பிறப்பது ஒரு வேலையா
இறப்பது ஒரு வேலையா
வாழ்வதுதான் ஒரு வேலையா
வேலையாய் மாறின பிறகு
வேலை மட்டும்தானே வாழ்வு!
ஆண்டுகள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
மணிகள் நிமிடங்கள்
கடைசியாய் நொடிகள்
எல்லாம் ஆள் காட்டிகள்..!
ஊடாட்டம்.. ஊடாட்டம்..
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையிலா ?
நொடிக்குள் இடைவெளி
ஊடாட்ட பெருவெளி
தப்பிக்க முடியுமா…?
காரணங்கள் மறைந்து
காரியங்கள் மீந்த
கணங்களை எண்ணுவது
பிணங்களை எண்ணுவது
பிழைத்தவன் மட்டுமே
செய்யத் துணிவது…!
எல்லோருக்கும் தெரிந்த
எல்லோருக்கும் புரிந்த
உண்மையைச் சொல்வது
பெரும் சாகசம்…!
நல்ல வேலை சொன்னவன்
யாரும் உயிராய் இல்லை..!
பிறந்தவுடன் இறந்துப்போனாய்
வாழ்வது என்ன
அடுத்தவன் வாழ்க்கைத் தானே..
வேலை… பிழைத்தாய்…!