Home Article பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

Comments Off on பிறப்புரிமையை மறுக்கும் திராவிடக் கட்சிகள்

மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம் 

-அய்.இளங்கோவன்

———————————–

‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் தடைச் சட்டம்’ நூல், பக்கம் : 90).

மதமாற்றமே சாதியை ஒழித்து, தலித் மக்களுடைய ஆற்றலின் தோற்றுவாயாக இருக்கும் என்பது அம்பேத்கரின் தீர்மானமான முடிவு. ஆனால், இதற்கு சவால் விடும் வகையில் திராவிட அரசியல் கட்சிகள், இருபத்தோறாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டிலும் (2000), அதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டிலும், ஒன்றையொன்று விஞ்சும் வகையில் பிரகடனப்படுத்திய – இருவேறு துரோக ஆவணங்களை, ‘மதமாற்றத் தடைச் சட்டம் – வரலாறும் விளைவுகளும்’ என்ற தமது நூலில் அலசுகிறார் கவுதம சன்னா. இவ்விரு ஆவணங்களும் (1. அரசு நிலைக் கடிதம் ஆதிதிராவிடர் நலத்துறை எண்.81, நாள் 19.9.2000; 2. கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – 2002), தலித்துகளைக் குறிவைத்து வந்தவை. இவை குறித்து தலித்துகள் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதன் வெளிப்பாடே இந்நூல்.

இந்நூலில், தலித்துகள் மீது இந்து மதம் எப்படித் திணிக்கப்பட்டது என்பதையும், 1931 வரை இந்து மதத்தினை ஏற்றுக் கொள்ளாத, இந்துக்கள் அல்லாத ‘அவர்ணர்’கள் – 1950 இல் வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் ஆணை மூலம் இந்துவாக இருக்கும்படி எப்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதையும் கவுதம சன்னா, மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் இரண்டு பிரிவுகளை மேற்கோள் காட்டி, இச்சட்டம் நிலைநிறுத்துபவை வெறும் அவமானங்கள்தான் என்பதை உணர்த்தியுள்ளார்.

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 2002 இன் பின்வரும் பிரிவுகள்: பிரிவு 2 : ‘பொருட்கள் அல்லது பணம், அது தொடர்பான பரிசுகள் கொடுத்து மதமாற்றம் செய்யக் கூடாது’; பிரிவு 4: ‘பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்றவர்களை ஏமாற்றி மதமாற்றம் செய்தால், 4 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் அபராதம்.’ இப்பிரிவுகளைக் குறிப்பிட்டு, தலித் மக்கள் மீது குவிக்கப்படும் அவமானங்களைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், ‘‘அன்று, பால்பவுடருக்கும் ரொட்டிக்கும் ஆசைப்பட்டு மதம் மாறியவர்கள் என்று கேலி செய்யப்பட்ட தலித் மக்கள், இன்று புதிய விளக்கங்களுடன் இழிவுபடுத்தப்படுகிறார்கள். அந்தப் புதிய விளக்கங்கள்தான் இச்சட்டத்தில் வெளிப்படுகின்றன” என்கிறார். அவற்றில் சில : ‘பண ஆசை காட்டப்படுகிறது’ அதற்கு மயங்குவதால் அவர்கள் (தலித்துகள்) பண ஆசை பிடித்தவர்கள்; ‘வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் மூலம் அவர்கள் மதம் மாறுகிறார்கள்’ தேசத்துரோகிகள்; ‘வறுமையில் வாடுகிறார்கள்’ முட்டாள்கள்; ‘எழுத்தறிவு இல்லை’ பாமரர்கள்; ‘பொருள் ஆசை காட்டப்படுகிறது’ பொருளாசை கொண்டவர்கள்; ‘ஒப்பு நோக்கி ஆராயாமல் மதம் மாறுகிறார்கள்’ அறிவில்லாதவர்கள்…

இவ்வாறாக, தலித்துகளை எல்லா புள்ளிகளிலும், எல்லா பக்கத்திலும் ஒன்றுக்கும் உதவாதவர்களாக, சுயமரியாதை, சுயசிந்தனை அற்றவர்களாக இச்சட்டம் அடையாளப்படுத்துகிறது, என தமது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துகிறார். இடஒதுக்கீடு ஆசைகாட்டி, சலுகைகாட்டி, தலித் மக்களைக் கட்டாயப்படுத்தி, 1950 இல் குடியரசுத் தலைவர் வெளியிட்ட ஆணை (எண்.19, நாள் : 11.8.1950), தலித்துகளை இந்து மதத்தில் இருக்கச் சொல்லும் கட்டாய மதமாற்ற ஆணையே. அப்படியானால், 2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசு கொண்டுவந்த கட்டாய மதமாற்றச் சட்டப் பிரிவு 4 இன்படி, குடியரசுத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற நியாயமான கேள்வியையும் இந்நூல் எழுப்புகிறது.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 341, 341(2) ஆகியவற்றில் தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிக்கும் பிரச்சினையை முன்பே அம்பேத்கர், தன் சட்ட மேதமையின் மூலம் தவிர்த்திருந்தார். இந்நிலையில், 1950 இல் குடியரசுத் தலைவர் வெளியிட்ட அரசமைப்பு ஆணை ‘இந்து மதத்தை ஓம்பும் நபர்களுக்கே இடஒதுக்கீட்டு அரசியல் உரிமை உண்டு’ எனப் பிரகடனப்படுத்துகிறது. 1936 வரை தலித்துகள் சட்டப்படி மதமற்றவர்கள். ஆனால், இவர்கள் இந்துக்களாக இருந்தால் மட்டுமே அரசியல் – இடஒதுக்கீட்டு உரிமை பெறத் தகுதியானவர்களாக எப்படி ஆக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் தெளிவுபடுத்தி இருப்பது, மிக மிக அரிதான செய்தியாகும்.

தலித்துகள் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர். இச்சட்டப்பூர்வமான உரிமையை, தமிழக அரசு தன்னிச்சையாக சட்டவிரோதமாகத் தன் கைவசம் எடுத்துக் கொண்டது. தனக்கில்லாத அதிகாரத்தைக் கையிலெடுத்து, தலித் மக்களின் சட்டப்பூர்வமான உரிமையை தமிழகத்தை ஆண்ட/ஆளும் திராவிடக் கட்சிகள் மறுத்துள்ளன என்பதை இந்நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ‘‘சுவீகரதாஸ் வழக்குத் தீர்ப்பினை மய்யமாகக் கொண்டு, தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிக்க தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஆணையை மீறியது. குடியரசுத் தலைவரின் ஆணை, தலித்துகளின் மதத் தகுதியைத் தீர்மானிப்பதற்கு அரசமைப்பினையே மீறியது” என ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல கவுதம சன்னா வாதிட்டுள்ளது பாராட்டிற்குரியது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சுவீகரதாஸ் என்பவர், கிறித்துவம் தழுவிய பெற்றோருக்குப் பிறந்தவர்; கிறித்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டவர். இவர், பட்டியல் சாதியினருக்கான உரிமைகளைப் பெற முடியுமா என்று தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தி.மு.க. அரசு மேற்கோள் காட்டியது. ‘‘கிறித்துவப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தையும், கிறித்துவ மதத்தைச் சார்ந்ததே என்றும், பிறப்பால் கிறித்துவர் பின்னாளில் இந்துவாக மாறினாலும் இடஒதுக்கீட்டுக்குரிய சலுகையைப் பெறுவதற்குத் தகுதியில்லை” என உச்ச நீதிமன்றம் (25.1.96 நாளிட்ட எஸ்.எல்.பி. எண். 27571/96) தீர்ப்பளித்துள்ளது. எனவே, இத்தீர்ப்பின்படி பிறப்பால் கிறித்துவராக இருக்கும் ஒருவர், இந்துவாக மாறினால், ஆதி திராவிடர் சாதிச் சான்று பெறவோ இடஒதுக்கீட்டு உரிமையைத் துய்க்கவோ தகுதி இல்லை” எனத் தெளிவுரை வழங்கி தலித் மக்களைக் குறி வைத்ததை, கவுதம சன்னா இந்நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இவ்வரசு கடிதத்தையும், தலித்துகளைக் குறிவைத்ததையும் குறிப்பிடும் நூலாசிரியர், அன்று முதல் இன்று வரை பிறப்பால் கிறித்துவராக இருந்து, இந்து மதம் மாறிய ஆயிரக்கணக்கான தலித்துகளுக்கு சாதிச் சான்று மறுக்கப்படுவது பற்றியும், ஏற்கனவே இவ்வாறு சான்று பெற்று பணியில் இருக்கும் நூற்றுக்கணக்கான தலித் அலுவலர்களை, சாதிச் சான்று விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டுப் பணி நீக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும், கருணாநிதி அரசு கொண்டு வந்த எந்தத் திட்டமாயினும், சட்டமாயினும், அரசு அறிவிப்பாயினும் தான் பதவிக்கு வந்த மறுகணமே திருப்பிப் போட்ட ஜெயலலிதா அரசு, கருணாநதி அரசு 19.9.2000 அன்று வெளியிட்ட தலித் விரோத அரசுக் கடிதத்தை மட்டும் திரும்பப் பெறவில்லை. மாறாக, இதே கடிதத்தை நீதிபதி அசோக்குமார் மீது பதவி பறிப்பு வழக்கு தொடுத்த (2002) காலகட்டத்தில், உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தவும் தவறவில்லை என்ற உண்மையையும் இந்நூலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2002 சனவரி முதல் ஏப்ரல் வரை, நீதிபதி அசோக்குமார் மீதான Quo Warranto வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில்தான் அரசின் அரசமைப்புச் சட்ட விதியை மீறும் கருணாநிதி அரசின் கடிதம், வெகுவாக விவாதிக்கப்பட்டது. ஜெயலலிதா அரசும் கருணாநிதி அரசின் கடிதத்தின் பின்புலத்தில் பதுங்கி, நீதிபதி அசோக்குமாரைத் தாக்கப் பயன்படுத்தத் தயங்கவில்லை. இவ்வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், அன்றைய ஆதிதிராவிடர் நலத்துறை அரசுச் செயலராக இருந்த பி. சிவகாமி, 19.9.2000 நாளிட்ட அரசுக் கடிதம் நிலை எண்.81 இன் செயல்பாட்டை முடக்கி வைத்து, 21.2.2002 இல் அரசுத் துறைகளுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இதைப் பொறுக்க முடியாத ஜெயலலிதா அரசு, அதன் தலைமைச் செயலர் பி. சங்கர் மூலம் 28.2.2002 அன்றே ‘டெலக்ஸ்’ செய்தி அனுப்பி, ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலரின் 21.2.2002 நாளிட்ட கடிதத்தை முடக்கி விட்டதையும் சன்னா குறிப்பிட்டுள்ளார். இந்த அண்மைக்கால வரலாற்றுப் பின்னணியில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் 4.10.2002 அன்று பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த இடைக்காலத் தடைக்குப் பிறகு நடந்த ஜெயலலிதா அரசின் செயல்பாட்டைத் துல்லியமாக கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் :

‘‘சென்னை உயர் நீதிமன்றம் 4.10.2002 அன்று இந்த ஆணை மீது கீழ்க்காணுமாறு இடைக்காலத் தடையை வழங்கியது. அதாவது, தமிழக அரசு வெளியிட்ட ஆணைகள், தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. இறுதித் தீர்ப்பு வரும் வரை அதைச் செயல்படுத்த முடியாது. அதனால் என்ன, தன் கையில் அரசு இருக்கும்போது, நீதிமன்றம் என்ன செய்ய முடியும்? அதிவிரைவாகச் செயல்பட்டார் ஜெயலலிதா. 4.10.2002 அன்று மாலை தீர்ப்பு வெளியான பிறகு, அதே நாள் இரவில் மதமாற்றத் தடைச் சட்ட நகல் தயாரிக்கப்பட்டு, அன்று இரவே ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, 5.10.2002 அன்று அதாவது மறுநாளே அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலம் 12 மணி நேரம் கூட இல்லை. அவ்வளவு அவசரச் சட்டம். அந்த சட்டம்தான் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம்.”

இக்கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் சாதித்ததுதான் என்ன என்ற வினாவை எழுப்பி, ‘‘சட்டம் எதையும் சாதிக்கவில்லை. இச்சட்டத்தைக் கொண்டு வந்த ஜெயலலிதா சாதித்தார். அவர் மீது சுமத்தப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி உறவு. ஜெயலலிதா விடுதலை அடைந்ததன் மூலம் தலித்துகளை அவமான இந்து சிறைக்குள் தள்ளியிருக்கிறார்.”

மேலும், மதமாற்றத் தடைச் சட்டத்தை ‘இந்து பயங்கரவாதம்’ எனக் குறிப்பிடும் சன்னா, 1967 இல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் – ஜனசங்க கூட்டணி அரசு கொண்டுவந்த மதமாற்றத் தடைச் சட்டம் (தர்ம ஸ்வதந்திர சட்டம் 1967), 1968 இல் இயற்றப்பட்ட ‘மத்தியப் பிரதேச ஸ்வதந்திர ஆதினியம் 1968, 1978 இல் அன்றையப் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆதரித்த, ஓ.பி. தியாகி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனி நபர் மசோதா – ‘மதச்சுதந்திரச் சட்ட முன்வரைவு’; 1978 இல் அருணாசலப் பிரதேசத்தில் கொண்டுவரப்பட்ட ‘மதச் சுதந்திரச் சட்டம் 1978′; குஜராத்தில் 2003 இல் ஜெயலலிதா அரசின் அடியொற்றி இயற்றப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம், ஒரிசாவின் மதமாற்றத் தடைச் சட்டம் என தலித் விரோத அரசுகளின் மதமாற்றத் தடைச் சட்டங்களைப் பட்டியலிட்டு, தலித் மக்கள் மீது குறிவைத்து தொடுக்கப்படும் பாசிச யுத்தத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இறுதியாக, ‘‘மதமாற்றத் தடைச் சட்டம் வெளிவந்த வடிவங்களிலிருந்து தலித் அரசியல் போராளிகள் கற்க வேண்டிய பாடம் நிறைய உள்ளது என்பதைத்தான் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன” என்றும், முடிவுரையில் 1936 இல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியதை மிகப் பொருத்தமாகக் குறிப்பிடுகிறார் : ‘‘அரசியல் பாதுகாப்புகள் ஒரு நாள் திரும்பப் பெறப்பட்டு, நமது உரிமைகள் அனைத்தும் பறிபோய் விட்ட பிறகு, நம் சமூக பலத்தைத்தானே நாம் நம்பி இருக்க வேண்டும்!”

‘‘மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தலித்துகள் தங்கள் சமூக பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, தலித் அரசியல் வெற்றி பெறும்வரை இச்சட்டம் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும் என்றென்றும்!” என்று முடித்துள்ளார். இந்நூலை ஒவ்வொரு தலித்தும், சிறுபான்மையினரும் படித்து, எதிர்வினையாற்றும் போதுதான், இந்நூல் வெளியிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறும்.

நியாயமற்ற சட்டங்களை திரும்பப் பெறுக!

நாங்கள் உலகளாவிய அடிப்படை மனித உரிமைகளில் உளப்பூர்வமான நம்பிக்கை கொண்டவர்கள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுவதும், அம்மதத்தைக் கடைப்பிடிப்பதும், நடைமுறைப்படுத்துவதும், கற்பிப்பதும், அம்மதத்தின் அறிவுரைகளை கவனிப்பதும், மிக அடிப்படையான மனித உரிமைகளில் ஒன்று. இது, உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கையின் 18 ஆம் பிரிவிலும், சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தையும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வது, நடைமுறைப் படுத்துவது மற்றும் பரப்புவதற்கான உரிமைகள், இந்திய அரசியல் சட்டத்திலும் அளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இந்தியாவின் அய்ந்து மாநிலங்கள், மக்களின் மதமாற்ற உரிமையைக் கட்டுப்படுத்தும், தடுக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. தற்பொழுது ராஜஸ்தான் மாநிலம் அத்தகைய சட்டத்தை அறிமுகப்படுத்தும் கட்டத்தில், நாங்கள் எங்கள் குரலை எழுப்ப வேண்டியது அவசியம் என நம்புகிறோம்.

இத்தகைய சட்டங்கள், மத உரிமைகளை மிக மோசமாகக் கட்டுப்படுத்துவதாகவும், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தையும், சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக ஒப்பந்தத்தையும், நமது நாட்டின் அரசியல் சட்டத்தையும் மீறுவதாகவும் இருப்பதாகக் கருதுகிறோம். மேலும், இத்தகைய சட்டங்கள், மத சகிப்புத்தன்மை, மத ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை மேம்படுத்துவதற்கு மாறாக – மதப் பிளவுகள், மோதல்கள், கலவரங்களை அறிமுகப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக நம்புகிறோம். மதத்தின் பெயரால் நடக்கும் முறையற்ற மோசமான நடவடிக்கைகளையும், மதப் பிரச்சாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்பும் முயற்சியில் நடத்தும் கட்டாய மத மாற்றங்களை மிக வன்மையாக நாங்கள் கண்டிக்கும் அதே வேளையில், இச்சட்டம் கட்டாயம், வற்புறுத்துதல், மோசடி, ஆசைகாட்டுதல் போன்றவற்றிற்குத் தெளிவான விளக்கங்கள் கொடுக்கவில்லை என்பதையும், இத்தகைய தெளிவற்ற விளக்கங்கள் மத மற்றும் பொதுத் தொண்டுகளையும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும், முறையற்றும், நீதிக்குப் புறம்பாகவும், அச்சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்புகளை அளிப்பதாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இத்தகைய சொற்களை இச்சட்டத்தில் குறிப்பதன் மூலம், மதத் தீவிரவாதிகள் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படவும், குற்றம் சாட்டவும், பரவலான மத நடவடிக்கைகளை எதிர்ப்பதை சட்டப் பூர்வமாக்குவதாகவும் இருக்கும் என நம்புகிறோம். இந்த சட்டங்கள் தேவையற்றதாகவும், மதச் சிறுபான்மையினரை மிரட்டவும், மத உரிமைகளைத் தகர்க்கவும் மட்டுமே பயன்படும் என்றும் நம்புகிறோம்.

இந்த நியாயமற்ற சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென ஒரிசா, மத்தியப் பிரதேசம், சட்டிஷ்கர், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். மதச் சிக்கல்களை வன்முறையற்ற, சட்டத்திற்கு அப்பாற்பட்ட, வேறுபாடற்ற வகைகளில் பேசித் தீர்க்க முன் வர வேண்டுமென, இந்தியாவிலிருக்கும் அனைத்து அரசியல் மற்றும் மதத் தலைவர்களை அழைக்கிறோம். சக மனிதர்கள் என்ற அடிப்படையிலான பரஸ்பர மதிப்புடன் கூடிய சம உரிமை, மதச் சுதந்திரம், மத ஒற்றுமை ஆகியவை கொண்ட ஒரு நல்ல சூழலை உருவாக்க இணையுமாறு அழைக்கிறோம். இறுதியாக, எங்கள் அழைப்பினை ஏற்று, எங்களுக்குத் துணை நிற்க வேண்டுமென உலக சமூகத்தை வலியுறுத்துகிறோம்.

நன்றி : தலித் முரசு, ஆகஸ்ட் 2006

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

About J. Gowthama Sannah

About J. GOWTHAMA SANNAH Professional ; A dedicated socio-political activist, ideologue, a…