உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்ததுடன் வேறு அணைகள் கட்டுவதற்கும் தடை விதித்தச் செய்தி ஊடகங்களில் வந்தவுடன் அனைவரும் தத்தமது மகிழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். வரவேற்கத் தக்க தீர்ப்புதான் என்றாலும் நாம் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.
நதிநீர் உரிமையை மீட்பதில் ஓர் அரசின் சாதனை என்பது ஒன்றும் இல்லை, அது அரசின் கடமை. கடமையை நிறைவேற்றுவதை சாதனையாக கொண்டாடுவதும் அதற்கு அனைவரும் பாராட்டுத் தெரிவிப்பது ஒரு சடங்கான செயல். ஆனால் பாராட்டியாக வேண்டிய செயல்களை செய்யாமலேயே ஓர் அரசாங்கம் பாராட்டை எதிர்பார்ப்பது ஒரு வெட்கங்கெட்ட செயல் என்பதை உறுதியாக கூறலாம்.
முல்லை பெரியறியாறு தீர்ப்பினால் உடனடியாக விளையப்போவது ஒன்றுமில்லை. வழக்கம்போல கிடைக்கம் நீரில் கூடுதலாக நீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நீர் பிரச்சனை என்பது காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை மட்டுமல்ல….
தமிழகத்தின் நதிகள் பல நீரைக் காணாமலேயே தமது உயிரை விட்டுக் கொண்டுள்ளன. தமிழக மக்களின் நீர் தேவையைப் பூர்த்திச் செய்ய வேண்டுமானால் அது காவிரியாலும் முல்லைப் பெரியாறாலும் மட்டும் ஆகிவிடப் போவதில்லை.
தமிழகத்தில் இந்த இரண்டு நதிப் பிரச்சினைகளை காரணம் காட்டி மற்ற நதிகள் கொள்ளையடிப்பதற்குத்தான் இது போன்றத் தீர்ப்புகள் உதவும். பாலாறு, தென்பென்னை, வட பென்னை, குறத்தியாறு (கொற்றலை), சேயாறு என்ற செய்யாறு, அமராவதி, நொய்யல் போன்ற ஆறுகளைப் பற்றி அரசாங்கம் எப்போது கவலைபட்டது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு பெரிய அணைகளைக் கட்டியது மட்டுமின்றி ஏராளமான தடுப்பணைகளைக் கட்டி (check dams) மழைநீரும் அதனால் கொண்டுவரப்படும் மணலையும் தடுத்து நிறுத்தியுள்ளது. அதனால் வற்றிப்போன இந்த ஆறுகள் மணல் கொள்ளையர்களின் வேட்டைக் களமாக மாறிப்போயுள்ள அவலம் தொடர்கதையாகியுள்ளது. அந்த மணல் கொள்ளையர்கள் யார் என்பது ஊரறிந்த கமுக்கம். நமது திராவிடக் கட்சிகளின் அரசியல்வாதிகள்தான் அந்தக் கொள்ளையர்கள் என்பதை யார் மறுக்க முடியும்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தின் நீர் மேலாண்மைக் கொள்கை என்பது கரிகால் சோழனின் காலத்துக் கொள்கைபோலவே இன்றும் நீடித்துக் கொண்டுள்ளது. கரிகால் சோழனின் கொள்கை அவர் காலத்தின் புதுமையாக இருக்கலாம் ஆனால் இன்றைய காலத்தில் அது பிற்போக்கின் அடையாளம்.
உலகில் உள்ள நீர்வளத்தில் 97 சதவிகித நீர் உப்பால் ஆனது. மீதமுள்ள 3 சதவிகிதத்தில் மட்டுமே இந்த உலகம் உழன்றுக் கொண்டிருக்கிறது. அதில்தாம் தமது தேவையை இந்த மானுட வர்க்கம் நிறைவு செய்துக் கொள்ள வேண்டும், இந்த 3 சதவிகிதத்தினை 100 சதவிகிதமாக ஆக்கிக்கொண்டு அதில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே இந்தியத் துணைகண்டம் நீர் ஆதாரமாகக் கொண்டுள்ளது.அப்படியெனில் தமிழகம் இந்த நான்கு சதவிகிதத்தில் 0.3கூட இல்லை என்பது எவ்வளவு பெரிய ஆபத்து.
நதிநீர் மேலண்மையைப் பற்றியும், அதில் சில ஆறுகளின் உரிமைகளைப் பற்றி மட்டுமே பேசி நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கியுள்ள திராவிடக்கட்சிகளின் நீர்மேலாண்மைக் கொள்கை மணல் கொள்ளையர்களுக்கான கொள்கையாவே தொடரும் மோசடியை எத்தனை நாளுக்குத் தமிழக மக்கள் வேடிக்கைப் பார்க்கப் போகிறார்கள்.
தென்மாவட்டங்கள் நீர் உரிமையைக் பேசிக் கொண்டிருக்கும்போதே, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலியின் பலபகுதிகள் முற்றிலும் வாழத்தகுதியற்ற பாலைகளாக மாறியுள்ளன. வட மாவட்டங்கள் திருவள்ளூர், காஞ்சிவரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் நீர் வளத்தை இழந்து அதனால் விவசாயத்தினையும் இழந்துள்ளன. மேற்கு மாவட்டங்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, சேலம் ஆகியன நிலத்தடி நீரை முற்றிலும் இழந்துள்ளன. இப்படி ஏறக்குறைய எல்லா மாவட்டங்களும் நீர் பற்றாக்குறை மாவட்டங்களாக மாறிப்போனதற்கு என்ன காரணம். அடிப்படையான நீர் மேலா ண்மைக் கொள்கை இல்லை என்பதுதானே.
எனவே தமது நீர் மேலாண்மைக் பணியில் எந்தவிதமான முன்னேற்றமும் காணாமல் ஓர் அரசு தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய மோசடி…