Home Politics Activities வரலாற்றின் வாய்ப்பு

வரலாற்றின் வாய்ப்பு

Comments Off on வரலாற்றின் வாய்ப்பு
 
sanna-thiruma.jpg
  – கௌதம சன்னா
             1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.
                 1996ஆம் ஆண்டு தமிழக தலித் அரசியல் இயக்கங்களிடையே ஒரு கொந்தளிப்பானச் சூழல் நிலவியது. பழைய அமைப்புகளின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியிருந்த நேரமது. விவேகம் மிகுந்த புதிய வேகமும் பார்வையும் கொண்ட அமைப்புகள் செயல் வேகத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களிடையே பளிச்சென தெரிய ஆரம்பித்தக் காலமும் அதுதான். அந்த நேரத்தில்தான் நான் வரலாற்று ஆவணங்களை  தேடி தோழர்.பாஸ்கர் ராய் அவர்களோடு மதுரைக்குச் சென்றிருந்தேன். அப்போது எங்கு பார்த்தாலும் சிறுத்தைகளைப் பற்றினப் பேச்சே இருந்தது. தொடர்ந்து 1997ல் தலித் அரசியல் விவாதங்கள் தொடர்பாக நான் மதுரைக்குச் செல்லும் போதெல்லாம் தலித் சிறுத்தைகள் இயக்கத்தைப் பற்றியும் தலைவர் திருமா அவர்களைப் பற்றியும் பேசப்படுவது ஒரு மையப் புள்ளியாகவே இருந்து வந்தது. அந்த நேரத்தில் தலைவர் திருமா அவர்களை சந்தித்து உரையாட எனக்கு ஆர்வமிருந்தாலும் அதற்கான சூழல் அன்றைக்கு வாய்க்கவில்லை. மேலும் தலித் வரலாற்று ஆவணங்களை தொகுக்கும் வேலையில் முழு மூச்சாய் அப்போது இயங்கிக் கொண்டிருந்ததால் என்னுடைய எல்லா நேரத்தையும் அது விழுங்கிக் கொண்டிருந்தது. அதனால் என்னுடைய முதுகலைப் பட்ட படிப்பில் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என்பது தனிக்கதை.
6lqnmv (1)அப்படித் தொகுத்த ஆவணங்களில் இளையத் தலைமுறையின் எழுச்சிமிகுத் தலைவர் என்ற வகையில் தலைவர் திருமா அவர்களின் படத்தையும் சிறுகுறிப்பையும் வைத்து காட்சி படுத்தியபோது கடுமையான எதிர்ப்பு எங்களுக்கு வந்தது. எங்கேயோ மதுரையிலிருப்பவரை சென்னையில் அறிமுகப்படுத்துகிறீர்களா என்றெல்லாம் கேள்விகள். இந்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டக் காலம் 1997ன் செப்டம்பர் மாத மழைக்காலம்.  அதற்கு முன்பு சில மேடைகளில் பார்த்திருந்தாலும் சந்தித்து உரையாடக்கூடியக் காலம் கூடாமலிருந்தது. இந்நிலையில், அண்ணா அரங்கில் நடைபெற்ற சாதி ஒழிப்பு முன்னணி மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றபோது மேடையில் தலைவர் திருமா அவர்களைப் பார்த்தேன், அங்கு கூட்டம் முடியும்வரை காத்திருக்க முடியவில்லை பின் அவரிடம் ‘உங்களைச் சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும்’ என்று துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு அவரைப் பார்த்தேன், அவரும் சைகையிலேயே சரியெனச் சொன்னார். பிறகு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சமதா சைனிக் தள் கருத்தரங்கில் நான் கலந்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவசரமாகக் கிளம்பிப் போய்விட்டேன். ஆனால் நான் கேட்டுக்கொண்டபடி என்னால் அப¢போதும் அவரை சந்திக்க முடியாமல் போய்விட்டது. எனக்கு அப்போது நேரடி அரசியலில் நாட்டமில்லை அதனால் தீவிரமாக தேர்தல் புறக்கணிப்பை தலித் மக்களுக்கு பயன் தரும் என நம்பினேன். அதேவேளை தலித் வரலாற்றைத் தொகுப்பதிலும் ஆவணப்படுத்துவதிலும் தலித் கருத்தியல் தளத்தை வளப்படுத்துவதிலும் குறியாக இருந்தேன். ஏனெனில் அன்றைக்கு இதுபோன்ற வேலைகளைச் செய்தவர்கள் ஒருசிலரே இருந்தோம் என்பதால் எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட கடமையைத் தட்டிக்கழிக்காமல் வேலை பார்த்து வந்தேன்.
                        சட்டக் கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்தப் பிறகு 1998ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மாணவர்கள் சேர்ந்து ‘சாதி ஒழிப்பில் மாணவர்கள் பங்கு’ என்றத் தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த கருத்தரங்கிற்கு அனைத்து தலித் தலைவர்களையும் அழைத்திருந்தோம்.  அதன்படி தலைவர் திருமா அவர்களை அழைப்பதற்கு கலைஞர் நகரில் இருந்த வீட்டிற்கு போயிருந்தேன். சிறிய அறையில் இருந்தபடி முகமன் கூறி வரவேற்றார். பிறகுப் பல கேள்விகளை என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார், கொஞ்ச நேரத்தில் சிலத் தோழர்கள் வந்துவிடவே என்னைத் தனியே அழைத்துக்கொண்டு விறுவிறுவென தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கிவிட்டார். பேசிக்கொண்டு நடந்தபடியே அம்மன் கோயில் அருகில் இருக்கும் தேனீர்கடைக்கு வந்துவிட்டோம், அங்கே எனக்குத் தேனீரை வாங்கிக் கொடுத்துவிட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்பு அங்கும் தோழர்கள் வந்துவிடவே கருத்தரங்கிற்கு கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று சொல்லி கிளம்பிப் போய்விட்டார். சொன்னபடியே கருத்தரங்கிற்கு வந்தார் மற்றத் தலைவர்கள் யாரும் வரவில்லை என்றாலும் கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.
                  இந்த சந்திப்பைப் பற்றிப் பலமுறை நான் யோசித்துப் பார்த்ததுண்டு, தலைவர் திருமா அவர்களுக்கு அந்த சந்திப்பு நினைவில் இருக்காமல்கூட போயிருக்கலாம். அந்த சந்திப்பிற்கு முன்பு அவரைச் சந்தித்தது அவ்வளவாய் எனக்கு நினைவில் இல்லை என்றாலும், அல்லது அதற்குப்பிறகு சந்தித்தவைகள் முக்கியத்துவமற்றது என்றுப் பொருளில்லை, எனினும் பலமுறை யோசித்துப்பார்க்கும்படி அந்தச் சந்திப்பு எனக்குள் அழுத்தமாகப் பதிந்துவிட்டதற்கு எதாவது உள்ளார்ந்தக் காரணம் இருக்கத்தானே வேண்டும்.
                    அந்தச் சந்திப்பு உருவாக்கிய மனப்பதிவை எப்படி உருவகப்படுத்திக் கொள்வது. பழையக் போக்குகளை உடைத்துக்கொண்டு புத்தம்புதிய வெடிப்புகளை உருவாக்கத் துடிக்கும் தீரமிகு மனிதருடன் பேசிக்கொண்டிருடந்தேன் என்றா, அல்லது சமூக அவலங்களை கண்டு சகியாமல் பொங்கி எழும் இளரத்தத்தின் துடிப்புடன் பேசிக்கொண்டிருந்தேன் என்றா என்றெல்லாம் யோசித்துப் பார்க்கத் தோன்றியது. இவையெல்லாம் உண்மையென்றாலும் அதனினும் நுணுகிப் பார்க்கத் தூண்டியது என் உள்மனம். வேகம், துடிப்பு, கோபம், தெளிவு, ஆற்றாமை, நோக்கம், எதிர்பார்ப்பு என எல்லாம் கலந்துக் காணப்பட்டாலும் என் மனம் உணர்ந்துக் கொண்டது அவரிடம் உள் தெரிந்த ஒரு வெப்பத்தைதான். உந்திக் கொண்டு மேலெழத் துடித்து தேடிக் கொண்டிருக்கும் வெப்பத்தைதான். இந்த வெப்பம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, ஒருவர் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நோக்கத்தினால் உருவாகி  அதே நோக்கத்தின் பொருட்டு வெளிப்படத் துடிக்கும் அந்த வெப்பம்தான் மனித ஆற்றலின் மிக உயர்ந்த ஆற்றல் வடிவம். சொல்லப்போனால் சமூக வளர்ச்சிக்கு தனி மனிதர்கள் மாமனிதர்களாக மிளிர்ந்து ஆற்றும் பங்கிற்கு ஆதாரமான உயிராற்றல். இந்த அடிப்படையை குறித்து மாபெரும் தத்துவஞானி நீயிட்சே சொன்னது இங்கு பொருத்தாமாயிருக்கும்:
          ‘மாபெரும் மனிதர்களை உருவாக்குவது மகத்தான பலமல்ல, மாறாக மாபெரும் உணர்ச்சி நோக்கங்களின் இடைக்காலமே’’ 
               என்று அவர் சொன்னார். நீட்சேவின் இந்த வார்த்தைகளின் பொருத்தப்பாட்டை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். மாபெரும் மனிதர்களை உருவாக்குவது அவர்களின் தனிப்பட்ட உடல் பலமல்ல என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் மனிதனை மாபெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மாமனிதனாக்குகின்றன என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. எனினும் அதே தனிப்பட்ட மனித உணர்ச்சிக் கொந்தளிப்புகள் மட்டும் ஒருவரைத் தலைவராக உருவாக்கிவிட முடியாது ஏனெனில் உணர்ச்சிக் கொந்தளிப்புள்ள ஏராளமானப் பேர் சமூகத்தில் இருப்பார்கள், அவர்களில் ஒரு சிலர்தான் தலைவர்களாக மிளிர முடியும், எனவே இதில் தேவைப்படுவது எது? அதுதான் நீட்சே சொன்ன ‘மாபெரும் உணர்ச்சி நோக்கங்களின இடைக்காலம்’. இதன் பொருள் சமூகத்தின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மாபெரும் வடிவம் எடுத்து வெளிப்படுவதற்கு தலைமை கொடுக்கும் ஒரு சிலரின் மாபெரும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் ஒத்திசைவுத் தேவைபடுகிறது. இந்த இரண்டு கொந்தளிப்புகளும்  சந்திக்கும் 
100_1020அலைதான் தலைவரையும் சமூகத்தின் தலைமைத்துவத்தையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது. இது ஒரு பிரிக்க முடியாத ஒரு இயங்கியல் போக்கு. இதைத்தான் நீட்சே குறித்துக் காட்டுகிறார். வரலாறு என்முன்னே விரித்து வைத்திருக்கும் கடந்த கால சான்றுகளை நினைத்துப் பார்க்க, பார்க்க  பல்வேறு மனப் பதிவுகளாகவும் விவரிக்க முடியாத உள்ளுணர்வுகளாகவும் என்னுள் அலையடித்துக் கொண்டிருந்தால் என்னால் அந்தச் சந்திப்பு என்றும் நினைவில் நிற்கக்கூடிய அளவில் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும் என்பது உண்மைதானே.
                        இந்த நிகழ்வினை நினைத்துப் பார்ப்பதற்கு இந்த பொன்விழாத் தருணம் ஒரு நல்ல வாய்ப்பு என்றாலும், கூடவே இன்னும் சிலவற்றை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படியெனில் ஒரு தலைமையின் சிலப் பரிமாணத்தை பார்க்கின்ற வேளையில் அதன் வேறொரு பார்வையிலானப் பரிணாமதையும் பார்க்கத் தூண்டுகிறது மனம். குறிப்பாக மரபார்ந்த பௌத்த நோக்கில்…
                   *ஒரு பிக்குவின் பிறந்த நாளை எப்போதிலிருந்து கணக்கிடவேண்டும் என்று கேட்டால் அந்த பிக்கு ஞானம் அடைந்த நாளிலிருந்துதான்* என்று சொல்வார்கள். மகாயான பௌத்தப் பிரிவில் இது போதிக்கப் பட்டாலும் இது பல விளக்கங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. வயதான பிக்கு ஞானம் அடைந்து ஓராண்டு ஆகியிருந்தால் அவருக்கு வயது ஒன்று என்று கணக்கு. இங்கே வயது முக்கியமல்ல எடுத்துக்கொண்ட காரியத்தின் சித்திதான் முக்கியம். ஏனெனில் அவர் பெற்ற ஞானத்தின் மூலம்தான் அவர் மக்களின் முன்னால் அறிமுகமாகி மக்களுக்கான பணியை வெற்றிகரமாக முன்னெடுக்கிறார். மக்கள் அவருக்கு தகுந்த அங்கீகாரத்தை அளிப்பதுடன் அவரைப் பின்பற்றவும் பேணவும் முன்வருகின்றனர். ஞானத்தின் ஆற்றல் அப்படிப்பட்டது.
                       ஞானம் என்பது உண்மையைக் கண்டடைவது என்று பொதுவாகச் சொல்வார்கள், உண்மை கண்டடைய தம்மை அர்பணித்துக்கொண்டு, அதற்கான சங்கற்பத்தை உறுதியாக்கிக் கொண்டு, தமது தேடலைத் தொடங்கும்போதே ஞானத்தின் முதற்படித் தொடங்கிவிடுகிறது. ஐயங்களில் தெளிந்து ஓர் உறுதி ஏற்படும்போது பற்றற்ற ஒரு மனநிலை வாய்க்கும். ஆனால் இதுதான் ஞானம் என்று உறுதியாக புத்தர்கூட சொல்லாமற் போனாலும் அவர் ஞானம் பெற்ற பிறகு நடந்ததைப் பார்க்கும் போது அவர் தமது பழைய வாழ்க்கைக்குப் போகவில்லை. தனக்கு எதிரே திறந்த வழியில் உறுதியாக முன்னேறினார். அவரைப் பின்பற்றிவர்களும் தாம் ஞானம் பெற்றப் பிறகு தொடர்ந்து முன்னேறினர். தாம் ஏற்றுக் கொண்டக் கடமைகளிலிருந்து அவர்கள் பின்வாங்கவே இல்லை.
                    இங்கே கவனத்தைக் கவரும் அம்சம் என்னவென்றால் ஞானத்தைவிட ஞானம் எய்திப் பிறகு தெரியும் கடமையும், அதிலிருந்து தடம் மாறாத வைராக்கியமும், இறுதிவரை செய்து முடிப்பதற்கான சங்கற்பமும்தான் மிகமிக முக்கியமானவை. பௌத்தம் உலகில் தழைத்து வளர்ந்ததற்கு இதுவே மிக ஆற்றல் வாய்ந்த அம்சம். கடமையை முழுமையாக ஒருவனால் நிறைவேற்ற முடியுமா என்பதற்கு வரலாற்றில் எங்குமே சான்றுகள் இல்லை. முழுமை பெற்ற மகா மனிதரான புத்தர் நிறைவெய்திவர் தானே தவிர நிறைவாய் கடமையை முடித்தவரல்ல. அவரது கடமை காலம் காலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடமை. அது ஒரு பிரவாகம், அதற்கு முடிவே கிடையாது.. மனித இனம் உள்ள வரை.
149953_174507545894595_100000060514502_617550_6822829_n              புத்தருக்கு முன்னும் பின்னும் பல புத்தர்கள் தோன்றியிருக்கிறார்கள், மறைந்துப் போயிருக்கிறார்கள் ஆனால் மக்களின் மனதில் நினைக்கப்படுவர்கள் சிலரே. அதுவும் காலம் கடந்து நினைவில் வாழ்பவர்கள் ஒரு சிலரே. எனினும் நினைக்கப்படக்கூடிய அளவில் சிலர் அடையாளப்படுத்த முடியவில்லையென்றால் அது ஒன்றும் குற்றமல்ல ஏனெனில் அவர்கள் ஆற்றியப் பணிதான் அவர்களின் அடையாளம்.. இது பௌத்தத்தின் மிக முக்கியமானப் பண்பு. ஒரு பணியில் தன்னை காலம்தாண்டி நிலைநிறுத்திக் கொள்ளும் தன் முனைப்பிற்கு கடமையில் இடமில்லை. நோக்கம் உன்னதமாகவும் கடமை உறுதியாகவும் இருந்தால் புத்தர் தொடங்கி வைத்தப் பிரவாகத்தில் யாரும் தம்மைத் தொடர்ந்துக் கொள்ள முடியும். அப்படி இணைத்துக் கொள்ளும் நிலையை மக்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தால் அதுதான் தலைமை. அது இடைக்காலத்தின் தலைமை அல்லது நிகழ்வின் தலைமை. காலம் கடந்து நிற்க வேண்டுமெனில் எதிர்காலத்தில் உறுதி. எனவே இந்த உறுதி மனித வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் வாய்க்கலாம். சிறு வயதிலேயோ அல்லது வாழ்வின் அந்தியில்கூட வாய்க்கலாம். ஆனால் சங்கற்பம் முக்கியமானது. இந்த சங்கற்பம்  மக்களால் உணர்ந்து அங்கீகரிக்கக்கூடிய பண்புடன் இருக்க வேண்டும். இதுதான் தலைமைத்துவம் வெளிப்படும் நிலை என்பது ஒரு பௌத்தப் புரிதல்.
                      எனவே தலைமை உருவாவதற்கு பிறப்பினால் வந்த வயது ஒரு அவசியமான அம்சமல்ல என்பது இதிலிருந்து விளங்கும். பிறப்பினால்தான் உயர்வு நிலை வாய்க்கிறது என்பது பார்ப்பனீயம். அதற்கு நேர் எதிரான நிலையில் பௌத்தம் ஒரு கருத்தை முன்வைக்கிறது. அதன்படி பார்க்கப் போனால் தலைவர் திருமா அவர்களின் வயதை எப்படி கணக்கிடுவது. இதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் ஆனால் அவர் சமூகப் பணியில் உறுதியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கால அளவினைப் பார்க்கும் போது அவருக்கு முப்பது வயதுதான் ஆகிறது என்று எனக்குத் தோன்றுகிறது. ஐம்பது ஆண்டுகால வயதில் அவரை முப்பது வயது இளைஞராகக் காண்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
                       இந்த முப்பது வயதான இந்த இளையத் தலைவர் தமது இந்த இளைய வயதில் நிறைவேற்றியுள்ள கடமையானது வரலாற்றில் நினைவுக் கூறத்தக்க வகையில் இருக்கும். புத்தரின் தொடர்ச்சியை எப்படி புரட்சியாளர் அம்பேத்கர் புது யுகத்தில் முன்னெடுத்தாரோ, எப்படி புத்தரின் நிலைநிறுத்திய மனித விழிப்புணர்வின் விளைவாக விளையும் இயல்பான சமத்துவத்தை சமைக்கும் கடமையை முன்னெடுத்தாரோ, அந்தக் கடமையை முன்னெடுக்கும் ஒரு தொடராகத்தான் தலைவர் திருமா அவர்களைக் காண்கிறேன்.
                    தலைவர் திருமா அவர்களைப் பின்தொடரும் பின்னடியார்களும் இந்தக் கடமையில் ஓர் அங்கமாகத்தான் இருக்கிறார்கள் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல் இப்படிப்பட்ட ஒரு புரிதலுக்கு வரும் என்ற நம்பிக்கை வளர்க்கப்படுமானால் அது மிகவும் நன்மைத் தரக்கூடியதாகக்ததான் அமையும்.
                     ஹெகல் அவர்கள் ஜெர்மன் மக்களைப் பற்றி அவர் காலத்தில் சொல்லும்போது ஒன்றைச் சொன்னார் வரலாறு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மக்களைத் தேர்ந்தெடுக்கும், இப்போது அது ஜெர்மானியரைத் தேர்ந்தெடுத்துள்ளது –  என்று சொன்னார் அவர் சொன்னது விரைவிலேயே பலித்தது. உலகின் உயர்ந்தச் சமூக அரசியல் அமைப்பை உருவாக்கக்கூடிய மக்களாக ஜெர்மானியர்கள் பரிணமித்தார்கள் என்பதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். அதே வேளையில் வரலாறு தேர்ந்தெடுக்கும் மக்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்ள தம்முடைய மறுநிகரியாக ஒரு தலைவனை அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்பதும் இதில் கூடுதலாகப் பார்க்க வேண்டிய செய்தி, அப்படி ஹெகல் காலத்திற்குப் பிறகு ஜெர்மன் ஒவ்வொருத் துறையிலும் ஒரு முன்னோடியை முன்னிருத்தியது. உலகத்தின் பல போக்குகளை அவர்கள்தான் மாற்றியமைத்தார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை, அரசியலில் கெய்சர், பிஸ்மார்க், இட்லர் என சான்றுகளைச் சொல்லமுடியும்.
                   புரட்சியாளர் அம்பேத்கர் வரலாறு தலித் மக்களையும் பிற ஓடுக்கப்பட்ட மக்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, ஆளும் வர்க்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் அமைத்த அடித்தளம் ஹெகலின் தீர்க்கத் தரிசனத்தையும் துணைக்கண்ட மண்ணில் நிகழ்த்திக் காட்டச் செய்யும் ஓர் எத்தனம்தான். என்றாலும் அது புரட்சியாளர் அம்பேத்கர் அவர் காலத்திலேயே நடக்க வேண்டும் என்று அவர் மிகுந்த ஆசைப்பட்டாலும் அது நடக்காமலேயே போனது என்பது ஒரு வலி மிகுந்த உண்மை. எனினும் வரலாறு அவரின் தீர்க்கத் தரிசனத்தை நிறைவேற்றி காட்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. அதற்கான வாய்ப்பும் தூரத்திலில்லை, நம் அருகில்தான் இருக்கிறது.
                     இலக்கை உறுதியாக நிர்ணயித்துவிட்டால் அதை தவணை முறையில் அடைவதற்காக வாய்ப்பு வந்தால் அதை மறுப்பது என்பது அரசியல் விவேகமாகாது என்பது புரட்சியாளர் அம்பேத்கர் அறிவுருத்தியுள்ளதை இங்கு மனங்கொள்ள வேண்டும். அப்படித்தான் தலித் மக்கள் தம்மை ஆளும் வர்க்கமாகத் தம்மைத் தகவமைத்துக்கொள்ள படிப்படியான வாய்ப்புளை கைப்பற்றி வந்துள்ளனர், விரைவில் தமக்கான இலக்கில் அவர்கள் வெல்வார்கள். அதன்படி, வரலாறு தலித் மக்களை ஆளூம் வர்க்கமாக உயர வாய்ப்பை அளிக்க அவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அதற்கான தலைவரையும் ஒருசேர அளித்துத்தானே ஆகவேண்டும். இது வரலாற்றின் கட்டாயம். இதைத் தவிர்க்க முடியாது, அப்படி காலமும் வரலாறும் தேர்ந்தெடுத்த தலைவர்தான் எழுச்சித் தலைவர் திருமா அவர்கள்.
                போponvizha_logoராளித் தலைவரின் இந்தப் பொன்விழா ஆண்டில் புரட்சியாளர் அம்பேத்கரின் கனவை நனவாக்கும் விதத்தில் காலமும் வரலாறும் தந்த தலைவராக எழுச்சித் தலைவர் திருமா அவர்கள் இருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் தேவையில்லை. ஆனால் இந்தத் தலைமையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வரலாறு தந்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஆளும் வர்க்கமாக உயர்த்திக் கொள்ள முனைய வேண்டும். வரலாறு எப்போதும் வாய்ப்புகளைத் திறந்து வைப்பதில்லை, கொடுக்கப்பட்ட வாய்ப்பகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டதுமில்லை என்ற வாக்கியத்தை மனதில் கொண்டால் வரலாறு உருவாக்கித் தரும் வாய்ப்பின் அருமைப் புரியும். இதைப் புரிந்துக் கொள்ள வேண்டியது ஒடுக்கப்பட்ட மக்களின் தேவை. கூடுதலாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தம்மை முன்னிருத்திக்கொள்ள விழைகின்ற ஒவ்வொரு தோழர்களுக்கும் தேவைபடும் புரிதல்.
(போராளித் தலைவரின் பொன்விழா மலரில் எழுதிய கட்டுரை)
Load More Related Articles
Load More By admin
Load More In Activities
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …