இந்திய வரலாற்றில் அவ்வளவாக அறியப்படாத ஒரு புதிர். ராசபுதனத்தை ஆண்ட ராசபுத்திரர்கள் எவ்வாறு திடீரென மறைந்துப் போனார்கள் என்பது. இந்து அரசாட்சியின் அத்தனை கோரங்களையும், மிகக்கொடுமையான சதி உள்ளிட்ட வழக்கங்களையும் கடுமையாகப் பின்பற்றிய ராசபுத்திரர்களின் திடீர் மறைவு வரலாற்று ஆசிரியர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இதைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கேள்வி எழுப்பினார். ராசபுத்திரர்களின் மறைவைப் பற்றி கவலைப்படும் வரலாற்றாய்வாளர்கள் தீண்டத்தகாத மக்களின் வரலாற்றைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா என்று அவர் வினவினார். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை. எனவே இது ஒரு புதிர் என்றாலும், பண்டிதரின் நூற்றாண்டு நினைவேந்தயை யொட்டி அவருக்கு குரு வணக்கம் மேற்கொள்ளும் இத்தருணத்தில் அதே கேள்வியை இப்போது கேட்கத் தோன்றுகிறது.
பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ம் நாள் பிறந்தார். 1914 மே மாதம் 5ம் நாள் மறைந்தார். அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமானால் அக்காலக் கட்டத்தின் கொந்தளிப்புகள் நம் மனத்திரையில் விரிவதைக் காணமுடியும். பண்டிதரின் 1870களில் சமூக மாற்றத்திற்கான தீவிரமான தமது அடிப்படைகளை வகுத்து செயல்படத் தொடங்கியிருக்கிறார். அவரின் நண்பரான ரெவரெண்ட் ஜான்ரத்தினம் அவர்களுடன் ‘திராவிடப் பாண்டியன்’ இதழில் தமது பங்களிப்பை மேற்கொள்கிறார். ரெவரெண்ட் ஜான்ரத்தினம் அவர்கள் 1887ல் சென்னையில் முதன்முதலாக ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். மாலை நேரப் பள்ளிகளைத் திறந்து தலித் மக்களிடையே கல்வி விழிப்புணர்வை உருவாக்கினார். அதே காலக்கட்டத்தில் 1880களின் தொடக்கத்திலேயே ஆதிதிராவிடர் மகாஜன சபைக்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது 1890ல் உருவானது. 1892ல் திராவிட மகாஜன சபையினை பண்டிதர் உருவாக்கித் தமது அரசியல் பணிகளை முன்னெடுக்கிறார். இதே காலக்கட்டத்தில்தான் ரெட்டமலை சீனிவாசம் அவர்களும் பறையர் மகாஜன சபையை உருவாக்கி தமது பணிகளை மேற்கொள்கிறார். எனவே மூன்று விதமான அரசியல் போக்குகள் தலித் தலைவர்களிடத்திலே காணப்பட்டது. ஒட்டுமொத்த தலித் அரசியல் தளத்தில் அது தீண்டத்தக்கவர், எதிர் – தீண்டத்தகாதார் தற்கால வார்த்தைகளில் சொல்வதென்றால் தலித்-தலித் அல்லாதார் என்ற அரசியல் முரணாக வெளிப்பட்டு நின்றது. இந்தப் போக்கு 1885ல் தொடங்கி 1912வரை சுமார் 27 ஆண்டுகள் நிலைத்தது.
இப்போக்கு பண்டிதரின் மறைவையொட்டி நலிவடையத் தொடங்கியது. அவருக்குப் பிற்பாடு மாபெரும் தலைவர்களாக வளர்ந்த ரெட்டமலை சீனிவாசம், இளையத் தலைவராக வளர்ந்து, அகில இந்தியாவெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக மிளிர்ந்த மயிலை சின்னசாமி ராஜா என்ற பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் மற்றும் பல தலைவர்கள் 1930வரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றை தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கினார்கள்.
அரசியல் தளத்தில் இப்படி நடந்ததென்றால் பண்பாட்டுத் தளத்தில் மாபெரும் பாய்ச்சலையே நிகழ்த்தினார்கள். பண்டிதர் 1899ல் ஒடுக்கப்பட்ட மக்களின் தாய் மதமான பௌத்தத்தை மீட்டெடுக்க முனைந்தார். பல்லவர்கள் காலத்தில் தொடங்கிய சைவ – வைணவ இயக்கத்தின் எழுச்சியினால் அழிக்கப்பட்ட பௌத்ததை சுமார் 1000 ஆண்டுகள் கழித்து மீட்க முடியும் என்கிற அசாத்தியத் துணிச்சலோடு களத்தில் இறங்கினார். கடுமையான ஆய்வுகளை முன்னெடுத்தார். பார்ப்பனீயத்தை அதன் ஆணி வேரிலிருந்து அம்பலப்படுத்தினார். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட மக்கள் எவ்வாறு பௌத்தத்திலிருந்து விரட்டப்பட்டார்கள், தொழில்களின் சூத்திரதாரிகளாக இருந்த சூத்திரர்கள் நான்காம் வர்ணம் என்ற இழிநிலைக்கு எவ்வாறு ஆளானார்கள் என்பதை அம்பலப்படுத்தினார். அதனால் தீவிர நாத்திகராகவும், பகுத்தறிவுவாதியாகவும் இயங்கிய பண்டிதரை தலித் மக்கள் மட்டுமின்றி தலித்தல்லாத மக்களும் பின்தொடர்ந்தார்கள். எனவே பண்டிதரின் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கம் தமிழகம் தாண்டி கர்நாடகம், மராட்டியம், பீகார், ஆந்திரம், பர்மா உள்ளிட்ட பல பகுதிகளுக்குப் பரவி வலுத்து நின்றது.
மற்றொரு புரம் சைவ – வைணவ மதத்திலிருந்தே சாதியையும் பார்ப்பனீயத்தையும் எதிர்க்க முடியும் என்று பி.வி.சுப்ரமணியம் பிள்ளை, மயிலை சின்னசாமி, ரெட்டமலை சீனிவாசம், சாங்குசித்த சிவலிங்க நாயனார், சுவாமி தேசிகானந்தா உட்பட பல தலைவர்களும் போராடினார்கள். அதேபோல மேற்கண்ட மதங்களை விட்டு வெளியேறி கிறித்துவம் தழுவி தீண்டமைக் கறையை அகற்ற முடியும் என்று ரெவரெண்ட் ஜான்ரத்தினம், ராஜேந்திரம் உள்ளிட்ட பலர் கிறிஸ்தவர்களாக முயன்றார்கள்.
இந்த இரண்டுவிதமானப் போக்குகள் அன்றைய சென்னை மாகாணத்தின் அறிவுத்தளத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கின. வைணவ – சைவ மதங்களின் பின்னணியிலிருந்து இயங்கியத் தலைவர்கள் இலக்கியத் தளத்தில் ஆற்றியப் பங்கு புதிய போக்கினை உருவாக்கியது. இந்து மதத்தின் தத்துவங்கள், உபநிடதங்கள், புராணங்கள், இலக்கியங்களுக்கு புதிய விளக்கத்தினை கொடுத்து, அதனுள் இருந்த இடைச் செறுகல்களை அம்பலப்படுத்தி, தூய்மைப்படுத்தும் இலக்கியங்களும், இதழ்களும் உருவாயின. தொடரும் மரபின் புது மரபாய் அது இருந்தது.
பண்டிதர் இந்த மரபுகளையெல்லாம் உடைத்து புதிய விளக்கத்தினை முன்னெடுத்தார். பார்ப்பனர்கள் உரிமைக் கொண்டாடும் மதமும் அதன் தத்துவ இலக்கியங்களும் அவர்களுக்குச் சொந்தமானதல்ல, அவர்கள் அதை தமதாக்கிக் கொண்டார்கள் என்று புதிய கோணத்தில் அம்பலப்படுத்தினார். அவர்கள் உரிமைக் கொண்டாடும் எல்லாவற்றிற்கும் பௌத்த அடிப்படைகளை கண்டுபிடித்து மக்கள் மன்றத்திற்கு கொண்டுசென்றார். அதனால் பெரும் அறிஞர்கள் அவரது தோழர்களாக உடன் வந்தனர் என்பதெல்லாம் எதேச்சையானதல்ல. எனவே பண்டிதரின் சிந்தனைகள், எழுத்துகள் எல்லாம் கடந்த கால மரபுக்கும் எதிர்கால நவீனத்திற்கும் ஒரு பாலமாக, ஒரு திறப்பாக மிக பிரமாண்டமாக எழுந்து நின்றன. அவரின் சிந்தனைகள் புதிய வாசலைத் திறந்து மரபான தொடருக்கு வழிகாட்டின என்றால், அதனுள் இருந்த செறிந்த தன்மை மட்டுமே வெகுமக்கள் உள்வாங்குவதற்கு கொஞ்சம் திணறலை உருவாக்கியது. அதை எளிமையாக்கி ஒரு யாதார்த்தமான போக்கை அவரது சீடர்கள் குறிப்பாக க.அப்பாதுரை, தி.பெரியசாமி புலவர் ஆகியோர் உருவாக்கினார்கள். (இது குறித்து விரிவாக ஆராயும் ஞான. அலாசியசின் கட்டுரை இத்தொகுப்பில் உள்ளது.)
இப்படிப்பட்டக் காட்சிகள் நடந்த காலகட்டத்தில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல், தன்னுள் பற்றிய அறத்தீயை சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் ஒளியாக மட்டுமே பண்டிதரும் அவரைப் பின்பற்றியவர்களும் பார்த்தார்கள். அதனால்தான் தென்னிந்தியாவில் சமூகப் புரட்சியை கருத்தியலாகவும், இயக்கமாகவும் தொடங்கி வைத்தவராக பண்டிதர் அறியப்படுகிறார். ஆனால் அவர் காலத்தில் பண்டிதரும் பிறரும் உருவாக்கிய மாபெரும் சமூகக் கொந்தளிப்பை வணிகர்கள் நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள், மிராசுகள் என ஒரு பெரும் கூட்டம் அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பயன்படுத்திக்கொள்ளும் ஒரு போக்கும் உருவாகி வளர்ந்திருந்தது.
ஆனால், இவையெல்லாம் இளைய சமூகத்திற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும், கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய வரலாற்று மாற்றத்திற்கான அடிப்படைகளை உருவாக்கிய பண்டிதரும் அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவர்கள் அத்தனைபேரும் சுவடே இல்லாமல் வரலாற்றின் பக்கங் களிலிருந்து துடைக்கப்பட்டார்களே ஏன்? ஒற்றைப்பட்டையான வரலாற்றைக் கட்டமைத்திருக்கும் கல்விப்புல பாடத்திட்டங்களில் இவர்களது வரலாறு துடைக்கப்பட்டது ஒரு மோசடியான அறியாமையாக இருக்காலாம். ஆனால், முற்போக்கான வரலாற்று ஆய்வாளர்களும், இயக்க அறிவுஜீவிகளும் இந்த மாபெரும் மறைப்பை பார்க்காமல் இத்தனை நாள்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. எனவே இன்றைய தலைமுறையினருக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இந்த மறைவான தளத்திற்குப் பின்னே இருக்கும் அரசியலைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதுதான்.
பண்டிதர் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரது கொள்கைகளுக்கான தேவை இன்னும் இருக்கிறது என்றால் சமூகம் இன்னும் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவில்லை என்றுதானே பொருள். எனவே பண்டிதர் நூற்றாண்டு நினைவு நாளில் அவரை நினைவுக்கூர்வது என்பது, அவருக்கானதுமட்டுமல்ல, அவரோடு களப்பணியாற்றிய அத்தனை பெரியோர்களுக்கும் அவர்கள் அளித்த கருத்தியலுக்கும் சேர்த்துதான். அதுமட்டுமின்றி பண்டிதர் உருவாக்கிய சமூக புரட்சியின் பாதையின் தொடர்ச்சியாய் அவர் கைமாற்றித் தந்த விடுதலை ஒளியை ஏந்திச் செல்லும் இயக்கமாக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை. அதனால்தான் அவரது நூற்றாண்டு நினைவேந்தலை கட்சி முன்னெடுக்கிறது. எனவே கட்சிக்கும் இந்த மலரை வெளிக்கொண்டுவர அனுமதித்து ஊக்கமூட்டிய தலைவர். தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சூத்திரர்கள் வரலாற்றை எழுதிய அம்பேத்கர் அவர்கள் மகாபாரதத்தின் சாந்தி பருவத்தை எழுதியவருக்கு தன் நன்றியினை தெரிவித்தார். ஏனெனில் பைஜாவன் என்ற சத்திரியனை சூத்திரனே என்ற அழைப்பதாக வரும் சுலோகம்தான் சூத்திரர்களின் மூலத்தை மீட்டெடுக்க அவருக்கு உதவியது. அதுபோல இங்கே அறிஞர் அன்பு.பொன்னோவியம் அவர்கள் மட்டும் இல்லையெனில் பண்டிதர் உள்ளிட்ட மற்றத் தலைவர்களின் வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் போயிருக்கும். எனவே மறைந்த பொன்னோவியம் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இத்தொகுப்பு நூல் வெளிவர உதவி புரிந்த பாலசிங்கம், இளம்சேகுவேரா, இளந்திரையன், ஒளியச்சாக்கத்திற்கு உதவிய நீல தமிழேந்தி, கவினி, தாமரை வண்ணன், கணிணி தொடர்பான உதவிகளை செய்த சீறிதர் கண்ணன், தரவுகள் சிலவற்றை சேகரித்துக் கொடுத்துவிய புலவர் வே,பிரபாகரன் மற்றும் கிருபா முனுசாமி, நூலை வடிவமைத்து, அச்சிட்ட சென்னை – 2, முல்லை அச்சகத்தாருக்கும் நன்றிகள் பல.
நூலிலுள்ள பெரும்பாலான ஆவணங்கள், புகைப்படங்கள் 1996ஆம் நானும் தோழர் பாஸ்கர் ராய் அவர்களும் உருவாக்கிய சங்கம் ஆவணத் தொகுப்பிலிருந்து எடுத்தாண்டிருக் கிறேன் எனவே அவ்வமைப்பிற்கு நன்றி. மேலும் தொகுப்பில் உள்ள கட்டுரையாளர்களுக்கு நன்றிகள் பல. இறுதியாக என்னைப் பொறுத்துக்கொண்டு எனக்கு உறுதுணையாக நிற்கும் குடும்பத்தாருக்கும் நன்றிகள் பல..
இவண்.
கௌதம சன்னா
(பண்டிதரின் நினைவு நூற்றாண்டினையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் வெளியிட்ட நினைவு மலரின் முன்னுரை)