நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன்.
– இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி.
– வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,
– இரண்டுபேரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், வித்யா கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலிருந்து காதல் தொடங்கியுள்ளது. இந்தக் காதலைத் தெரிந்துக்கொண்ட சாதி வெறிபிடித்தவர்கள் 2010 ஆண்டு கரிநாள் அன்று செல்லம்கொட்டாய் ஊர்த் தெருவில் இளவரசனை அழைத்து கண்டித்ததுடன் கடுமையாகவும் தாக்கி அனுப்பினார்கள்.
– 2012 அக்டோபர் மாதம் 8ம் நாள் – வித்யா, தமது காதலை வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள். மேலும் தனக்கு வீட்டில் வேறு மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள் என்று இளவரசனிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
– இருவரும் சேலம் சென்று அங்கு ஒரு கோயிலில் திருமணம் செய்துக் கொள்கின்றர். பதிவுத் திருமணம் செய்துக் கொள்ள முயற்சி செய்தும் அது முடியாமல் போனது.
– அக்டோபர் மாதம் 15ம் நாள் – சேலம் டிஐஜி சஞ்சய் குமார் அவர்களிடம் தம்பதிகளாய் இருவரும் சரணடைகின்றனர். டிஐஜி சஞ்சய் குமார் இருவரையும் தர்மபுரி எஸ்பி அஸ்ரா கர்க் அவர்களிடம் அன்று மாலை 7.30 மணிக்கு அனுப்பி வைக்கிறார்.
– எஸ்பி கர்க் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்து முயற்சி செய்கிறார், பையனின் தரப்பில் அவரது தந்தை மட்டும் வருகிறார், பெண் தரப்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.
– போலிஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டத் தம்பதியினர் இளவரசனின் பாட்டி வீடு உள்ள நல்லம்பட்டி ஒன்றியம், மலையப்பன் நகரில் தங்க வைக்கப்படுகின்றனர்.
– ஊர் தெருவில் உள்ள வன்னியர்கள் நாகராசனை பறையன் சம்பந்தி என்று தொடர்ச்சியாய் அவமதிப்பதை கேட்டு மனம் வெம்பியவர் பஞ்சாயத்து அலுவலக வாசலில்.. வேற ஊர் பறையனை கல்யாணம் பன்னிக் கொண்டிருந்தாக்கூட நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன், ஆனா, பஸ் ஏறக்கூட அந்தப் பயன் வீட்டைத் தாண்டித்தானே போகவேண்டியிருக்குது. அதுதான் கஷ்டமா இருக்கிறது’ என்று புலம்பினார்.
– அக்டோபர் 16 – பாமக ஒன்றியச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமையில் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் பஞ்சாயத்து நடைபெறுகின்றது. அதில் நத்தம் சேரித் தலைவர் சக்தி கலந்துக் கொள்கிறார். பெண்ணை ஒப்படைக்கும்படி கேட்கின்றனர். தீர்வேதும் எட்டப்படவில்லை.
– அக்டோபர் 29 – மீண்டும் பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெறுகிறது. இருவரையும் ஒப்படைக்கவில்லையெனில் தாக்குதல் நடத்துவோம் என மதியழகன் மிரட்டல் விடுக்கிறார்.
– நவம்பர் 4 – 25 கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களின் கூட்டம் நாயக்கன்கொட்டாய் கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்கு பாமக ஒன்றியச் செயலாளர் வி.பி.மதியழகன் தலைமை தாங்குகிறார். வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராசா, வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, அதிமுக கணேசன், செல்லங்கொட்டாய் முருகன், மற்றும் அதிமுக, திமுக, மதிமுக, புரட்சிகர முன்னணித் தோழர்கள் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து செய்கின்றனர். இக்கூட்டத்தில் நத்தம் சேரியிலிருந்து ஊர் தலைவர் சக்தி, பொடா.பழனி, பொடா.துரை, செயராமன் உள்ளிட்ட 15பேர் கலந்துக் கொள்கின்றனர். பெண்ணையும் பிள்ளையையும் 2 நாளில் ஒப்படைக்கவில்லையெனில் தாக்குவோம் என மிரட்டுகின்றனர்.
– நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தலித் தோழர்கள் பாமக மாநிலத் துணை செயலாளர் சரவணன் அவர்களை சந்தித்து கட்டுப்படுத்தக் கோருகின்றனர்.
– பின்பு காவல் துறைக்கு தகவல் தர அவர்கள் வெறும் 20 காவலர்களை அனுப்பி வைக்கின்றனர்.
– நவம்பர் 7 – வெள்ளக்கல் கட்டமேடு என்ற இடத்தில் பெண்ணின் அம்மா தேன்மொழி, சித்தி,பெரியம்மா, பெரியம்மாவின் மகள்கள், சித்தப்பா ஜெகந்நாதன், பாலு, சங்கர், மாரவாடி சக்கரை(தலித்) ஆகியோர் வித்யாயை சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது நத்தத்தைச் சேர்ந்த பொடா.பழனி, பொடா. துரை, செயராமன், கோவிந்தன், சக்தி ஆகியோர் ஒரே வண்டியில் போய் உடன் பார்க்கின்றனர். இவர்களின் சமாதானத்தை ஏற்காத வித்யா ‘எனக்கு சாதி பற்றியெல்லாம் தெரியாது, என்னை என் போக்கிலேயே விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சியழுதபடி மறுத்துவிட்டார்.
அதற்கு அம்மா தேன் மொழி ‘ நீ வரவில்லையென்றால் ஊரில் கலவரம் நடத்த திட்டமிட்டுள்ளனர், உன் அப்பா தூக்கு மாட்டிக்கொள்வார்’ என்று எச்சரிக்கை செய்கிறார்.
– இவை எதையும் வித்யா ஏற்றுக் கொள்ளாமல் கணவன் இளவரசனுடன் பைக்கில் ஏறிச் சென்று விடுகிறார். வித்யாவின் அம்மாவுடன் உறவினர்களும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
– இவர்கள் ஊர் திரும்பும் முன்பே நாகராசன் தற்கொலை செய்துக் கொண்டதாக அவரது பிணத்தை சாலைக்குக் கொண்டுவந்து மாலை 4 மணிக்கு மறியல் செய்யத் தொடங்குகின்றனர். நாகராசன் தற்கொலை செய்துக்கொண்டது அவரது மனைவிக்குக்கூட தெரிவிக்கப்படவில்லை.
– பிணத்தை வைத்து மறியல் செய்தவர்களிடமிருந்து பிணத்தைக் கைப்பற்றிய காவல்துறை நாகராஜ் பிணத்தை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பிவைக்கிறது, அங்கே முதற் கட்டமாக தூக்கிட்டுக் கொண்டார் என்றுத் தெரிகிறது.
– பிணத்தை வாங்க வன்னியர்கள் மறுத்து மூன்று நிபந்தனைகளை வைக்கின்றனர். 1.நாகராஜின் தற்கொலைக்குக் காரணமான தலித்துகள் கைது செய்யப்படவேண்டும், 2. இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்,3. காவல்துறை வசம் உள்ள வித்யாவும் இளவரசனும் உடனடியாக தங்கள் வசம் ஓப்படைக்க வேண்டும், 4. வழக்கு போடப்பட்ட அத்தனை வன்னியர்களும் உடனடியாக விடுதலைச் செய்யப்பட வேண்டும், 5. நாகராசனின் பிணத்தை ஊர்வலமா மாரவாடி தலித் சேரியின் வழியாக காடுவெட்டி குருவின் தலைமையில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
– நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத மாவட்ட காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் பிணத்தை கொண்டுச் செல்லாவிட்டால் தாங்களே நகர மன்றச் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்துவிடுவதற்கான ஆணையை நாகராசனின் வீட்டு கதவில் ஒட்டச் சொல்கிறார், ஆணையைப் பார்த்த வன்னியர்கள் நாங்கள் கூட்டமாக வந்து அடக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்துகின்றனர். நிலையை புரிந்துக் கொண்ட காவல்துறை 10 பேர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து அடக்கத்தை முடிக்கிறது.
– கைது செய்யப்படுவோம் எனத் தெரிந்து வன்னியர்கள் அனைவரும் வீடுகளைக் பூட்டிக்கொண்டு தலை மறைவாகின்றனர்.
– தாக்குதல் சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு காடுவெட்டி குரு தர்மபுரியில் வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்காமல் வேறு ஒரு விடுதியில் ஒரு மணிநேரமே தங்கிவிட்டு மாவட்ட முன்னணி பொறுப்பாளர்களைச் சந்தித்தவிட்டு உடனடியாக வெளியேறுகிறார்.
– வன்னியர்களின் தாக்குதலைப் பற்றி டாக்டர்.ராமதாஸ் அவர்களிடம் புதியத் தலைமுறை கேட்டக் கேள்விக்கு.. ‘தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு கெட்டுவிட்டது’ என்று பதில் சொல்கிறார்.
இப்போது சொல்லுங்கள் நாகராஜ் கொலை செய்யப்பட்டாரா இல்லையா..?