Comments Off on மெட்ராஸ் – மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்… தீர்வு என்ன?

கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையின் சாலைகளோடு ஒப்பிடுகையில், நடந்திருப்பது பேரழிவு. உலகின் வேறு எங்காவது இப்படி நடந்திருந்தால் மெட்ரோ நிறுவனம் தடைசெய்யப்பட்டு அதன் நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள்... தீர்வு என்ன?

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது மவுன்ட்ரோடு உட்பட சென்னையின் முக்கியச் சாலைகளை நீர் சூழ்ந்தது. ‘மெட்ரோ ரயில் பணிகளினால் சாலைகள் உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கியக் காரணம்’ என  தமிழக அரசின் பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் வெளிப்படையாக இதைக் குற்றம்சாட்டினார். சென்னையில் குவிந்துவரும் மக்கள்தொகைக்கு மெட்ரோ ரயில் வசதி மிக முக்கியமான வரத்து என்றாலும் சென்னையின் சாலைகளை மெட்ரோ பணியை அடிப்படையாகவைத்து மாநகராட்சித் துறை எவ்வளவு மோசமாகச் சிதைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

மெட்ரோ பணிகள்

வடசென்னையில், திருவொற்றியூரில் மெட்ரோ தொடங்குகிறது. மெட்ரோ கட்டுமானம் சாலையின் நடுப்பகுதியினைச் சராசரியாக இரண்டு அடிகளுக்கு அங்கே உயர்த்தியுள்ளது. நெரிசல்மிக்க பிராட்வே சாலையின் போலீஸ் குடியிருப்பை இடித்து அங்கே ரயில் நிலையம் கட்டப்படுகிறது. ஏற்கெனவே அந்தச் சாலையின் உயரம் 1 மீட்டர் உயர்த்தப்பட்டு நடைமேடைகள் புதைந்தன. தொடர்ந்து கட்டடங்களின் படிகளும் புதைக்கப்பட்டுத் தரையோடு சாலையும் சமமாக இருக்கின்றன.

அடுத்துவரும் உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம், படுமோசம். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் வளாகம் சுற்றுச்சுவர் சிதைக்கப்பட்டு, அதன் வளாகம் சுருக்கப்பட்டு மெட்ரோ ஆக்கிரமித்துள்ளது. அக்கல்லூரியின் பழைய இடத்தை மெட்ரோ நிர்வாகம் திரும்பத் தரவேயில்லை. அதற்கு எதிரே உள்ள குறளகம், ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம், சென்னை இல்லம்  மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் உள்ளிட்ட கட்டடங்கள் அரை மீட்டருக்கு புதைக்கப்பட்டு, அக்கட்டடங்களின் நடைமேடைகளோடு படிகளை இழந்துள்ளதுடன் அவற்றின் சுற்றுச்சுவர்கள் முற்றிலும் பூமியில் புதைக்கப்பட்டுள்ளன. குறளகம் கட்டடம் 1 மீட்டர் புதைக்கப்பட்டு, சராசரியாக அந்த எஸ்பிளனேட் சாலை அதன் பழைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒன்றரை மீட்டர்வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த பாரம்பர்ய கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டு ஒரே ஒரு சிறிய சிவப்புக் கட்டடம் மட்டும் பேருக்கு நிற்கிறது. விக்டோரியா ஹால், ரிப்பன் கட்டடங்களுக்குள்  சாலையிலிருந்து ஒரு மீட்டர் கீழே இறங்கித்தான் போக முடியும். இந்தப் பகுதியில் கட்டடங்கள் சராசரியாக 2 மீட்டர் உயர்ந்துவிட்டன.

இந்து அலுவலகத்துக்குச் செல்ல, அண்ணா சாலையிலிருந்து மெதுவாக ஏறி நுழைய வேண்டும். அப்படித்தான் தி மெயில் அலுவலகம், பி.ஆர்.ஆர். சன்ஸ் மற்றும் ராஜாஜி ஹால் ஆகியன இருந்தன. இப்போது நிலைமையை மெட்ரோ மாற்றியமைத்திருக்கிறது. 

சென்னையின் பாரம்பர்யமிக்க உயர்ந்த கட்டடமான எல்.ஐ.சி. தனது உயரத்தில் ஒரு மீட்டரினை மெட்ரோவிடம் இழந்திருக்கிறது. அதன் பழைய சாலை இப்போது இல்லை. புகழ்பெற்ற ஹிக்கின் பாதம் கட்டடம் அதன் வாசலில் மூன்று அடிகளை இழந்துள்ளது. இப்படி அண்ணா சாலை முழுவதும் கட்டடங்கள் மெட்ரோவினால் புதைந்திருக்கின்றன.

சாலைக்கு நடுவில் நிற்கும் அண்ணா சிலையின் அடியில் உள்ள புகழ்பெற்ற சுரங்கப் பாதையில் தலை இடித்துக் கொள்ளாமல் நுழைய முடியாது. எட்டு அடிகள் உயரமிருந்த அதன் நுழைவாயில்கள் இப்போது வெறும் ஐந்தடிகள் முதல் நான்கரை அடிகளாக குறுகியிருக்கின்றன.

கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையின் சாலைகளோடு ஒப்பிடுகையில், நடந்திருப்பது பேரழிவு.  உலகின் வேறு எங்காவது இப்படி நடந்திருந்தால் மெட்ரோ நிறுவனம் தடைசெய்யப்பட்டு அதன் நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். இங்கோ திறந்த நிலையில் முறைகேடுகளும் சிதைவுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மெட்ரோ என்ன செய்திருக்க வேண்டும். ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டபடி அது பழைய சாலைகளைத் திரும்ப ஒப்படைத்திருக்க வேண்டும். பழைய கட்டடங்களை மீண்டும் புணரமைத்துக் கொடுத்திருக்க வேண்டும். அந்நிறுவனம் எதையும் செய்யவில்லை. அந்தப் பணத்தை அப்படியே மிச்சம் பிடித்துள்ளது. 

பழைய சாலைகளின் மீது அது தற்காலிகமாகப் போட்ட சாலைகளைத் தோண்டி எடுத்து, பழையபடி சாலையை அமைப்பதற்குப் பதில் தற்காலிமாக அதன் கழிவுகளைக் கொட்டிய சாலையின் மீதே புதிய தார் சாலைகளை அமைத்து தனது செலவினத்தை மிச்சமாக்கிக் கொண்டுள்ளது. பழைய சாலைகளுக்காகச் சுரண்டும் எந்திரங்களின் வாடகை, ரயில் நிலையத்தின் ஆழத்தை மேலும் ஒரு இரண்டு மீட்டர் அதிகரிக்கும் ஆகும் செலவு எனப் பல வகையில் யோசித்து இந்த மோசடியைச் செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
சாலையின் உயரத்தினைக் கண்காணித்திருக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் வழக்கம்போல அமைதியாக இருக்கிறார்கள். மெட்ரோ சிதைத்த சாலைகளைத் தொடர்ந்து  அதன் இணைப்புச் சாலைகளைப் பிரதான சாலைகளுக்கு இணையாக உயர்த்துவார்கள். அப்போது எல்லாக் கட்டடங்களும் புதையும்.

தமிழகத்தின் சாலையின் உயரத்தினைக் கூட்டக்கூடாது என்றும், பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலையில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மெட்ரோ நிர்வாகமும், சென்னை மாநகராட்சியும் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

நீதிமன்ற வழிகாட்டலை முற்றிலும் அவமதித்து மீறிய மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநகராட்சியின் மீது கட்டடங்கள் பூமியில் புதையுண்டதால் பாதிக்கப்பட்ட கட்டடங்களின் உரிமையாளர்கள் இழப்பீடு வழக்கும் தொடுக்க அனைத்து உரிமைகளும் உள்ளது. அப்படி, குறைந்தபட்சம் அண்ணா சாலையில் உள்ளவர்கள் மட்டுமே இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்தால் மெட்ரோ நிர்வாகம் திவால் ஆகும் அளவில் இழப்பீடு தரவேண்டியிருக்கும்.

சாலை உயர்வு என்னும் மோசடி சென்னைக்கு மட்டுமானதல்ல, தமிழகம் முழுமைக்கும் கிராமங்கள் வரையிலும்  நிகழும் தொடர் சங்கிலி முறைகேடு; தொடரும் பேரழிவு.  மக்கள்தான் விழிக்க வேண்டும்.

கௌதம சன்னா

https://www.vikatan.com/news/tamilnadu/151772-metro-train-projects-at-chennai.html?fbclid=IwAR3vfskUL1ARyA4GOej2RMJI05NUeFMtaViZ8FKtY-IsSQ9bwnvFzsPaIB4

Load More Related Articles
Load More By admin
Load More In சுற்றுச்சூழல்
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…