Home Article இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

Comments Off on இரும்பு பெண் சர்மிளாவும் இரட்டைவேட அசாரேவும்..

போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும்

என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை..

நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் 2 நாளுக்குள் முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த புரட்சிக்கார்கள் என்ன செய்வார்கள் இதுதான் மில்லியன் டாலர் கேள்வி (ஏனென்றால் மில்லியனர்கள்தானே இதற்கு பின்னால் இருக்கிறார்கள்)

எனவே ஊழலை ஒழிக்க வந்த அசாரேவின் போலிப் போராளிகளே உங்களுக்கு மனசாட்சிக்கு உண்மையான போராளி சர்மிளாவின் போராட்டத்தைப் படியுங்கள்..

ஐரோம் ஷர்மிளா சானு… உலகம் இவரைப்போல ஒரு போராளியைக் கண்டது இல்லை. 2000-ம் வருடம் நவம்பர் 2-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தொடங்கியது ஷர்மிளாவின் உண்ணாவிரதம். 26 வயதில் உண்ணாவிரதத்தைத் தொடங்கியவருக்கு இப்போது 36 வயது.
10 வருடங்களாகத் துளி உணவுகூட அவரது உடலுக்குள்செல்லவில்லை. ஆறு வருடங்களாக ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அவரது உதடுகளைத் தீண்டியது இல்லை. பற்களைக்கூடத் தண்ணீரைப் பயன்படுத்தாமல், டிரை காட்டன் துணிகளைக்கொண்டு சுத்தப்படுத்திக்கொள்கிறார். 10 வருடப் பட்டினிப் போராட்டத்தால் அவரது மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது.

அரசு சர்மிளாவைக் கைது செய்து மூக்கில் பிளாஸ்டிக் டியூப் வழியாக திரவ உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி உயிர் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனாலும், அவர் பல தடவை டியூப்பை அகற்றிவிட்டு போராட்டத்தைத் தொடர முயற்சிக்கிறார். “ஏனெனில், இது தண்டனை அல்ல; நான் பிறந்ததன் கடமை” என்கிறார் கண்ணீருடன். அந்தக் கண்ணீரில் நிரம்பி இருக்கிறது ஒரு போராளியின் கம்பீரம்.

இந்திய அரசு வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தியிருக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (Armed Forces Special Powers Act) திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ஷர்மிளாவின் ஒற்றைக் கோரிக்கை. எங்களைத் தனியேவிடுங்கள். தனிநாடு கொடுங்கள்!’ என்பது தான் அம்மக்களின் கோரிக்கை.
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தப் பிரச்னை இருக்கிறது. இதையட்டி, வடகிழக்கில் உருவான ஆயுதக் குழுக் களை ஒடுக்குவதற்காக 1958-ல் கொண்டுவரப் பட்டதுதான் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். இதன்படி ஒருவரது கையில் ஆயுதம் என்று சந்தேகிக்கக்கூடிய பொருள் இருந்தாலே அவரைச் சுடலாம். யாரையும் எந்த விசாரணையும் இன்றிக் கைது செய்யலாம். வாரன்ட் இன்றி வீட்டுக்குள் புகுந்து சோதனையிடவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் ராணுவத்துக்கு எல்லையற்ற அதி காரம் தருகிறது இந்தச் சட்டம். இதற்காக ராணுவத்தின் மீது சட்டப்பூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அமலில் இருக்கும் இந்தச் சட்டத்தால், ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கில் ஆதரவற்ற குழந்தைகள், கற்பழிக்கப்பட்ட பெண்கள், விதவைகளின் எண்ணிக்கை கணக்கில்லாத அளவுக்குப் பெருகி விட்டது. 2009-ம் ஆண்டில் மட்டும் அரசின்அதிகாரப் பூர்வக் கணக்கின்படியே 265 பேர் படையினரின் துப்பாக்கிகளுக்குப் பலியாகி உள்ளனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வேண்டிதான் ஷர்மிளா போராடத் துவங்கினார்.

இம்பால் ஜே.எம். மருத்துவமனையின் ஒரு அழுக்கு அறையில் தனிமைச் சிறையில் ஷர்மிளா ஒரு திருட்டுக் கைதியைப் போலத்தான் நடத்தப்படுகிறார். ஷர்மிளாவைவிடக் கூடுதல் உறுதியுடன் இருக்கிறார் அவரது அம்மா ஐரோம் ஆங்பி சக்தி. நடக்கும் தூரத்தில்தான் வீடு என்றபோதிலும் கடந்த ஆறு வருடங்களாக அவர் தன் மகளைப் பார்க்கவில்லை. “இந்தக் கையால் அவளுக்கு உணவு ஊட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால்,அவளைப் பார்த்தால் அழுதுவிடுவேன். என்அழுகை அவளது மனஉறுதியைக் குலைத்துவிடும். அவளது லட்சியம் நிறைவேறிய பிறகே அவளைச் சந்திப்பேன்!” என்கிறார். ஆனால், அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதைப்பற்றி பரிசீலிப்பதாகக்கூட இல்லை. இதைப்பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட உபேந்திரா கமிஷன், ஜீவன் ரெட்டி கமிஷன் இரண்டினாலும் எந்தப் பலனும் இல்லை. கமிஷன்களின் விசாரணையை ராணுவம் மதிப்பதே இல்லை. விசாரணைக்கு ஒரு முறைகூட ராணுவம் சென்றதில்லை.

வரலாற்றில் எத்தனையோ அரசியல் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், உலகின் எந்த ஒரு மூலையிலும், ஒருபோதும் இப்படி ஒரு நீண்ட போராட்டம் நடந்ததே இல்லை. ஷர்மிளா ஒரு வரலாற்றைப் படைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், அவர் படைக்க விரும்புவது இத்தகைய வரலாற்றை அல்ல; அவர் விரும்புவது மக்களின் அமைதியான, அன்றாட வாழ்வை. அதை ஒருபோதும் துப்பாக்கிகளால் வழங்க முடியாது. ஏனென்றால், துப்பாக்கிகளுக்குச் சுட மட்டுமே தெரியும்!

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …