மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்

Madras

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முன்னிரவில் அன்டன் செகோவின் ஆறாவது வார்ட் நாவலை படித்து முடித்தபோது என் மனதின் சமநிலை குலைந்துபோனதை உணர்ந்தேன். நாவல் முன்வைத்தக் கேள்விகளால் துளைக்கப்பட்டு இரவு முழுதும் உறக்கமின்றி போக பொழுது புலர்ந்தது. உறக்கமின்றிப் போன இரவு பல இரவுகள் தொடர்ந்தது அது ஒரு காலம். அது போன்ற ஓர் இரவை நீண்டகாலத்திற்குப் பிறகு உருவாக்கியது மெட்ராஸ் – திரைப்படம். இரவு முழுதும் சிந்தனை அலைவுகளால் உறக்கமின்றிப் போனது.

மெட்ராஸ் என்றாலே திரைத்துறையினருக்கு எப்போதும் ஒரு ஏளனம் உண்டு. மெட்ராசினால் அவர்கள் பிழைத்தாலும் கூட. அவர்களுக்கு மெட்ராசைப் பற்றி எதுவும் தெரியாது என்ற உணர்வுகூட எப்போதும் அவர்களுக்கு கிடையாது. குறிப்பாக, தெற்கத்திப் பக்கமிருந்து வந்து மெட்ராசில் படமெடுக்கும் பலருக்கு மதுரை பாசை, நெல்லை பாசை, கோவை பாசை, குமரி பாசை, ஈழ பாசை பற்றியெல்லாம் விலாவாரியாகத் தெரியும்.  ஆனால், திரையில் அவர்கள் ஏதோ பேசுவார்கள் அது மெட்ராஸ் மொழி என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். எம்ஜியார், சிவாஜி உள்ளிட்ட பழைய நடிகர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல. எல்.ஆர்.ஈசுவரி பாடிய எலந்தப்பழம் பாட்டைக்கேட்டால் எனக்கு உருவாகும் அருவெறுப்பை கட்டுப்படுத்தவே முடியாது, அந்த அளவிற்கு மெட்ராசை மொழியை கொக்சைப்படுத்தும் பாட்டு அது. அதற்குப் பிறகு மெட்ராஸ் பாசையில் நிபுணராக பத்மசிறி கமல்ஹாசன் தோன்றினார். அந்த ஆசையில் பாரதிராசா ஒரு படம்கூட எடுத்து தோற்றார். பலபேர் மெட்ராஸ் மொழியைப் தமது திரைப்படங்களில் பேசுகிறார்கள். மெட்ராசில் பிறந்து வளர்ந்த எனக்கு அவர்கள் பேசும் மெட்ராஸ் மொழி எந்தப் பகுதியில் பேசுகிறார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவேயில்லை. கடைசியில் பார்த்தால் அந்தத் திரைமேதைகள் உருவாக்கிய திரைமொழி அது. அதைதான் மெட்ராஸ் பாஷை என நம்பச் சொல்கிறார்களே அது மிகப்பெரிய வேடிக்கை.

இந்த அறியாமையிருந்து தமிழ் சினிமா எப்போது விடுபடும் என்று எனக்குள் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. மெட்ராசைப் பற்றித் தெரிந்துக் கொண்டு எப்போது படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த போதுதான் புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்கள் வந்தன. அந்தப் படங்கள் பார்த்த போது வெறுத்துப் போய்விட்டது. இவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதுடன் இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதும் புரிந்தது. ஏனென்றால் இவர்கள் கலைஞர்கள் அல்ல, வெள்ளைத் துணியில் வண்ணங்களைக் காட்டும் வியாபாரிகள். ரத்தமும் சதையும் உள்ள உயிர்ப்பான மெட்ராஸ் இவர்களுக்குத் தெரியாது. நிச்சயம் தெரியாது. சினிமா உதாரணத்தோடு சொல்வதென்றால் டைட்டானிக் படத்தில் மேல் தளத்தில் பயணிக்கும் நாயகியின் சூழல் இவர்களின் சூழல். நாயகன் பயணிக்கும் அடித்தட்டின் சூழல்தான் மெட்ராஸ். அங்கு வாழ்க்கை எப்போதும் கொண்டாட்டம்தான். ஆமாம், மெட்ராஸ் வாழ்க்கை என்பது கொண்டாட்டம். சாகசக்கங்கள் நிறைந்தக் கொண்டாட்டம். எல்லா வகையான கொண்டாட்டம் கொண்டது மெட்ராஸ் வாழ்க்கை. போலித்தனத்திற்கு இடமேயில்லை. போலியாக மாறினால் அங்கு வாழமுடியாது.. அது விரட்டிவிடும்.

மெட்ராஸ் என்பது இப்போது உள்ளதல்ல. அசலான மெட்ராஸ் வடசென்னையில் இருக்கிறது. தற்போதைய எல்லைபடி பார்த்தால் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டது. உண்மையான மெட்ராஸ் இங்கிருந்து வளர்ந்து முதலில் மையசென்னை சேர்க்கப்பட்டது, பின் தென்சென்னை சேர்க்கப்பட்டது. மையசென்னை ஏறக்குறை மெட்ராஸ்தான். தென்சென்னையை கணக்கில் சேர்க்கவே முடியாது. அது குடியேறியவர்களால் உருவான போலி சென்னை.

மெட்ராஸ் – பன்முகத் தன்மைக்கொண்ட வடசென்னை மக்களின் ஒர் அலகான குடிசை மாற்று வாரியக் குடியிறுப்பில் வாழும் மக்களிடையே மட்டும் நடக்கிறது. ஆனால் அது மட்டுமே உண்மையான மெட்ராஸ் அல்ல. இன்னும் பல சூழல்கள் வடசென்னையில் இருக்கிறது. அவை விரைவில் கவனப்படுத்தப்படும் என நினைக்கிறேன். அதற்கு இந்த மெட்ராஸ் ஒரு தொடக்கம். இந்த பின்னணியில் தான் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தை  அணுகவேண்டும்.

மெட்ராஸ் திரைப்படத்தில் காட்டப்படும் கதைக்களம் மிகச்சிறியது. இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் போட்டியில்; ஒரு குடிசை மாற்று வாரியக் குடியிறுப்பில் உள்ள மக்களை எப்படி பகடைக்காய்களாக மாற்றிக் கொல்கிறார்கள், அதற்கு விளம்பர சுவர் எப்படி பயன்படுகிறது என்பதுதான் கதைக்களம். இந்தக் கதைக்களத்தை தேர்வு செய்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும், அதற்காகவே ரஞ்சித்தையும் நடித்த கார்த்தியையும் பாராட்ட வேண்டும்.

ஏனனெனில் வட சென்னை சூழலை படமாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் கொண்டாட்டமும் எளிமையும் நிறைந்த மக்களிடையே படம் பிடிப்பது அவர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை தூண்டிவிடும் என்பது மட்டுமின்றி; கதை களத்தை கருவை படமாக்கும் போதே அவர்கள் எளிதில் புரிந்துக்கொள்வார்கள், எனலே, அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் அதையெல்லாம் தாண்டி மெட்ராஸ் வந்திருக்கிறது.

படத்தினை முழுவதுமாக அலச வேண்டியதில்லை என்று கட்டுப்படுத்திக் கொண்டு சிலற்றை மட்டும் கூறவேண்டும் என நினைக்கிறேன். மெட்ராஸ் இடைவேளைக்குப் பிறகு உருவாகும் நாயகன் முன்னிலையைத் தவிர்த்துப் பார்த்தால் அச்சு அசலான, ரத்தமும் சதையுமான மெட்ராஸ் படம்தான்.

பாத்திரங்களின் தேர்வு கச்சிதம். ஒரு மெட்ராஸ்காரனாக படத்தின் யாதார்த்தத்திலிருந்து என்னால் தப்பிக்க முடியாமல் போனாலும், மெட்ராஸ்காரர் தவிர்த்த மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே அந்த கோணத்திலேயே படத்தினை பார்க்க முனைந்தேன். அப்படி பார்க்கும்போது மற்றத் தமிழ்ப்படங்களை தவிர்த்து உலகின் மற்றப் படங்களோடு ஒப்பிட்டுக் கொள்ள மனம் முனைந்தது. லத்தின் அமெர்க்க, ஈரானிய, சில ஆப்பிரிக்க படங்களை இணைவைத்துப் பார்த்துக் கொள்ள முடியும், அவ்வளவு செவ்வியல் தன்மைக் கொண்டது மெட்ராஸ்.

நாயகன் கார்த்தியின் பாத்திரம் மெட்ராசில் தற்போது வாழும் ஏராளமான பாத்திரங்களில் ஒன்றுதான். படம் முழுதும் கார்த்தியை தேடினால் காளி மட்டுமே சிக்கனான் என்பது காளியின் வெற்றி. கச்சிதமான உடல்மொழி. பருத்திவீரனுக்குப் பிறகு கார்த்தி நடித்த ஒரே படம் இதுதான். நாயகி தெரசாவைப் போல யார் இருக்கிறார்கள் என்று பலர்கூறக் கேள்விப்பட்டேன். அது மோசமான பொது புத்தியின் குரல். வடசென்னையில் தெரசாவை போல மட்டுமல்ல, அவரைவிட அழகான பெண்கள் ஏராளமானபேர் இருக்கிறார்கள், நடையில் அவரை விஞ்சக்கூடியர்கள் அதிகம் இருக்கிறார்கள். போய் பாருங்கள் தெரியும். மற்ற பாத்திரங்கள் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது கடினம்.

ஆனால் தனியாகத் தெரியும் மனநிலை பாதித்த ஜானி பாத்திரம் எல்லோர் மனத்தையும் கொள்ளையடிக்கும் பாத்திரம். அது உலகப்புகழ் பெற்ற புதினமான மிக்கேல் ஷலகோவ் எழுதிய கன்னிநிலம் புதினத்தில் வரும் ஷ்சுக்கார் தாத்தாவின் பாத்திரத்திற்கு இணையான பாத்திரம். ஆனால் வடசென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் பகுதிக்கு இரண்டுபேரை பார்க்க முடியும். அவர்களோடு உரையாடுவது அவ்வளவு சுவாரஸ்மாக இருக்கும்.

மேலும், படத்தினை ஒரு தலித் படமாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மெட்ராஸ் தலித்துகள், மீனவர்கள், வன்னியர்கள், முதலியார்கள், இசுலாமியர்கள் ஆகியோருக்கு சொந்தமான படம். ஏனெனில் இவர்கள்தான் மெட்ராஸ் மண்ணின் மூலக்குடிகள். மற்றவர்களெல்லாம் வந்து குடியேறியவர்கள்.

எனினும் மெட்ராஸ் உறக்கத்தைக் குலைக்கக்கூடிய அளவில் உருவாக்கிய கேள்விகள் என்ன? அது பயணம் செய்த களம் எதை உருவாக்கும் என்பதைப் பற்றி பின்னொரு தருணத்தில் விரிவாக விவாதிக்க முயல்கிறேன்.

அன்புடன்

சன்னா

30.09.2014

Author: admin

want to be a light and promote the justice

2 thoughts on “மெட்ராஸ் – நிசத்தின் பிம்பம்

  1. Anna…!! Miga Azhakana Pathivu…!! Kadhai, Thiraikathai, Nadippu… endru pothuvaaga ezhutha padum tamizh cinema vimarsanathil irunthu vithiyaasapattu, samooga thalathil irunthu neengal koduthu irukkum Paarvai iga mukkiyamaana thondraaga padukirathu…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *