சிதம்பரம்: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று மாலை தெற்குவீதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட அதனை திமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மாமல்லன் பெற்றுக்கொண்டார். சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்ட செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வர விசிக வலியுறுத்தும்.
* இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க விசிக பாடுபடும்.
* மின்னணு வாக்கு இயந்திர முறைக்கு பதில், தாள் வாக்கு பதிவு கொண்டு வர முயற்சிக்கும்.
* வருமானவரித்துறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
* விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விசிக குரல் கொடுக்கும்.
* ராணுவத்திற்கான நிதியை குறைத்து கல்விக்கு நிதி அதிகரிக்க வலியுறுத்தும்.
* தமிழை ஆட்சி மொழியாக்க மக்களவையில் விசிக குரல் கொடுக்கும்.
* நீட் தேர்வை ரத்து செய்ய பாடுபடும்.
* மேகதாதுவில் அணை கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தும்.
* பெண்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்துகொள்ள உரிமை வழங்க வலியுறுத்தும்.
* ஊடகத்தினரின் நலனை பாதுகாக்க வலியுறுத்தும்.
* இணையத்தில் பாலியல் தளங்கள் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி விசிக குரல் கொடுக்கும். இவ்வாறு பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளது.