பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் பழனிகுமார் சாதி வெறிபிடித்த கள்ளர்களால் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை திட்டமிட்டு நடத்திய தாக்குதலினால் ஆறு பேர் படுகொலைச் செய்யப்பட்டனர். பச்சைப் படுகொலையை காவலர்கள் நடத்திய விதம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 3 பேரை அடித்தே கொன்று போட்டது காவல் துறை. 3 பேரை துப்பாகக்கியால் சுட்டுக்கொன்றது.
இதற்கும் மேலாக முதல்வர் செயலலிதா நியாயப்படுத்தி கள்ளர்களை உசுப்பும் விதமாக சட்டசபையில் பேசிய விதம் அவரது தலித் விரோதப் போக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக காட்டியுள்ளது. எதிர்கட்சித் துணைத் தலைவர் ராமச்சந்திரனின் சாதி வெறிப்பற்று சந்தியில் இளிக்கிறது.
கடிதமாய் எழுதுபவர், வறுமை ஒழிப்பவர், இலையை மலர வைப்பவர், புயலாய் சீறுபவர், கட்டாந்தரையில் ஏர் ஓட்டி கதிர் அறுப்பவர், துக்க நாளில் மட்டும் மெழுகு ஏந்துபவர், கால்கடுக்க நடப்பவர், இலங்கையில் மட்டுமே தமிழர்கள் மரணத்தை’ காண்பவர், துக்கம் பொங்கும் தூரிகையாளர், கண்ணீர் வடிக்கும் இதழாளர் என தமிழர்களய் திரிந்தவர்கள் எங்கே போனார்கள்..
பரமகுடியில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்று சொல்கிறார்கள்.. அது உண்மையா என்பதை தயவுசெய்து யாராவது கண்டுபிடித்துச் சொன்னால் நலமாக இருக்கும்.