மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது எனினும் இன்றைய நிகழ்ச்சியை நண்பர் யாக்கன் மூலமாகக் கேள்விப் பட்டு கலந்துக்கொள்ள வந்தேன், எனவே இந்த வாய்ப்பில் அறைந்த பௌத்த உபாகசர் சாந்த மூர்த்தி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியோர்களே, எனக்கு முன்னே பேசியத் தோழர் ஒருவர் நாம் பல ஆண்டுகளாக அம்பேத்கரைப் பின்பற்றியும் தம்மத்தைப் பின்பற்றியும் உழைக்கிறோம் ஆனால் நமது உழைப்பு மதிக்கப்படுவதில்லை, இப்படி உ¬ழைப்பவர்கள் மறைந்துப்போனால் சிறிதுக் காலத்திற்குள் அவரை மறந்து விடுகிறார்கள் இதனால் மிகுந்த வேதனையாக உள்ளது என்று மன வருத்தத்தை இங்கே பதிவு செய்தார். அவரின் மன வருத்தம் நியாயமானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மறைந்த சாந்த மூர்த்தி அவர்களின் பணியினை நாம் மதிப்பிட்டால் இப்படி மன வருத்தம் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
முதலில் பௌத்தர்கள் அநித்தியத்தை உணர்ந்தவர்கள், எனவே பெயரும் புகழும் நிலைக்காது என்பதும் தெரியும், எனவெ நாளையோ நாளை மறுநாளோ சாந்த மூர்த்தியின் பெயர் கூட மறக்கப்படலாம், அவரது குடும்பம் கூட மறக்கப்படலாம் ஆனால் அவரின் பணியின் தாக்கம் தம்மத்தில் நிலைத்து நிற்கும். சாந்த மூர்த்தி அவர்களின் பணியினை வரலாற்று பூர்வமாகப் புரிந்துக் கொண்டால் நல்லது என நினைக்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்த வரலாற்றைப் பற்றிக் கூறும் பொழுது புத்தரின் மறைவுக்குப் பிறகு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் பௌத்தம் இந்தியாவில் கோலோச்சியது என்றும் பின்பு பல்வேறு அரசியல் மற்றும் சமுச சூழலின் காரணமாக அது இந்தியாவில் மங்கிப் போனது என்று கூறினார். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மங்கிப் போயிருந்த பௌத்தம் அயோத்திதாசப் பண்டிதராலும், புரட்சியாளர் அம்பேத்கராலும் மீண்டும் இந்த மண்ணில் நிலைநாட்டப்பட்டது என்பதை யாரால் மறுக்க முடியும். ஆனால் பௌத்தம் மங்கிப் போயிருந்த அந்த ஆயிரம் ஆண்டுகள் அது இந்த மண்ணை விட்டு மறைந்துப் போகாமல் காப்பாற்றி, பாதுகாத்து வந்தது யார் என்று நமக்குத் தெரியாது. எத்தனையோ தலைமுறைகளாக காப்பாற்றி வந்து நம்மிடம் சேர்த்தவர்கள் யார் என்றுகூடத் தெரியாது. முகம் தெரியாத அந்த முன்னோர்கள் தமது உழைப்பும் பெயரும் நிலைத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால் தமது கடமையை அவர்கள் நிறைவேற்றினார்கள் அதனால் பௌத்தம் நம்மை வந்தடைந்தது.
ஆகவே அந்த முன்னோர்களை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க கடமைப் பட்டவர்கள், அப்படித்தான் மறைந்த சாந்த மூர்த்தி அவர்களின் பணியும் நினைவேந்தத் தக்கது. அவர் மறைந்தாலும் அவரது மறைவிலிருந்து நாம் பெறும் செய்தி இதுதான். எனவே சாந்தமூர்த்தி அவர்கள் மறைந்தாலும் அவர் செய்தப் பணிகள் மீதமிருக்கின்றன அதை முன்னெடுப்பதின் மூலமாக அவருக்கு நமது அஞ்சலியைச் செலுத்துவோம், நன்றி வணக்கம்.
கௌதம சன்னா
(சென்னை)14,12,2011 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி ஜீவனஜோதி மையம் எழும்பூர், சென்னை