உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும்
என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.
பெங்களூர் நகரம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்ட போது திடீரென தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் காவிரியைக் காட்டி மோதலை உருவாக்கியது யார். பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி பெருமளவிலான நிலங்களை இந்திய ராணுவத்திற்கு வளைக்கப்பட்ட போது கன்னடர்கள் தமிழர்களிடம் காவிரியைத் தரமாட்டோம் என கலவரம் செய்துக்கொண்டிருந்தார்கள், மத்திய அரசு காரியத்தை முடித்துக் கொண்ட பிறகு கன்னடர்களுக்கு பித்து தெளிந்து விட்டது. ஆனால் அவர்கள் தமது மண்ணை இழந்தார்கள். வாழ்வை இழந்தார்கள். அவர்கள் பேசிய வீராப்பு இப்போது எங்கே போனது, காவிரிக்க தடை போட மழை மேகங்களைத் தவிர யாரால் முடியும்.
இப்போது பழையக் காட்சிகள் புதிய வடிவில் முளைத்துள்ளது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கடந்த 20 ஆண்டுகளாள கனன்று வரும் தீவிரமான பிரச்சினை. தமிழர்களின் தலைமுறைகளை நாசம் செய்யக்கூடியப் பிரச்சினை. அதனால் தமது உயிரைப் பணையம் வைத்து அணு உலையை மூட வேண்டும் எனப் போராடி வருகின்றனர். மத்திய அரசு எவ்வளவோ பேசியும் மக்கள் மசியவில்லை. அவர்களுக்கு நன்றாகத் தெரியும் போபாலில் என்ன நடந்தது என்றும், ரஷ்யாவின் செர்னோப்பிலில் என்ன நடந்தது என்றும், ஜப்பானின் புகுசிமாவில் என்ன நடந்தது என்றும் நன்றாகவே தெரியும். எனவே தமது சந்ததிகளைக் காக்க அவர்கள் உயிரை பணையம் வைக்கிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் எப்படியெல்லாம் நாடகம் ஆடுகின்றன என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பை அரசின் எந்தத் துறையும் கட்டுப்படுத்த முடியவில்லை எனவே கேடுகெட்ட ஒரு மாற்று வழிகை மைய அரசு இப்போது களமிறக்கியுள்ளது அதுதான் முல்லைப் பெரியாறு பதட்டம்.
அணை இன்று இரவே உடைந்து விடும் என்பது போன்ற ஒரு பயத்தை உருவாக்கி அதை பூதாகாரப் படுத்தியது கேரள மாநில காங்கிரஸ்தானே. வெட்கமே இல்லாமல் இடதுசாரிகளும் இதில் கைகோர்த்துள்ளார்கள். மாநில எல்லையில் பதட்டம் என உளவுத்துறையின் கையாட்களான பத்திரிக்கைகளும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டு பதட்டத்தை அதிகப்படுத்தினார்களே ஏன்? காரணம் ஒன்றுதான் கூடங்குளம் போராட்டத்தை திசைத் திருப்பவும், மக்களிடையே உருவாகியுள்ள அணு உலை எதிர்ப்பினை மழுங்கடிக்கவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதிதான் முல்லைப் பெரியாறு திடீர் பிரச்சினை. எனவே தோழர்களே முல்லை பெரியாறு அணைப் பிரச்சினைக் காரணம் காட்டி நம்மை அணுகுண்டுச் சோதனைக்கு உட்படுத்தும் மத்திய அரசையும், கேரள மாநில அரசையும் அம்பலப்படுத் துங்கள். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால் கூடங்குளம் போராட்டம் தோற்கடிக்கப் பட்டிருக்கும்.. நீங்கள் உண்மையை உணரும்போது.