Home Article அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

Comments Off on அம்பேத்கர் சிலை அவமதிப்பு காட்டும் அரசியல் திசை

ன்னும் மன்னர்களின் காலத்தில் வாழ்வதாகத் தான் இப்போது நடக்கும் சமூக நடப்புகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. மன்னர்களின் காலம் மலையேறி நீண்டகாலம் ஆகிவிட்டதை இன்னும் இந்திய இடைச்சாதிகள் நம்பவில்லை என்றுத்தான் தெரிகிறது. அந்தக் காலத்தில் மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் மன்னர் எதிரி நாட்டின் மன்னனின் தலையை கொய்து விட்டால் அது மிகப் பெரிய வீரமாக பேசப்பட்டது. தலையெடுப்பவன் தண்டல்காரனாக மாறிவிடுவான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால் அந்தக் காலம் மீண்டும் வருமா என் பழையக்காலப் பெரியவர்கள் கிராமங்களில் புலம்புவார்களே அப்படி ஒரு பெரு மூச்சை இப்போதெல்லாம் வேறுவேறு குரல்களில் கேட்க முடிகிறது.

      அண்மையில் மைய அரசின் கீழ் இயங்கும் கல்வித்துறையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மேல்நிலை முதலாமாண்டு பாடப்புத்தகத்தில் அம்பேத் கரை பற்றி வந்தக் கேலிச்சித்திரங்கள் உருவாக்கிய பேரலையினைத் தொடர்ந்து, உத்திரப் பிரதேச மாநிலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையும் முன்னாள் முதல்வர் செல்வி.மாயாவதி அவர்களின் சிலையும் சாதி வெறியர்களால் இடித்து அவமதிக்கப்பட்டது. இரண்டு நிகழ்வுகளுக்குமான காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் இந்தியா முழுதும் அதிர்ச்சியை உண்டாக்கிய அந்தச் செய்திகளின் பின்னணியில் இருக்கின்ற அரசியலை அம்பலப்படுத்த தலித் இயக்கங்கள் முயன்றபோது சனநாயகத்தின் மாயமுகத்தையும், விமர்ச்சனச் சுதந்திரம் என்ற தந்திரக்கோலையும் காட்டி இந்தச் சாதி இந்துச் சமூகம் அப்படியே திசைத் திருப்பிவிட்டது. பேசப்பட்டிருக்க வேண்டியப் பிரச்சினைகள் அப்படியே மூடி மறைக்கப் பட்டுவிட்டன.

இப்போது இன்னொரு அவலம் நடந்தேறியிருக்கிறது. மதுரை மாநகரில் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் பெருங்குடியில் கம்பீரமாக நின்றிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையும், இன்னொரு இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையோடு சேர்த்து மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களின் சிலையும் திட்டமிட்ட முறையில் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்  கின்றன. சிலைகளின் தலைகளைக் கொய்வதற்கு சிங்கங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையினை பார்க்கும்போது அவர்கள் எதோ ஒர் உளவுத்துறையிடம் பயிற்சிப் பெற்றிருப்பார்களோ என்ற ஐயத்தை உருவாக்கியிருக்கிறது. அது மொசாட்டின் உளவுத்துறையா! இந்திய அரசின் உளவுத்துறையா! ராசபட்சேவின் உளவுத்துறையா! அல்லது அமெரிக்க உளவுத்துறையா என்றெல்லாம் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளத் தேவையில்லை, அந்த அளவிற்கு இந்தக் கேடுகெட்ட சாதி இடைச்சாதி இந்துக்கள் வளரவில்லை. இன்னும் தமது அற்பத்தனமான புத்தியிலிருந்து அவர்கள் விடுதலைப் பெறவில்லை என்பது வேறு விசயம்.

        அமைதியாக இருந்த மதுரை மாநகர் அமைதியாகத்தான் இருந்தது. அமைதி என்றால் சாதி இந்துக்களின் பார்வையில் அவர்கள் செய்வதை யாரும் தட்டிக்கேட்காமல், அவர்களின் சாதித் திமிரை கண்டும் காணாமல் இருந்தால்தான் அதற்குப் பேர் அமைதி. ஊர் அமைதியாக இருப்பதற்கு தலித்துகளின் சகிப்புத் தன்மையும், எதிர்த்துக் கேட்காமல் இருக்கும் போக்கும்தானேக் காரணம். இப்போது அந்த நிலை மாறி, அரசியலில் சரிக்கு சரியாக போட்டியிடத் தொடங்கிய உடனே இடைச்சாதி இந்துக்களின் அல்லது தலித்தல்லா தாரின் மண்டைகள் எல்லாம் பைத்தியம் பிடிக்கத் தொடங்கி விட்டது. தலைகளைப் பிய்த்துக் கொண்டு காரணங்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கியவர்கள் அம்பேத்கர் சிலைகள்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்றும் அந்தச் சிலைகள் இருப்பதனால்தானே இப்படி இவர்கள் வீரமாக நடந்துக் கொள்கிறார்கள், இந்தச் சிலைகளை உடைத்து விட்டால் தலித்துகள் வீரமிழந்து, காணாமல் கரைந்து விடுவார்கள் என்று நம்பினார்களோ என்னவோ அம்பேத்கரின் சிலைகளை உடைப்பதையே ஒர் இயக்கமாக நடத்தினார்கள் தென்மாவட் டங்களில், கூடவே இம்மானுவேல் சேகரன் சிலைகளையும் உடைத்து நொறுக்கினார்கள். மதப்போராட்டங்கள் நடந்தக் காலக் கட்டத்தில் புத்தரின் சிலைகளை, மகாவீரரின் சிலைகளை உடைத்து தமது வெறியாட்டங்களை நடத்திய சைவ-வைணவ இயக்கவாதிகளைப் போல் நடந்துக் கொண்டார்கள். அந்தப் பாரம்பரியப் பழக்கத்தின்படிதான் நடந்துக் கொள்ளும் சாதி வெறி இந்துக்கள் நடந்துக் கொள்கிறார்கள் என்று அப்போதுத் தோன்றியது.

       அம்பேத்கரின் சிலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் மனது  ஏனோ படாதப் பாடுபட்டது. அவர்களின் மனக் குகைகளில் உலவியச் சிங்கங்களின் கர்ச்சனைக் குரல்களினால் அவர்களின் செயல்பாடுகளில் தடுமாற்றங்கள் உருவாகி ஆவேசப்படத் தொடங்கினார்கள். இந்தச் சிலைகளை உடைத்துவிட்டால் தலித்துகளின் அரசியல் கோரிக்கைகளை முடக்கிவிடலாம் என்று நம்பியிருப்பார்கள். ஒரு பஞ்சாயத்துக் கவுன்சிலர் பதவிக்கு தலித்துகள் போட்டியிட்டால்கூட அதைச் சாதி இந்துக்களின் மனம் எப்படி எடுத்துக்கொண்டதென்றால், தலித்துகள் அந்தப் பதவிகளுக்குப் போட்டியிடவில்லை, மாறாகத் தங்களிடம் போட்டியிடுகின்றார்கள் என்று எடுத்துக் கொண்டார்கள். தலித்துகள் போட்டியிடுவது அவர்களுக்கு இந்திய அரசமைப்பின்படி ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் என்றாலும் கூட..

     இந்தியாவில் சனநாயகம் என்ற ஒன்று இருக்கிறது என்றோ, சனநாயக அரசு ஒன்று இருக்கிறது என்றோ, அதற்கு ஒர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும் அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். இத்தனை ஆண்டு காலம் குனிந்தே பழக்கப்பட்டு இருந்தவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்களே என்பது அவர்களை மேலும் வெறிகொள்ள வைத்தது. அதனால் தலித்துகள் மீது காட்ட வேண்டிய வன்முறையை அவர்களுக்கு ஆற்றலைத் தரும் அம்பேத்கரின் சிலைகள் மீதுக் காட்டினார்கள். எங்கு பார்த்தாலும் சிலைகள் உடைக்கப்பட்டன. யாரும் காவலுக்கு இல்லாமல் தனியாக சாலைகளின் ஓரத்தில், பூங்காக்களில், முச்சந்திகளில், எங்கேயோ குக்கிராமங்களில் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைகளின் மீது இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் செறுப்பு மாலைகளைப் போட்டார்கள், சில இடங்களில் சேதப்படுத்தினார்கள், சில இடங்களில் தார் பூசினார்கள் இன்னும் என்னென்னவோ செய்தார்கள். தனியாக நின்றுக் கொண்டிருந்த சிலை களின் மீது வியூகம் வகுத்து தாக்குதல் நடத்தி தங்களது சங்ககாலப் போர்த் தந்திரங்களை நவீன உலகிற்கு காட்டினார்கள். மறவர்களின் போர்த் தந்திரங்களைப் பார்த்து நாடே வியந்துப்போனது. இப்படியும் வீரம் இருக்குமா! வீரம் விளையும் பூமியில் இப்படியும் வியூகங்கள் விளையுமா என உலகமே வியந்துப் பார்த்தது. தனியாக இருக்கும் சிலைகளின் மீது போர் தொடுக்கும் போர்க் கலையைப் பற்றி அறிந்துக் கொள்ள மேற்குலக நாடுகளின் போர்த் தந்திர அறிஞர்களெல்லாம் தமிழகத்திற்கு படையெடுத்தார்கள் என்பது தனிக்கதை.

 Image

ஆனால் இப்போது மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டப்பட்ட பின்னணியில் உள்ளக் கதையோ விசித்திரமானது. அது அம்பேத்கரின் தலைக்கு வைக்கப்பட்ட விலையோ அல்லது பத்வாவோ என்று ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருத்தவர்களுக்கு இப்போது வேறுகோணங்கள் தேவைப்படுகிறது.

      எடுத்த எடுப்பிலேயே அரசு ஏதாவது முயற்சி எடுக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் குறைந்தப்பட்சம் கண்டன அறிக்கையாவது வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது, அரசு மட்டுமல்ல பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்து சாதி இந்துக்களின் கட்சிகளும் வழக்கம்போல மௌனம் சாதித்தன. பகுத்தறிவின் இருபக்கத்தில் ஒரு பக்கம் அம்பேத்கர் என்று பறைச் சாற்றிக் கொள்ளும் திராவிட இயக்கத்தவர்கூட தமது ஒரு பக்கத்தை மௌனமாக வைத்துக் கொண்டனர் என்பது  வேடிக்கையானது. அம்பேத்கர் ஒரு தலித் தலைவராக இவர்கள் பார்வையில் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் இவர்கள் அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின்படிதானே தமது அரசியலை முன்னெடுக் கிறார்கள். குறைந்தப் பட்சம் அந்த அளவிலாவது “அரசமைப்புச் சட்டத்தின் தந்தையை அவமதிக்கிறீர்களே பாவிகளே நீங்கள் உருபடுவீர்களா” என்று ஒப்புக்காவது அவர்கள் குரல் கொடுத்திருக்கலாம். அந்த சின்னக் குரலைக் கொடுத்துவிட்டால்கூட தமது மக்கள் தம்மை புறக்கணித்து விடுவார்கள் என்று பயந்துப் பதறி அமைதியாகிவிட்டார்கள். இதனால் இவர்கள் பேசும் சமூக விடுதலை என்பது எது என்பதைத்தான் நம்மால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் இவர்கள் எப்போதாவது தமது வாயைத் திறப்பார்கள் என்று பல முறை காந்திருந்து எந்தப் பயனும் விளைந்ததாகத் தெரியவில்லை. இனியும் காத்திருப்பதைத் தவிர வேறுவழியும் இல்லை.. ஏனெனில் சமூக நீதியின் முகம் அப்படிபட்டது.

      அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட உடனே விடுதலைச் சிறுத்தைகள் களம் இறங்கி நாடு முழுவதும் மறியல் செய்தும், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் தமது எதிர்ப்பைக் காட்டினர். மேலும் களத்தில் செயலாற்றிவரும் மற்றப்பலத் தலித் இயக்கங்கள் கூட தமது போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் ஒரு சில தலித் இயக்கங்கள் அம்பேத்கரின் சிலையுடன் தியாகி இம்மானுவேல் சிலையும் உடைத் ததற்கு ஒரு வேறுபட்ட காரணத்தைச் சுட்டிக் காட்டினர். புரட்சியாளர் அம்பேத்கரோடு ஒப்பிடக்கூடியத் தலைவராக தியாகி இம்மானுவேலை காட்டுவதற்காக பள்ளர்களே இரண்டு தலைவர்களின் சிலைகளை உடைத்துள்ளனர், இது திட்டமிடப்பட்ட சதி என்று அவர்கள் கண்டுபிடித் தனர். இந்தக் கண்டுபிடிப்பு எவ்வளவு அபத்தமானது என்பதை உளவுத்துறையின் செயல்பாட்டை அறிந்தவர்கள் புரிந்துக் கொள்வார்கள். ஏனென்றால் இதே காரணத்தைத் தான் தமிழக அரசின் வட்டாரங்களும் பின்பு சொல்லின. இப்படி அரசுக்கு அடிவருடி அம்பேத்கரை அவமதித்த வர்களை பரண் மேல் ஒளித்து வைக்க இவர்களுக்கு வந்த நிர்பந்தம் என்னவோ அது தெரியவில்லை.

   காட்சிகள் இப்படி முரண்பட்டு நிற்பதால், அம்பேத்கர் சிலை அவமதிப்பின் பின்னணியில் உள்ள  உண்மையானப் பின்னணியை புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. ஏனென்றால் இதுவரை தென் மாவட்டங்களில் முக்குலத்து இடைச்சாதியினரால் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டபோது அது உணர்வு பூர்வமான சாதிப் பிரச்சினை என்பதாகத்தான் புரிந்துக் கொள்ளப்பட்டது, ஆனால் இப்போது அரசியல் பொருளாதார மோசடிகளுக்கு தலித்துகளின் போர் குணத்தை எப்படி பயன் படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றினப் புரிதலுக்கு வரவேண்டியிருக்கிறது.

     தமிழகத்தில் மிகவும் பூதாகரமாக விவாதிக்கப்பட வேண்டிய மதுரை கிரானைட் கொள்ளை இந்த சிலைகள் உடைப்பின் பின்னணியில் இருக்கும் என்று அரசல் புரசலாப் பேசப்பட்டது. சிலை உடைப்பிற்கும் கிரானைட் கொள்ளைக்கும் என்னத் தொடர்பு என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளலாமா என்றுக்கூடத் தோன்றிது. எனினும் நிழல் உலக அரசியல்தான் நிச உலக அரசியலை இந்தியாவில் எப்போதும் நடத்தி வருகிறது என்ற வரலாற்றுப் பின்னணி இந்தக் கோணத்தில் பார்க்கப் பலரைத் தூண்டியது. எனவே இந்தக் கோணத்தை ஏன் தவறவிட வேண்டும்.

    மதுரையில் மலைகள் விழுங்கப்பட்டு சிலைகள் உடைக்கப்பட்ட உடைக்கப்பட்டதன் பின்னணியில்  தமிழக அரசின் முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரான பி.ஆர்.பழனிச்சாமிக்கும்  அவரது பட்டாளத்திற்கும் பங்கிருக்கிறது. முக்குலத்தோர் சாதியில் பிறந்து சாதாரண விவசாயத் தொழிலாளியாக பல ஆண்டுகள் வாழ்க்கையை ஓட்டிவிட்டு, இருந்து கடந்த பத்தாண்டுகளுக்குள் கிரானைட் கொள்ளையின் மூலம் கற்பனைக்கெட்டாத அளவில் பணக்காரனாக உயரமுடிந்ததை நினைத்தால் தமிழ்ச் சினிமாக்கூட தோற்றுவிடும்போலத் தோன்றுகிறது. இந்தக் கொள்ளையில் இந்த மனிதர் தனியாளாய் மட்டும் ஈடுபட்டிருப்பார் என்பது மோசமான கற்பனையாக இருக்கும். முன்பிருந்த செயலலிதா ஆட்சியிலும், பின்பு வந்த கருணாநிதி அவர்களின் ஆட்சியிலும், தொடர்ந்து வந்த செயலலிதா ஆட்சியிலும் மலைகளை வெட்டி கப்பல்களில் கடத்தியிருக்கிறார். பணத்தை வண்டிகளில் கொண்டு வந்திருக்கிறார். பங்குகள் சரியாகத்தான் போயிருக்கிறது. ஆனால் எங்கேயோ தவறு நடந்து கொள்ளை வெளியே வந்துவிட்டது. எவ்வளவுதான் கொள்ளை நடந்திருக்கும் என்று அரசு கொடுக்கும் கணக்கின்படியே போட்டுப்பார்த்தால் நமது மூளையில் கணக்குப் போடும் பகுதியே செயலிழந்துப் போய்விடுமோ என்றுத் தோன்றுகிறது.

Image   மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது தமது முதல் அறிக்கையில் மூன்று லட்சம் சதுர மீட்டருக்கு மேல் கிரானைட் பாறைகள் வெட்டி கடத்தப் பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார், ஆனால் இன்று அந்தக் கணக்கு பெரும் மலை போல வளர்ந்து 39,89,000 சதுர மீட்டர் கிரானைட் பாறைகள் வெட்டப்பட்டுள்ளதாக கணக்கு வந்துள்ளது. ஒரு சதுர மீட்டர் கிரானைட் பாறையின் விலை முப்பதாயிரம் ரூபாய் என்பது  சந்தை மதிப்பு. இதில் பாதி அளவு கழிவுகள் என  ஒதுக்கிவிட்டால் கூட வெட்டப்பட்ட கிரானைட் பாறைகளின் மதிப்பை 20 லட்சம் சதுரமீட்டருடன் முப்பதாயிரம் ரூபாயினைப் பெருக்கிக் கொண்டால் கொள்ளையடிக்கப்பட்ட கிரானைட் பாறைகளின் மதிப்பை கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். (20,00,000 பெருக்கல் 30,000 =) விடையாக வரும் தொகையின் அளவு நம்மை மலைக்க வைத்துவிடும். மலையை விழுங்கியது மகாதேவனா அல்லது தேவன்களா ?

    இப்படி மாபெரும் கொள்ளையை போதாதக் காலம் பிற்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் சகாயம் வெளிப்படுத்திவிட்டதால், அவரை எப்படி பழிவாங்க வேண்டும் என்று யோசித்தார்கள் அது முடியாமல் போய்விட்டது. பிறகு வந்த புதிய மாவட்ட ஆட்சியரும் இதே வேலையைச் செய்ய வேண்டிய நிர்பந்தம், ஊடகங்கள் உருவாக்கிய நிர்பந்தம் காரணமாக அரசும் வேகம் காட்ட வேண்டிதாகிவிட்டது. அதைவிட அந்தக் கொள்ளையில் திமுக புள்ளிகளுக்கு, குறிப்பாக அழகிரியின் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக தெரிந்தவுடன் செயலலிதா அரசு வேகம் காட்டியது. பின்புதான் தெரிந்தது கொள்ளையில் கட்சி வேறுபாடின்றி எல்லா பெரிய கட்சிகளுக்கும் பங்கு போனவிவரம். எனவே பிரச்சினையின் வீரியத்தை குறைக்க வேண்டுமானால் மக்களின் பார்வை வேகத்தை திசைத் திருப்ப வேண்டியது அவசியம், அதுவும் உணர்ச்சிக் கொந்தளிப்பான திசைத்திருப்பல் இருந்தால் கூடுதல் பலன் இருக்கும். அதனால்தான் திட்டமிடப்பட்டு புரட்சியாளர் அம்பேத்கர்  தியாகி இம்மானுவேல் சிலைகளின் தலைகளைப் பாறை அறுக்கும் எந்திரத்தைக் கொண்டு சாவகாசமாக இரவில் அறுத்திருக்கிறார்கள். தலைவர்களின் தலைகள் காணவில்லை என்பதைக் கண்டவுடன் மதுரை உறைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை கடுமையாகத் தலைதூக்கியது. கிரானைட் கொள்ளையில் கவனம் செலுத்தி வந்த மாவட்ட ஆட்சியர் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற தலித் அமைப்புகள் மதுரையை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களையும் உணர்ச்சிக் கொந்தளிப்பான போராட்டங்களை முன்னெடுத்தது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கினார்கள்.

          கொள்ளையர்கள் எதிர்பார்த்தது போலவே நடந்து விட்டது. தமது மோசடிகளை மறைக்க அவர்களுக்கு தேவையான அவகாசம் கிடைத்தது. பள்ளங்களை மூடினார்கள், ஆவணங்களை மறைத்தார்கள், கருப்பு பணத்தினைக் கடத்தினார்கள், சொத்துக்களை மறைத்தார்கள், அவர்கள் தப்புவதற்கு எவை எவைத் தேவையோ அதை நிறைவேற்றிக் கொண்டார்கள். இப்போது அந்த கொள்ளை வழக்கு ஆமை போல நகர்கிறது. பெரிதாக எந்தக் கட்சியும் அலட்டிக் கொண்டதாத் தெரிய வில்லை, திமுக அப்பட்டமான அமைதிக் காக்கிறது, மதிமுக, பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் காணாமல் போன மலைகளைப் பற்றி மகேசனைப்போல மௌனம் காத்துக் கொண்டிருக் கின்றன.

     -அப்படியானால் இந்த மோசடி பெரும் வீச்சோடு வெளிவராமல் போனதற்கு இந்தச் சாதி இந்துக்களின் கட்சிகள் எப்படிக் காரணமோ அதே அளவில் திசைத் திருப்பலுக்கு துணைப் போன அவலத்தை தலித் கட்சிகளும் இயக்கங்களும் காரணமா?

 

    இது திகைப்பூட்டக்கூடியக் கேள்வி.. இந்தக் கேள்வியை தவிர்க்காமல் தலித் அரசியல் முன்னோக்கி நகர முடியாது.. அப்படியானால் இதுவரை நடந்த எல்லா சிலை உடைப்புகளையும் மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டுமா.. அதோடு, இதுவரை நடந்த எல்லா சாதிய வன்கொடுமை களையும் புதியக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய நிர்பந்தம் இப்போது உருவாகி இருக்கிறது.

      – ஒவ்வோர் கலவரத்திற்குப் பின்னும் ஒரு சமூகக் காரணங்கள் மட்டும் இருப்பதற்கு பதில் அரசியல் பொருளாதாரக் காரணங்கள் இருக்கும் என்பதை உண்மையென்றால் தலித்துகள் தங்களது போராட்டத்தை இப்படி திசைத்திருப்புபவர்களின் நோக்கதினை நிறைவேற்றி பலியா வதா?..

     – அல்லது போராடாமலேயே இருந்து அவப்பெயரை சம்பாதித்து தலித் அரசியலைத் தேங்கிப்போகச் செய்வதா?

    இதுபோன்ற நிலைமைகளில் தலித்துகளின் அரசியல் என்பது மலைமுகடில் சரியும் பாறைக்கு ஒப்பாகத்தான் இருக்கிறது. தீவிரமாக யோசித்து முடிவெடுக்கப் படுவதற்குள் பொது நீரோட்ட அரசியல் தலித்துகளை அரசியல் பாதாளத் திற்குள் தள்ளிவிடலாம்.. முடிவெடுக்காமல் உணர்ச்சி வேகத்தில் செயல்பட்டால் சாதி இந்துக்கள் விரித்த அரசியல் பொருளாதார வலை யில் சிக்கி விழுந்து விடலாம்.. எப்படிப் பார்த்தாலும் பாதிப்பு என்னவோ தலித்துகளுக்குத்தான். இதைத்தான் அம்பேத்கர் இம்மானுவேல் சேகரன் சிலை அவமதிப்பு நமக்குச் சொல்லும் அரசியல் பாடம்.

     ஆனால் சாதி இந்துக்களின் இந்த கொள்ளையை பார்த்து வயிறு எரிந்து போனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் தலித்துகளை கொள்ளையிட்டதோடு ஒப்பிடுகையில் இந்த லட்சக் கணக்கானக் கோடிகள் ஒன்றும் இல்லையென்றுதான் தோன்றுகிறது. எனவே தலித் அரசியலை முற்றிலும் ஒர் அரசியல் பொருளாதராக் கண்ணோட்டத்தோடு பார்க்கப் கற்றுக் கொண்டால் தலித்துகளின் போராட்டங்கள் புதிய திசைவழியைக் கண்டடையலாம்.

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…