தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி மகிழ வேண்டும் என்று சொல்லியிருக்கலாமே! ஆனால், அப்படி அவரால் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் பட்டாசை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். நரகாசுரன் இருந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் பட்டாசு இல்லை. பின் ஏன் அவர் தீபம் ஏற்றச் சொன்னார். கிருட்டினருக்குக் கூட இதற்கு விடை தெரிந்திருக்காது. எனவே,‘ஆகட்டும்’ என்று சொல்லி விட்டிருப்பார். இப்படி ஒரு புராணக் கதை கூறப்படுகிறது.
மற்றொன்று ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கிறது.“இருபத்தி நான்கு தீர்தங்கரர்களில் இறுதியானவர் வர்த்தமான மகாவீரர். இவர்தான் Œமண மதத்தை மக்களுக்குப் போதித்தவர். இவர் தன் கடைசி நாட்களில் ‘பாவாபுரி’ எனும் அரண்மனையில் அரசனின் விருந்தினராகத் தங்கியிருந்து, அவனுக்குப் போதிப்பவராக இருந்த நேரத்தில், தன் வாழ்வின் இறுதி நெருங்கியதை உணர்ந்தார். தான் பரிநிர்வானம் எய்தவிருப்பதை அறிவித்து அனைத்துப் பிறவிகளிலிருந்தும் விடுதலை அடையும் பெருநிலையை மகிழ்வுடன் தான் அடைய இருப்பதையும் மகாவீரர் தெரிவித்தார். இந்த மகிழ்வை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அரŒனிடம் கேட்டுக் கொண்டார். அதை மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக தீபங்களால் அரண்மணை அலங்கரிக்கப்பட்டது. மகாவீரர் இறுதி பெற்ற பெருநாளை அன்று போல் ஒவ்வொரு ஆண்டும் தத்தமது வீடுகளை தீபங்களால் அலங்கரித்துக் கடைப்பிடித்து வந்தனர். ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியிருந்த மதம் சமண மதம் என்பதால் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் தீபஒளி பரவியது”.
தீபஒளி – தீபாவளியாக மருவியிருக்கிறது எனும் பழைய கதை இருந்தாலும், இந்த இரண்டு குறிப்புகளிலும் முதலாவது உள்ள கதை எவ்வித சான்றும் அற்ற புராணக்கதை. இரண்டாவது வரலாற்று சான்று உள்ள ஒன்று. ஆனால், இந்த இரண்டு நிகழ்வுகள் மட்டுமே ‘தீபஒளி’ உருவாக போதுமான காரணமாக இருக்காது. ஏனெனில், தமிழகத்தில் கொண்டாடப்படும் தீபஒளித் திருநாளில் நல்லெண்ணெய் குளியல் மிக முதன்மையாக இருக்கிறது. நல்லெண்ணெயில்தான் விளக்கும் ஏற்றப்பட வேண்டும். நரகாசுரன் நல்லெண்ணெயில் தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கதையில் செய்தியில்லை. ஆனால், பட்டாசு புழக்கத்திற்கு வருவதற்கு முன்பிருந்தே நல்லெண்ணெய்தான் தீபஒளித் திருநாளுக்கு முதன்மை கூறு. இதற்கு விடை கிடைத்தால் தீபங்களின் திருவிழாவான தீபஒளிக்கு ஓர் அறிவியல்படி விடை கிடைக்கும்.
தீபங்களின் திருவிழா தமிழகத்திற்கோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்திற்கோ மட்டும் சொந்தமானதல்ல. மரபு சேர்ந்த பின்னணிக் கொண்ட பெரும்பாலான நாடுகள் தீபங்களின் திருவிழாவை வேறு வேறு பெயர்களில் கொண்டாடுகின்றன . குறிப்பாக பௌத்தம் பரவிய அனைத்து நாடுகளிலும் தீபங்களின் திருவிழா முக்கியமான திருநாள். அங்கே கொண்டாடப்படும் நாட்கள் மாறியிருக்கும். நம் நாட்டில் அற்பிசி திங்கள் என்று அழைக்கப்பட்ட ஐப்பசி திங்களில் சதுர்த்தி நாளன்று தீபஒளி கொண்டாடப்படுகிறது. அவ்வளவுதான் வேறுபாடு.
அப்படியென்றால் இதற்கான உண்மை வரலாற்றை எப்படி அறிவது. தென்னிந்திய சமூகப் புரட்சிக்கு தந்தையெனக் கருதப்படும் அயோத்திதாசப் பண்டிதர் பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து அந்த உண்மையை வெளிக் கொணர்ந்தார். தமிழ் பேசும் மக்களுக்கு தமிழன் என அரசியல் அடையாளத்தை வழங்கியவர் அயோத்திதாசப் பண்டிதர் என்பதை கவனத்தில் கொண்டால், அவர் உரைத்த உண்மைகளின் முக்கியத்துவம் புரியும்.
பண்டைய காலத்தில் பௌத்த மதம் இந்தியா முழுவதும் பரவி செழித்து மக்களை வளமாக்கிய மதம். பௌத்தத்தை பரப்ப அதன் பிக்குகள் இந்தியா முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து போதித்தார்கள். அது மட்டுமின்றி பௌத்த மடங்களான விகார்களிலிருந்தும் போதனைகள் செய்தார்கள். அப்படி விகார்களில் தங்கியிருக்கும் பிக்குகள் போதனை மட்டுமின்றி மருத்துவம், அறிவியல், வானவியல், வேளாண்மை உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கு-ம் என்று எண்ணினால்,அக்கண்டுபிடிப்பை உடனடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள். மக்களிடம் விரைவாகச் சேர்ப்பதற்கு வசதியாகத் தாங்கள் தங்கியிருக்கும் மடம் அமைந்துள்ள நாட்டின் அரசனிடம் சான்று முறைபடி தம் கண்டுபிடிப்புகளைக் காட்டி, செயல்முறை விளக்கங்களுடன் முடிவுகளை விளக்கிக் காட்டுவர். பின்னர் அரசனின் இசைவு பெற்று மக்களிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பர். இந்த வழக்கம் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இப்படிபட்ட வழக்கத்தையொட்டி தென்பரதம் என்று வழங்கப்பட்ட தென்னாட்டில் அதாவது தமிழ்நாட்டில் நடந்த கண்டுபிடிப்பை அயோத்திதாசப் பண்டிதர் வெளிப்படுத்தினார்.
தென்னாட்டில் அமைந்திருந்த “பள்ளி” எனும் நாட்டில் இருந்த பௌத்த மடத்தில் இருந்த பிக்குகள் “எள்” எனும் விதைகளைக் கண்டுபிடித்தார்கள். பின்பு அதிலிருந்து நெய்யை (கவனிக்கவும் – நெய் என்பது பொதுப்பெயராகத் தமிழில் வழங்கும் சொல். அச்சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் பெய@ர அது எந்த நெய் என்பதைக் காட்டும்) வடித்து அதன் குணங்களையும், மருத்துவப் பயன்களையும் கண்டறிந்தார்கள். அந்த நெய் தான் மண்டை தொடர்பான நோய்கள், சுரங்கள், மேக நோய், சேத்மம், சாமரோகம், எலும்புருக்கி, ஈளை உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதுடன் சிறந்த மலமிளக்கியாகும் எனக் கண்டறிந்தனர். அந்த எள்நெய்யைத் தலையில் தேய்த்து தலை மூழ்கினால் இப்பயன் கிடைக்கும் என்பதையும், அந்த எள் நெய்யில் பலகாரங்களைச் செய்யலாம் என்பதையும் பிக்குகள் கண்டறிந்தார்கள். பின்னர்,‘பள்ளி’ நாட்டை ஆண்ட அரசனான “பகுவன்” என்பவரிடம் பிக்குகள் சென்று எள்ளையும், நெய்யையும் காட்டி அதன் பயன்களை விளக்கினார்கள்.
எள்ளின் மகிமையை உணர்ந்த மன்னன் பகுவன் எள்ளினை பெருமளவில் விளைவித்து, நெய்யெடுத்து தன் நாட்டு மக்களை வரவழைத்து தலைநகரின் அருகில் ஓடிய “தீபவதி” ஆற்றில் அவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்னான். பிறகு பிக்குகள் மூலம் எண்ணெய்யை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தான். மக்களுக்கு அந்த எள்நெய் பெரிதும் உதவியதால், அது முதல் பிக்குகளால் நல்லெண்ணெய் (நல்+ எள்+ நெய்) எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.
நல்லெண்ணெய் கண்டுபிடித்த நாளான ஐப்பசி மாதம் சதுர்த்தி நாளை தீபவதி ஆற்றில் குளித்ததோடு இணைத்து, தீபவதி குளியல் நாள் என வழங்கி வந்தார்கள் என்று பண்டிதர் விளக்கினார். அதோடு, “பெருந்திரட்டு” எனும் பண்டைய தமிழ் நூலில் ‘பாண்டி படலம்’ எனும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை சான்றாக பண்டிதர் காட்டினார்.
இதே போல் தீபவதி காலத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, அது ஐந்தொழுக்கக் கொள்கைகளான கொலை செய்யாமை, களவு செய்யாமை, மது அருந்தாமை, பிறன் மனை விழையாமை, பொய் சொல்லாமை எனும் விரதங்களை @மற்கொண்டு வந்ததையும் அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டார். ஆனால், பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் இந்த உன்னதமானவற்றை மறைத்து கதைகளை கட்டி வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாளாக்கி மூட நம்பிக்கைகளை கட்டி தீபவதி நாளை திரித்தார்கள் என்று அயோத்திதாசர் குற்றம் சாற்றுகிறார்.
மேலும், தீபஒளி நாளை ஒவ்வொரு ஆண்டும் ஏன் கொண்டாட வேண்டும். இது மிகவும் @தவையான வினா. உண்மையில் பண்டைக் காலத்தில் நம் மக்களின் முற்போக்கான வாழ்க்கை முறையை விளக்கும் வினா இது. அக்காலத்தில் மக்களுக்கு பயன்படக் கூடிய பொருளை பௌத்தர்கள் கண்டுபிடித்த நாளை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதைப் போற்றி வந்தனர். அதோடு எள் விளைச்சலோடு தொடர்புடையது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் இருளைப் போக்கி ஒளியேற்றிய எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சப்பான் போன்ற அறிவியல் முன்னேறிய நாடுகளில் திருவிழாக்கள் பெரும்பாலும் கொண்டாடப்படுவது இவ்வழக்கத்தை ஒட்டித்தான். ஆனால், தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் பின்னணியுடன் ஒரு பொருள் இருக்கிறது என்பதை அயோத்திதாசப் பண்டிதரைத் தவிர யாருமே வெளிப்படுத்தவில்லை. அதனால்தான் அவர் தென்னிந்தியாவின் சமூக புரட்சிக்கு தந்தையாக இருக்கிறார்.
எனவே, தீபவதி பண்டிகை எனும் தீபஒளி திருநாள் நரகாசுரன் எனும் கற்பனைத் தமிழன் கொல்லப்பட்ட நாளாகக் கருதாமல், பண்டைய தமிழ் பௌத்த பிக்குகள் எள்நெய்யைக் கண்டுபிடித்து பௌத்தம் பரவிய நாடுகளுக்கெல்லாம் கொண்டு சென்று தமிழகத்தின் மாண்பை உயர்த்தினார்கள். அதனால்தான் ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் தீபஒளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபவதியான தீபஒளி திருநாள் தமிழனின் கொடை. எனவே உண்மையான புரிதலோடு அதைக் கொண்டாடுவோம்.
(தமிழ் ஓசை நாளேட்டில் 27.10.2008 அன்று வெளியான கட்டுரை)