– கௌதம சன்னா
எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட வேண்டியதைப் பேசித்தானே ஆகவேண்டும்.
அண்மையில் குணா என்ற தோழர் கீற்று இணைய இதழில் எழுதிய’மக்கள் தலித் இயக்கங்களும் – ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களும்‘, ‘பாமகவின் தோற்றமும் அதை வளர்த்துவிட்ட பின்நவீனத்துவ வாதிகளும்‘ – என்ற இரு கட்டுரைகளை படித்தப் பிறகு அந்த ஆச்சரியம் கூடிவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு விவாதிக்கப்பட்டு கடந்துவிட்ட ஒரு முரணை இப்போது விவாதிக்கும் தேவை ஏன் எழுந்தது. முதல் கட்டுரையில் தலித்தியத்தை, அதன் இயக்கங்களை போர்டு எனும் தன்னார்வ அமைப்பின் கொடையாகயும், பின்நவீனத்தின் பிள்ளையாகவும் பார்க்கிறார். இரண்டாவது கட்டுரையில் பாமக-வின் தோற்றம் வளர்ச்சி எழுச்சிகளைப் பற்றி விவாதித்து, விடுதலைச் சிறுத்தைகளோடு அதற்குள்ள உறவின் தன்மையை விளக்குகிறார். மேலும் இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இடதுசாரி இயக்கங்களோடு நக்சல்பாரி இயக்கத்தோடு தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் உள்ள உறவை துண்டிக்கவும், ஏகாதிபத்தியத்தின் செயல் திட்டத்தை நிறைவேற்றும் வேலையை அவை செய்துள்ளன என்ற தமது கண்டுபிடிப்பை உறுதி செய்துள்ளார்.
இந்த இரண்டுக் கட்டுரைகள் மட்டுமின்றி அதைத் தொடர்ந்து முகநூலில் விவாதிக்கப்பட்ட விவரங்களையும் படித்தேன். விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், சாரமற்று இருந்ததை நினைத்து வருத்தமாயிருந்தது. இவை குற்றச்சாட்டுகளா, அவதூறுகளா, ஆய்வுகளா, கண்டுபிடிப்புகளா அல்லது ஆதங்கங்களா என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை. ஏனெனில் அவ்வளவு குழப்பங்களை அந்த கட்டுரைகள் கொண்டிருந்தாலும் அவை செயல்படும் தளத்தினை புரிந்து கொள்ள முடிகின்றது. எனினும் குணா என்ற தனிமனிதருக்கு பதில் என்று பார்க்காமல், அவர் முன்வைத்த கருத்துக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வருவதால் பதில் சொல்ல வேண்டியது தேவையென்று தோன்றியது.
“கம்யூனிசத்துக்கு மாற்றாக ‘ஃபோர்டு பவுண்டேசன் தலித்தியம்’ முன்னிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவை கம்யூனிசத்திடம் இழக்க மாட்டோம் என்ற பவுண்டேசனின் நோக்கத்துக்கு இந்த போலி தலித்தியம் சேவகம் புரிகிறது. பவுண்டேசனின் கம்யூனிச எதிர்ப்பைப் புரிந்து கொண்டால் தலித்தியத்தின் தத்துவார்த்த அடித்தளமான பின்நவீனத்துவத்தின் வேரினையும், அதன் கேடினையும் புரிந்து கொள்ளலாம்.”
என்ற ஒரு கருத்தை தோழர் குணா முன்வைத்துள்ளார். அதை ஆமோதித்து பலர் எழுதியுள்ளனர். கெடுவாய்ப்பாக பின்நவீனத்துவம், மார்க்சியம், தலித்தியம் ஆகியன பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் சாகசக் கட்டுரையை எழுதியுள்ளார். நான் பின்நவீனத்ததுவ வாதியல்ல; மார்க்சியம் மற்றும் அம்பேத்கரியத்தின் மாணவன். பத்தாண்டுகளுக்கு முன்பு பின்நவீனத்துவ வாதிகளோடு மல்லுக்கு நின்று பகைகளைச் சம்பாதித்துக் கொண்டவன். ஆனால் அரசியலாக அதை எதிர்த்தாலும் ஆய்வு முறைக்கு அது பயன்தரும் என்பதை உணர்ந்தவன்.
எனினும் குணா அவர்கள் எப்படி தலித்தியத்தின் வேரினை பின்நவீனத்துவத்தில் எப்படி கண்டுபிடித்தார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். மார்ச்சியத்தின் போதாமையைப் பற்றி பல அறிஞர்கள் விவாதித்திருக்கிறார்கள். ஏனெனில் மார்க்ஸ் எல்லாம் அறிந்த, எக்காலத்திற்குமான சிந்தனையாளருமல்ல. அப்படி சொன்னால் அதைக் கேட்டு அவரே சிரித்துவிடுவார். அதுவுமின்றி மார்க்சின் பார்வையில் பின்நவீனத்துவக் கூறுகள் இருந்தது என்பதைச் சொன்னால் குணா போன்ற தோழர்களுக்கு அதிர்ச்சியாகக்கூட இருக்கும். மார்க்சிடம் உங்களுக்கு பிடித்த பழமொழியைக் கேட்டபோது “அனைத்தையும் சந்தேகப்படு என்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்று சொன்னார். இது பின்நவீனத்துவத்திற்கு மிக முக்கியமான அடிப்படை. ஏனெனில் பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக, நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால் அவற்றை சந்தேகப்படாமல் எப்படி சாத்தியம்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு எப்படி ஓர் அமைப்பு இயங்க முடியும்? அதனால்தான் பின்நவீனத்துவம் என்ற கருத்தாக்கம் மார்க்ஸ் வாழ்ந்த காலத்திலேயே உருவாகிவிட்டது. அதாவது 1870லேயே அது உருவாகிவிட்டது. பிற்காலத்தில் யார் நினைத்தாலும் அது பெரும் போக்காக வளர்வதைத் தடுத்திருக்க முடியாது. அதனால்தான் சிறந்த ஆய்வறிஞர்களாக இருந்த மார்க்சியவாதிகள்தான் பின்நவீனத்துவத்தை விளக்கினர், புகழ்பெற்ற முன்னோடியான டெரிடா உட்பட.
எனினும் பின்நவீனத்த்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். நவீனத்துவம் என்பது பெரும் கோட்பாடுகளை நிலைநாட்டி, அதை மக்களுக்கான பாதையாக காட்டின. ஆனால் பின்நவீனத்துவம் அதை பெரும் கதையாடல் என்று நிராகரிக்கிறது. அதேபோல, அதிகாரம் உருவாகும் மையம் எது என்பதைக் கண்டறிய பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் பின்நவீனத்துவம் நிராகரித்தது. ஏனெனில் அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உருவாகவில்லை, அது எல்லா தளங்களிலும், எல்லா உறவுகளிலும் உருவாகிறது என்று கூறியது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும், ஆனால் அவர்கள் பயந்துவிட்டார்கள். குறிப்பாக இடதுசாரிகள் மக்கள் எங்கே தங்களை சந்தேகித்து விடுவார்களோ என்று பயந்துவிட்டார்கள். அதனால் ஒட்டு மொத்தமாக நிராகரித்தார்கள். தங்களை புனிதமானவர்களாக நிலைநிறுத்தப் படாதபாடுபட்டார்கள். மக்களுக்காகத்தானே போராடுகிறோம், எங்களை சந்தேகப்படலாமா என்று அங்கலாய்த்தார்கள். மக்கள் சந்தேகப்பட்டால் தமது ஆயுதப் போராட்டங்கள்கூட பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் அவர்களை எதிர்க்கத் தூண்டியது. உண்மையில் அச்சப்பட்டிருக்க வேண்டியவர்கள் தலித்துகள்தான். ஏனெனில் அவர்கள்தான் எல்லா அமைப்புகளாலும் வஞ்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் எல்லாவற்றினையும் சந்தேகப்பட தார்மீக உரிமை பெற்றவர்கள். அப்படி அவர்களின் கோபத்தை, ஆதங்கத்தை எதிர்கொள்ளத் திராணியில்லாமல்தான் அவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள், போர்டு நிறுவனத்தின் வார்ப்புகள் என்று சொல்லத் தூண்டுகிறது.
தலித்தியம் என்பதை பின்நவீனத்துவத்தின் அடிநாதமாகப் பார்ப்பது அபத்தம். உலகில் தோன்றிய சிந்தனைப் போக்குகளுக்கு அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்கள்தான் இருக்கும் என்பது பொதுவான ஒன்று. ஆனால் தலித்தியம் என்பது தனி ஒருவரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது தலித் மக்களை அடிப்படையாகக் கொண்டது. தத்துவார்த்த அடிப்படைகளை புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் உட்பட மண்சார்ந்த முன்னோடிகளின் சிந்தனைகளைக் கொண்டது. அதே நேரத்தில் உற்பத்தி உறவுகளின் முரண்களைக் கையாள்வதில் மார்ச்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் மராட்டியத்தில் 1972ல் தலித் சிறுத்தைகள் உருவாக்கப்பட்டபோது மார்க்சியம் அதனுள் முன்னிருத்தப்பட்டது.
ஆனால் தலித் கருத்தாடல்களையும் வரலாற்று கட்டுமானங்களையும் முன்னெடுத்த தலித் சிந்தனையாளர்களை இடதுசாரிகள் எப்படிப் பார்த்தார்கள்? ஏனெனில் 1990களில் உருவான பின்நவீனத்துவ வாதிகள் முன்னாள் இடதுசாரிகள். குறிப்பாக நக்சல் இயக்கவாதிகள். அதைப் போலவே, தலித்தியம் என்பது ஏதோ 1990களில் உருவான ஒரு போக்காக, அதற்கு அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கௌதமன் உள்ளிட்ட சிலரை பிதாக்களாகக் காட்டுவதைவிட மோசமான அபத்தம் வேறொன்றுமில்லை. இவர்கள் தலித்தியத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளவதற்கு முன்பே இங்கு தலித் கருத்தாடல்கள் வளர்ந்திருந்தன. அம்பேத்கரின் கருத்துக்கள் வளமாகப் பரவியிருந்தன. பண்டிதரைப் பற்றின ஆய்வுகளும் வளர்ந்திருந்தன. ஆனால் அப்போது அவற்றை தாழ்த்தப்பட்டவர்களின் சில்லறை முயற்சிகளாகவே இவர்கள் பார்த்தார்கள், கேலி செய்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு எந்த விஞ்ஞானமும் தெரியாது என்று அனுதாபப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் யாரைப் பார்த்து அனுதாபப்பட்டார்களோ அவர்களே இவர்களுக்கு ஆசான்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தலித்தியத்தின் பிதாக்களாக குணா போன்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அப்போது என்னவிதமான தவறுகளைச் செய்தார்களோ அதே தவறுகளை இப்போது வீரியத்தை இழந்துவிட்ட இடதுசாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிநிதியாகத்தான் குணா போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே, தலித்தியத்தை தன்னார்வ நிறுவனங்களின் அடித்தளமாகவும், பின்நவீனத்துவத்தின் வரவாகவும் பார்ப்பது தலித் மக்களை அவமதிப்பது மட்டுமல்ல அவர்களின் வரலாறே தெரியாத தற்குறிதனத்தினையும் காட்டும். அதனால்தான்
“சாதிவெறியர்களின் பரம எதிரிகளான நக்சல் புரட்சியாளர்களையும், ஆதிக்க சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளையும் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் இப்போக்கு புதிதான ஒன்றல்ல. இந்த மார்க்சிய விரோத தலித்திய அரசியலுக்கு நீண்ட வேர்களும், வரலாறும் உண்டு”
என்ற கருத்தை அவர் துணிந்து பதிவு செய்கிறார். என்னுடைய மார்க்சியப் பயிற்சிகூட நக்சல் தோழர்களின் வாயிலாகப் பெற்றதுதான். எனவே, நக்சல் புரட்சியாளர்களின் தியாகத்தினை, பங்களிப்பினை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்போதைய புரட்சியாளர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனெனில் இந்திய இடதுசாரிகள் சாதிய முரணை ஓர் அடிப்படை முரணாகவே பார்க்கவில்லை. அதை சீர்திருத்தவாதத்தின் ஓர் அலகாகப் பார்த்தார்கள். ஆனால் சாதியத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தலித்துகள் அதை அடிப்படை முரணாகப் பார்க்க வேண்டும் என்று கோரியபோதுகூட அதை இடதுசாரிகள் நிராகரித்தார்கள். அதன் தொடர்ச்சியாக தலித் இயக்கத்தின் முன்னோடிகளின் பங்களிப்பையே புறம் தள்ளினார்கள்.
கெடுவாய்ப்பாக, தீண்டாமை என்பதை சாதியத்தின் ஒரு துணை அம்சமாகப் பார்த்தது பெரும் கேடு. தீண்டாமையின் வடிவங்களைப் பற்றி 1890களின் தொடக்கத்திலேயே பண்டிதரால் பெருமளவில் ஆராயப்பட்டது. பிறகு, 1930களில் அம்பேத்கர் அவர்களால் விரிவாக அலசப்பட்டது. உற்பத்தி உறவுகள் சார்ந்த, பண்பாட்டு பார்வையை முன்வைத்தபோது அது தாராளவாதத்தின் கண்ணோட்டம் என்று இடதுசாரிகள் கண்டு கொள்ளமல் விட்டது மட்டுமின்றி, விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தீண்டாமையின் அடிப்படைகளையும், அதன் தோற்றத்தைப் பற்றி அறியும் தளத்தினைவிட்டு வெகுதூரம் போய்விட்டார்கள். அதிலிருந்து அவர்களின் தோல்விகள் தொடங்கின. சீனாவின் மாதிரிகளை பின்பற்றியவர்கள், கியூபாவின் மாதிரிகளை பின்பற்றியவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை தேடிக்கொண்டே பயணத்தைத் தொடர்கின்றனர். மார்க்சியம் தெரிந்தால்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியமும் தெரியும், அதற்குமுன் காலடியில் இருக்கும் மண் தெரியவேண்டும். சுயவிமர்சனம் மட்டுமே அதற்குத் தீர்வல்ல, தற்காலத்தில் மாற்றம் கண்டிருக்கும் பொருளாதார சூழலும், அதன் பொருட்டு உருவாகியிருக்கும் சமூக மாற்றம், உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டால்தான் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். அதைவிட்டுவிட்டு தலித் இயக்கங்கள் மீது பழியைப் போட்டுவிட்டு தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்வது ஒருவகை கையலாகாதத்தனம்.
குணா அவர்கள் தம்மை தீவிர இடதுசாரியாக காட்டிக் கொண்டிருப்பதால் தம்மை மார்க்சியம் தெரிந்தவராக நினைக்கிறார். அவர் பாமக வளர்ந்ததற்கு கூறும் காரணங்கள் மார்க்சிய அடிப்படையே இல்லாதவை. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்-
“முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டே இந்தக் கட்சி, தான் சார்ந்துள்ளதாகக் கூறும் வன்னிய மக்களுக்கு பேரழிவுகளை விளைவித்தது. பாமக வளர்ச்சி பெற்ற இந்த இருபதாண்டு காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது. வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து குழி தோண்டவும், கட்டடம் கட்டவும் பெங்களூருக்கும், சென்னைக்கும், மும்பைக்கும், கோவைக்கும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்தனர்; பெருநகர பிளாட்பாரங்களில் தஞ்சமடைந்தனர்”
பாமகவை எவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பாகக் காட்டுகிறார். சமூகத்தின் உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய கட்சியாக இவரைத் தவிர வேறு யாரும் அதை உயர்த்திக் காட்டியிருக்க மாட்டார்கள். அதுவுமின்றி இதில் சுட்டிக்காட்டப்பட்ட பொருளாதாரக் காரணிகள் தலைகீழாக காட்டப்பட்டுள்ளன. அதை எப்படி புரிந்துக் கொள்வது?
“பாமக வளர்ச்சிப் பெற்ற இந்த இருபதாண்டுக் காலத்தில்தான் விவசாயம் கடும் வீழ்ச்சி கண்டது, வன்னிய விவசாயிகள் வாழ்விழந்து போனார்கள்” என்பது முற்றிலும் அபத்தமானது. விவசாயம் வீழ்ந்து போனதால்தான் பாமக வளர்ந்தது என்பது உண்மை. ஏனெனில் விவசாயத்தை அழிக்கக்கூடிய தேவை ஏதும் பாமகவிற்கு இல்லை. வன்னியர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் தமது வாழ்வாதாரத்தை ஒரு கட்சிக்காக துறந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் நடந்தது என்வென்றால், எண்பதுகளின் நடுவிலும் தொன்னூறுகளின் தொடக்கத்திலும்தான் விவசாயம் நவீனமயம் ஆகத் தொடங்கியது. ட்ராக்டர் வைத்திருக்கும் விவசாயி பணக்கார விவசாயியாக பெருமையாக கருதப்பட்ட காலம். அந்தப் பெருமை அவர்களை அழிக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதைத் தொடர்ந்து விவசாயத்தில் நவீன கருவிகளின் படையெடுப்பு ஆட்குறைப்பைக் கட்டாயப்படுத்தியது. வேலையற்றவர்கள் எங்கே போவார்கள்? நகரத்திற்கு போனால் பிச்சையெடுக்கவா முடியும், அங்கும் வேலைக்குத் தான் போக முடியும். நகரமயம் விரைவாகியிருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு குறைவில்லை. குறைந்த கூலிக்கு கிராமத்தில் மாரடிப்பதைவிட நல்ல கூலிக்கு நகரத்தில் வேலை செய்வது பயனுள்ளதுதானே! எனவே விவசாயத்தில் ஆட்குறைப்பும், நகரமயமாக்கமும்தான் வன்னியர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றியது. தலித்துகளுக்கும் இதுதான் பொருந்தும். இதற்கு பாமகவை மூலமாகக் காட்டுவது எப்படி சாத்தியம்?
உழைக்கும் மக்கள் வெளியேறிவிட்டால் விவசாயத்திற்கு மட்டும் அல்ல, இயக்கங்களுக்கும்கூட ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாவிட்டால் இடதுசாரிகள் இப்போது தீண்டாமைப் பிரச்சினையை காலம் கடந்து கையில் எடுத்திருக்கிறார்களே அப்படித்தான் எப்போதும் இனி முடியும். இப்போது ஒரு பிரச்சினையை கையில் எடுக்கும் போது அதன் முன்னவர்களை குறை சொன்னால்தானே தாம் எடுப்பதற்கான தார்மீக நியாயத்தை கற்பிக்க முடியும்! அதைத்தான் குணா போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தலித்துகள் பின்னால் அணி திரண்டிருக்க வேண்டும், ஆனால் அவர்களுக்கான விடுதலையை நாங்கள்தான் வாங்கிக் கொடுப்போம் என்று முனைப்பு காட்டுவது பேதமையையே காட்டும். ஆனால் தமது ஆதங்கத்தினை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கு மற்றொருச் சான்று..
“எனவே எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகளை வட தமிழகத்திலிருந்து ஒழித்துக் கட்டும் நடவடிக்கையின் இரண்டாவது பாகம் தான் பா.ம. க. மூன்றாவது பாகம் விடுதலைச் சிறுத்தைகள். இதற்கான அரசியல் தத்துவார்த்த அடிப்படையை வழங்கியவர்கள் பின்நவீனத்துவவாதிகள்”
குணா எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் பாமகவை, விடுதலைச் சிறுத்தைகளை குறைத்து மதிப்பிட்டு எழுதியிருந்தால்கூட ஏற்றுக் கொள்ள முடியும், ஆனால் இரண்டுக்குமான வரலாற்றுப் பாத்திரம் ஒன்றுதான் என்று நிறுவ முயல்வது மோசமான புரிதலின்மை. அதைவிட அதற்கு பின்நவீனத்துவ வாதிகள்தான் அடிப்படைகளை வழங்கினார்கள் என்பது நகைச்சுவை.
வடமாவட்டங்களிலிருந்து கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட இக்கட்சிகள் தோன்றியதென்றால் தென் மாவட்டங்களில் இடதுசாரிகள் ஏன் காலூன்ற முடியவில்லை என்ற கேள்விக்கும், அதைவிட தொழிற்துறை வளர்ச்சி பெற்ற மேற்கு மாவட்டங்களில் ஏன் இடதுசாரிகளால் வலுவாக முன்னேற முடியவில்லை என்ற கேள்விக்கும் அவர்கள் பதில் கண்டாக வேண்டும். நக்சல் பாரிகளின் கூடாரங்களை விட்டு ஓடி வந்துவிடுங்கள் என்று பிற்போக்கு சக்திகள் அழைப்பு விடுத்த உடனே வன்னியர்களும் தலித்துகளும் ஓடி வந்து விட்டார்கள் என்றால் அவ்வளவு பலவீனமாகவா நக்சல்பாரிகள் தமது இயக்கத்தை கட்டமைத்தார்கள்? நச்சல் வளர்ந்த பகுதிகளில் சாதி வெறியர்கள் தமது கொட்டத்தை அடக்கிக் கொண்டிருந்தார்கள் என்ற உண்மை, நக்சல்கள் பலவீனப்பட்டுப் போனபிறகு இந்த சாதியச் சக்திகள் மீண்டும் தலையெடுத்தற்கான காரணம் என்ன என்பதை யார் கண்டுபிடிப்பது? நிச்சயம் நக்சல்பாரிகள் என்று தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் மட்டும் அல்ல, இடதுசாரிகளும் அதை பரிசீலிக்க வேண்டும். அதைவிடுத்து வெற்று கூச்சல்களை எழுப்புவது இடதுசாரி சிந்தனைகளுக்கே பொருந்தாது.
குணாவின் கட்டுரைகள் இயங்கும் விதம் முற்றிலும் இடதுசாரி சிந்தனையைச் சார்ந்தது அல்ல. அதில் கொஞ்சம் பொருளாதாரக் கண்ணோட்டத்தைக் காணமுடிகிறது. ஆனால் பொருளாதாரக் கண்ணோட்டம் மட்டுமே மார்க்சியமும் அல்ல. ஏனெனில் மார்க்சியம் என்பது வெறும் பொருளாதாரக் கண்ணோட்டம் அல்ல என்பதை ஏங்கல்சும், லெனினும் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளனர். சமூக வளர்ச்சியென்பது உற்பத்தி உறவுகளின் வளர்ச்சியைப் பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளாவிட்டால் விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றுப் பாத்திரத்தை மட்டுமல்ல பாட்டாளி மக்களின் வரலாற்றுப் பாத்திரத்தையும் தவறாக புரிந்து கொள்ளத்தூண்டும்.
விடுதலைச் சிறுத்தைகளை ஆளும் வர்க்கத்தின் கைக்கூலி என்று குற்றம் சாட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் தலித் மக்களைப் பொருத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சியென்பது ஆளும் வர்க்கத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; கிராமங்களில் ஒடுக்கும் சாதியின் நிறுவனமாக அது நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. மக்கள் ஒடுக்கப்படும்போது ஏதோ ஒரு தீர்க்கத்தரிசிக்காக அதாவது நக்சல்கள் போன்ற உங்களுக்காகக் காத்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்த்திருக்க வேண்டாம். தலித்துகளின் பிரச்சினையை இடதுசாரிகள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மையை இது அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
எனவே, குணா அவர்களின் கட்டுரைகளில் மலிந்திருக்கக்கூடிய தகவல் பிழைகளையும், முன்னுக்கு முரணாக குறிப்பிடப்பட்ட வரலாற்றுத் தரவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் எதிர்வினையின் பக்கங்கள் கூடிவிடும். எனினும் அதனுள் இழையோடும் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கையறுந்த நிலையில் வெளிப்படும் ஆதங்கத்தை எப்படி சரி செய்வது? தாமே சரி செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான் தகவல்களுக்கான மறுப்புகளைத் தவிர்த்திருக்கிறேன். ஆயினும் குணா அவர்களையும் பூனைக்கு மணி கட்டிய அவரின் சாகசத்தை மெச்சிய அத்தனை பேர்களையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால் வரலாறு தெரியாமல் எழுதாதீர்கள் என்பதல்ல, தலித் மக்களின் தேவை என்னவெனத் தெரியாமல் அங்கலாய்ப்பதில் பயன் ஏதுமில்லை.
– கௌதம சன்னா, கருத்தியல் பரப்புச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ( g.sannah@gmail.com)
__________________________________
gowthama sannah
June 11, 2013 at 10:31 am
– திருப்பூர் குணாவின் மறுப்பு
பின்நவீனத்துவ மொக்கைகளைப் போலல்லாமல் தோழர் கௌதம சன்னாவின் கட்டுரை அரசியல் பேசக்கூடியதாகவும் விவாதத்திற்கு இடமளிப்பதாகவும் உள்ளது. தலித் அரசியல், போர்டு பவுண்டேஷனில் இருந்து அல்ல; அம்பேத்கரிலிருந்தும், அயோத்திதாச பண்டிதரிலிருந்தும் தொடங்குகிறது என்று சன்னா கூறியுள்ளார்.
தலித் மக்களின் போராட்ட அரசியல் மதுரை வீரனிலிருந்தும், அதற்கு முன்பு காத்தவராயன், நந்தனாரிலிருந்தும் தொடங்குகிறது என்று நாங்கள் கூறுகிறோம். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் நடக்கவில்லை என்பது பின்நவீனத்துவ அரசியல். ஒருநாளும் தலித்துகள் அடக்குமுறைகளை அமைதியாக சகித்துக் கொள்ளவில்லை என்பது மார்க்சிய அரசியல். கட்டுரையில் போர்டு பவுண்டேஷன் முன்னிருத்திய தலித் அரசியல் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பிருந்த தலித் அரசியல் பற்றிய வகுப்பு அத்தனை அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
கௌதம சன்னா தனது கட்டுரையில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் தலித் அரசியலில் ஈடுபாடு காட்டின என்ற அம்சத்தை எளிதாகக் கடந்து செல்கிறார். எனவே தலித் அரசியல் குறித்த விரிவான விவாதத்தில் ஈடுபடுவதற்கு முன் இத்தகைய சக்திகள் குறித்தும் கீழ்க்கண்ட வேறு சில விஷயங்கள் குறித்தும் அவரது கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
1. கௌதம சன்னா தனது கட்டுரையில் தன்னை மார்க்சிய மாணவனாக கூறிக்கொள்கிறார். ஆனால் தற்போது இணைய தளத்தில் காணக் கிடைக்கும் ஒரு புகைப்படம் அவரது மார்க்சியப் போர்வையை உருவி விடுகிறது. பவுத்த மதத்துக்கு மதம் மாறும் ஒரு நிகழ்ச்சியில் சன்னா பிரசங்கம் செய்கிறார். கூடவே பவுத்த காவி யூனிபார்மில் ஒரு துறவியும் உள்ளார்.
மதத்திற்கும், மார்க்சியத்திற்கும் என்ன தொடர்பு? பவுத்த மதம் எந்தவிதத்தில் சாதிய இழிவைப் போக்க உதவும்? இது குறித்து அனுபவத் தொகுப்பு என்ன?
2. “மகா போதி சொஸைட்டி, சங்கரக்ஷிதாவின் தீன்ரத்னா புத்திஸ்ட சொஸைட்டி போன்ற அமைப்புகள் அதிகார மையத்திற்கு உதவுகின்றன. தீன் ரத்னா அமைப்பு ஐரோப்பிய நாடுகளிலிருந்து பணம் பெறுகிறது. புத்த மதமே ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் மதம்தான்” என்ற விமர்சனங்களுக்கு பதில் என்ன?
3. சாதி ஒழிப்பிற்கான விடுதலைச் சிறுத்தைகளின் திட்டம் என்ன? அது எந்த விதத்தில் இதற்கு முன் வைக்கப்பட்ட திட்டங்களில் இருந்து மறுபட்டது?
4. சாதியம் பற்றிய புரிதல், புரிதல் என்கிறீர்களே அது என்ன? தங்களது புரிதலையும் நடைமுறையையும் பற்றி சற்று விரிவாகக் கூறுங்கள்?
5. தலித் ஆதார மையம், அதற்கு ஆதாரமாக இருக்கும் எவாஞ்சலிக்கல் சர்ச், அதற்கு ஆதாரமாக இருக்கும் ஏகாதிபத்தியம் இவை குறித்து தங்கள் கருத்து என்ன?
6. மார்க்சிய அமைப்புகளின் போதாமை குறித்துப் பேசும் தாங்கள், அதைவிட அதிகமாக தலித் இயக்கங்கள் பிளவுண்டு கிடப்பதையும், ஒரு அடி கூட முன்னேற முடியாமல் முட்டுச் சந்தில் சிக்கித் தவிப்பதையும் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
7. அப்பட்டமான பார்ப்பனிய நிறுவனமான ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்கு தங்கள் தலைவர் திருமாவளவன் விஜயம் செய்ததையும், ஒற்றைக் காலில் நின்று போஸ் கொடுத்ததையும் எப்படிப் புரிந்து கொள்வது?
8. சிதம்பரம் கலவரத்திற்குப் பின்பு திருமாவளவன் இக்கலவரத்திற்கு காரணமானவர்களுடன் எக்காலத்தும் கூட்டு இல்லை என்றார். எந்த அரசியல் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? மீறப்பட்டது?
9. இடதுசாரிகளிடம் எப்போதும் தலித் பிரச்சினையைப் பிறரால் புரிந்துகொள்ள முடியாதென சீறும் நீங்கள், இராமதாசு – கருணாநிதி போன்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்பியது எப்படி?
10. இன்றைக்கும் தலித் மக்கள் மீது இடைவிடாத வன்முறைகள் தொடரும்போது வன்முறையை எதிர்கொள்கிற திட்டம், நடைமுறை, அதற்கான அமைப்பு வடிவம் வேண்டுமா? வேண்டாமா?
இப்படியான இன்னும் பல விசயங்களை நாம் திறந்த மனதுடன் விவாதிப்போம். ஃபோர்டு பவுண்டேசன் தலித் இயக்கங்களுக்கும், மக்கள் தலித் இயக்கங்களுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்வோம். ஏனென்றால் சமூக நெருக்கடிகள் மீண்டும் மக்கள் போராட்டங்களை பெரிய அளவில் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறது. அது சாதி ஒழிப்புப் போராட்டத்தையும் கோருகிறது. சாதி ஒழிப்பை உயிராகக் கொண்டவர்கள் புரட்சிகர இயக்கங்களை கட்டி வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். இனி எங்களுக்கு வாய்ச் சவடால்காரர்கள் தேவையில்லை என்பது தான் இவ்விவாதங்களைத் தூண்டியிருக்கிறது.
இந்தப் புறநிலை எதார்த்தமே இந்த விவாதத்தை வீரியமாக்குகிறது. நாம் தொடருவோம்.