Home Politics Events அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

Comments Off on அரசியல் அதிகாரத்தில் தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது

தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

விரிவாக உங்களிடத்திலே பல செய்திகளைப் பேச விரும்பினாலும் நமது கட்சி தோழர்களின் அரசியல் புரிதலையும், அவர்களிடம் இருக்கின்ற மன போக்குகளையும் பற்றி சிறிது பேசலாம் என்று நினைக்கிறேன்.

நாம் எல்லேரும் நம்மை பெரும் பொருப்பாளர்களாக மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறாம், அதுதான் எல்லா தீய போக்குகளுக்கும் காரணமாக உள்ளது. ஆனால் நீங்கள் பொருப்பில் இல்லையென்றால் எப்படி உங்களை முன்னிருத்தி பணியாற்றுவீர்கள் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும், அப்படி யோசித்துப் பார்த்தால் உண்மை உங்களுக்கு விளங்கும். முதலில் நமக்கு உள்ளத் தகுதி என்னவென்றால் அடிப்படையில் கட்சியில் உள்ள நாம் அனைவரும் முதலில் கட்சி உறுப்பினர்கள், முதண்மைப் பொருப்பு இதுதான், பிறகுதான் கட்சியின் பொருப்பாளர்கள் என்றத் தகுதி, அதைத் தொடர்ந்துதான் அவரவர் தாங்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப அனைத்து அதிகாரங்களும் மாறுபடும்.


 

நம்முடையத் தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் தமது கடுமையான முயற்சிகளின் மூலம் தமக்கான கட்சிப் பதவியைப் பெற்றுக் கொள்கிறார்கள். பதவியைக் பெற்ற உடனே தமக்கான அடையாள அட்டையை முதலில் அச்சடித்துக் கொள்கிறார்கள். இதுதான் முதல் பணியாக இருக்கிறது, தம்மை மக்களிடத்தில் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு அறிமுக அட்டைகள் எப்படி பயன்படும் என்று எனக்குப் பிடிபடவில்லை, பிறகு மக்களுக்காக உழைக்கிறார்களோ இல்லையோ தனக்காக உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள், இதுதான் பரவலானப் போக்காக இருக்கிறது, இது ஏன் நடக்கிறது என்று பார்த்தால் பணம் பண்ணுவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது, பணமும் வசதியும் அரசியலில் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது என்றாலும் அதை பெறுவதே முழுநேரப் பணியாக இருக்கக்கூடாது, இப்படிபட்ட சம்பாதிக்கும் எண்ணம் ஒருவரை அரசியலில் உயர்த்தாது. பொறுப்புகளை வாங்கிக்கொண்டு பொறுப்பிற்கு ஏற்றார்போல் தம்மை மாற்றிக் கொள்ளாவிட்டால், அதற்கானப் பணிகளைச் செய்யாவிட்டால் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும்..இப்படியே நடந்துக்கொள்வது மிகவும் அரசியல் புரிதல் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

நம்மில் இருக்கும் பொறுப்பாளர்கள் மிகவும் பொறுப்போடும் அரசியல் உணர்வோடும் சிந்தனையோடும் நடக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏதோ கட்சிக்கு வந்தோம் சுவரொட்டியை ஒட்டிவிட்டு, தட்டியை வைத்துவிட்டு அரசியல் பணி செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால் தம்மை அவர்கள் பெரிய ஆட்களாக சித்தரித்துக் கொள்வதைக் காட்டுகிறது. ஆனால் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஓர் ஒன்றியத்தில் இயங்கக்கூடிய வலிமை அல்லது ஆற்றலைப் பெற்றிருக்கமாட்டர். இது எதனால் நிகழ்கிறது என்றால் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளாததினால் நிகழ்கிறது. இவ்வாறு செயல்படுவோர்களால் கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை, அவர்கள் கட்சிக்கு உறுதியான பங்களிப்பை செய்பவர்களாக இருக்க முடியாது.

இந்த மோசமான போக்கிலிருந்து விடுபட வேண்டமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்போது யோசிக்காவிட்டால் நாம் எப்போதும் யோசிக்க முடியாது. இது மிக முக்கியம், இதிலிருந்து விடுபடுவது என்று விருப்பம் உள்ளவர்களுக்கு நான் சில யோசனைகளை சொல்ல விருப்புகிறேன்.

முதலில், மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிற பொருப்பாளர்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பதை விட்டுவிட வேண்டும், அப்படி குற்றம் கண்டுபிடிப்பதின் மூலம் அதைப் போன்ற எண்ணம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க அது உங்களைத் தூண்டுவதுடன் அதற்கான குழுவை உருவாக்க வைத்துவிடும். உங்களுக்கு உங்களுக்காகன ஆட்களை கண்டுபிடிப்பதே வேலையா கிவிடும் பிறகு கட்சி பணி எங்கே நடக்கும்.
இது அத்தோடு நின்றுவிடாது, தமக்கான குழுவை உருவாக்கிக்கொண்டப் பிறகு தம்மை வலிமையானவராகக் காட்டிக்கொள்ள நீங்கள் செய்யும் வேலையில் முக்கிய வேலையாக தலைவரைப் பார்த்து நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். பேனர்களில் தன் பெயர் சிறியதாக இருக்கிறது, படம் ரொம்ப சின்னதாக இருக்கிறது, எங்களை யாரும் சரியாக மதிப்பதில்லை என்று குறைகளைச் சொல்லக்கூடிய ஆளாக மாறிவிடுவீர்கள். கூட்டம் இன்னத் தேதிகளில் நடைபெரும் என்று மாவட்டச் செயலாளரோ அல்லது தலைமையிலிருந்தோ அறிவிக்கப்பட்டால்கூட அதை அறியாதவாறு இருந்துவிடுவது என்பது தொடங்கிவிடும்,, கேட்டால் எனக்கு சரியானத் தகவல் வரவில்லை என்று சாக்கு சொல்லத் தொடங்கிவிடுவார்கள். ஆக, இதுபோன்றச் செயல்களும் எண்ணங்களும் ஒருவரை அரசியல் படுத்தாது மாறாக மக்களிடமிருந்து அவரை அன்னியப்படுத்திவிடும். பிறகு என்ன நடக்கும் என்றால் மக்களிடம் செல்வதற்கு தயக்கம் உருவாகி அதுவே மிகப்பெரிய மனத்தடையை உருவாக்கி தொடர்ந்து அவரையே தடை செய்யக்கூடிய நபர் என்றக் கெட்டப் பெயரை சம்பாதித்துக் கொடுக்கும், இது தேவையா.
எனவே, மக்களிடம் ஆற்றும் பணிதான் மிக முக்கியமானது, அதுதான் ஒரு பொறுப்பாளரை உயர்த்தும். மக்களிடையே அரசியல் பேசி அவர்களை வென்றெடுக்கும் போதுதான் அவர் மீது நம்பிக்கை உருவாகும். மக்களை யார் நம்புகிறார்களோ அவர்களை மக்கள் நம்புவார்கள், மக்கள் யாரை நம்புகிறார்களோ அவரை தமக்கான தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இதைத் தெளிவாக உணர்ந்ததால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் மாபெரும் தலைவராக இன்றும் இருக்கிறார்.

புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை நமக்கு முன்னே இருக்ககூடிய மாபெரும் பொக்கிசம், அதிலிருந்து நாம் நாள்தோரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. அனால் நம்மில் எத்துணைப் பேர் அதைக் கடைப்பிடிக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் தம் மக்களை நம்பினார், காந்தி தீண்டத்தகாத மக்களுக்காகத் தானே உழைக்கிறார் ஆனால் அந்த மக்கள் உங்களைத் தானே நம்புகிறார்கள், இது எதனால் நடக்கிறது என்று அவரிடத்தில் ஒருமுறை கேட்கப்பட்டபோது அவர் தெளிவாகச் சொன்னார் குழந்தை எப்போதும் தாய் யார், தாதி யார் என்பதைப் புரிந்துக்கொள்கிறது. காந்தி செவிலித்தாய் நான் என் மக்களுக்கு உண்மையானத் தாய் அதனால் என்னை நம்புகிறார்கள் என்று பதில் சொன்னார். இந்த பதில் எவ்வளவு நம்பிக்கையினை வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களை எவ்வளவு தூரம் அவர் நம்பியிருந்தால் அப்படிபட்ட பதிலை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சொல்லியிருப்பார்கள்.

அதுமட்டுமல்ல, சமூகத்தின் கடைசி மனிதனாக இருக்ககூடியவனை உசுப்பிவிட்டால் என்ன விதமான விளைவுகள் உருவாகும் என்பதை தெளிவாக அறிந்தவர் அவர். சமூகத்தின் அடித்தளத்தில் அமுக்கப்பட்டு, தளைகளில் பிணைக்கப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவனது சொந்த உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு, தன்னுடைய வரலாறு என்ன, தன்னுடைய மூலம் என்ன, தன்னுடைய மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், நாம் வாழும் இந்த கேடுகெட்ட வாழ்க்கைதான் எப்போதும் இருந்து வருகிறதா என்பதைப் பற்றியெல்லாம் துளியும் யோசிக்காமல் இருக்கிறானே இவற்றை எப்படி நாம் அவனிடத்தில் சொல்வது. இதுதான் நம்முன்னே இருக்கக்கூடிய சவாலானப் பணி. இதைச் செய்வதுதான் நமக்கான அரசியல் பணி, அதற்காகத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார் நீங்கள் மக்களிடத்தில் செல்லுங்கள் அவர்கள் அடிமைகளாய் இருக்கும் விவரத்தை, அதற்கான அரசியலை, அதன் பின்னணியில் உள்ள அரசியலை அவர்களிடத்தில் சொல்லுங்கள் அவர்கள் அடிமையாக இத்தனை ஆண்டுகள் இருந்து வருகிறார்கள் என்ற விவரம் புரிந்துப் போனால் அவர்களே கிளர்ச்சி செய்வார்கள்.. அதுதான் நமக்குத் தேவை.. அவன் அடிமை என்று அவனுக்கு உணர்த்துங்கள் அவனே கிளர்ச்சி என்று நமக்கு சொல்லிவிட்டு சென்றது இதனால்தான்.

கிளர்ச்சி செய்பவர்கள் சும்மா இருப்பார்களா, அவர்கள் தம்மை அடிமைப்படுத்தியிருக்கும் அமைப்புகளை கேள்விக்குள்ளாக்கத் தொடங்குவார்கள், அதைத் தனியாளாக அவர்களால் செய்யமுடியாது எனவே ஒன்றாகத் திரள்வார்கள். அப்படித் திரள்பவர்களை அமைப்பாக்க வேண்டியது நமது கடமை. இதுதான் நம்முன்னே இருக்கக்கூடிய முக்கியமானப் பணி ஆனால் அது அதோடு நின்றுவிடாது. அதற்குப் பிறகுதான் அரசியல் பணியின் முக்கியத்துவமே தொடங்குகிறது. ஏனென்றால் சமூக விடுதலைக்கு விழிப்புணர்வு மட்டுமே போதுமானது அல்ல, அதிகாரம் அதுவும் அரசியல் அதிகாரம் மிகமிக அவசியம், அரசியல் அதிகாரம்தான் சமூக விடுதலைக்கு ஆதார வித்து. அரசியல் அதிகாரம் மட்டும் நம் கையில் இருந்துவிட்டால் நம்மை ஒடுக்குவதற்கு எவனுக்கும் தைரியம் வாராது. அதனால் நமக்கு எப்படியாவது அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் போராடினார். எங்கேயோ சேரியில் உழன்றுக்கொண்டிருக்கும் மக்கள் அதிகாரத்தின் சுவையினை அறிந்துக்கொண்டால் அவர்கள் ஆளும் வர்க்கமாக மாறிவிடுவார்கள், அடிமைத் தளைகளை உடைத்தெறிந்து விடுவார்கள் என்று தீர்க்கமாக சொன்னார். எப்படிப் பார்த்தாலும் அதிகாரத்திற்குதானே நாம் இன்று போராடிக் கொண்டிருக்கிறோம், அந்த அரசியல் அதிகாரம் கட்சிக்குள்தான் இருக்கிறது என்று தப்பான கணக்குப் போடும் தோழர்களால் எப்படி அரசியலில் சோபிக்க முடியும்.
எனவே, புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியல் கருத்துக்களில் நாம் நம்பிக்கை வைத்தால்தான் நமது எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் அரசியலையும் முன்னெடுக்க முடியும். கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று அவர் முழக்கமிடுவதும் புரட்சியாளர் அம்பேத்கரைப் பின்பற்றித் தானே, ஆனால் அதை நாம் மறந்துவிட்டு செயல்படுகிறோம், இனியும் அப்படி செயல்பட முடியாது. நமக்கான அரசியல் தளத்தை நாம் தீர்மானித்துக் கொள்ள விரும்பினால் இந்த அடிப்படைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இந்தப் பின்னணியில் நாம் அரசியலைப் பார்த்துக் கொள்வதற்கு நமது தலைவர் அண்ணன் திருமா அவர்கள் பல வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் கேட்காத ஒன்றினை நமது தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார், அது என்னவென்றால் எனக்கு தலைவர்கள் தேவை, அதுவும் அந்தத் தலைவர்கள் உங்களிடத்திலிருந்து உருவாகவேண்டும் என்று கேட்கிறார் என்றால் என்ன காரணம், ஒரு தலைவனுக்கு மட்டும்தான் பொறுமையும், அரசியல் பண்பும், மற்றவரை மதிக்கும் குணமும், அரசியல் தொலை நோக்குப் பார்வையும் அமைந்து இருக்கும். இப்படிப்பட்ட பண்புகள் ஒருவருக்கு இருக்குமானால் அவரால் எப்படி குழு அரசியலில் ஈடுபட முடியும், தன் குழுவின் நலனை மட்டுமே முன்னிருத்தி செயல்பட முடியும். உங்களை நீங்கள் தலைவர்களாக கருதி செயல்படும்போது உங்களின் ஆளுமை மேம்படும். மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள், அதனால்தான் தவைவர் அவர்கள் உங்களிடத்தில் தலைவர்களை எதிர்பார்க்கின்றார். இதை நாம் புரிந்துக்கொண்டு, அதற்கான அரசியலை உள்வாங்கிக்கொண்டு செயல்பட நம்மை பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எனவேதான் தோழர்களே நமதுத் தலைவர் இரவுபகல் பாராமல் தன் இல்லற வாழ்க்கையைத் துறந்து பணியாற்றுகிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் அரசியல் பணியினையும் நீங்கள் மேம்படுத்திக் கொள்ளமுடியும். வருகிற 2011ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் ஒரு சவாலாக இருக்கும், இந்த தேர்தலிலேயே நமக்கு சொந்தச் சின்னம் கிடைத்தே ஆக வேண்டும் என்கிறத் தன் முனைப்போடு நீங்கள் வேலை செய்ய வேண்டும், உங்களை நம்பி கட்சி இருக்கவில்லை ஏனென்றால் நீங்கள்தான் கட்சி. உங்களை நீங்கள் எப்படி ஏமாற்றிக்கொள்ள மாட்டீர்களோ அப்படிதான் கட்சியையும் நடத்த வேண்டும்.

எனவே தன் முனைப்போடு பணியாற்றுங்கள், வருகிற 2011ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் என்று நமதுத் தலைவர் பிரகடனப்படுத்தி இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அரசியல் அதிகாரம் நம் கைகளுக்கு வரவேண்டும், அதற்கு எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்திட வேண்டும், வெற்றிகள் நமக்காக காத்திருக்கிறது, அரசியல் அதிகாரத்தில்தான் நமது வலிமை அடங்கியிருக்கிறது நமது விடா முயற்சியின் மூலம் அதை வென்றெடுப்போம் என்று கூறி நிறைவு செய்கிறேன், நன்றி, வணக்கம்.

(காஞ்சி மாவட்டம் 2011 தேர்தல் களத்தில் கட்சித் தோழர்களிடத்தில் கௌதம சன்னா ஆற்றிய சிற்றுரை – தொகுப்பு க.உதயகுமார்)

Load More Related Articles
Load More By admin
Load More In Events
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…