டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள 53 பெரிய நகரங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிகமான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தோராயக் கணக்குப்படி நாளொன்றுக்கு சராசரியாக 13 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது. அதுவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த விவரம் பெறப்பட்டுள்ளது, இந்த ஆண்டு டில்லியில் 4,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளி விவரம் காட்டுகிறது.
தலைநகர் டெல்லிதான் அப்படி என்று நினைத்துவிட வேண்டாம் மம்தா என்ற ஆளுமைமிக்க பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலமான மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 29,133 என விவரங்கள் காட்டுகின்றன.
அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒப்பீட்டளவில் 9.2 சதவிகிதம் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. ஆனால் அரசு தரும் புள்ளிவிவரப்படி பார்த்தால் இந்த பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகமாக இறையாகியிருப்பது தலித் பெண்கள்தான் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போதெல்லாம் இந்தியா, டெல்லி உட்பட எல்லாம் அமைதியாகத்தான் இருந்தன.
குஜராத்தில் மோடியின் மேற்பார்வையில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையில் ஒரு பெண்ணின் நிறைமாத கர்ப்பம் சிதைக்கப்பட்டு, வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்துக் கொல்லப்பட்டபோதுகூட டெல்லி அமைதியாகத்தான் இருந்தது.
அல்லது நாளொன்றுக்கு, ஒவ்வோர் மணி நேரத்திலும் 8 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு அதில் பாதி பேர் கொல்லப்படுகிறார்கள் என்று தகவல்கள் நாள்தோறும் வரும்.. ஆனாலும் டெல்லி அமைதியாகத்தானே இருந்தது. இப்படி ஏராளமான விவரங்களைச் சொல்ல வாய்ப்பிருந்தாலும்,
அமைதியாக இருந்த டெல்லி இளையோர் இப்போது திடீரென போராட்டத்தில் குதித்த மாயமும், கோரிக்கையை நாடு முழுதிற்குமானதாக விரிவுபடுத்தாமலும், பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக குறிப்பாக ஒவ்வோர் இரண்டு நிமிடத்திற்கும் ஒரு தலித் பெண் பாதிக்கப்படும் அவலத்திற்கும் எந்த தீர்வையும் கேட்காமல் இருக்கும் மாயமும் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக அசாரே,கெஜ்ரிவால்,ராம்தேவ் உள்ளிட்ட இந்துத்தவ சக்திகளின் ஆதரவு கொண்டவர்கள் டெல்லியை ஆக்ரமித்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் முன்னேற்றம் காண முடியாமல் தேய்ந்துப் போனதால் ஊழலுக்கு எதிராக இயல்பாக எழ வேண்டிய போராட்டத்தை மழுங்கடித்தப் பணியை சிறப்பாகவே செய்து முடித்தனர். ஏனெனில் பாஜக ஆண்டபோதும் மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன, அப்போது இந்த பேர்வழிகள் எல்லாம் உயிரோடுதான் இருந்தார்கள். ஆனால் அப்போது அவர்கள் வாயைத் திறக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மட்டும் தெளிவாகவே வாயைத் திறந்துக் கொண்டார்கள்.
நாடளுமன்றத்தில் எப்படி பாஜக தமது நடத்தையின் மூலம் நாடாளுமன்றத்தை முடக்குகிறதோ, அதே பாணியை பின்பற்றி தலைநகர் டெல்லியை ஊழலை மையமாக வைத்து முடக்கியதின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். நாட்டின் மற்றப் பிரச்சனைகள் அத்தனையும் மறைக்கப்பட்டன.
இப்போது அதே பாணி.. பிரச்சினைதான் வேறு, ஒரு பெண் பாலியல் வல்லுறவு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை காரணம் காட்டி மீண்டும் அதே கும்பல் பின்னணியில் இளையோர் கூட்டம் வீதிக்கு வந்தது. இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தியாவது இந்தியவில் உள்ள ஒட்டுமொத்த பெண்களுக்கான தீர்வை பேசுவார்கள் என்று எதிர்பார்த்தால் பயங்கர ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம்போல அது அரசியல் படுத்தப்பட்ட கூட்டம் என்பதை நிருபித்தது.
தமிழகத்தில், அரியானவில் வெளிப்படையான சான்றுகள் கிடைத்தபோதும் அந்த கூட்டம் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டது. ஆங்கில ஊடகங்களும் அதை கண்டுகொள்ளவில்லை. ஒரு நிகழ்விற்கு மட்டும் தீர்வைக்கேட்டு பெரும் ஆற்றலை காட்டியதின் மூலம் மற்ற இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைக்கூட அவர்கள் தடுத்ததைபோல தோற்றம் உருவாகி விட்டது.
எப்படி பார்த்தாலும் இது ஒரு மோசமான போக்கு, வெகுமக்களிடையே இயல்பாய் உருவாகி வரவேண்டிய போராட்ட குணத்தினை மழுங்கடிக்கும் இந்து பயங்கரவாதிகளின் திட்டங்கள் வெற்றிபெறத் தொடங்கியுள்ளன என்றே தோன்றுகிறது.
பாலியல் படுபாதகத்திற்கு ஆளான அந்தச் சகோதரி இன்று மரணமடைந்த சேதி நெஞ்சை உளுக்கிக் கொண்டிருக்கிறது. கூடவே, காந்தளவாடி பிரியா, திருச்சி ஸ்ரீபிரியா, சிதம்பரம் சந்தியா ஆகியோருக்கும் இந்த நேரத்தில் இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்.
டெல்லி முற்றுகை முடிவு பெறட்டும்
இந்திய முற்றுகை தொடங்கட்டும்
29.12.2012- சன்னா