துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள்
1
இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து பெறவேண்டுமானால் தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் மட்டுமே ஆதாரங்களாய் இருக்கின்றன. ஏனெனில் இவை மட்டுமே மிகப்பழமையானவை. எனவே இலக்கியங்களிலிருந்துத் தொடங்க வேண்டும் என்பது நிலைத்து நிற்கிற ஒரு வரலாற்று விதி.. அந்த விதியை இப்போது பின் தொடர்வோம். ..
இந்தியாவில் வடமொழி இலக்கியங்கள் இந்து மதத்தின் அடிப்படைகளை தாங்கி நிற்கின்றன என்பது ஏற்கெனவே ஏற்றக்கொள்ளப்பட்ட ஒன்று, என்றாலும் அவற்றில் ஒரு படைப்புக் கதையினை மட்டும் நாம் பார்க்க முடியாது, பல கதைகள் அவற்றில் இருக்கின்றன, மட்டுமின்றி அவை உண்மையானவை என்றும் நம்பப்படுகின்றன. இந்நிலையில் அதை எங்கிருந்து தொடங்குவது என்பது என்கிற வரையறையை நாம் வகுத்துக்கொண்டால் விடை பெறுவது எளிது. எல்லாவற்றிகுமான விடைகளை நான்கு வேதங்களும் தருகின்றன என்று தொடர்ந்து இந்துக்கள் சொல்லி வருகிறார்கள் அல்லவா..! அந்த வேதங்களின் முதன்மையான ரிக் வேதம் மனிதன் படைப்பை எப்படி காட்சிப் படுத்துகிறது என்பதிலிருந்துத் தொடங்கினால் பொருத்தமாக இருக்கும். (பின்வரும் மேற்கோளை டாக்டர்.அம்பேத்கர் எழுதிய சூத்திரர்கள் யார் என்கிற நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுத்தாளப்பட்டது)
ரிக் வேதம். பத்தாவது மண்டலத்தின் தொண்ணூறாவது பாடல்:
1. புருடன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரம் கால்களும் உள்ளவன், அவன் புவியின் எல்லாப் பக்கங்களிலும் பரவி அதைவிடப் பத்து விரல்கள் அளவுக்கு மிஞ்சி நிற்கிறான்.
2. புருடனே இதுவரை இருந்து வந்துள்ள இனி இருக்கப் போகும் இந்த முழுப் பிரபஞ்சமும் ஆவான். அவன் அரீயமையைத் தரும் தலைவன், அவன் சீவர்களின் உணவாக எங்கும் பரவுகிறான்.
……
4. புருடனுடைய முக்கால் பாகம் மேலே ஏறிற்று, இந்த உலகத்தில் மிகுதியாக கால் பாகம் அடிக்கடி இயங்குகின்றது. அது பல வடிவங்களில் உயிருள்ளவறிற்கும் உயிரற்ற பொருள்களுக்கும் சென்றது.
5. அவனிடமிருந்து விராஜன் பிறந்தான். விராஜனிடமிருந்து புருடன் பிறந்தான்,. அவன் பிறந்தவுடன் முன்னும் பின்னும் இருத்ததைவிடப் பூமியைப் பெரிதாக்கினான்.
6. தேவர்கள் புருடனைப் பலிப் பொருளாக்கி யக்ஞத்தை நடத்தியபோது, வசந்தம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. சரத் காலம் அதன் அவிப் பொருளாயிற்று.
……
8. ஸர்வாத்மாவான புருடனைப் பலியிட்டு நடத்திய யக்ஞத்திலிருந்து தயிரும் நெய்யும் தோன்றின. அவை வானத்தில் சஞ்சரிக்கும் பிராணிகளையும் சாதுவான விலங்குகளையும் கொடிய வனவிலங்குகளையும் உருவாக்கின.
9. எங்கும் வியாபித்த இந்த யக்ஞத்திலிருந்து ரிக் மற்றும் சாம வேதங்கள் தோன்றின. அந்த யக்ஞசத்திலிருந்து சந்தங்கள் பிறந்தன. பின்பு யசூர் வேதம் தோன்றியது.
…….
11. தேவர்கள் புருடனைக் கூறுபோட்டபோது எத்தனை விதமாக கூறுபோட்டார்கள்? எது அவனுடைய முகமானது? எவை கைகளாகவும், தொடைகளாகவும், கால்களாகவும் ஆயின..?
12. பிராமணன் அவனது வாயானான், ராஜஸ்யன் (சத்திரியன்) அவனது கைகளானான், அவனுடைய தொடை பாகம் வைசியனாயிற்று, அவனுடைய பாதங்களிலிருந்து சூத்திரர் பிறந்தனர்.
– இவற்றைப் பார்க்கும்போது மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ரிக் வேதம் ஏதும் கூறவில்லை. மாறாக நேரடியாகவே மனிதர்கள் நான்கு வர்ணங்களாகப் படைக்கப்பட்டனர் என்று தெளிவாக்குகிறது. ஆனால் இந்தப் படைப்புக் கதை ரிக் வேதத்தில் இடைச் செறுகலாக பிற்காலத்தில் சேர்க்கப்£ட்டது என்று டாக்டர். அம்பேத்கர் நிறுவியிருக்கிறார். ஆயினும் அக்கதைக்கூறும் கோட்பாடுகள் பிற்காலத்தில் உருவான மனுதர்மத்தில் நிலைநிறுத்தப்பட்டது. கி.பி400ல் எழுதப்பட்டதாகக் கருத்தப்படும் மனுதர்ம சாத்திரத்தில் படைப்புக் கதை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மனு தர்ம சாஸ்த்திரம். பிருகு சம்ஹிதையின் முதலத்தியாயம்:
ச. மஹானுபாவாளான மஹா ருஷிகளுக்கும் சந்தேகந் தெளிவிக்கத்தக்க ஞானதேஜசை யுடைத்தான, அந்த மநுப் பிரஜாபதியானவர், இவ்வண்ணமாக அந்த ருஷிகளாலே கேட்கப்பட்டு, அவர்களைப் பூஜித்து, கேழ்ப்பீராகவென்று சொல்லத் தொடங்கினார்.
ரு. வருணாசிரம தருமத்தைக்கேட்ட, ருஷிகளுக்கு பிரளயக்கால முதல் வருணாசிரம முண்டானதால் முதல் பிரளயக் காலத்தைச் சொல்லத் தொடங்கினார். இந்த உலகமானது பிரளயக் காலத்தில் மூலப் பிரகிரதியில் ஐக்கியமாய் இருளில் மறைந்த பதார்த்தம்போல் கண்ணுக்குத் தோற்றாததாயும், அடையாளமில்லாததாயும், சப்தத்தா லறியப்படாததாயும், தர்க்க சாஸ்திர யுக்தியை கொண்டு நிச்சயிக்கத் தகாததாயும் யாவும் உறக்கினதுபோலும் யிருந்தது.
சு, இவ்வாறு பிரளய கால முடிந்தபின்பு சீவாத்மாக்களைப்போல் கர்மத்தினாலே தேகமெடுக்காமல், தன்னிச்சையினாலே தேகமெடுக்கத்தக்க சுயம்புவான பகவானானவர், கண்முதலான புறவிந்திரியங்களாலேயே கிரகிக்கப்படாதவராயும், ஒருவராலுந் தடுக்கப்படாத சிருஷ்டி முதலிய முத்தொழிலையுடையவராயும், ஆகாய முதலிய பஞ்சமாஹா பூதங்களைப் பிரகாசப் படுத்துகிறவராயும், பிரரதிப் பிரேரகராயும் பிரகாசித்தார்.
அ. அந்தப் பரமாத்வானவர் சகல வுயிர்களுக்கும் இருப்பிடமான தன் சரீரத்தினின்றும் நானவிதமான பிரஜைகளைச் சிருஷ்டிக்க நினைத்த, பிரமாண்ட சிருஷ்டிக்கு முன்னம் ஜலத்தையுண்டு பண்ணி, அதில் தன் சக்திரூபமான ஒரு விதையை விதைத்தார்.
கூ. அந்த வித்தானது சர்வேஸ்வருடைய இச்சையினாலே தங்க நிறமான ஒரு அண்டமாயிற்று, அவ்வண்டத்தில் முன் ஜனனத்தில் பிரம்மப் பட்டத்திற்குதக்க தவசு பண்ணின ஒரு ஜீவனை பிரம்மாவாக சிருஷ்டித்து அவருக்குள் அந்தரீயாமியாய் பிரவேசித்தார். அந்தப் பிரமனுக்கு சர்வலோக பிதாமகனென்று பெயர்,
…
கஉ. முன்சொன்ன அந்த வண்டத்தில், அந்தப் பிரம்மாவனவர், மேற்சொல்லும் கணக்கையுடைய ஒருபிரம்மவருஷம் வசித்து, தன் மனதினாலேயே இந்த வண்டம் இரண்டாகப்போகும்படி நினைத்து, அதை இரண்டு கண்டமாக்கினார்.
கங. அவ்விரண்டு கண்டத்தினுள் மேற்கண்டத்தினாலே சுவர்கத்தையும், கீழ்க்கண்டத்தினாலே பூமியையும், நடுவில் ஆகாசத்தையும், எட்டுத் திக்குகளையும், சமுத்திரத்தையும் சிருஷ்டித்தார்.
(பிறகு உணர்வுகள், சுக துக்கங்கள், தர்மங்கள், விலங்குகள் மற்றும் குணாதிசியங்களைப் படைக்கிறார் பிரம்மன்)
ஙக. உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளினின்றும், பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டுப் பண்ணினார்.
ஙஉ. அந்தப் பிரம்மாவனவர் தன்னுடைய தேகத்தை இரண்டு கண்டமாக்கி, ஒன்று ஸ்திரியாகவும், ஒன்று புருஷனாகவுமாகி அந்த ஸ்திரியினிடத்தில் அந்த புருஷனாகிய தானே புணர்ந்து விராட்புருஷனை யுண்டு பண்ணினார். (மநுதரும சாத்திரம். இராமாநுஜாசாரியார் மொழிப் பெயர்ப்பு, 1889ஆம் ஆண்டு பதிப்பு)
இவர் மூலமாக உலகின் உயிர்கள் மற்றும் பொருட்கள் படைக்கப்பட்டன என போகிறது மனுவின் படைப்புக் கதை.
இந்தப் படைப்புக் கதையை ஒட்டியும் வெட்டியும் ஏராளமான கதைகள் வடமொழி இலக்கியங்களில் நிரவிக் கிடக்கின்றன. மேலும் அவை எல்லாவற்றையும் விவரிப்பது இங்கே சாத்தியமில்லை. (என்பதால் டாக்டர்.அம்பேத்கர் எழுதிய இந்து மதத்தின் புதிர்கள் என்று நூலில் உள்ள இரண்டாம் பகுதியை படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.)
இங்கே இயல்பாக எழும் கேள்வி உண்டு. இந்து மதத்தின் மூலக் கடவுள்கள் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா அல்லவா? வேதங்களிலும் சாத்திரங்களிலும் இவர்கள் உலகைப் படைத்ததாக குறிப்பிடப் படவில்லையே என்று கேட்டால் விடை கிடைப்பது கடினம்தான். ஏனெனில் வேதங்களுக்கு பிறகு எழுதப்பட்ட வேதாந்தங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் பிரம்மாதான் உலகையும் உயிர்களையும் படைத்தார் என்று எழுதப்பட்டுள்ளது. இருந்தும் இப்போது பிரம்மாவை யாரும் மதிப்பதில்லை. வேதங்களில் குறிக்கப்படும் பரமாத்மா தானே தன்னைப் புணர்ந்து படைப்புத் தொழிலை செய்தார் என்கிற குறிப்பை பிற்காலத்தில் பிற கடவுள்கள் தமக்கானதாக மாற்றிக் கொண்டார்கள் என்பதுதான் விந்தையின் விந்தை. அவை புராணங்களாக பிற்காலத்தில் எழுதப்பட்டன.
மேலும், மேற்கண்ட இரண்டு குறிப்புகளிலும் உலகம் படைக்கப்பட்ட காலம் பற்றி குறிப்பிடப்படவில்லை. அது மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது (சாந்தி பர்வம் 348,51-52) அதன்படி திரேதா யுகத்தில் உலகம் படைக்கப்பட்டது. அக்காலத்தில்தான் மனிதர்களும் படைக்கப்பட்டார்கள் என்பது மகா£பாரதத்தின் வாதம். அதன்படி திரேதா யுகத்தின் மொத்த ஆயுள் 12 லட்சம் ஆண்டுகள், அதற்கு அடுத்து துவாபர யுகம், அது 8 லட்சம் ஆண்டுகள் இருந்தது. அதைத் தொடர்ந்துதான் கலியுகம், அதன் மொத்த ஆண்டுகள் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். ஆக மொத்தம் உலகம் மனிதர்களோடு கடந்த 20 லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. மீதமுள்ள கலிகாலம் இனிதான் முடிய வேண்டும்.
இந்த கணக்கை குறிப்பிட காரணம் இருக்கிறது. உலகத்தைப் படைத்தவர் யார் என்பதில் இந்துக்களுக்கு இன்னும் உடன்பாடு வரவில்லை. திரேதா யுகத்தில்தான் கிருஷ்ணர் உலகைப் படைத்தார் என்பது பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்.. அவர் எப்படி படைத்தார் என்பதையும் அவரே சொல்கிறார்…
மூன்றுவித இயற்கை குணங்களுக்கும் அவற்றின் செயல்களுக்கும் ஏற்ப, மனித சமூகத்தின் நால்வகைப் பிரிவுகள் என்னால் ஏற்படுத்தப்பட்டன (பகவத் கீதை 4:3)
எதிரிகளை தவிக்கச் செய்பவனே, தங்களது சுபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ற தன்மையின் அடிப்படையில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேறுபடுத்தப் படுகின்றனர் (பகவத் கீதை 18:42)
கிருஷ்ணர் சொல்வது போல அவர் உலகைப் படைக்கும்போது மனிதர்களில் நான்கு பிரிவுகளோடு படைத்தார். அதாவது வர்ணங்கள் என்படும் பிரிவுகளோடு படைத்தார். காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரம்தான் கிருஷ்ணன் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி. இந்த காக்கும் கடவுள் எப்படி படைக்கும் கடவுள் ஆனார் என்பது கடவுள்களுக்குள் இருந்த வரலாற்றை திரிக்கும் செயல்பாடுகள்தான் காரணம்.
கெடுவாய்ப்பாக, கிருஷ்ணரின் இந்தப் படைப்புக் கதையை மற்ற கடவுள்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சிவபுராணத்தில் வேறு கதை நமக்குக் கிடைக்கிறது. சிவன் அழிக்கும் கடவுள் என்று அறியப்பட்டாலும் அவர் படைப்புக் கடவுளாக எப்படி இருக்கிறார் என்பதை சிவபுராணத்தின் மூலம் அறியலாம். வழக்கமாக அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவன் எல்லாவற்றிற்கும் மூலக்கடவுளாக சைவ இலக்கியங்களால் முன்னிருத்தப்படுகிறார். அதன்படி
சிவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் முன்னம் பின்னும் அற்றவர். பல கோடி கல்ப ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் தான் மட்டுமே சுயம்புவாக அதாவது தான்தோன்றியாக இருந்தார். தன் தனிமையை உணர்ந்த அவர் தேவைக்கருதி தன்னுடைய ஒரு பாதியை பிரித்து சக்தியை படைத்தார். சக்தி அவர் மனைவியாக ஆனார். பின்பு படைப்புகளை உருவாக்கும் பொருட்டு இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசங்களைத் படைத்தனர். அதில் ஐம்பெரும் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய பணிக¬ள்ச செய்ய முறையே படைத்தலுக்காகப் பிரம்மாவையும், காத்தலுக்காகத் திருமாலையும், அழித்தலுக்காக ருத்திரனையும் படைத்தார். எஞ்சிய மறைத்தல், அருளல் ஆகிய பணிகளை தன்னிடமே வைத்துக்கொண்டார் சிவன். பின்பு தான் படைத்த மும்மூர்த்திகளால் பதினான்கு உலகங்களைக் கொண்ட அகிலாண்டம் உருவாக்கப்பட்டது.
இந்த மும்மூர்த்திகளில் முதல்வரான பிரம்மா படைப்புத் தொழிலை மேற்கொண்டு மனிதர்களையும், மிருக வர்க்கங்களையும் மற்ற உயிர் உயிரல்லாதப் பொருட்களையும் படைத்தார்.
இந்த படைப்புக் கதை மிகுந்த கற்பனை மிக்கது என்று எடுத்துக்கொண்டாலும், இதில் பிரம்மன் மனிதர்களை எப்படிப் படைத்தார் என்று விளக்கப்படவில்லை. ஆனால் சிவனை வேதநாயகன் என்று சைவர்கள் சொல்வதால வேதங்களின்படி அவரும் நான்கு வர்ணத்தைப் படைத்தவர் ஆகிறார். எனவேதான் பிற்காலத்தில் உருவான சைவ இலக்கியங்கள் மனிதனை வர்ணத்தோடும் சாதியோடும்தான் சிவனால் படைக்கப்பட்டன என்ற நிறுவின.
இப்படி வேதங்களும், ஸ்மிருதிகளும், மூன்றுக் கடவுள்களும் மனிதன் படைக்கப்பட்ட விதத்தில் முரண்பட்டும் போட்டிப் போட்டுக்கொண்டும் நிற்கின்றன என்பதில் ஆச்சர்யம் படுவதற்கு ஒன்றுமில்லை. அதே நேரத்தில் இந்த படைப்புக் கதைகள் முடிவற்ற தொடர்கதைப் போல இந்து மதத்தின் பிரிவுகளுக்குள் பெருகத் தொடங்கின. தமது கடவுள்தான் உயர்ந்தக் கடவுள் என்று நிறுவ எத்தனித்தவர்கள் உயர்வு தாழ்வு என்னும் நோயால் தாம் பீடிக்கப்பட்டதைப் போலவே தமது கடவுள்களையும் பீடிக்கச் செய்தார்கள். சிறு தெய்வங்களும் துணைத் தெய்வங்கள்கூட படைப்புத் தொழிலில் தம்மை இணைத்துக் கொள்ள போட்டியிட்டன. பல கதைகள் இருந்தாலும் இதற்கு ஓர் மட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்
தேவி மகாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஏழாவது காண்டத்தில் ஒரு படைப்புக் கதை உள்ளது. அதன்படி:
ஒரு யுகத்தில் மகாப்பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. எனவே பிரளயத்திற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட எந்த உயிரினங்களும், தாவரங்களும் காணப்படவில்லை. எங்கும் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் மகாவிஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்துகொண்டிருந்தார்.
அவர் ‘நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்று தன்னுள் யோசித்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூலசக்தி ‘மகாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கைகளில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, சுவேதா, சிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியர் காட்சி தந்தனர். அப்போது மகாதேவி குழந்தையான விஷ்ணுவிடம்.
‘மகாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்சமாகத் திகழும் நீ பிரளயத்துக்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிருந்து (தொப்புள்) பிரம்மன் தோன்றுவான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் படைப்பான். அவன் அழியாத பிரம்மஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம்தான் சிவன். அவன், தமோ குண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, சம்காரம் எனும் அழிக்கும் தொழிலைச் செய்வான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்கும் சக்தியாக நானும் என் அம்சங்களான தேவிகளும் செயலாற்றுவோம்’ என்று அருளினாள் தேவி.
பின்பு, விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மன் தோன்றினார். தாம் தோன்றியதுமே ஸ்ரீ விஷ்ணுவைக் குறித்தும், அம்பிகையைக் குறித்தும் கடும் தவம் இயற்றத் தொடங்கினார் பிரம்மன். ஜகதம்பா எனப்படும் மகாதேவி மற்றும் மகாவிஷ்ணுவின் அனுக்ரகத்தால் பிரம்மன் ஞானச்சுடராக மாறினார். சிருஷ்டி தொடங்கியது. முதலில், பூரண ஞானத்தின் பிரதிநிதிகளாக அத்ரி, ப்ருகு, குத்சர், வசிட்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு ரிசிகள் தோன்றினர். அதன்பின், ஜீவராசிகளை உற்பத்தி செய்யும் பிரஜாபதிகள் தோன்றினர். அண்டங்கள் தோன்றின. ஜீவராசிகள் உருவாகின. புல், புழு, பூச்சி, கடல்வாழ் இனங்கள், நிலவாழ் மிருகங்கள், மனிதன் என படைப்புத் தொடர்ந்தது.
இப்படி படைப்புக் கதைகள் தொடர்ந்தன. பிற்காலத்தில் உருவான ஏராளமான புராணக் கதைகளில் விதவிதமான படைப்புக் கதைகள் இருக்கின்றன என்பது ஒரு புறமிருந்தால். இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய பல அரசுகளும் அதன் அரசர்களும் இக்கதைகளை தமக்குச் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது இன்னும் சுவாரசியமானது.
2
பௌத்த, சமண மற்றும் ஆசீவக அரசர்களைத் தவிர மற்ற அரசர்கள் எல்லோரும் தம்மை கடவுளின் வாரிசுகளாகவே அறிவித்துக்கொண்டனர் என்றால் மிகையில்லை. செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளிட்ட பல சாசனங்களில் இது பற்றின குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் முன்னர் ஆண்டு வந்த சேர, சோழ ,பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்கள்கூட இதற்கு விதிவிலக்கில்லை.
தஞ்சைக்கு அருகில் உள்ள அம்மாப்பேட்டையை ஒட்டிய புத்தூர் என்ற கிராமத்தில் ஒரு கிணற்றில் கிடைத்த செப்பேடுகள் சோழர்களின் பரம்பரையை விளக்குகின்ற ஒரு பகுதிகயை சான்றாகப் பார்ப்போம்,. அதில்:
….
1.திருமகளின் பருத்த இரு திருமுலைத் தடங்களின் குங்கமக் குழம்பினால் அடையாளமிடப்பட்டனவும், (பாற்கடல் னடைந்த ஞான்று) சுழன்று கொன்டிருக்கிற மந்தரமலையினடைய உயர்ந்த குடுமிகளில் உராய்வதனால் மிக்கு ஒளிபெற்ற பொன்னலான தோள்ளைகளை உடையனவும், மூவுலகத்¬யும் காப்பனவும், சார்ங்கம் முதலிய ஆயுதங்களைத் தாங்கித் திகழுகின்றவுமான இந்திர நீலக்கல் போன்ற திருமேனியை உடைய திருமாலின் புயங்கள் உங்களுக்கு வேண்டிய அளவு செல்வத்தைக் கொழிக்கச் செய்வதாக.
…
3. உலகங்கள் அனைத்திற்கும் ஒரு கண்ணாக விளங்கும் கதிரவனிடமிருந்து அரசர்களுக்கெல்லாம் முதல்வனான “மனு” தோன்றினான். அரசர்களின் மணிமுடி வரிகையினால் தழுவப் பெற்ற பாதபீடத்தை உடையவனான இட்சுவாகு என்னும் அரசன் அவனுடைய (மனுவின்) புதல்வனாகத் தோன்றினான். அவனது மரபில் லோகாலோக (சக்கரவாள) மலைவரை நெறி வழுவாத இந்நிலவுகைக் காப்பாற்றியவனும், நான்முகனை ஒத்தவனும், நற்குணங்கட்கு இருப்பிடமானவனுமாகிய மாந்தாதா என்னும் வேந்தன் தோன்றினான்.
… இப்படி தொடர்ச்கியா அரச மரபு விளக்கப்படுகிறது சோழ மரபு. இது போலத்தான் மன்னர்களின் பரம்பரை விளக்கப்படுன்றது. பாண்டியர்கள் பொருத்தவரையில் அவர்கள் சிவனின் வழித் தோன்றல்கள். சேரர்களைப் பொருத்தவரையில் அவர்கள் விஷ்ணுவின் பின்னடியார்கள். பல்லவர்கள் சைவர்கள் சிலர் வைணவர்கள். இப்படி இவர்கள் தம்மை கடவுகள்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள காரணமிருந்தது. அவர்கள் காலத்தில் நிலவிய சாதி அடுக்குமுறைகளை கடவுள் படைத்தார் என்று நம்ப வைக்கப்பட்டிருந்ததால் அதை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு சமூக அமைப்பை அப்படியே பாதுகாத்தார்கள். அதனால்தான் அவர்கள் தமக்கான படைப்புக் கதைகளை உருவாக்கிக்கொண்டு அதை செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்தார்கள். இவைதான் அக்காலச் சூழல்களைப் பற்றி நமக்கு விளக்கும் கண்ணாடிகளாக விளங்குகின்றன.
இது போன்றக் கதைகள் முடிவு பெறாமல் சாதிகளுக்கான கதைகளாக அல்லது தொன்மங்களாக இன்றைக்கும் புனையப் பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையும் அதிகம். இக்கதைகளை நம்புவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்று கேட்டால் பதில் கிடைப்பது கடினம். ஆனால் இக்கதைகள் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள் என்ற கேட்டால் இந்து மதத்தை நம்பும் 99.99 சதவிகிதம் பேருக்கு இவை தெரியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
இனி, இப்போது நாம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு வருவோம். உலகின் தொண்மையாக நாகரீகம் கொண்டுள்ள தமிழர்கள் பண்டையக் காலத்தில் தமக்கான படைப்புத் தொண்மங்களை கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி எழும்.. அதற்கான விடை..
3
தமிழர்களுக்கு உலகப் படைப்புக் பற்றின தொண்மக் கதை ஏதும் இல்லை, அல்லது அதற்கான சான்றுகளும் இல்லை. இருக்கின்ற தொன்மங்கள் எல்லாம் இந்து புராணத் தொன்மங்களே. அதைத் தவிர சிறு தெய்வங்களின் தொன்மங்கள்தான் இருக்கின்றன. தமிழின் மிகப் பழைய இலக்கியமான தொல்காப்பியத்தில் பார்த்தால் படைப்புப் பற்றின கோட்பாடு மட்டும் உள்ளது,அது தத்துவார்த்தமான கோட்பாடு.
தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் உள்ள 1589ஆம் சூத்திரத்தில்
நிலம், தீ. நீர், வளி, விசம்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
இருதிணை ஐம்பால் இயல்நெறி வா£ அமைத்,
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்…
என்று சொல்வது அடிப்படையான பஞ்ச பூதங்களின் சேர்க்கையில் உலகம் உண்டாகியுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. ஆனால் மனித பிரிவுகளைப் பற்றிப் பேசும்போது இதே மரபியல் பகுதியில் சமூகத்தில் அந்தணர், அரசர், வணிகர் மற்றும் வேளாளர் என்கிற பிரிவினை சுட்டிக் காட்டுகிறது. தொல்காப்பியம் சுட்டுவதற்கும் வடநூல்கள் சுட்டிக் காட்டும் வர்ண அமைப்பிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. தொல்காப்பியம் சுட்டும் வர்ண அமைப்பிற்குமான ஒற்றுமெய்களையும் சாதி வேறுபாடுகள் உருவாக தொல்காப்பியம் எப்படி வழிவகுத்தது என்பதை பிறகு பார்ப்போம்,
தொகுப்பாக, இந்த தரவுகள் எல்லாம் ஒரு செய்தியை தொடர்ந்து சுட்டிக் காட்டுவதை வாசகர்கள் கவனிக்க முடியும். இந்திய மற்றும் தமிழ் தொண்மக் கதைகள் கூறும் படைப்புக் கோட்பாடுகள்படி. உலகத்தைப் படைத்த கடவுள் ஆதியில் சாதியை படைக்கவில்லை. அவர் வர்ணங்களை அல்லது நான்கு பிரிவுகளை மட்டுமே படைத்தார் என்பதை உறுதி செய்கின்றன. சொல்லப் போனால் சாதி என்பது இந்தியத் தொண்மங்களுக்கு எதிரானது என்கிற கருத்துக்கு நாம் வந்துவிடலாம். ஆனால் தாம் உருவாக்காத சாதியை பின்னாளில் அதே இந்தியத் தொண்மங்கள்தான் ஆதரித்து நின்றன என்பது வரலாற்று உண்மை.
அதனால்தான் காந்தி மற்றும் ஆரிய சமாஜிகள் சாதி முறைக்கு எதிராக நின்று அதற்கு பதிலாக வர்ண அமைப்புக்கு இந்திய சமூகம் திரும்ப வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இந்திய தொண்மத்தின் ஆதாரம் வர்ணங்கள் என்றால். சாதியின் ஆதாரம் வர்ணங்கள்தான் என்பதை டாக்டர்.அம்பேத்கர் பின்னாளில் நிறுவினார்.
எனவே இவ்வளவு முரண்பாடுகள் உடைய இந்திய படைப்புத் தொண்மங்களை நம்பி தமது சாதியை முன்னிருத்தும் யாரும் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேள்விக் கேட்கலாம். அறிவிற்கும் அறிதலுக்கும் அப்பாற்பட்டு ஒரு சமூகம் உலகில் இருக்கிறது என்றால் அது சாதியை நம்பும் சமூகம்தான்.
இனி உண்மையான அறிவியல் வரலாற்றிற்குள் நுழைவோம்..