கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த போராட்டத்தை யார் வழி நடத்துவது, யார் அந்த போ ராட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவது என்று நமது தமிழ்த் தேசியவாதிகள் முன்னெடுத்தப் போராட்டம் யாவரும் அறிந்ததே. அந்த அறியாப் பதர்கள் பதட்டமடைந்து எங்கே மாணவர்கள் தம்மை விட்டுப் போய்விடுவார்களோ என்ற பயத்தில் பலவாறாக உளறிக் கொட்டினார்கள்.
தமது தமிழ்த் தேசியவாதிகளின் நேர்மைதான் பிரசித்தமானதாயிற்றே. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தினை கடந்த ஆண்டு ஆதரித்து போராட்டத்தினை முன்னெடுத்தவர்தகள், அதைவிடக் கடந்த வாரம் அதே போராட்டத்தினை முன்னெடுத்தவர்கள் டெசோவும் அதே தீர்மானத்தை ஏற்றுக் கொண்டவுடன் உடனே பெரிய பல்டி அடித்து அமெரிக்காவையே எதிர்க்கத் தொடங்கினார்கள். அதாவது திமுகவை எதிர்க்கத் தொடங்கினார்கள்.
ஏனெனில் திமுக எதுவொன்றைச் செய்தாலும் அது செயலலிதா அம்மையாருக்குப் பிடிக்காதல்லவா, அதனால் அவர் மனம் கோணாமல் இருக்க இவர்கள் அந்தர் பல்டி அடித்தார்கள். நெடுமாறன், வைகோ, சீமான், மற்றும் பல உதிரிகளும்கூட விதிவிலக்கின்ற ஒரே நேர் கோட்டில் நின்றார்கள். லயோலா மாணவர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தை கைப்பற்ற நினைத்தவர்கள் அதில் தோற்றுப்போய், அந்த மாணவர்கள் முன்னெடுத்தப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தனர். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஈழத்தாய் ஜெயலலிதா அவர்கள் மாணவர்களை கைது செய்து உண்ணாவிரதத்தை கைவிட செய்தார். இந்த கேவலத்தை நமது மாண்புமிகு த
மிழ்த் தேசியவாதிகள் (இப்படிச் சொல்வதால் தமிழக அமைச்சர்கள் கோபிக்கக்கூடாது) ரசனையோடு வேடிக்கைப் பார்த்தார்கள். மருந்துக்குக்கூட ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை.
ஆனால்
இவர்களின் இரட்டை வேடத்தைப் புரிந்துக் கொண்ட மாணவர்கள் போராட்டத்தை தன்னிச்சையாக தமிழகம் முழுதும் முன்னெடுத்தார்கள். இதை தமிழ்த் தேசிய ஆற்றல்கள் (சக்திகள்) எதிர்பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இவர்களின் ஜம்பமெல்லாம் சென்னையில் மட்டும்தானே. மற்ற இடங்களில் இல்லை என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே. பரவும் போராட்டத்தை கைப்பற்ற முடியாமல் கைபிசைந்து நின்றார்கள். ஈழத்தை இவர்கள் மட்டும்தானே வாங்கித் தரமுடியும். வேறு யாருக்கும் அந்த ஆற்றல் இல்லையே.. மாணவர்களுக்கு மட்டும் எப்படி அந்த ஆற்றல் வரும் என்று மண்டையைக் குடைந்துக் கொண்டார்கள். ஈழத்தை வைத்து எதிர்காலத்தை கைப்பற்றக் கனவு கண்ட அவர்கள் கையறு நிலையில் நின்றனர். மாணவர்கள் மனம் இறங்கி போராட்டதைக் கைவிட்டால் மட்டுமே இவர்களுக்கு வாழ்வு. இதைப் புரிந்துக் கொண்ட ஈழத்தாய் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஒரு பெரிய அறிவிப்பை இன்று மாலை அறிவித்தார். அதுதான், அனைத்துக் கல்லூரிகளும் மார்ச் 20ஆம் நாள்வரை விடுமுறை என்ற அறிவிப்பு.
முதல்வரின் அறிவிப்பைக் கேட்ட மாணவர்கள் திகைத்துப் போனார்கள். இன்று மாலையே அனைத்து விடுதிகளும் மூடப்பட்டன. மாணவர்கள் தமது ஊர்களுக்குப் போய் சேர்வதற்கு பயணச் செலவும் கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டன. நட்ட நடுச் சாலையில் விடப்பட்ட மாணவர்கள் போராட்டதைக் கைவிட்டு ஊர் போய் சேரவேண்டிய நிலைமை. இப்போது தமிழ்த் தேசியவாதிகளின் கையில் போராட்டம் வந்து சேர்ந்துவிடும் என்று நம்பலாம். ஈழத்தாய் கை‘கொடுத்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். இனி ஈழமே கிடைத்தது போல அவர்கள் மகிழ்வார்கள். ஜெயலலிதாவிற்கு எதிராக வாயைக்கூடத் திறக்கமாட்டார்கள். ஏனெனில் ஈழப் பிரச்சனைக்கு கருணாநிதி மட்டும்தானே துரோகி. அந்தப் பட்டத்தை அவர் மட்டும்தானே சுமக்க வேண்டும். அவர் சுமந்தால் மட்டும்தானே தமிழ்த் தேசியர்கள் தப்பிக்க முடியும்..
இந்நிலையில் நமது தமிழ்த்தேசிய போராளி அய்யா நெடுமாறன் அவர்கள் •மாணவர்கள் போராட்டத்தை நசுக்காமல், ஒடுக்காமல் தமிழக அரசு செயல்படுவதைப் போல புதுச்சேரி அரசும் செயல்பட வேண்டும்• என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.. எப்பேர்கொத்த வெட்கங்கெட்ட ஒப்பந்தம்.
தமது விடுதியில் உண்ணாநோன்பிருந்து போராட்டம் நடத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டுக் கிளம்பும்போது இன்று இதைச் சொன்னார்கள்.
ஜெயலலிதா அம்மையார் அறிவிப்பு – எல்லோருக்கும் ஈழம் கூரியரில் அனுப்பப்படும், மாணவர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள்.
சன்னா 15.3.2013