Home History கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Comments Off on கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

பேராசிரியர் நா கண்ணன் எழுதிய 

கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை 

இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால போக்கு. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஜெர்மானியர்கள் உள்ளிட்ட மேற்கத்திய முன்னோடிகள் இந்திய வரலாற்றினை எழுதும் வாய்ப்பை உருவாக்கினார்கள். இந்தியாவைப் புரிந்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் பார்வையில் எழுதப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு காலப்போக்கில் நவீன இந்திய வரலாற்றின் ஒரு வழக்கமாகவும் பழக்கமாகவும் மாறிவிட்டது. இதன் பலன் என்னவென்றால் இந்தியத் துணைக்கண்டத்தின் மீது அதிகாரம் செலுத்தியவர்கள் பார்வையில் பார்க்கு­­ம் ஒரு அதிகாரத்துவ வரலாற்று பதிவு உருவானதும், அந்தப் பார்வைக்கு இந்தியப் படிப்பாளிகளும் பலியானதுதான். இது இந்தியாவிற்கு பெரும் இழப்பு என்பதை அந்த வரலாற்று ஆய்வாளர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்றால் அது மிகையாகாது.

 

அந்த வரலாற்று இழப்பின் விளைவு என்ன..?

கூர்ந்து நோக்கும்போது, இந்திய வரலாற்றினை எழுதுவதற்கும் புனைவதற்கும் உள்ள இடைவெளியில் எது ஆதிக்கம் செலுத்தும்? நிச்சயமாக புனைவுதான். அதுதான் இந்திய படிப்பாளிகளிடம் ஆதிக்கம் செலுத்தும். இது ஒருவகையில் ஒரு தொன்மத் தொடர்பு. இந்த தொன்மத் தொடர்பு வெறும் கற்பனை சார்ந்ததல்ல, அது ஆற்றுப்படுத்தும் மனநிலையைச் சார்ந்தது. இந்த மனநிலை எதை சாதித்ததென்றால், நீண்ட காலமாக இந்தியத் துணைக்கண்டம் அந்நியர்களின் அதிகாரப் பிடியில் சிக்கியிருந்தது என்கிற தாழ்வெண்ணமும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அது உச்சத்திற்குப் போய் விடுதலைப் பெறப்பட்டது என்கிற புரிதலிலும் எழுதப்பட்டு ஆற்றுப்படுத்கிக் கொண்டது. இதன் தொடர் விளைவாய், இந்திய வரலாற்றின் திசை பெரும்பாலும் மேற்கு நோக்கியே கட்டமைக்கப்பட்டது அல்லது புனையப்பட்டது. மேற்கத்திய நாடுகளைவிட பண்பாட்டிலும், வரலாற்றிலும் சிந்தனைகளிலும் மற்றும் இன்ன பிற அம்சங்களிலும் நாங்கள் மேம்பட்டவர்கள் எனும் போட்டியிலும் போய் முடிந்து. இன்றளவும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் இது ஒருவகை எதிர் அடிமை மனநிலை என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்த விழைகிறேன்.

எனவே, மேற்கிலிருந்து நாம் இன்னும் விடுதலைப் பெறவில்லை. நீண்டகால அடிமைத்தனத்தின் தொன்மத் தாக்கத்தின் விளைவு ஒரு பக்கம் இருக்கிறதென்றால், இந்தியத் துணைக் கண்டத்தின் சுதந்திரமான சிந்தனைவெளி என்பது இன்னமும் ஒளிப் பொருந்தியதாக, மாண்பு மிக்கதாக விளங்கிக் கொண்டிருக்கும் அந்தத் திசையினை நோக்கி நவீன இந்திய வரலாறு திருப்பியிருக்குமானால் ஒரு வேளை வரலாற்றின் போக்கு மாறியிருக்கலாம். அப்படியானால் அது எந்த திசை?

அதுதான் கிழக்கு..!

இந்திய வரலாற்றின் பெருமையும் மாண்பும் பன்னெடுங் காலம்தொட்டுக் கிழக்கில்தான் இருக்கிறது. மேற்கில் இல்லை. ஆசிய சோதி என்று அழைக்கப்பட்ட புத்தர் அந்தப் பெருமையை உருவாக்கியவர். அவரது ஒளி பொருந்திய சுதந்திரமான சிந்தனைப் போக்குகள் அவரின் பின்னடியார்கள் மூலம் கீழைத் தேசங்களுக்கும், மேற்கு தேசங்களுக்கும் போய் சேர்ந்தன. இசுலாம் மற்றும் கிறித்துவ பரவலாக்கங்களினால் மேற்கில் தமது இருப்பை பௌத்தம் இழந்தவிட்டது. ஆனால் கிழக்கு எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி தமது பௌத்த அடிப்படையினைக் காத்துக் கொண்டது. அந்தவகையில் இந்தியத் துணைக் கண்டம் வழங்கிய பண்டைக்காலப் பண்பாட்டுக் கொடைகளைப் பேணிக்காத்து வருகிறது. அதில்தான் இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமை இன்னும் கிழக்கில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் என்ன செய்தார்கள்? தமது மேற்கத்திய அடிமைத்தனம் தந்த சிந்தனையினால் கிழக்கு உலகை முற்றாக மறந்தார்கள். அதற்குக் காரணம் நவீன சிந்தனைகள் மட்டுமல்ல, பௌத்தத்தின் மீது சனாதன இந்து சிந்தனையாளர்களுக்கு இருந்த வெறுப்பும் தான் காரணம். விளைவாய் இந்தியாவிற்குக் கிடைக்க வேண்டிய அல்லது கோர வேண்டிய பெருமையை மறந்தார்கள். எனவே வெறுப்பு கட்டமைத்த இந்திய வரலாறு அடிமைத்தனத்தோடு தொடர்கிறது.

இதில் இன்னோர் அம்சம் என்னவென்றால், கிழக்கு நோக்கிய இந்த இந்திய வரலாற்றின் தொடக்கம் புத்தரிலிருந்து ஒரு கதிர் தொடங்குகிறது என்றால் மற்றோர் கதிர் தமிழகத்திலிருந்து தொடங்குகிறது. அல்லது தென் மொழியிலிருந்துதான் தொடங்குகிறது. புத்தர் பேசிய மாகதி மொழி தமிழியுடன் நெருங்கியத் தொடர்பிருந்த மொழி என்று தற்காலத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது என்பது ஒரு தற்செயலானதாக இருக்க முடியாது. பௌத்தம் வட இந்தியாவில் அழிக்கப்பட்ட பிறகு அதன் செழுமைமிக்க இலக்கியங்கள் தமிழில்தான் அதிகம் கிடைக்கின்றன. அது மட்டுமின்றி பௌத்தத்தின் மிக முக்கிய பிரிவும் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் பின்பற்றப்படும் ஜென் பௌத்தத்தின் மூலவடிவம் தமிழகத்திலிருந்துதான் போதிதர்மர் மூலமாகப் போய் சேர்ந்தது. இந்த வரலாற்றினை அங்கு இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். போதிதர்மர் தான் தென்கிழக்காசிய நாடுகளின் மிக முக்கிய பானமான தேநீரினை கண்டுபிடித்தவர் என்பதும் கூடுதல் செய்தி. தமிழகத்தின் பௌத்த துறவிகளும், கடலோடி வியாபாரிகளும், கடற்கரையோர பாதசாரி பயணிகளும் பௌத்தத்தினைத் தென்கிழக்காசிய நாடுகள் தோறும் கொண்டுபோய் சேர்த்தார்கள் என்கிற விவரம் எல்லாம் வெறும் வரலாற்றுக் குறிப்புகளல்ல. அது சுதந்திரமான சிந்தனைப் பரிமாற்றத்தினைக் கிழக்கிற்குக் கொண்டுபோய் சேர்த்த வரலாறு. எனவேதான் அது இந்தியாவின் மாண்புமிக்க திசை என்று குறிப்பிடுகிறேன். கெடுவாய்ப்பாக, வட இந்தியர்களின் ஆதிக்கத்திலும், தீவிர இந்து பக்திக் கொண்ட பார்ப்பனர்களாலும் எழுதப்பட்ட இந்திய வரலாறு தமிழகத்தின் எல்லா மூல வரலாற்று வளங்களையும் புறக்கணித்தது. அதற்குக் காரணம் இந்தியாவின் பெருமைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும் பௌத்தத்தின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பே.

காலங்கள் போய்விட்டன. பழைய மண்டைகள் மரித்து புதிய சிந்தனைகளும் போக்குகளும் உருவாகிவிட்ட இக்காலத்தில், கிழக்கின் மீதான பார்வைகள் மாறத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் பெருமையைக் கிழக்கில் தேடும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் பேராசிரியர் டாக்டர் நா.கண்ணன் அவர்கள் எழுதிய ஆழி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “கொரியாவின் தமிழ்ராணி” எனும் இந்த நூலினைக் காண்கிறேன்.

கொரிய தமிழகத் தொடர்பில் அவர் உருவாக்கியுள்ள ஆய்வு குறிப்புகளின் தொகுப்பாக வெளிவரும் இந்நூல் நல்ல தொடக்கம் என்றே நினைக்கிறேன். ஒரு சுற்றுச்சூழல் அறிவியல் விஞ்ஞானியாக கொரியவிற்குப் போன நா.கண்ணன் அவர்கள் ஒரு சமூக அறிவியல் விஞ்ஞானியாக மாறிய கதையோடு தொடங்குகிறது இந்த கொரியாவின் தமிழ்ராணி நூல்.

நூலின் உள்ளடக்கம் எளிமையானது. அதே நேரத்தில் வலிமையானது. அது கையாளும் வரலாற்றுக் களம் சவால் நிறைந்தது. கொரியாவின் தொன்மைக்கும் அதன் எழுத்து முறைமைக்கும் தமிழகமே மூலம் என்னும் வரலாற்று உண்மை இந்தியாவின் தொன்மை வரலாற்றின் மீது ஒரு புத்தொளியைப் பாய்ச்சக்கூடியது. தமிழகத்திலிருந்து போன ஒரு பெண் கொரிய அரசனை மணந்து, அதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றையும், கொரிய எழுத்து அமைப்புகளையும் உருவாக்க மூலக் காரணமாகிறாள் என்பதை தமது ஆய்வுகள் மூலம் நிருபித்திருக்கிறார் கண்ணன். கொரியாவிற்குப் போன பெண் அயோத்தியிலிருந்துதான் போனாள் என்கிற கட்டுக்கதையை உடைத்து, அந்தப் பெண் தமிழ் பெண்தான் என்பதை நிறுவியதின் மூலம் கிழக்கு திசை நோக்கும் இந்திய வரலாற்றின் விசைக்கு புத்துயிர் கிடைக்கிறது.

அதே நேரத்தில் இந்தப் புதிய ஆய்வின் மீது எனது சில கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என நினைக்கிறேன். கொரியாவிற்குப் போன பெண் மாமல்லப் புரத்திலிருந்துதான் போயிருக்க வேண்டும் என்கிற கருத்து உடன்பாடானாது என்பது போலவே, அப்பெண் ஒரு பௌத்த மதத்தை சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். இந்த அனுமானத்தை பேராசிரியர் கண்ணன் அவர்களுடன் தொலைபேசியில் பேசும்போது குறிப்பிட்டேன். அவரும் அதைப் பற்றின குறிப்புகளை சேர்ப்பதாகச் சொன்னார். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் பெரும் பாய்ச்சல்கள் நிகழும்.

இந்தக் கருத்தை நான் உறுதியாக சொல்லக் காரணம் இருக்கிறது. பண்டைய இந்தியாவில் கடல்தாண்டும் வழக்கம் பார்ப்பனர்கள், சமணர்கள் மற்றும் பெண்களுக்குக் கிடையாது. அதை முதன்முதலில் உடைத்தது பௌத்தம். புத்தர் தமது போதனைகளைக் கொண்டுபோய் சேர்க்க நிலவும் தடைகள் அத்தனையும் உடைத்தார். பெண்கள் – ஆண்கள் என்கிற வேறுபாடுகளின்றி பௌத்த பிக்குகளும் பிக்குணிகளும் அவரது போதனைகளைத் தூர நாடுகளுக்குக் கொண்டுப் போனார்கள்.

அப்படிப் போன பௌத்த பெண் துறவிகளில் மிக முக்கியமானவர்கள் அசோகரின் மகள் சங்கமித்திரையையும், தமிழகத்தின் மணிமேகலையையும் சிறந்த சான்றுகளாகக் கொள்ள முடியும். அதே நேரத்தில் பௌத்தத்தின் ஒரு பிரிவில் கடவுளாகக் கருதப்படும் அவலோகிதர் மற்றும் அவரது மனைவி தாராதேவி இருவரின் இருப்பிடமும் ”போட்டகலா” என்று கீழை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த ”போட்டகலா” என்பதை ”பொதிகைமலை” என்பதை அண்மைய ஜப்பான் தமிழ் ஆய்வுகள் நிறுபித்துள்ளன. தென்கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் தழைத்தோங்கும் பகுதிகளில் தாராதேவி என்னும் கொன்னிமாவின் சிலைகளைக் காணமுடியும். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கொரியாவிற்குப் போன ஹே ஹிவாங் ஓக் என்னும் தமிழ்பெண் ஏன் ஒரு பிக்குணியாக அல்லது பௌத்த அனகாரிக் பெண்ணாக இருக்கக்கூடாது? அவர் காவிநிற பாய்மரக் கப்பலில் வந்திறங்கினார் என்பதில் பாவிக்கப்படும் நிறமான காவி, பௌத்ததின் அடிப்படைக் குறியீடு. அதே போல ஜப்பானிய மொழி வரிவடிவத்தைக் குறிக்கப் பயன்படும் ‘காஞ்சி” என்பது காவியையே குறிக்கும். அதனால்தான் தமிழகத்தின் காஞ்சிவரத்திற்கு அப்பெயர். காயா என வரும் பெயர் தமிழகத்தின் காயலைக் குறிக்கலாம். மேலும், கயா என வரும் பெயர் புத்தர் ஞானம் அடைந்த இடமான ‘கயை” என தமிழில் வழங்கும் கயாவேதான். தற்போது அது புத்தகயா என்றே அழைக்கப்படுகிறது.

எனவே இந்தத் தொடர்புகள் எதேச்சையானதல்ல. அது நீண்டகாலத் தொடர்பின் பதிவுகளே. கொரியாவின் கிம் வம்சம் தமிழகத்திலிருந்து சென்ற அந்த அனகாரிக் பௌத்த பெண்ணால் உருவாக்கப்பட்டது என்று நான் நம்பக் காரணம், பௌத்தத்தில். அனகாரிக்குகள் திருமணம் செய்துக்கொள்ள தடையேதும் இல்லை என்பதுதான். அனகாரிக் என்னும் பௌத்த நிலை திருமண உறவினை பேணிக்கொண்டே தமது சமயப் பணியினையும் தொடரலாம் என்பதே. அதை பௌத்தம் அனுமதிக்கிறது. அதனால்தான் தென்கிழக்காசிய நாடுகள் முழுமைக்கும் பௌத்தம் வேகமாக பரவியது.

எனவே, கிம் வம்சத்தின் தொடக்கம் ஒரு தமிழ்ப் பெண்ணால்தான் உருவானது என்று கொரியர்கள் நம்பும் தொன்மம் என்பது ஒரு வரலாற்று உண்மைதான். இந்த உண்மை தமிழகத்தில் நிலை நிறுத்தப்படுமானால், இந்தியாவை மையப்படுத்தி கிழக்கி திசை நோக்கும் வரலாற்றின் திட்டிவாசலாக தமிழகமே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும், இந்நூல் குறிப்பிடும் மற்றோர் செய்தி, கொரிய மொழியின் வரி வடிவத்தினையும் அதன் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பினையும் தமிழ்ப் பெண்ணால் வழக்கங்கப்பட்டது என்பதுதான். இந்தச் சரியானப் பார்வை நிறுபிக்கக் கூடியதே. ஏனெனில் தமிழகத்தில் இருந்த பௌத்த பிக்குகள் பல தமிழ் இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும் எழுதியுள்ளனர். அவர்கள் போய் சேர்ந்த நாடுகளில் அந்தந்த மக்கள் பேசிய மொழியினைக் கற்று, அதற்கான வரிவடிவங்களை உருவாக்கி அதன் மூலம் புத்தரின் கருத்துக்களை நிலைப்பெறச் செய்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே கொரிய மொழி மட்டுமல்ல, பௌத்த தழைத்திருக்கும் நாடுகளின் மொழிக்குரிய வரிவடிவத்தை அவர்கள் உருவாக்கினார்கள். எனவே தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் துணைக்கண்டத்து மக்களும் பெருமைப் படக்கூடிய ஆய்வு முடிபுகள் இவை.

எனவே, முனைவர் நா.கண்ணன் அவர்களின் இந்த நூல் தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைக்கு அணி சேர்க்கும் என் நம்புகிறேன். இந்த நூல் கையாளும் கருத்தின் மீது தொடர்ந்து கவனத்தினைக் குவித்து இழந்த தமது பெருமையினை மீட்டுக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்.

– ஜாகௌதம சன்னா

பேராசிரியர் நா கண்ணன் எழுதிய ‘கொரியாவின் தமிழ்ராணி’

வெளியீடு – ஆழி பதிப்பகம்

Load More Related Articles
Load More By admin
Load More In History
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…