Home Article சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரி.. சாதி.. தீண்டாமை..8

Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..8
சேரிகளின் தோற்றம்
அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…
 
கௌதம சன்னா

1
சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. தீண்டாமையும் உருவானதைப் பற்றின ஆய்வை முன்னெடுத்த முதல் புத்தகம் அது. அதற்கு முன்பு இத்துறைப் பற்றி யாரும் பேசவேயில்லை என்பதால் மிக முன்னோடியான நூல் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் அதற்குப் பிறகும் அத்துறை பெரிதாக வளரவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதுவரை தீண்டாமையும் சேரியும் உருவான புதிரை விடுவிக்க யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. எனவேதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த நூலில் அம்பேத்கரின் கருத்துக்களை அவரின் எழுத்துகளிலேயே பார்த்தால் கூடுதல் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.

அம்பேத்கர் கூறுகிறார்..
வேறுநாடாக இருந்திருந்தல் இந்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனாசான்றைக் குத்திக் குடைந்திருக்கும்., அவர்களது மரபு மூலம் பற்றி ஆழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ இந்து கருதுவதில்லை. இந்தப் பழிபாவத்துக்கு பிராயச்சித்தம் தேடவேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றியது, அது எவ்வாறு வளர்நது வலுப்பெற்றது என்பதை ஆராய வேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிக தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடுஇணையற்றது, தன்னிகரில்லாதது என்று ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும், தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதிலும் எந்த இந்துவும் ஒருபோதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைக் புரிந்துக் கொள்ள முடியும். அதனை ஏற்கவும்கூட முடியும். ஆனால் இநது நாகரிமம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடப்படுகிறது என்பதைப் புரிந்துக்கொள்வது அவள்ளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டலும்,  இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள  இந்த வகுப்பினர் (தீண்டத்தகாதவர்) இருந்து வருதே அந்த அடிப்படை.. அத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவிடம் இதனைக் கிளிப்பிள்ளைப்போல திருப்பத் திருப்பகூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப் பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும். (அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் தொகுதி 14 பக்கம் 2)

அம்பேத்கரின் ஆதங்கம் தெளிவானது என்பது மட்டுமல்ல, அது இன்னமும் கண்டுக்ககொள்ளப்படாமலே இருக்க்கிறது என்பதுதான் மிக முக்கியமானது. சாதி இந்துவின் மனச்சான்று விழித்துக்கொள்வதற்கு பதில் நாளும் நாளும் அது அதளபாதால இருட் குகைக்கள் நீளப் போய்கொண்டே இருக்கிறது.

2
சரி இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். அம்பேத்கரின் கருத்துக்ளின் படி கிராமம் எப்படி இரண்டாக தோன்றியது அல்லது கிராமத்தில் சேரிகள் எப்படி உருவாயின அவை எவ்வாறு  பல்கிக் பெருகின, எப்படி செயல்பட்டன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதை பார்க்க வேண்டும்.
அம்பேத்கரின் ஆய்வில்.. தொடக்ககால மனிதக் கூட்டம் நாடோடியாகவே அலைந்துக் கொண்டிருந்தது என்பது முதல்படி. ,இரண்டாவது அலைந்துக் கொண்டிருந்த மக்களில் ஒரு குழு ஒரிடத்தில் நிலையாக தங்கி தமது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டது. அதன்படி  ஆதிகால மனித சமூகம் இரண்டாக பிரிகின்றது. அதாவது அலையும் ஒரு மக்கள் கூட்டம். நிலைபெற்று வாழத் தொடங்கிய ஒரு மக்கள் குழு. இந்த இரண்டு குழுக்களையும்  அம்பேத்கர் பின்வருமாறு அழைக்கிறார்.

1. பூர்வீக நாடோடி (Nomadic communities) அல்லது சிதறடிக்கப்பட்டக் குழு  (Broken Men)
2. நிலையமர்ந்த குழு அல்லது நவீனகாலக் குழு (Modern Society)
மேற்கண்டக் குழுக்களின் இயல்புகளை அம்பேத்கர் பின்வருமாறு விளக்குகிறார்.
பூர்வீக சமுதாயம் (Primitive Society)  நாடோடி (Nomadic communities) சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமூதாயமோ (Ancient Modern Society)  குடியமர்ந்த சமுகங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பூர்வீக சமுதாயம் குருதி உறவுகளைக் கொண்ட குலமரபு சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ பிரதேசப் பற்றுதல் கொண்ட ஸ்தல சமுகங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. வேறுவிதமாகக் கூறினால் பூர்வீக சமுதாயம் நவீன கால சமுதாயமாக மாறுவதாற்கு முன்னர் இரு பரிணாம வளர்ச்சி மார்க்கங்களை  மேற்கொண்டது. ஒரு பரிணாம வளர்ச்சி மார்க்கம் பூர்வீக சமுதாயத்தை குலமரபு குழுவிலிருந்து பிரதேசக் குழுவாக மாற்றியிருக்கிறது.  (அ எ பே .தொ 14.ப 52)

மேற்கண்ட இரண்டு பிரிவுகள் மனித குல வரலாற்றின் இயக்கத்தையும், எதிர்காலத்தையும் நிர்ணயித்தன. அந்த இரண்டு குழு என்பது இரண்டு மட்டுமே அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுதும் இப்படிப்பட்டக் குழுக்கள் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப முன்னம் பின்னுமாக உருவாகிக் கொண்டிருந்தன. மனித குல வரலாற்றில் இந்தியத் துணைக் கண்டத்தில் இது சுமார் ஐம்பாதாயிரம் ஆண்டு காலத்திற்கு முன் உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்படி உருவான இந்த இரண்டு குழுவின் முரண்பாடுகள் எவ்வாறு இயங்கின என்பதைப் பற்றி அம்பேத்கர் பின்வருமாறு விளக்குகிறார்.

பூர்வீக சமுதாயம் இவ்வாறு குலமரவு அமைப்பை (Totem)  அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது இரண்டு விஷயங்களைக் குறித்தது. முதலாவதாக, பூர்வீக சமுதாயத்தில் ஒவ்வொரு தனி நபரும் ஒரு குலமரபைச் சேர்ந்தவராக இருந்தான். இன்னும் சொல்லப்போனால்  அவ்வாறு அவன் ஒரு குலத்தைச் சேர்ந்தவனாக இருப்பது அவசியம். குலத்துக்கு வெளியே எந்தத் தனிநரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவன் சுத்த பூஜ்ஜியம்தான். இரண்டாவதாக, குலமரபு அமைப்பானது பொதுக் குருதித் தொடர்பு, பொதுப் பண்பொற்றுமையின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு குலத்தில் சேர்ந்து அதன் அங்கமாக மாற முடியாது. எனவே சிதறுண்ட சமூகத்தினர் ஆங்காங்கு தனித்தனி நபர்களாவே வாழ வேண்டியிருந்தது. ஒரு குலம் இன்னொரு குலத்தை எதிர்த்துப் போராடி வந்த பூர்வீக சமுதாயத்தில் சிதறுண்ட தனிநபர்களின் ஒரு திரள் இருந்து வருவதானது அத்திரள் தாகுதலுக்குள்ளாகும் அபாயம் எப்பேதுமே இருந்து வந்தது. இந்நிலைமையில் எங்குபோய் புகலிடம் தேடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. யார் தங்களைத் தாக்குவார்கள் என்பதும், பாதுகாப்பாக யாரை நாடிச் செல்வது என்பதும் அவர்களுத் தெரியவில்லை. எனவேதான் புகலிடம் தேடுவதும் பாதுகாப்பு நாடுவதும் சிதறுண்ட பிரிவினரின் பிரச்சனையாக உருவெடுத்தது.  (அஎபே .தொ 14.ப 56)

மேற்கண்ட அமைப்பில் குலமரபு என்பதை எப்படி விளங்கிக் கொள்வது. மானுடவியல் ஆய்வுகளில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இதைப் புரிந்துக் கொள்வது எளிதாயிருக்கும். ஆனால் சாதராண வாசகர்களுக்கு தெளிவிற்காக சிறிது விளக்கம் தேவைப்படுகிறது. பொதுவாக குலமரபு என்பது தற்காப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். தமது ரத்த உறவிற்குள் மட்டுமே அனைத்து சமுக நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாகும். ரத்த உறவற்ற பிறரை அந்நியராகவே கருதுவது குலமரபு குழுவின் இயல்பு. அதில் பிறப்பு, பூப்படைதல், திருமணம், இறப்பு, சடங்குகள், வாழிட எல்லை, அவைகளைக் குறியிட்டுக் காட்டும் அடையாளக் குறியீடுகள் அல்லது சின்னங்கள் இவை மிக முக்கியமானவை. இவையே பிற்காலத்தில் தீட்டு என்ற கருத்ததாக்கத்திற்குள் வந்தவை. ஒரு குலமரபின் குழுவிற்குள் இவை அத்தனையும் கட்டுப்படுத்தப்பட்ட விதிகளுக்குள் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் விலக்கப்படவோ அல்லது கொல்லப்படவோ கூடும். இப்படி கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதின் மூலம் வேறு ஒரு குழுவோ அல்லது அலையும் நாடோடிக் குழுவோ தம் குழுவில் இணைவதை எளிதில் தடுக்க முடியும். அதுவுமன்றி பிற குழுக்களை எளிதில் இனம் காண முடியும். இதில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில் அலையும் நாடோடிக் குழுவும் இதுபோன்ற குலமரபு கூறுகளை வைத்திருந்தாலும் அதற்கு பிரதேச எல்லை என்பது கிடையாது. அதனால் அலையும் போது எளிதில் கலப்புகளும் அழிவுகளும் நேர்கின்றன. அதனால் அது எப்போதும் பாதுகாப்பற்ற நிலையிலேயே அலைந்துக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்குழுவினை ஒரு நிலையான இடத்திற்கு நோக்கித் தள்ளுகிறது. அப்படியானால்  அலையும் குழுவிற்கும் நிலையமர்ந்த குழுவிற்குமான பிரச்சினை எப்படி உருவாகியிருக்கும் என்பதை அனுமானித்தால் இந்த கருத்துக்கு தெளிவினைப் பெற முடியும். அது குறித்து அம்பேத்கர் கூறுவதைப் பார்ப்போம்.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விசயம், குலங்கள் பாஸ்பரம் ஒன்றுடன் ஒன்று சமாதானமாக அமைதியாக வாழ்ந்ததில்லை. எப்போதும் அவை சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்தன. அனைத்துக் குலங்களும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தபோது அவற்றிடையே போர்கள் நிகழ்வதற்கு பின்வரும் மூன்று பிதரான காரண¢ங்கள் இருந்தன.

1.கால்நடைகளைக் கவர்ந்து செல்வது
2. பெண்களைக் கடத்திக் செல்வது
3.. மற்ற குலங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை திருட்டுத்தனமதாக மேய விடுவது. (அஎபே தொ.14 பக் 54)

இந்த பிரச்சினையை நாடாடிக் குழுக்கள் மட்டும் சந்திக்கவில்லை. ஏற்கெனவே நிலையமர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் குலக்குழு கூடுதலாக எதிர்கொண்டது. அதற்கான காரணம் பின்கண்டவாறு இருந்தது.

..குடியமர்ந்த குலத்திடம் இரண்டு மடங்கு செல்வச்செழிப்பில் மிதப்பதை நாடோடிக் குலத்தினர் தெரிந்துக்கொண்டன்ர. நடோடிக் குலத்தினரைப் போன்றே இவர்களிடம் ஏராளடமன கால்நடைகள் இருந்தன. கால்நடைகள் மட்டுமின்றி, தானியங்கள் மிகுந்திருந்தன, இவை நாடோடிக் குலத்திடடம் இல்லை. எனவே அவர்கள் தானிய மணிகள் மீது பெரிதும் நாட்டம் கொண்டிருந்தனர். குடியமர்ந்த குலத்தினரின் செல்வங்களைக் கவரும் நோக்கத்தாதேடு நாடோடி குலத்தினர் அவர்கள் மீது திட்டமிட்டு பல தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர். இதிலுள்ள மூன்றாவதொரு அம்சத்தை இங்கு குறிப்பிட வேண்டும். குடியமர்ந்த குலத்தினர் அதிக ஆதாயம் தரும் தொழிலில் ஈடுபட்டிருந்தததால் அவர்களால் தங்கள் கலப்பைகளை போர்வாளா மாற்ற முடியவில்லை. தங்கள் இல்லங்கலிருந்து வெளியேறி திடீர்த் தாக்குதல் தொடுக்கும் குலத்தினரைத் துரத்திச் சென்றறு அவர்களுடன் பொருதவும் இயலவில்லை. (அ எ பே தொ14 ப 55)

இது ஒரு பிரச்சனையென்றால். மற்றொரு பிரச்சனையானது அலையும் நாடோடிக் குலங்களுக்குள் உருவானதாகும். அதில்தான் சிதறுண்டக் குழுவினர் உருவாகியிருக்கின்றனர். அதை மிக முக்கியமானதமாக அம்பேத்கர் கருதுகிறார்.

ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு குலமரபு குழுவினரும் தங்களுக்குள் ஓயாது ஒழியாது போரிட்டுக் கொள்வது சகஜமாயிருந்தது. அதிலிருந்த எழுந்ததே சிதறுண்டக் குழுவினரின் பிரச்சனை.  ஒரு குலப்போரில் எந்த ஒரு குலத்தினரும் பூண்டோடு ஒழித்துக் கட்டப்படுவதில்லை. மாறாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட குலத்தினர் பல நேர்வுகளில் துண்டு துண்டாக சிதறுண்டு போயினர். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில் சிதறுண்ட குலத்தினர் அடங்கிய ஒரு பிரிவினர் எல்லாத் திசைகளிலும் சுற்றி திரிந்தனர். சிதறுண்ட குலத்தினர் பிரச்சினை எழுவதற்கு என்ன காரணம் என்பதைப புரிந்துக் கொள்வதற்கு  பூர்வீக சமுதாயம் அடிப்படையில் ஒரு குலமரபு அமைப்பாக இருந்து வந்தது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.(அ எ பே .தொ 14.ப 55)

இப்படி சிதறடிக்கப்பட்ட குலமரபுக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனித் தனி நபர்களாகவோ அல்லது மிகச்சிறு குழுவாகவோ அலைந்தனர்.. அவர்களுக்கு பல பிரச்சினைகள் உருவாயின. அவற்றுள் முக்கியமானவை உணவுப் பிரச்சினை. அவர்கள் உணவிற்காக வேட்டையாடலாம். வேட்டைக்காக விலங்ககுளை பின்தொடர்ந்துப் போகலாம். அப்படி போகும்போது  ஏற்கெனவே அலைந்துக் கொண்டிருக்கும் பெரிய குலத்தையோ அல்லது பெரிய நிலையமர்ந்த குலத்தையோ அவர்கள் எதிர் கொள்ள வேண்டும். இதனால் உயிருக்கு உத்திரவாதமில்லை. எந்நேரமும் எச்சரிககையுடன் இருக்க வேண்டும். அல்லது அடந்த காடுகளில் நுழைந்து காட்டுவாசிகள் வாழ்க்கையை மேற்கொள்ளலாம். அப்படி மேற்கொள்ள வேண்டுமானால் மிருகங்களின் தாக்குதலை சமாளிக்கும் அளவிற்கு குழு பலம் வேண்டும். தனிநபராக காட்டில் அலைவது தற்கொலைக்குச் சமம். எனவே சமவெளிகளில் அலையும் ஏதாவது ஒரு குழுவிடம் சேர்வதோ அல்லது நிலையமர்ந்த ஒரு குழுவிடம் சேர்வதே ஒரு தற்காலிக பாதுகாப்பாகவும் இருக்கலாம். ஆனால் அலையும் ஒரு சிறு குழு குலமரபுக் குழுவாக இருப்பதால் புதிய ஆட்களை சேர்த்துக் கொள்வது கடினம், அதற்கு குலமரபு விதிகள் இடம் தராது. தனி நபர்களாய் இருந்தால் குறைந்தப் பட்ச பாதுகாப்பின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து ஒரு புதிய குழுவாக மாறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இது ஒரு வாய்ப்பு. அப்படி சேரும்போது அது ஒரு வலுவுள்ள குழுவாக மாறுவதற்கு பல காலம் பிடிக்கும். அப்படி பல குழுக்கள்  உருவாயின.

எனினும் சிதறுண்ட பிரிவினர் நிலைத்த இடம் நோக்கி, பாதுகாப்பு, உணவினை தேடி அலைந்துக் கொண்டிருந்தனர். அது ஒரு குழுவோ பல குழுக்களோ எப்படியாயிலும் அவற்றின் அலைச்சல் அதன் விதியாக இருந்தது. இப்படி அலையும் குழு தம்மைப் பாதுகாத்துக் கொள்ள செயல்பட்ட விதியினை அம்பேத்கரின் ஆய்விலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். சாதி உருவான போது “போலச் செய்தல் விதி” செயல்பட்டுள்ளதை நிறுவியிருக்கிறார். அந்த விதியை இங்கு பரிசோதித்துப் பார்த்தால் அது வலுவாக செயல்பட்டிருப்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

போலச் செய்தல் விதியென்பது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு போக்கினை அல்லது மாதிரியினைப் பின்பற்றுவதாகும். அதன்படி அலைந்துக் கொண்டிருக்கும் சிதறடிக்கப்பட்ட குழுவிற்கு பாதுகாப்பு உள்ளிட்ட இத்யாதிகள் கிடைக்க வேண்டுமாயின் ஏற்கெனவே நவீன சமுதாயமாக மாறிவிட்ட நிலையமர்ந்த சமுகத்தைப் போல தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு நிலையான ஓர் இடத்தை கண்டுப் பிடிப்பது மட்டுமின்றி, நிலைபெற்ற சமுகத்தின் உற்பத்தி உள்ளிட்ட பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். அல்லது அந்த குலத்தை போரிட்டு விரட்டிவிட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொள்ள வேண்டும். இதில் இரண்டாவது எளிதாக இருக்கும். ஆனால் அது தற்காலிகமாக இருக்கும். ஏனெனில் போர்கள் தவிர்க்க இயலாத அம்சமாக தொடர்ந்து மாறிவிடும் எனவே ஒரு மாற்று ஏற்பாடு அவசியமாகிறது. அந்த மாற்று ஏற்பாடு எல்லா இடத்திலும் நிகழ்ந்தது என்று பொருளில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் முதலில் தோன்றியிருக்கலாம் என்று அனுமானித்துக் கொள்ள முடியும். அது எப்படி நடந்தது என்பதைப் பற்றி தமது நூலில் அம்பேத்கர் தெளிவுப் படுத்தியுள்ளார். அதில்..
இங்கு அடுத்த கேள்வி எழுகிறது. இவ்விரு குழுக்களும் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டன.? இரு தரபுகளும் மக்கள் ஒரு பேரம் செய்துக் கொண்டு, இப்பிரச்சினைகளுக்கு முடிவுக் கட்டினர். இதன்படி குடியமர்ந்த குலத்தினருக்கு காவல் பணி புரிய சிதறுண்ட பிரிவினர் ஒப்புக் கொண்டனர். இதற்குப் பிரதிபலனாக இவர்களுக்கு உணவும் புகலிடமும் தருவதற்கு குடியமர்ந்த குலத்தினர் இணக்கம் தெரிவித்தனர். முக்கியமாக பரஸ்பரம் ஒருவர் ஒத்துழைப்பு மற்றவருக்குத் தேவைபடும் நிலைமையில் இத்தகைய ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறானதாக இருந்திருக்கும்.. (அஎபே .தொ 14.ப 57)

அம்பேத்கரின் இந்த கருதுகோள் மிக முக்கியமானதாகும். இதுபோன்ற உடன்பாடு நிகழ்ந்திருப்பதை உலகில் பல இடங்களில் நாம் காண முடியும். இந்த உடன்பாட்டிற்கு வராமல் போனால் அலையும் குலமரபுக் குழு பாதுகாப்பின்றி மீண்டும் தமது நாடோடி வாழ்க்கையை தொடங்க வேண்டியதிருக்கும். எனவே உயிர் வாழ்க்கையின் நெருக்குதல் அவர்களை இணங்கி வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் உருவாகின்ற இடர் என்ன. புதிதாக வந்த நாடோடிக் குழு ஒரு குலமரபுக் குழுவாகவோ அல்லது பலர் குல மரபைத் சேர்ந்தவர்களின் தொகுப்பாவோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒப்பந்தம் செய்துக் கொண்ட நவீன குழுவுடம் நேரடியாக இணைய முடியுமா என்பது ஐயமே. ஏனெனில் குலமரபு விதிகள் அதற்கு இடம் தராது. அவர்களால் ரத்தக் கலப்பு உருவாகி நிலைத்து வாழும் குழுவிற்குள் பிரச்சினைகளும், குழப்பங்களும் உருவாகலாம். அதனால் பாதுகாப்பிற்கு வந்தவர்களால் கேடுகளே பெருக வழி பிறக்கும். இந்நிலையில் இப்பிரச்சினை எப்படி கையாளப்பட்டிருக்கும் என்பதற்கு அம்பேத்கர் தரும் விளக்கம்தான் கிராமத்திற்கு வெளியே புது குடியிறுப்பை அல்லது சேரியை உருவாக்க வழிவகுத்தது. இது குறித்து அம்பேத்கர் பின்வருமாறு கூறுகிறார்.
தீண்டப்படாதவர்கள் ஏன் கிராமத்திற்கு வெளியே ஏன் வசிக்கிறார்கள் என்ற பிரதான கேள்விக்கு இப்போது வருவோம். இந்தக் கேள்விக்கான பதிலை மேலே கண்ட விளக்கங்களிலிருந்து பெற முடியும். இந்து சமுதாயம் ந«£டாடி வாழ்க்கை முறையிலிருந்து குடியமர்ந்த கிராம சமுக வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருந்தபோது இந்தியாவில் இதே நிகழ்வுப் போக்குகள் நடைபெற்றிருக்க வேண்டும். பூர்வீக இந்து சமுதாயத்தில் குடியமர்ந்த குலமரபுக் குழுக்களும், சிதறுண்ட பிரிவினரும் இருந்திருக்க வேண்டும் குடியமர்ந்த குலங்கள் கிராமத்தையும் கிராம சமுகத்தையும் உருவாக்கின. சிதறுண்ட பிரிவினர் வேறுபட்ட குலத்தையும் வேறுபட்ட குருதி உறவையும் கொண்டவர்களாதலால் கிராமத்திற்கு வெளியே வசித்து வந்தனர். இவ்வகையில் பார்க்கும்போது தீண்டப்படாதவர்கள்தான் ஆதியில் சிதறுண்டப் பிரிவினராக இருந்தனர் என்று கூறலாம். அவர்கள் சிதறுண்டப் பிரிவினராக இருந்ததால்தான் கிராமத்துக்கு வெளியே வசித்தனர்.

மேற்கண்ட தமது கருத்தை நிலைநிறுத்த அம்பேத்கர் இரண்டு சான்றுகளைத் தருகிறார். ஒன்று பழைய இந்து சாத்திரங்களிலிருந்தும் மற்றும் அவர் காலத்திய சான்றான மகர்களிக்கு சாதி இந்துக்களும் இடையிலான் சமூக ஒப்பந்தத்தையும் சுட்டிக் காட்டுகிறார். அதனைச் சுறுக்கமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் ஒரு பரந்துப்பட்ட பார்வை பெற முடியும்.

இந்து சாத்திரங்களிலி குறிப்படும் அந்த்யாக்கள், அந்தயஜாக்கள், அந்த்யாவாசின்கள் என்று  குறிப்பிடப்படும் பெயர்கள் வர்ண சமுகத்தில் கடைசியாக உள்ள வர்ணத்தைச் சேர்ந்தவனையே குறித்தது என்று ஆய்வாளர்கள் சொல்லி வந்ததை அம்பேத்கர் மறுத்து அந்த வார்த்தை கிராமத்திற்கு வெளியே அல்லது கடைசியில் வசிப்பவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தமது வாதத்தை முன்வைக்கிறார்.
அடுத்தச் சான்று சிதறுண்டப் பிரிவினர் தீண்டத்தகாதவர்களான மகர்கள் எனப்படும் சமுகத்தவரை ஒத்தவர்களாக இருந்தனர் என்பதைப் பற்றினதாகும். மகராட்டிரத்தில் மகர்கள்தான் பெரும்பான்மையினர். அவர்கள் கிராமங்களின் கடைசியில் அல்லது தனிச் சேரியில் வாழ்ந்தாலும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களுக்கு 52 வகையான உரிமைகள் கிடைத்தன. அதில் முக்கியமானவை 3 என்று அம்பேத்கர் குறித்திருக்கிறார். அது பண்டைய காலத்தில் நாடோடி குலமரபுக் குழு பெற்ற உரிமைகளைப் போன்று இருப்பதால் அதை முன்வைக்கிறார். அதில்..

1. கிராமவாசிகளிடமிருந்து உணவு பெறும் உரிமை
2. அறுவடைக் காலத்திலி ஒவ்வொரு கிராமவாசியிடமிருந்தும் தானியங்களை பெறும் உரிமை.
3. கிராமவாசிகளுக்கு சொந்தமான செத்த விலங்குகளை தங்களுடையதாக்கிக் கொள்ளும் உரிமை. (காண்க – அஎபே .தொ 14. ப60-61)

இவை போதிய தகவல்கள் அல்லாவிட்டாலும் தீண்டத்தாகதவர்கள் ஆம்பம் முதலே கிராமத்துக் வெளியே வசித்து வந்தனர் என்ற கருத்துக்கு ஆதரவாக இவை சில சான்றுகளை அளித்துள்ளன. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற காரணத்திற்காக கிராமத்தைதவிட்டு வலுக்ட்டாயமாக வெளியேற்றப்படவில்லை. கிராமத்திற்கு வெளியேதான் வசிக்க வேண்டும் என்று அவரகள் எவ்வகையிலும் நிர்பந்திக்கபபடவில்லை. தொடக்க காலம் முதலே அவர்கள் கிராமத்திற்க்கு வெளியே வசித்து வந்தார்கள் என்றால் குடிபெயர்ந்த குலத்திடமிருந்து வேறுபட்டதொரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்டவர்களாக அவர்கள் இருந்ததே இதற்கு காரணம். (அ எ பே .தொ 14.ப 62)

அதே நேரத்தில் இந்த புதிய குடியிறுப்பில் வசித்தவர்களுக்கும் தீண்டாமைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

ஆக, தீண்டத்தாகதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக் வெளியேதான் வசித்து வந்தனர், அவர்கள் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ஊகிப்பது முற்றிலும் இயல்பானதே என்பதை இதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். (அ எ பே .தொ 14.ப 57-58)

இப்படி உருவான கிராமத்திற்கு வெளியேயான தனிக் குடியிறுப்பு மற்ற இடங்களில் அல்லது இந்தியத் துணைக்கண்டத்தில் எல்லா கிராமங்களிலும் எவ்வாறு பரவியிருக்கும் என்பதற்கான பதிலைப் பெற வேண்டும். அதற்கு அம்பேத்கரின் போலச் செய்தல் விதியைத்தான் பயன்படுத்த முடியும். ஒரு முன்மாதிரி உருவாகிவிட்டால் அது மற்ற சமுகங்களிடையே பரவுவது ஒன்றும் கடினமல்ல. நிலைநிறுத்தப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினை நிலையமர்ந்த குழுவுக்கு அனுகூலமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேவைப்பட்ட நேர்வுகளில் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த சமுக ஒப்பந்தமானது போலச்செய்தல் விதியாக மாறி பிற சமுகங்களை பற்றி இந்தியா முழுமைக்கும் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு பரவியிருக்கிறது. சொல்லப்போனால் அண்மைக்காலம் வரை செயல்பட்டுக் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் எல்லா நேரத்திலும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் இருக்கு வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டால் பிரச்சினையில் மூலத்தைப் புரிந்துக் கொள்வதும் எளிதாகும்.

அம்பேத்கர் அவர்களின் இந்த முடிவுகள் சேரி எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றின ஒரு தீர்மானகரமான முன்வைப்பு. அடிப்படையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முழுமையானது அல்ல என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அது நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று ஆய்வு என்பது அது பின்னாளில் நடக்கும் என்று நம்பினார். கெடுவாய்ப்பாக அது சாதி இந்துக்கள் மத்தியில் இன்னும் வளரவில்லை என்பது சோகமான உண்மை.  எனவே இந்த ஆய்வில் அதை நாம் தொடரப் போகிறோம். அம்பேத்கர் தொட்டுக்காட்டிய ஆய்வின் முடிவினை அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது அவரது ஆய்வுத் துறைக்கு செய்யும் ஒரு பங்களிப்பு மட்டுமல்ல., வரலாற்றின் மறைந்த பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகும்.

எனவே இது வரை பார்த்தக் கருத்துக்களை தொகுப்பாக பார்த்துக் கொள்வோம்.
மனித இன தொடக்க வரலாற்றில் குலமரபு குழுக்கள் உருவாயின.
அவை தொடர்ந்து போரிட்டுக் கொண்டன.
அவற்றில் சில நிலையாக தங்கி நவீன சமுகமாக மாறின. சிலது நாடோடிகளாக அலைந்தன.
இந்த இரண்டு குழுக்களின் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக தமக்குள் ஒரு ஒப்பந்ததை உருவாக்கிக் கொண்டு இரண்டு குடியிறுப்புகளாக கிராமம் உருவானது.

இரண்டு குடியிறுப்புகளுக்கும் குலமரபு வேறுபாடுகள் மட்டும் இருந்தனவே தவிர எந்த விதத்திலும் தீண்டாமை என்பது இல்லை. அது உருவாக இன்னும் பலகாலம் இருக்கிறது.
மேற்கண்ட முடிவுகள் முழுமையானதல்ல என்பதும் அம்பேத்கர் சொன்னதுபோல சில குறைபாடுகளும் இருக்கின்றன. அதே நேரத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றை தற்கால ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அவை என்ன…?

தொடரும்..

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…